உங்களில் பெரும்பாலானவர்களுக்கு இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் இயக்கிய “வீடு” என்ற படம் பற்றி தெரிந்து இருக்கும். அதில் வரும் “வீடு” தாத்தா பிரபலம்.
சன் டிவி போன்ற தனியார் சேனல்கள் வந்து இராத சமயங்களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ஞாயிறு மதியம் தேசிய விருது பெற்ற படங்கள் போடுவார்கள்.
அதில் தமிழ் பிரிவில் அடிக்கடி இப்படம் தான் வரும்.
அப்போது குறிஞ்சிப் பூ மாதிரி தமிழ் படம் வருவதால் படம் சோகமாக இருந்தாலும் இதையும் பார்க்க ஒரு கூட்டம் அமர்ந்து இருக்கும்.
சிறு வயதில் “வீடு” படம் என்றாலே கதி கலங்கிய நாட்கள் உண்டு 🙂 . Image Credit
ஒரு நடுத்தர குடும்பம் வீடு கட்டும் போது, எதிர்கொள்ளும் நடைமுறை சிரமத்தை கூறி இருப்பார்கள்.
இந்தப் படம் வந்த போது அந்த வீடு கட்ட ஆன செலவு 1,50,000 ஆனதாக வரும். தற்போது நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
இந்தப்படம் வந்து 25 வருடம் ஆகிறது. நான் கூறப் போவது அந்த வீட்டைப் பற்றி அல்ல, அந்த வீடு படத்தில் வரும் தாத்தா போன்ற பெரியவர்களைப் பற்றி.
வீடு தாத்தா
இப்படத்தில் வரும் தாத்தா “சொக்கலிங்கம் பாகவதர்” ரொம்ப அருமையாக நடித்து இருப்பார். நடிப்பு என்று கூறுவதை விட நடிக்காமல் இயல்பாக வந்து செல்வார்.
இவர், கட்டிய வீட்டை அடையும் போது வெயிலில் சோர்ந்து போய் இருப்பார்.
பின் கட்டிய வீட்டை தடவி பெருமிதமாக / சந்தோசமாக ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் பாருங்கள்… அருமை! அவர் முகத்தில் அப்படியொரு திருப்தி இருக்கும்.
அர்ச்சனாக்கு கொடுத்த தேசிய விருதை இவருக்குக் கொடுத்து இருக்க வேண்டும்.
ஒரு காட்சியில் அர்ச்சனாவிற்கு பிறந்த நாள் என்று தன்னுடைய வேட்டியில் வைத்து இருக்கும் ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ எடுத்துக்கொடுப்பார்.
எனக்கு இது மாதிரி கொடுக்கத் தாத்தா / பாட்டி இல்லையே என்று ஏங்கிய நாட்கள் அதிகம் உண்டு.
நான் இந்தப் பதிவில் கூறப்போவது “தாத்தா பாட்டி” பற்றித் தான்.
கொசுறுத் தகவல் : இந்தப் படத்தில் வரும் “வீடு” தான் தற்போது பாலு மகேந்திரா அலுவலகமாக இருக்கிறதாம்.
சில நினைவுகள்
தாத்தா [அப்பாவின் அப்பா] ஒரு பேரன் வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டார் ஆனால், நான் மூன்று அக்காவுக்குப் பிறகு பிறந்தேன்.
மூன்றும் பெண் பிள்ளைகள் என்ற ஏமாற்றம் இருந்தாலும், அனைவரிடமும் ரொம்பப் பிரியமாக நடந்து கொண்டதாக அம்மா கூறுவார்கள்.
நான் பிறக்கும் முன் தாத்தா இறந்து விட்டார், கடைசி வரை பேரனைப் பார்க்காமலே சென்று விட்டார்.
ஆயா [அப்பாவின் அம்மா] என் நான்கு வயது வரை இருந்தார்கள். அவர் என்னை அன்பாகக் கவனித்துக் கொண்டது மங்கலாக நினைவு இருக்கிறது.
அம்மாவின், அப்பா அம்மா இருவரையும் பார்த்ததே இல்லை.
தாத்தா [கிரி] தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர். காமராஜர், ராஜாஜி போன்றவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து இருகிறார்கள்.
ஒருவேளை நான் பெரியவன் ஆகும் வரை என் தாத்தா இருந்து இருந்தால், நான் அரசியல்வாதி ஆகி இருப்பேனோ என்னவோ 🙂 ஆனால், கட்சி மாறி இருப்பேன்.
