புறக்கணிக்கப்பட்ட கபாலி இசை

4
Kabali BGM புறக்கணிக்கப்பட்ட கபாலி இசை

பாலி திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவு பெற்று இருக்கிறது. Image Credit

முதல் நாள் ஆர்ப்பாட்டத்துடன் சென்று துவக்கக் காட்சிகளைப் பார்த்து ஆர்ப்பரித்துப் பின் அப்படியே சத்தம் குறைந்து “என்னடா இது படம் எதோ மாதிரி போகுது!” என்று கவலையடைந்து அவ்வப்போது மகிழ்ச்சியடைந்து பின் திருப்தி இல்லாமல் வெளியே வந்தேன்.

காரணம், அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த முன்னோட்ட காட்சிகள். அதோடு வழக்கமான ரஜினி படமாக இல்லாமல் இருந்தது.

ஆகச் சிறந்த படங்களில் ஒன்று கபாலி

பின்னர் திரும்ப ஒருமுறை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்ற போது பிடித்து இருந்தது.

எங்கெல்லாம் மெதுவாகச் செல்கிறது என்று நினைத்து இருந்தேனோ அங்கெல்லாம் சாதாரணமாகவே இருந்தது. நமக்கு ஏன் அப்போது அப்படித் தோன்றியது தற்போது இப்படித் தோன்றுகிறது? என்று குழப்பமானது.

திரும்ப ஒருமுறை சென்றேன், படத்துக்குப் பெரும் ரசிகன் ஆகி விட்டேன். சுருக்கமாகத் தலைவர் படத்தில் சிறந்த 5 படங்கள் என்று எடுத்தால், அதில் நிச்சயம் கபாலி இருக்கும்.

எனக்கே என்னை நினைத்து கடுப்பாக இருந்தது. இவ்வளவு நல்ல படத்தை ஏன் நாம் ரசிக்காமல் போனோம்! என்று.

இதுவரை கபாலி 9 முறை பார்த்து விட்டேன் (ஐந்து முறை திரையரங்கில்).

தலைவரின் நடிப்பு

தலைவரின் நடிப்புக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓரளவாவது தீனி போட்ட படம். இன்னும் இயக்குநர்கள் இவரை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பது என் ஆதங்கம்.

படத்தில் தலைவரின் நடிப்பு அவ்வளவு இயல்பாக இருந்தது, குறிப்பாகத் தன்ஷிகாவை தன் மகள் என்று அறியும் போது, குமுதவள்ளியை சந்திக்கும்போது என்று ஏராளமான காட்சிகள்.

தலைவருக்கு தேசிய விருது இப்படத்தில் கிடைக்கும் என்று நம்பினேன், கிடைக்காதது ஏமாற்றமே! இதை விடப் பெரிய ஏமாற்றம் தென்னிந்திய  ஃபிலிம் ஃபேர் விருதில் கூடக் கபாலி இசைக்கு விருது கிடைக்கவில்லை.

புறக்கணிக்கப்பட்ட கபாலி இசை

பின்னணி இசையின் மிகப்பெரிய ரசிகன். கபாலி படத்தின் பின்னணி இசை அப்படியொரு அற்புதமான இசை.

படம் முழுக்க வழக்கமான இசையாக இல்லாமல் உலகத் தரத்தில் இருக்கும், குறிப்பாக வில்லன் டோனி வரும் இடங்களில் எல்லாம் அசத்தலான இசை. நீங்க நம்புறீங்களோ இல்லையோ பின்னணி இசைக்காவே இப்படத்தை நான்கு முறை பார்த்தேன்.

நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால் சனாவையும், ரஞ்சித்தையும் மனதார பாராட்ட வேண்டும் என்பது என் விருப்பம்.

பாடல்கள், பின்னணி இசை என்று ஒவ்வொரு இடத்திலும் சனா கலக்கியிருப்பார்.

ஃபிலிம் ஃபேர் விருது

ஃபிலிம் ஃபேர் விருதில் சிறந்த இசை ரகுமானுக்கு “அச்சம் என்பது மடமையடா” படத்துக்குக் கொடுக்கப்பட்டது.

ரகுமான் திறமை மீது யாருக்கும் சந்தேகமில்லை என்றாலும் “கபாலி” இசையை விட “அச்சம் என்பது மடமையடா” இசை சிறந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதில் பாடல்கள் மிகப்பிரபலம் என்றாலும் ஒட்டுமொத்தமாகக் கபாலி இசையே சிறந்தது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

எதனால் சனாக்கு எவருமே விருது தரவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. இசை விருதுக்கான முழுத் தகுதியை உடைய படம் கபாலி.

கபாலி இசையை எந்த முக்கிய விருதுகளுமே கண்டு கொள்ளவில்லை என்பது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

“மாயநதி” பாடல் எல்லாம் அமைதியான சூழ்நிலையில் கேட்டுப்பாருங்கள் உருக்கி விடும்.

