இந்திய பொருளாதார மந்தம்

2
இந்திய பொருளாதார மந்தம்

நான் பொருளாதாரம் குறித்து தெரிந்தவன் அல்ல. ஒரு சராசரி பார்வையாளன் என்ற முறையில், கடந்து வந்த செய்திகள், பார்த்தவற்றை வைத்து  இந்திய பொருளாதார மந்தம் கட்டுரையை எழுதியுள்ளேன். Image Credit

இதில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் மேலோட்டமான தகவல்கள் மட்டுமே!

இந்திய பொருளாதார மந்தம்

கடந்த ஒரு மாத காலமாக இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதைப் பற்றிய செய்திகள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

உறுதிப்படுத்துவது போலச் சில நிறுவனங்களின் நெருக்கடி செய்திகளும் வருகின்றன.

பொருளாதாரமயமாக்கல்

உலகப் பொருளாதாரமயமாக்கல் காரணமாக ஒவ்வொரு நாடும் இன்னொன்றை சார்ந்துள்ளது. சீனா அமெரிக்கா சண்டை என்றால், அதற்குச் சம்பந்தமே இல்லாத மற்ற நாடுகளை மறைமுகமாகப் பாதிக்கிறது.

ஐரோப்பாவில் பிரச்னையென்றால், அது மற்ற நாட்டு நிறுவனங்களின் வருமானத்தைப் பாதிக்கிறது.

இதுபோல ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் சங்கலித்தொடர் போல இணைந்துள்ளது. நாடுகள் மட்டுமல்ல, ஒவ்வொரு தொழிலும் மற்ற தொழிலுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சி என்பது இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா தவிர்த்து அனைத்து இடங்களிலும் உள்ளது. இது ஐரோப்பா, ஆசியா, இந்தியா உட்பட.

உலகளவில் ஆட்குறைப்பு என்பது நிறுவனங்களில் தற்போது நடந்து வருகிறது, இந்தியாவில் மட்டுமல்ல.

இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகமாக உணரப்படுகிறது அல்லது அதுகுறித்து அதிகம் பேசப்படுகிறது.

நேர்மறை செய்திகளைவிட எதிர்மறை செய்திகளே அதிகம் பகிரப்படுகின்றன. எனவே, இவ்விவகாரமும் பெரியளவில் பேசப்படுவதில் எந்த வியப்புமில்லை.

பணமதிப்பிழப்பு / GST

பணமதிப்பிழப்பால் அதிகம் பாதிக்கப்பட்டது கட்டுமானத்துறை. முன்பு கருப்புப்பணத்தைக் கொண்டு பல இடங்கள் வாங்கப்பட்டன.

எனவே, பணப்புழக்காட்டம் அதிகளவில் இருந்தது.

ஆனால், தற்போது வீடு வாங்குவதற்கான நடைமுறைகள், மின்னணு நேரடி கட்டண முறை போன்றவை பலரின் வேகத்தைக் குறைத்துள்ளது.

கூடுதலாக வீடு வாங்குபவர்கள் குறைந்துள்ளனர். சென்னையிலேயே பல கட்டப்பட்ட வீடுகள் வாங்கப்படாமல் உள்ளது.

இது இயல்பாகவே முதலீடு செய்தவர்களுக்கு நெருக்கடியைத் தருகிறது.

GST வரும் முன்பே பெரியளவில் வரி மோசடி செய்ய முடிந்தது ஆனால், GST வந்தபிறகு வரி மோசடி செய்வது குறைந்துள்ளது அல்லது செய்ய முயன்றால் பின்னால் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, நிறுவனங்கள் முன்பு வரியில் ஏமாற்ற முடிந்ததால், கூடுதல் இலாபத்தைப் பெற்றார்கள் ஆனால், GST அதைத் தடுத்து இருப்பதால், நட்டம் என்று புகார் கூறுகிறார்கள்.

இவையல்லாமல் பல பொருட்களுக்குக் கூடுதல் வரி என்பதும் பலரை சிக்கலில் தள்ளியுள்ளது. மத்திய அரசு நிச்சயம் வரியின் அளவை குறைக்க வேண்டும்.

குறைந்த வரியை விதித்து அனைவரையும் கட்ட வைப்பதே சரி. அதிக வரியை விதித்து ஏமாற்ற தூண்டக் கூடாது.

ஏமாற்றும் சில நிறுவனங்கள்

சில நிறுவனங்கள் பொருளாதார தேக்க நிலை செய்தியைச் சாதகமாக்கி தங்களின் நிலை நன்றாக இருந்தால் கூட அதை இதைக் கூறி பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யக் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன.