தாத்தாவின் நினைவாகவே என் பெயரும் கிரி. பூஜை அறையில் நான் வைத்து வணங்குவது இரு படங்கள் தான்.
ஒரு படம் முருகன், இன்னொரு படம் என் ஆயாவின் படம் [அப்பாவின் அம்மா].
தாத்தா பாட்டி பாசம்
பெற்றோர் இல்லாதவர்கள் அம்மா அப்பா பாசமே கிடைக்கவில்லை என்று கூறக் கேட்டு இருக்கிறேன். என் பிரச்சனை தாத்தா பாட்டி பாசமே கிடைக்காமல் போனது.
இவர்கள் இருந்தால் நம்மை எப்படி கவனித்துக்கொண்டு இருப்பார்கள்.. நமக்கு ஆதரவாக எப்படியெல்லாம் பேசி இருப்பார்கள் என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.
நமக்குப் பிடித்ததை வாங்கி கொடுத்து அசத்தி இருப்பார்கள்.
ஒரு சில தாத்தா பாட்டிகள் செல்லம் கொடுத்தே குழந்தைகளைக் கெடுத்து விடுவார்கள், அவர்கள் கொஞ்சம் பிரச்சனை தான்.
பாசம் அவர்கள் கண்ணை மறைத்துத் தாங்கள் செய்யும் தவறை உணரத் தவறி விடுகிறார்கள்.
அப்பா நான் சிறு வயதாக இருக்கும் போது, எனக்குப் பொம்மை என்று வாங்கித் தந்ததை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இப்ப என்னடான்னா என் பையன் வினய்க்கு அது இதுன்னு அவன் கேட்காமலே வாங்கிக் கொடுத்துட்டு இருக்காங்க.
நான் ஒரு நாள் சண்டைக்கே போயிட்டேன்.. அப்பா! எனக்கு ஒண்ணுமே வாங்கித் தரல, இவனுக்கு அவன் கேட்காமையே வாங்கிக் கொடுக்கறீங்களே! என்று.
அப்படி இப்படி என்று சமாளித்தார். ஒரு தந்தையாகப் பாசம் என்பதை விடத் தாத்தாவாக எவரும் அதிக பாசத்துடன் உள்ளார்கள்.
இதன் காரணமாகவே வயதான உறவினர் தாத்தா பாட்டிகளைக் கண்டால் ரொம்பப் பிரியமாக நடந்து கொள்வேன்.
தாத்தாவின் தம்பி மனைவி இன்னும் இருக்கிறார்கள், அவருக்கு 85 வயது ஆகிறது. காது சரியாகக் கேட்காது.
எப்போது ஊருக்குச் சென்றாலும் இவரைப் பார்த்து விடுவேன். இவர் தான் எங்கள் குடும்பத்தில் மூத்தவர்.
சம்பாதிக்கிறேன் என்று எல்லோரும் கண் காணாத இடத்திற்குப் போயிட்டீங்க, இப்பெல்லாம் யாரு நாங்க சொல்றதை கேட்குறீங்க! என்று ரொம்ப ஆதங்கப்படுவார்.
காலம் கடந்த புரிதல்
பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்குவது திருப்தியான செயல் என்றாலும், தாத்தா பாட்டியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது எனக்கு பரம திருப்தி அளிக்கும் விஷயம்.
அவர்கள் காலில் விழுந்து வணங்கினால், அவர்களுக்கு அவ்வளவுமகிழ்ச்சியாக இருக்கும்.
தற்போதைய தலைமுறை குழந்தைகள் இதை அவ்வளவாகச் செய்வதில்லை, பெற்றோர்களும் இதை ஊக்குவிப்பதில்லை.
பண்டிகை / பிறந்த நாட்களில் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வைப்பது குழந்தைகளுக்குப் பெரியவர்கள் மீது அன்பையும் மரியாதையும் கொடுக்கும்.
அவர்களுக்கும் தங்களை வயதானவர்கள் என்று ஒதுக்கி விடாமல் மரியாதை கொடுக்கிறார்கள் என்ற மன நிம்மதி கிடைக்கும்.
இதெல்லாம் புரியாதவர்கள் / கிண்டலாக நினைப்பவர்கள், வயதாகி இந்த நிலையில் இருக்கும் போது தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள்.