படம் முழுக்க அசத்திய பின்னணி இசை

சிறையில் ரஜினி அறிமுகக் காட்சி, முதல் சண்டைக்காட்சியில் கடையை இடித்து விட்டு உள்ளே நுழையும் போது வரும் இசை, கூண்டை திறந்து விட்டு பாடல் துவங்கும் காட்சி, குமுதவள்ளியை நினைத்து உள்ளே நுழைந்து எவருமில்லை என்று அறிந்து அமைதியாகும் காட்சி.

வீரசேகரன் மீனை பிடிக்கும் காட்சியில் வரும் இசை, டோனி வரும் காட்சிகள் (குறிப்பாக விமானத்தில் இருந்து இறங்கும் போது), மலேசிய தமிழர்களின் பாரம்பரிய இசையை எந்த மாற்றமும் இல்லாமல் கொண்டு வந்த காட்சி என்று படம் முழுக்க இசையை ரசிக்க எத்தனையோ காட்சிகள் உள்ளது.

கூறினால் படத்தின் மொத்த காட்சிகளையும் தான் கூற வேண்டும்.

பின்னணி இசையின் ரசிகன்

பின்னணி இசைக்காகவே ரசித்த படங்கள் பல உண்டு. தளபதி, பாட்ஷா, ரோஜா, படையப்பா, மகாநதி, எந்திரன், விடியும் முன், டிமாண்டி காலனி, மெட்ரோ என்று பல படங்கள் உள்ளன.

இவையல்லாமல் நிறைய உள்ளன, இவை டக்கென்று நினைவுக்கு வந்தவை. இதில் கபாலி இசையை ஒவ்வொரு காட்சியும் ரசித்த படம்.

உலகத்தரம் வாய்ந்த பின்னணி இசை

விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கிடைக்காமல் போன படங்கள் ஏராளம் உண்டு ஆனால், “கபாலி”யின் இசைக்கு விருது கிடைக்காதது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம் 🙁 .

நம் தமிழ்த் திரைப்படங்களின் பின்னணி இசையை கேட்கும் போது வெளிநாட்டினருக்கு என்ன மாதிரியான உணர்வு தோன்றும்? என்று சில நேரங்கள் நினைப்பேன்.

ஏனென்றால், இந்தியத் திரைப்படங்களின் பின்னணி இசையில் நம் இந்திய இசைக்கென உள்ள தனித்துவம் இருக்கும்.

கபாலி பின்னணி இசை கேட்கும் போது நிச்சயம் வெளிநாட்டினர் இந்திய பின்னணி இசை என்பதைத் தாண்டி அவர்களோடு இணைத்துப் பார்த்து இருப்பார்கள் என்று தோன்றும்.

பின்வரும் பின்னணி இசையை தரமான “Audio System” இருந்தால், தொந்தரவு இல்லாத போது மிதமான சத்தத்தில் கேட்டுப்பாருங்கள், கபாலி படத்தின் காட்சிகள் உங்கள் கண் முன் விரியும். படத்தில் காட்சிகளோடு பார்க்கும் போது அசத்தலாக இருக்கும்.

நான் இதுவரை குறைந்தது 30 முறைக்கு மேல் கேட்டு இருப்பேன்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. கிரி, புதிய படங்களின் பாடல்கள் ஏதும் நான் கேட்பதில்லை. 1980 /90 /2000 ஆண்டுகளின் பாடல்களை மட்டுமே கேட்பேன். அதுவும் குறிப்பாக 1980 / 90 அதிக அளவில் கேட்பேன். கபாலியின் பாடல்களை நான் கேட்கவில்லை. ஆனால் பின்னணி இசை என்னை கவர்ந்தது.

    கல்லூரி பருவத்தில் ஒரு படத்தை பார்க்கும் போது அதன் தரத்தை பிரிக்க தெரியாது. கோவையில் பணி புரிந்த போது அதிக அளவில் படங்களை பார்க்கும் வாய்ப்பு அமைந்த போது தான் படங்களின் தொழில்நுட்ப விவரங்கள் புரிய ஆரம்பித்தது.

    தற்போது பின்னணி இசை தான் ஒரு படத்தின் உயிர் நாடி என்பது என் கூற்று. பல பழைய படங்களில் இளையராஜா அவர்களின் பின்னணி இசை… பிரமிப்பு.. எந்தவித தொழில் நுட்பமும் இல்லாத நேரத்தில் அவரின் இசை.. வேற லெவல்…

    விக்ரம் வேதா நன்றாக இருப்பதாக நண்பர்கள் கூறினார்கள். பின்னணி இசையும் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். உங்கள் விமர்சனத்தை எதிர்பார்த்தேன். படத்தை பாத்தீங்கன்னா விமர்சனம் எழுதவும்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. சனா என்றால் அது எவடான்னு குழம்பிட்டேன்.
    சநா.
    80 களின் துவக்கத்தில் வந்த ஒரு சில ரஜினி படங்களில் இசை மோசமாக இருந்தது [பாடல்கள்/பின்னனி இசை] அதன பின்னர் எம்.ஜி.ஆர் போல ரஜினியும் இசையில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கினார். அதனால் இசை எவராயிருந்தாலும் ரஜினியின் பாடல்கள் ஹிட் அடித்தன; “மனிதன்” படத்தில் அந்த “மனிதன் மனிதன்” பாடல் இடம்பெறக்காரணமே ரஜினிதான். வற்புறுத்தி இடம்பெறச்செய்தாராம்.

