சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி

3
சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி

2001 ம் ஆண்டு ஆரம்பித்த பிரச்சனை, 2019 ல் குற்றம் இழைக்கப்பட்டவரின் இயற்கை மரணத்தோடு சிறைத் தண்டனை பெறாமலே முடிந்துள்ளது. Image Credit

சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி

ராஜகோபால் அவர்கள் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது, அவர் ஊழியர்களுக்குக் கொடுத்த சலுகைகள், சரவணபவன் உணவகத்தை நடத்திய முறை தான்.

சோதிடர் கூறியதை கேட்டு தன் நிறுவனத்தில் பணிபுரிவரின் மகளைத் திருமணம் செய்ய முயற்சித்து அது தொடர்பாக நடந்த கொலையில் சம்பந்தப்பட்டு, வழக்கில் சிக்கினார்.

மிகப் பெருமையுடன் முடிந்து இருக்க வேண்டிய ராஜாகோபால் அவர்களின் இறுதி வாழ்க்கை மிக மோசமாக முடிந்துள்ளது அவரது உணவக வாடிக்கையாளனாக வருத்தமளிக்கிறது.

இவர் இருந்ததே மிக உயரமான இடம் ஆனால், அதை விட உயரமான இடம் செல்ல தவறான வழிகளில் சென்று சறுக்கியது விதி என்பதைத் தவிர வேறு என்னவென்று கூறுவது?

சரவணபவன் என்றால் எவ்வளவு பிரபலம் என்று இக்காலத் தலைமுறைக்குத் தெரியாது. தற்போது பல நவீன உணவகங்கள் வந்து விட்டன.

சென்னை என்றாலே அப்போது (1990 – 2005)  “சரவணபவன்” என்பது தான் அடையாளம்.

GST

GST அறிமுகத்தின் போது சாப்பாடு ₹115 வந்து பின்னர் கூட்டம் குறைந்ததால், தடாலடியாக ₹75 க்கு வந்து தற்போது (ஜூலை 2019) மீண்டும் ₹90 தாண்டிச் சென்று இருக்கிறது.

எனக்கு நினைவில் உள்ள குறைந்த பட்ச சாப்பாடு விலை ₹14 / ₹16 ருபாய், ஆண்டு 1996 / 1997.

சாப்பாடு ₹14 / ₹16 என்றால், வியப்பாக உள்ளது அல்லவா! இக்காலம் பொற்காலம்.

இன்றும் வீட்டில் மனைவி இல்லையென்றால், சரவணபவன் தான் செல்கிறேன். முன்பு இருந்த சுவை இல்லையென்றாலும், ஏனோ மற்ற உணவகங்கள் தைரியமாகச் செல்ல முடியவில்லை.

சென்னை வந்த புதிதில் பல உணவகங்களில் சாப்பிட்டு வயிற்று வலி வந்த போது சரவணபவன் தான் என்னைக் காப்பாற்றியது. ஒருவேளை சரவணபவன் இல்லையென்றால், நான் சென்னையில் தொடராமல் கூடப் போய் இருக்கலாம்.

இது மிகைப்படுத்திய பேச்சாக தெரியலாம் ஆனால், இது தான் உண்மை.

saravana-bhavan

ஊழியர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்தவர், அவரே ஒழுக்கத்தில் நிலைதடுமாறிப் போனது மிகக் கொடுமை. இந்தச் சிக்கலில் மாட்டாமல் இருந்து இருந்தால், இவரது உணவகம் இன்னும் பல மடங்கு முன்னேற்றம் கண்டு இருக்கும்.

சோதிடம்

எவனோ ஒரு வீணாப்போன சோதிடன் சொன்னதைக் கேட்டு செய்த இவரின் நடவடிக்கைகள் இவரின் வாழ்க்கையை மட்டுமல்லாது பலரின் வாழ்க்கையைப் பாழாக்கி விட்டது.