எடுத்துக்காட்டுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஐடி துறையில் பிரச்சனையென்று, இலாபத்தில் இயங்கி வந்த நிறுவனங்கள் கூட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்களை மிரட்டி, வேலையை விட்டு நீக்கி விடுவோம் என்ற பயத்திலேயே வைத்து, ஊதிய உயர்வு கொடுக்காமல் தப்பித்தன.

கோவையில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டபோது இதைச் சாக்காக வைத்து ஊழியர்களை மிரட்டிப் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்தன, எவரும் கேள்வி கேட்க முடியாமல் போனது.

இது எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது.

அதிக GST வரியால் நிறுவனங்களுக்குக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது எவ்வளவு உண்மையோ, அதே போல இதுவரை வரியில் ஏமாற்ற முடிந்த அவர்களால் தற்போது அது முடியாமல் இலாபத்தில் நட்டம் வந்ததும் உண்மை.

GST சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும், அதே போல இக்கணக்குகள் நிறுவனங்களுக்கு நிலைபெற இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கலாம்.

GST சிறந்த திட்டம் ஆனால், அதைச் செயல்படுத்திய முறையும் அதிக வரியும் மட்டுமே தவறு.

Read: பணமதிப்பிழப்பு – GST சரியா தவறா?!

குறைந்த வாகன விற்பனை

இப்பொருளாதார தேக்கம், மந்தம் என்ற பெயர் அடிபட முக்கியக்காரணமே, வாகன விற்பனை குறைந்தது தான்.

உண்மையில் எதனால் குறைந்தது என்று தெரியவில்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது போல எனக்குத் தோன்றவில்லை. கடந்த வருடங்களில் அதிகளவு விற்பனையான வாகனங்களும் காரணமாக இருக்கலாம்.

எடுத்துக்காட்டுக்கு, உங்களுக்கு வருமானத்தில் / பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதா? அல்லது முன்பு இருந்த நிலையே நீடிக்கிறதா?

மின்சார வாகனங்கள் வருகை வாகன விற்பனை மந்தத்திற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

தற்போது வாகனங்கள் வாங்குபவர்கள் ஓரிரு வருடங்கள் பார்த்து, மின்சார வாகனங்களுக்கான எதிர்பார்ப்பு எப்படியுள்ளது என்று அறிந்து பின்னர் வாகனத்தை வாங்கலாம் என்றும் நினைத்து இருக்கலாம்.

நான் 2025 – 2030 ல் இந்த நிலையை எதிர்பார்த்தேன் ஆனால், அது முன்கூட்டியே நடந்து விடும் போல உள்ளது.

மின்சார வாகனங்களுக்கான தேவை

தமிழக அரசு மின்சாரப்பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது மின்சார வாகனம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் இவ்வளவு விரைவில் நான் எதிர்பார்க்கவில்லை.

மக்களிடையே மின்சார வாகனத்துக்கான எதிர்பார்ப்பை, ஆர்வத்தை தூண்டும். எனவே, இதுவும் வாங்கும் முயற்சியைத் தற்போது ஒத்தி வைக்கலாம்.

மின்சார வாகனங்கள் மாறுவதால், வேலை வாய்ப்பு பாதிக்கும் என்று தோன்றவில்லை.

ஐடி துறையில் எவ்வளவு கற்றுக்கொண்டாலும் 6 மாதங்கள் / 1 வருடத்தில் அது பழையதாகி விடுகிறது. எதைப் படிப்பது என்றே தெரியவில்லை.

மாறிக்கொண்டே இருக்கிறது, எதுவும் நிலையானதாகக் கருத முடியவில்லை.

கொஞ்ச நாள் முன்பு எனக்குத் தெரிந்த மெக்கானிக் நண்பர் ஒருத்தர் கூறும்போது, “இப்பெல்லாம் Chip Board வந்து விட்டதுங்க! ஏதாவது பிரச்சனைனா கழட்டி சரி செய்வதில்லை, அதை அப்படியே மாற்றி விடுகிறோம்” என்றார்.

இது எனக்கு நான் 1998 ல் ஐடி சர்வீஸ் பிரிவில் வேலையில் இருந்தபோது நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தியது.

அப்போது ஒரு கணினி அசெம்பள் செய்வது என்றால், ரத்தக்களறியாகி விடும். ஏகப்பட்ட வேலைகள் இருக்கும், அனுபவம் உள்ளவர் மட்டுமே செய்வதற்கு எளிது. என்ன படித்து இருந்தாலும் அனுபவமே பேசும்.

தற்போது ஒரு பிரச்னையென்றால், Board யையே மாற்றி விடுகிறார்கள், வேலை முடிந்தது. பிரச்சனைகள் குறைந்து விட்டது.

கால மாற்றம்

எனவே, மின்சார வாகனங்கள் பெருகினால், அது தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியது வரும், அனுபவம் மட்டுமே போதாது.