    வெகுவருடங்களுக்கு பிறகு முதல் முறையாக கபாலியில் ரஜினியின் மேற்பார்வை இல்லை.

    இப்போதும் அடிச்சி சொல்றேன் கபாலியின் இசை மோசமே, நல்ல இசையை உலகம் புறக்கணிக்காது கொண்டாடும்.

    மோசமான பின்னனி இசைக்கு நினைவுக்கு வரும் சமீபத்திய படம் “ஆண்டவன் கட்டளை” ஏதோ இசையைக் கொண்டு படத்தை நிரப்பி இருப்பார்கள் சீரியல் போல.

    இளையராஜாவுக்கு முந்தைய தலைமுறையில் சிறந்த பின்னனி இசையமைப்பாளர் “ஜி.கே.வெங்கடேஷ்” ஜி.கே.வி உதவியாளராக பணியாற்றிய எம்.எஸ்.வி படங்களில் பின்னனி இசை அருமையாக இருக்கும். பொதுவாக எம்.எஸ்.வி பின்னனி இசையமைக்க மாட்டார் [சில விதிவிலக்குகள் உண்டு], அவரது உதவியாளர்கள் ஜி.கே.வி, கோவர்த்தணம், ஹென்றி டேனியல், ஜோசப் கிருஷ்ணா ஆகியோர்தான் பின்னனி இசைக்கு பொறுப்பு, இதில் மோசமான பின்னனி இசையமப்பாளர் ஜோசப் கிருஷ்ணா.

    இளையராஜாவுக்கு பிந்தைய தலைமுறையில் ஓரளவுக்கு சிறப்பான பின்னனி இசையை தந்தவர்கள் தேவா[சபேஷ்முரளி] ஏ.ஆர்.ரகுமான், யுவன். ஆகிய மூவர்தான்.

    எம்.எஸ்.வி போல தேவாவும் பொதுவாக பின்னனி இசையமைக்க மாட்டார், சபேஷ் முரளிதான் பின்னனி இசைக்கு பொறுப்பு. பாட்ஷாவுக்கு பின்னனி இசை சபேஷ் முரளிதான். இவர்கள் இருவரும் தேவாவை விட்டு பிரிந்து தனியாக இசையமைக்க தொடங்கிய பின்னர் தேவாவின் படவாய்ப்புகளும் குறைந்து போயிற்று.

    சபேஷ் முரளியின் மோசமான பின்னனி இசைக்கு உதாரணமாக “ஆட்டோகிராப்” படத்தை கூறலாம், ஆண்டவன் கட்டளை படம் போல ஏதோ தூர்தர்ஷன் இசையை இசையை எடுத்துப்போட்டு படத்தை நிரப்பியிருப்பார்கள்.

    பின்னனி இசை என்பது வித்தியாசமான விநோதமான சப்தங்கள் அல்ல; பின்னனி இசை உணர்வுகளை பார்வையாளனுக்கு திரைப்படத்திலுள்ள சககதாப்பாத்திரத்திற்கும் கடத்த வேண்டும்.

    சநா வின் பீட்சா நன்றாக இருக்கும் அதேபோல எல்லா படங்களுக்கும் விநோத ஒலியை வைத்து ஒப்பேத்திவிட முடியாது.

    கபாலி பின்னனி இசை ஏன் மோசம் என்று உங்கள் விமர்சனத்திலேயே குறிப்பிட்டு இருந்தேன். இதை எழுதுவதற்கு முன்பு கூட அந்த காட்சியின் இசையை பார்த்தேன் அதே சவ சவ………….

  3. @யாசின் முன்பெல்லாம் புதிய திரைப்படங்களின் பாடல்களை கேட்பதுண்டு. தற்போது ஏனோ அப்படியே குறைந்து விட்டது.

    விக்ரம் வேதா படம் பார்த்தேன். படம் நன்றாக இருந்தது 🙂 .

  4. @காத்தவராயன் “இப்போதும் அடிச்சி சொல்றேன் கபாலியின் இசை மோசமே, நல்ல இசையை உலகம் புறக்கணிக்காது கொண்டாடும்.”

    🙂 இது உங்கள் கருத்து.

    என்னுடைய விருப்ப சிறந்த ஐந்து படங்களின் பின்னணி இசை என்று எடுத்தால்,நிச்சயம் கபாலி இருக்கும். இது தலைவர் படம் என்பதற்காக நிச்சயம் கூறவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!