பயணக் குறிப்புகள் [ஆகஸ்ட் 2019]

2
Gunderipallam

 

ல்வேறு காரணங்களுக்காக இந்த மாதம் கிட்டத்தட்ட அனைத்து வார இறுதியிலும் ஊருக்குச் சென்று வந்து விட்டேன்.

டிவிஎஸ் ஜூபிடர்

ஜூபிடர் வாங்கியுள்ளதால், இதுவரை செல்லாத இடங்களுக்கெல்லாம் எளிதாகச் சென்று வந்து கொண்டு இருக்கிறேன்.

முன்பு அப்பாவின் டிவிஎஸ் XL இருந்ததால், அதில் ரொம்ப தூரம் செல்ல முடியாது. கோபி மற்றும் கோபிக்கு மிக அருகே உள்ள இடங்கள் மட்டுமே செல்ல முடிந்தது.

தற்போது ஜூபிடர் வந்ததால், அடிச்சு தாக்கிட்டு இருக்கிறேன். இதுகுறித்து விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.

பண்ணாரி

அக்கா பசங்க கூடப் பண்ணாரி கோவில் காலையில் சென்று வந்தோம். ரொம்ப நன்றாக இருந்தது.  அக்கா பசங்க தங்கமான பசங்க 🙂 .

கோவிலில் வழக்கம்போல ஓரளவு கூட்டம். சாமி கும்பிட்டுவிட்டு அருகே இருந்த பூங்காவில் கொஞ்ச நேரம் இருந்து, நிழற்படங்கள் எடுத்தபிறகு ஊர் திரும்பினோம்.

முந்தைய வாரம், அக்கா பையன் முகிலுடன் பண்ணாரி சென்று இருந்தேன். நேரம் இருந்ததால், “திம்பம்” வரை (14 கிமீ) சென்று வரலாம் என்று முடிவு செய்தோம்.

27 கொண்டை ஊசி வளைவு என்று இருந்தது. நான் திம்பத்துக்கு 10 கொண்டை ஊசி வளைவு இருக்கும் (தாளவாடி செல்லும் வழி) என்று நினைத்தால், திம்பத்துக்கே 27 கொண்டை ஊசி வளைவும் இருந்தது.

மாலையே சென்னை திரும்ப வேண்டியிருந்ததால், அதிக நேரம் இருக்க முடியாமல், குளிருக்கு இதமாக ஒரு காஃபி மட்டும் குடித்து விட்டுத் திரும்பி விட்டோம்.

பின்னர் ஒரு நாள் பொறுமையாகச் சென்று வரலாம் என்று உள்ளேன்.

குண்டேரிப்பள்ளம் அணை

கோபி அருகே 20+ கிமீ தொலைவில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது.

அணைக்குச் செல்லும் வழி பசுமையாக அட்டகாசமாக இருக்கும். எனவே இங்கே சென்று வரலாம் என்று முடிவு செய்து நானும் என் முதல் அக்காவும் சென்றோம்.

தண்ணீர் குறைவாக இருந்தது அதோடு சிறு அணை தான். சிறப்பான பயணம்.

கொடிவேரி அணை

கொடிவேரி அணை எங்கள் வீட்டிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது ஆனால், நான் இதுவரை ஒருமுறை கூடச் சென்றதில்லை என்று வியப்பாக இருந்தது.

அக்காவுக்கு வழக்கமான பணிகளிலிருந்து ஒரு மாறுதல். நாங்கள் சென்ற போதே மாலை நேரம் ஆகி விட்டதால், விரைவிலேயே திரும்ப வேண்டியதாகி விட்டது. 5 மணிவரை மட்டுமே கொடிவேரி அணை திறந்து இருக்கும்.

Pony Salon 

கோபியில் சென்னையைப் போல நவீன வசதிகளுடன் Pony Salon சில மாதங்களுக்கு முன்பு திறந்தார்கள். கோபிக்கு இது கொஞ்சம் அதிகம் என்றே தோன்றியது.

கட்டணம் 110 மட்டுமே! கூட்டம் இருந்து கொண்டு உள்ளது. ஆண் பெண் இருபாலருக்குமானது.

வினய் யுவன் இருவருக்கும் இந்த முறை வழக்கமான முறையாக இல்லாமல், வேறு மாதிரி வெட்டக் கூறியதால் குஷியாகிட்டானுக. ஆளே மாறி இருந்தானுக 🙂 .