சோதிடம் என்பதை தோராயமான முன் கணிப்பு சேவையாக வைத்துக்கொள்ளலாமே தவிர, அதையே நம்பி இவ்வளோ தீவிரமாக இறங்குவது முட்டாள்த்தனம்.

இவர் சிறைக்குச் செல்லப்போகிறார் என்ற செய்தி கண்டதும், பல லட்சம் பேருக்குச் சுவையான உணவை வழங்கியவர், சிறை உணவைச் சாப்பிடப் போகிறாரே! என்று தான் நினைத்தேன்.

தன் பணப் பலம் காரணமாகத் தண்டனையினைத் தள்ளித் தள்ளிக் கொண்டு வந்து இறுதியில் அதை அனுபவிக்கும் முன்பே காலமாகி விட்டார்.

சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு வந்தவுடன், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கேட்ட போது, “வழக்கமான நெஞ்சு வலி கதையாக இருக்குமோ!” என்று நினைத்தேன் ஆனால், இப்படி ஓரிரு நாளில் காலமாவார் என்று நினைக்கவில்லை.

அவரின் விருப்பக்கடவுள் முருகன் அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாக நம்பினார் ஆனால், அவரின் தவறுகளுக்கு உடன் வரவில்லை என்பதை உணரத் தவறி விட்டாரே!

முருகன் ஆசிர்வாதத்தால் படிப்படியாக மேலே வந்தவர் சோதிடனை நம்பி சீரழிந்து விட்டார்.

இவருடைய வாழ்க்கை அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. எப்படி ஒரு மனிதன் இருக்க வேண்டும் என்பதற்கும், எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும்.

அண்ணாச்சி அவர்களுக்கு அவருடைய உணவக வாடிக்கையாளனாக அஞ்சலி.

தொடர்புடைய கட்டுரைகள்

சரவணபவனுக்கு என்ன ஆச்சு?!

சிங்கப்பூர் உணவகங்கள் – சரவணபவன்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. ” இவருடைய வாழ்க்கை அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. எப்படி ஒரு மனிதன் இருக்க வேண்டும் என்பதற்கும், எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும்.” – சரியான வார்த்தை. RIP சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி

  2. எந்த துறையில் சாதித்த தனிமனிதனின், சாதனையையும் நான் என்றும் மதிப்பவன்.. அவர்களின் வாழ்க்கையிலிருந்து எனக்கு தேவையான பாடத்தை மட்டும் நான் எடுத்து கொள்வேன்.. அண்ணாச்சியின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்வினை அலசி ஆராய விரும்பவில்லை.. உப்பை தின்றவன் யாராக இருப்பினும் தண்ணீர் குடுத்து தான் தீர வேண்டும் என்பது உலக நியதி..

    ஒரு இமாலய சாதனை கொண்ட மனிதன் வாழ்வின் ஏதோ ஒரு பகுதியில் சறுக்குகின்றான் என்பது வருத்தமான நிகழ்வு.. எல்லா மனிதனுக்குள்ளும் வெவ்வேறு வடிவங்களில் மிருகங்கள் உறங்கி கொண்டிருக்கிறது… அவை தூங்கிக் கொண்டிருக்கும் வரை யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை.. அவை விழிக்க தொடக்கி விட்டால் தான் பிரச்சனையே!!!

    “இவருடைய வாழ்க்கை அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. எப்படி ஒரு மனிதன் இருக்க வேண்டும் என்பதற்கும், எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும்.” ரத்தக்கண்ணீர் படத்தோட வசனம் போல் இருந்தாலும் உண்மை இதுவே!!! கண்ணதாசனின் சுயசரிதையிலும் அவர் குறிப்பிட்டது இதை தான்!!! பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @விஜய் நன்றி

    @யாசின் “ரத்தக்கண்ணீர் படத்தோட வசனம் போல் இருந்தாலும் உண்மை இதுவே!!! கண்ணதாசனின் சுயசரிதையிலும் அவர் குறிப்பிட்டது இதை தான்”

    நல்லா நினைவு வைத்து இருக்கீங்க.. நான் மறந்துட்டேன் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here