தெருக்கு தெரு மெக்கானிக் கடை வைத்துள்ளவர்களுக்கு சிக்கலே!

அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டே ஆக வேண்டும், வேறு வழியே இல்லை.

ஐடி துறையில் உள்ளவர்களுக்கு எப்படி நெருக்கடி உள்ளதோ அதே போல ஆட்டோமொபைல் துறையும் ஆகும். இது தான் எதார்த்தம், தவிர்க்க முடியாது.

மின்சார வாகனங்கள் வந்தால் பழுதை சரி செய்வதை விட அப்படியே மாற்றும் முறை தான் அதிகளவில் இருக்கும். முன்பு கூறியது போல Board யை மாற்றி விடுவார்கள்.

மற்றபடி வேலையின்மை ஆகி விடும் என்பதெல்லாம் நடக்காது. அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் பணி புரியும் முறையும் மாறும்.

ஐடி துறைபோல ஆட்டோமொபைல் துறையும் Automation பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும், இதற்கும் பொருளாதாரத்திற்கும் சம்பந்தமில்லை.

இது தொழில்நுட்ப மாற்றம். Automation பிரச்சனையால் வேலை குறைந்தால், வேறு வகையில் வேலை வாய்ப்புகள் உருவாகும். இது தான் இயற்கை.

எனவே, சிரமம் இருந்தாலும் முயற்சி இருந்தால் சமாளிக்கலாம். துவக்க நிலை நெருக்கடியைக் கடக்க மன உறுதி வேண்டும், அவ்வளவே!

பார்லி ஜி

பார்லி ஜி விற்பனை குறைந்ததற்கு பொருளாதார சுணக்கம் காரணமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

மக்கள் இன்னும் பிஸ்கட் வாங்க யோசிக்கும் அளவுக்கு நெருக்கடியைச் சந்தித்து விட்டார்கள் என்பது ஏற்றுக்கொள்ளும்படியில்லை.

பார்லி ஜி மட்டுமல்ல இன்னும் சில நிறுவனங்கள் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளன. இப்பிரச்சனையில் பொருளாதார நெருக்கடி இல்லாமல், பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

முன்னரே கூறியபடி கூடுதல் வரி அல்லது இவ்வளவு நாட்களாக ஏமாற்ற முடிந்த நிறுவனங்களால் தற்போது வரியை ஏமாற்ற முடியாதது நெருக்கடியைக் கொடுத்து இருக்கலாம்.

இதை மத்திய அரசு ஆய்வு செய்து, வரிகளைக் குறைத்து அனைவரையும் வரி வளையத்தில் கொண்டு வர வேண்டும்.

குறைந்த வரி, அதிக எண்ணிக்கை. இதுவே சரி.

ஆன்லைன் விற்பனையும் மக்கள் கடைகளுக்குச் செல்வதை குறைந்துள்ளன. உணவும் வீட்டிற்கே தள்ளுபடியுடன் கிடைப்பதால், மக்கள் உணவகம் செல்வதை குறைத்து விட்டார்கள்.

இதில் நேரடியாக நானே சம்பந்தப்பட்டு இருக்கிறேன். மேற்கூறிய காரணங்களால் கடைகளுக்குச் செல்வது குறைந்து விட்டது.

எதில் முதலீடு செய்வது?

இதுகுறித்து எனக்குத் தெரியாது.

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், ஒரே இடத்தில் உங்கள் பணத்தை / சேமிப்பை முடக்க வேண்டாம். பல இடங்களில் பிரித்து விடுங்கள். ஒரு இடத்தில் பிரச்னையானாலும் கூட மற்ற இடம் காப்பாற்றும்.

பங்குச் சந்தை, PF, FD, PPF, Gold என்று பல உள்ளன. இதில் விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றலாம்.

எதிர்மறை சிந்தனை வேண்டாம்

தயவு செய்து எதையும் எதிர்மறையாகச் சிந்திக்காதீர்கள், பேசாதீர்கள்.

நமக்கு நடப்பதை யாரும் தடுக்க முடியாது. நாம் கவலைப்படுவதால், பயப்படுவதால், நமக்கு நடக்க போவது நடக்காமல் இருக்கப்போவதில்லை.

எனவே, நேர்மறையாகச் சிந்தியுங்கள், நல்லதே நினையுங்கள். எண்ணமே வாழ்க்கை.

நல்லா இருக்கும் நிலையில் தேவையற்றதை கற்பனை செய்து உங்கள் நிகழ்காலத்தை துன்பமாக்கிக்கொள்ளாதீர்கள்.

பொறுப்பற்று எதிர்காலத்திட்டங்கள் இல்லாமல் இருக்க வேண்டாம், அதே சமயம் அதையே நினைத்துப் பயப்படவும் வேண்டாம்.