பணியில் இருந்தவர்கள் ஒருவர் கூட நம்ம ஆள் இல்லை. அனைவருமே வட இந்தியர்கள் தான் ஆனால், தமிழ் ஓரளவு பேசுகிறார்கள்.

பவானிசாகர் அணை தண்ணீர்

ஊட்டி மற்றும் மலைப்பகுதி மழையால், பவானிசாகர் அணை நிரம்பி வருகிறது.

விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட்டார்கள். புதிய தண்ணீர் என்பதால், வழியெங்கும் வாய்க்காலில் செம்மண் கலந்து சிவப்பு நிறத்தில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

தண்ணீர் தெளிய இன்னும் ஒரு வாரம் ஆகலாம்.

உற்சாகமான மாதம்

முதல் அக்கா பையன் ஸ்ரீராமுக்கு கோபிக்கே மாற்றல் கிடைத்து விட்டது. எனவே, மனைவியுடன், அவன் வீட்டுக்கே வந்து விட்டான்.

எனவே, எப்போது ஊருக்குச் சென்றாலும், எங்க வீட்டுக்கு அனைவரும் வந்து விடுவதால் அனைவருடனும் கலகலப்பாக உள்ளது.

பொங்கலுக்கு சென்னையில் உள்ள அக்கா குடும்பமும் ஊருக்கு வந்து விடுவார்கள். இந்தப் பொங்கல் கலக்கல் தர்பார் பொங்கலாக இருக்கப்போகிறது.

ஆகஸ்ட் மாதம் உற்சாகமான மாதமாக இருந்தது. நான் சிங்கப்பூரிலிருந்து எதற்கு நம்ம ஊருக்கே வந்தேனோ அதை நான்கு வருடங்களிலேயே அனுபவித்து விட்டேன் அல்லது திருப்தியாகி விட்டேன்.

இதன் பிறகு எனக்குக் கிடைப்பதெல்லாம் போனஸ் தான். சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா! 🙂 .

பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையல்ல! அதையும் தாண்டி நாம் மகிழ்ச்சியடைய, பகிர்ந்துகொள்ள நம்மைச் சுற்றி எவ்வளவோ உள்ளது.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. புகைப்படங்கள் அருமையாக இருக்கிறது.. குறிப்பாக முதல் புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.. ஒரு காலத்தில் நான் புகைப்படங்களை ரசிப்பதில் நேர்த்தியான ஒரு தீவிர ரசிகன்!!! ஆனால் தற்போது என்னுடைய சிந்தனையும், மனஓட்டமும் ஏதோ ஒரு தேடுதலை நோக்கி ஓடுவதால் என்னால் புகைப்படங்களை முன்பு போல் ரசிக்க முடியவில்லை..
    =============
    பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையல்ல! அதையும் தாண்டி நாம் மகிழ்ச்சியடைய, பகிர்ந்துகொள்ள நம்மைச் சுற்றி எவ்வளவோ உள்ளது.
    =============
    ஒவ்வொரு முறை உங்கள் அனுபவத்தை கூறும் போதும், என்னுடைய கடந்த காலவாழ்க்கையையும், தற்போதைய சூழ்நிலையையும் யோசிக்க வைக்கும்.. இருப்பினும் நீங்கள் எடுத்த முடிவு போல், என்னால் தற்போது முடிவெடுக்க முடியாமல் என் நாட்களை நகர்த்தி வருகிறேன்..

    ஆனால் உங்களின் சந்தோஷம், என்மனதில் ஓரத்தில் பொறாமைப்பட வைத்தாலும், உங்களின் தன்னம்பிக்கை எனக்கு இன்னும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும், ஆறுதலையும் தருகிறது.. உங்களின் மகிழ்ச்சியும், சந்தோஷமும் இன்னும் அதிகரிக்கட்டும்…பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. யாசின் நீங்க கூறியதை வைத்துச் சிலவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.

    சரியோ தவறோ அப்போது உறுதியான பெரிய ஒரு முடிவை எடுத்து வந்து விட்டேன் ஆனால், உள்ளூர ஒரு பயம் இருந்தது உண்மை தான். நம்ம முடிவு தவறாகப் போய் விடுவோமோ என்று இருந்தது ஆனால், கடவுள் அருளால் அதுபோல நடக்கவில்லை.

    நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!