ஆனால் என்ன! அது காலம் கடந்த புரிதலாக இருக்கும்.
இது போல என் பாட்டியை [தாத்தாவின் தம்பி மனைவி] காணச் செல்லும் போது, என் மகன் வினயையும் அழைத்துச் செல்வேன்.
கண்டிப்பாக அவர் காலில் விழுந்து வணங்கச் சொல்வேன்.
என்னை விட வினய் வணங்கினால் அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி / திருப்தி இருக்கும்.
அவனுக்குப் பணம் கொடுப்பார்கள்.. “அப்பா! ஆயா பணம் கொடுத்தாங்க” என்று சிரித்துட்டு சொல்வான்.
பெரியவர்கள் கொடுப்பது பத்து ருபாய் என்றாலும், அதன் மதிப்பின் ஆழம் புரிந்தவர்களுக்கு அது கோடி ரூபாய்க்கு சமம் என்பது தெரியும்.
வினய்க்கு என்னைப் போலப் பிரச்சனை இல்லை, அவனுக்கு இரு தாத்தா பாட்டியும் இருக்கிறார்கள், அன்பாகக் கவனித்துக் கொள்கிறார்கள்.
குறிப்பாக என்னை அதிகம் கண்டு கொள்ளாத என் அப்பா 🙂 இவனுக்குச் செம கவனிப்பு.
பெரியவர்கள் தங்கள் அனுபவத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கும் அறிவுரை, அன்பு அவர்களுக்கு அவசியம் தேவை.
தற்போதைய தனிக் குடும்ப வாழ்க்கையில் இது போலச் சந்தர்ப்பம் குறைந்து விட்டதால், குழந்தைகளுக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது பெரியவர்களின் முக்கியத்துவத்தை உணரச் செய்யுங்கள்.
பெரியவர்களும் குழந்தைகளிடம் அதிக செல்லம் கொடுத்து அவர்களைக் கெடுத்து விடாதீர்கள். இதை நான் நிறைய கவனித்து இருக்கிறேன்.
தாத்தா பாட்டியின் அருமை என்னைப் போன்ற அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களுக்குத் தான் தெரியும்.
தாய் தந்தை இல்லாதவர்கள் ஏக்கம் எப்படி பலரால் கூறப்படுகிறதோ, அதுபோல இதுவும் அந்த உணர்வை ஒட்டியது தான்.
பெரியவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள், அவர்களுக்குரிய மரியாதையை கொடுங்கள்.
குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்குப் பெரியவர்களின் முக்கியத்துவத்தை உணரச் செய்யுங்கள்.
அனைவரும் இந்த நிலையைக் கடக்காமல் செல்ல முடியாது எனவே பின்னாளில், செய்த தவறை உணர்ந்து வருந்தாமல் தற்போதே சரியான வழியில் செல்லுங்கள்.
பிற்சேர்க்கை – வயதானவர்களின் நிலை என்ன?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
“என்னுடைய தாத்தா [கிரி] தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர் [தற்போது ஜி கே வாசன் பதவி].”
ஜி.கே. வாசன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இல்லை. தற்போதைய தலைவர் ஞான தேசிகன்.
🙂 நன்றி கோபி
நீங்கள் எழுதும் பதிவுகளில் ரசனைக்காக செய்யும் சின்னச் சின்ன விசயங்களின் ரசிகன் நான்.
ரொம்ப நல்ல பதிவு. நம் குழந்தைகளுக்கு கற்றுத்தர மறந்த ஒரு நல்ல பழக்கத்தை பற்றிய இந்த பதிவு மிகுந்த வரவேர்ப்புகுரியது.
கிரி… பிறந்து ஒரு வயது முதல் தாய் தந்தை பாசம் இன்றி என்னுடைய இளமை பருவம் வரை இவர்களின் அரவணைப்பில் தான் வளர்ந்து வந்தேன்.. ஆனால் அவர்கள் என்னை வளர்த்த விதம், கற்று கொடுத்த பழக்க வழக்கம், எல்லாமே இன்றும் என்னை அதிசயிக்க வைக்கும்..