சுருக்கமாக, பெரிய செலவு எதையும் தற்போது செய்ய முயற்சிக்க வேண்டாம், உங்கள் சேமிப்பை பிரித்து வையுங்கள். உங்கள் பணி சார்ந்த மேம்பாட்டை முயற்சி செய்துகொண்டே இருங்கள்.

எச்சரிக்கையாக இருப்பது நல்லது ஆனால், அதே பயமாக மாறி விடக் கூடாது, மற்றவர்களையும் தேவையற்று பயப்படுத்தக் கூடாது.

இதுவும் கடந்து போகும்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. ரொம்ப தெளிவாக விவரமாக எழுதி இருக்கீங்க!!! நான் வெளிநாட்டில் இருப்பதால், இந்தியாவின் சூழ்நிலை எனக்கு தெளிவாக தெரியவில்லை.. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.. இதன் பாதிப்பு ஒட்டு மொத்த உலக நாடுகளில் இருக்கின்றது என்று.. நான் ஆட்டோமொபைல் துறையில் பணி புரிவதால் எங்கள் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாகவே தொடர் விற்பனை சரிவை சந்தித்து வருகிறது..

    உண்மையை சொல்ல போனால் கடந்த 4 ஆண்டுகளாக நிறுவனத்தில் சலுகைகள் ஏதும் தரப்படவில்லை , ஊதிய உயர்வு உட்பட.. நாங்களும் எப்படியும் நிலைமை சரிவரும் என நம்பி தான் நாட்களை நகர்த்தி கொண்டு வருகிறோம்.. ஆனால் நிலைமை வர வர இன்னும் மோசமாக தான் சென்று கொண்டு இருக்கிறது..

    நாம் கஷடப்பட்ட போது நிறுவனம் நமக்கு உதவியது, தற்போது நிறுவனம் சிரமத்தில் இருக்கும் போது நான் பொறுத்து போவோம் என்ற நிலையில் பெரும்பான்மை ஊழியர்கள் இருக்கிறோம்.. இருப்பினும் எதிர்காலத்தை கணிக்க முடியவில்லை.. இதில் குறிப்பிடவேண்டிய விஷியம், 2008 / 2009 ஆம் ஆண்டில் இதே நிலை ஏற்பட்டது.. பல பெரிய கட்டுமான நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தது.. எங்கள் நிறுவனம் பல மடங்கு இலாபம் ஈட்டியது.. பொருளாதார பாதிப்பு அந்த நேரம் துளி கூட இல்லை..
    ========================================================================
    தயவு செய்து எதையும் எதிர்மறையாகச் சிந்திக்காதீர்கள், பேசாதீர்கள்.

    நமக்கு நடப்பதை யாரும் தடுக்க முடியாது. நாம் கவலைப்படுவதால், பயப்படுவதால், நமக்கு நடக்க போவது நடக்காமல் இருக்கப்போவதில்லை.
    ========================================================================
    இந்த மனநிலைக்கு வந்து வெகு நாட்கள் ஆகி விட்டது.. சொல்ல போனால் தற்போதைய என்னுடைய சிரமமான நிலை தான் என்னை இன்னும் பக்குவப்பட வைப்பதாக உணர்கிறேன்.. ஒரே ஒரு வருத்தம் சக்தி வீடு கட்டிவிட்டு, தற்போது சிரமமான நிலையில் இருக்கும் போது, என்னால் முழுவதும் உதவமுடியவில்லை என்ற ஒரு குறை மட்டும் மனதில் ஓரத்தில் உறுத்தி கொண்டு வருகிறது.. இதுவும் கடந்து போகும்.. விடியலை நோக்கி நாங்கள் இருவரும்.. (சமீபத்தில் எங்கோ படித்த வரிகள்..)
    ==================
    அருமையான பொற்கால வாழ்க்கையை தொலைத்து விட்டு அனாதையாக நிற்கிறோம்… விஞ்ஞானம் அனைத்தையும் எளியதாக்கியது, ஆனால் அதற்கு விலையாக நிம்மதியை மொத்தமாக உருவி எடுத்தது…பகிர்வுக்கு நன்றி கிரி..
    =================

  2. தற்போதைய பொருளாதார சிக்கல், உலகம் முழுவதும் உள்ளது ஆனால், இந்தியாவில் மட்டும் இருப்பது போல வழக்கம் போல ஊடகங்கள் பேசிக்கொண்டுள்ளன.

    2009 ஐடி துறைக்கு மோசமான ஆண்டு, நேரில் அனுபவித்துள்ளேன். இந்த முறை எப்படி போகும் என்பது தெரியவில்லை, பார்ப்போம்.

    தற்போது அவசியமற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை சேமிக்க முயற்சிக்க வேண்டும். பெரிய செலவுகளை தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!