என் பெற்றோரை காட்டிலும் இவர்களிடத்தில் எனக்கு அன்பு அதிகம்.. 12 மணி உச்சி வெயில் வெட்டி தனமா கிரிக்கெட் விளையாடும் எனக்கு, இன்னும் பேரன் சாப்பிடவில்லை யென்று சொல்லி கட்டு சோறு எடுத்து வந்து கொடுத்து, நான் சாப்பிட்ட உடனே தான் வீட்டுக்கு கிளம்பி செல்வார் என் பாட்டி… பல தடவை இதை பார்த்து என் நண்பர்களே ஆச்சிரிய பட்டதுண்டு…
என்னுடைய பாட்டி இன்று இல்லை.. (தாத்தா இருக்கிறார்…) ஆனால் அவர்களின் நினைவு என்றும் நெஞ்சில் உண்டு… தாத்தா, பாட்டி இவர்களின் அரவணைப்பு இன்றி அடுக்குமாடி குடியிருப்பில் வளரும் இன்றைய குழந்தைகள் நிச்சயம் பாவம்…பழைய நினைவுகளில் மிதக்க வைத்ததற்கு நன்றி கிரி…
தாத்தாவ நியாபகபடுதுடீங்க கிரி.. எங்க அம்மா வழி தாத்தா (இப்போ இல்லை) என் மீது ரொம்ப பாசமா இருப்பார், தோள் மீது தூக்கி வைத்துகொண்டு நாங்கள் இருவரும் திருவாரூரில் இருந்த கருணாநிதி சினிமா கொட்டகைக்கு செல்வோம் அதெல்லாம் ஒரு காலம். என் அப்பாவழி தாத்தா (எங்கள் அப்பாவின் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்) ரொம்ப டெர்ரர்ன்னு கேள்விபட்டேன் – ஒரு சின்ன சாம்பிள் – ஒரு ஆட்டுக்குட்டி வீட்டுக்குள்ள வந்ததுன்னு அதை குழம்பு வைத்து ஆட்டை தேடி வந்தவனை உக்காரவச்சு சோறுபோட்டு.. நீ இனிமே ஆட்ட தேடாத – நீ தின்னு முடிச்சியே அதுதான் உன் ஆடு அப்படின்னு சொல்லி அனுபிச்சாராம். அப்புறம் ஒரு பானை கள்ளுக்கெல்லாம் ஒரு தோப்பையே எழுதி கொடுத்து சொத்தையெல்லாம் அழிச்சார் அந்த சொக்கலிங்கம். அவர் பேரைத்தான் எனக்கு வைப்பதாக இருந்தது. எங்கப்பா பிடிவாதமாக மார்டனா பேரு வச்சார்.. இல்லைன்னா எதிர்நீச்சல் பட கதைதான் நடந்திருக்கும். அவருக்கப்புறம் நான்தான் இப்போ சொத்து சேர்க்க ஆரம்பிச்சுர்கேன்
அந்த டெர்ரொர் தாத்தா சாம்பிள் இததான் சொல்ல வந்தேன், எங்கம்மா இப்போதும் அதை சொல்லி சொல்லி வருத்தப்படுவாங்க (எங்கப்பா அத கேட்கும்போது சிரிப்பாங்க). என் டெர்ரர் தாத்தா ஒருத்தன் ரொம்ப வாலாட்டுறான்னு அவன் தூங்கும்போது ………… புடிச்சி அறுத்து ரோட்டுல போடார் அவன் துடிச்சிகிட்டே இருந்தான்னு. இது நடந்ததெல்லாம் 1947க்கு முன்னாடி – கஷ்டம்தான் இதெல்லாம் வரலாறுன்னு மனசுல பதிஞ்சிடுச்சே..
எப்படியோ மனசுக்குள்ள இருந்த டெர்ரொர் தாத்தா வரலாற்றை பதிவு செஞ்சுட்டேன் கிரி.. வருங்கால சந்ததிகள் இத படிச்சி தெளிஞ்சிடுவாங்க :-))
@ஜோதிஜி & கௌரிஷங்கர் நன்றி
@யாசின் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
@ராஜ்குமார் ஐயையோ! உங்க தாத்தா விவகாரமான தாத்தாவா இருப்பார் போல இருக்கே.
பழைய ஞாபகம் வர வெச்சுடீங்க தல
அதான் இந்த பதிவோட வெற்றி
– அருண்
அருமையான பதிவு கிரி ,
இதை படித்தவுடன் என் தாத்தா, பாட்டி ஞாபகம் வந்தது.
ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது
ராஜேஷ்