சரவணபவன்| என்ன ஆச்சு?!

7
சரவணபவன்

ப்போது GST அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்து சரவணபவனுக்குக் கட்டம் சரியில்லை. Image Credit

சரவணபவன் பற்றி 2000+ ல் பிறந்தவர்களுக்கு அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. சென்னை என்றாலே சரவணபவன் தான் என்பது எழுதப்படாத விதி.

1997 ல் இருந்து தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வருகிறேன். நினைவில் உள்ள குறைந்த பட்ச சாப்பாடு விலை 14 / 16 ருபாய்.

மற்ற உணவகங்கள்

படிக்கும் போது இருந்து மைலாப்பூரில் தான் உள்ளேன், அப்போது மைலாப்பூரில் சரவணபவன் கிடையாது. சங்கீதாவில் சாப்பாட்டில் சோடா போட்டதால், வயிற்று வலி வந்து ரொம்பச் சிரமப்பட்டு விட்டேன்.

அப்போது சங்கீதாவை விட்டால் வேறு நல்ல உணவகம் அந்தப்பக்கமில்லை.

சாப்பாடு நல்லாத்தான் இருந்தது, நண்பர்கள் அனைவரும் அங்குத் தான் சாப்பிடுவோம். ஏனோ பின் சாப்பாடு பிரச்சனையாகி விட்டது, தற்போது எப்படி என்று தெரியவில்லை.

லஸ் சுகநிவாஸ் அவ்வப்போது செல்வேன்.

இதன் பிறகு சரவணபவனில் சாப்பிட ஆரம்பித்த பிறகே பிரச்சனையில்லை. நான் சென்னையில் தொடர சரவணபவன் முக்கியக்காரணம். நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

வெளியே சாப்பாடு என்றால் அன்றில் இருந்து இன்றுவரை சரவணபவன் தான். நண்பர்கள் அனைவரும் “என்ன கிரி! சரவணபவனா!” என்று தான் கிண்டலடிப்பார்கள்.

இது கூடப் பரவாயில்லை.. சிங்கப்பூரில் எட்டு வருடங்கள் இருந்த போது கூட அங்கேயும் சரவணபவன் தான்.

Read: சிங்கப்பூர் உணவகங்கள் – சரவணபவன்

அப்போது டி நகர் சரவணபவனில் உட்கார இடம் கிடைக்காது, மிகைப்படுத்தவில்லை. சாப்பிடுபவர்கள் அருகிலேயே எப்படா எழுவார்கள் என்று நின்று கொண்டு இருப்பார்கள்.

எழுந்தவுடன் படக்கென்று அமர்ந்து விடுவார்கள், அவ்வளவு கூட்டமாக இருக்கும்.

சரவணபவன் கிளைகளிலேயே சுவை பிடித்தது டி நகர் (உஸ்மான் சாலை), வடபழனி மட்டுமே! தற்போது மைலாப்பூர் (குளம்).

GST ஏற்படுத்திய மாற்றம்

வீட்டில் ஊருக்குச் சென்று விட்டார்கள் என்றால், பெரும்பாலும் சரவணபவன் தான் செல்வேன்.

தற்போது சில மாதங்களாகக் கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. Swiggy, UBER eats ஆளுங்க கூட்டம் தான் அதிகமுள்ளது. ஒருவேளை இவர்களால் நன்கு லாபமா?!

GST அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில் 110 ரூபாய் சாப்பாடு, பின்னர் ஐந்து ருபாய் உயர்த்தி 115 ருபாய் ஆக்கினார்கள்.

GST அறிமுகப்படுத்தபட்ட போது உணவகங்களுக்கு 12% வரி இருந்தது. இது மிக மிக அதிகம், தற்போது 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் பிறகு நம்பவே முடியவில்லை, டமால் என்று கூட்டம் குறைந்து விட்டது. இந்நிலை சரவணபவனில் மட்டுமல்ல என்று கருதுகிறேன்.

இதன் பிறகு சில நாட்களில் அல்லது ஒரு மாதம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். பேரதிர்ச்சியாக ஒரே சமயத்தில் 40 ருபாய் குறைத்து 75 ருபாய் ஆக்கினார்கள்.

வெளியே 75 ருபாய் என்று போடப்பட்டு இருந்ததைப் பார்த்து நான் “மினி மீல்ஸ்” என்றே நினைத்து விட்டேன்.

வழக்கம் போலச் சாப்பிட்டு முடித்த பிறகு 75 கட்டணம் வந்ததால், “தவறாகக் கொடுத்து விட்டீர்கள்..!” என்று கூற, “இல்லை சார் இது தான் கட்டணம்” என்று கூறிய போது தலை கிறுகிறுத்து விட்டது.

இது மட்டுமல்லாமல் சாதா சாப்பாடுக்கே தயிர் வேறு கொடுத்து தலை சுற்ற வைத்தார்கள்.

பின் அங்குள்ளவரிடம் கேட்க, “GST க்கு பிறகு கூட்டம் குறைந்து விட்டது சார், அதனால் இதெல்லாம் மாற்றி இருக்கிறார்கள்” என்றார்.

தற்போது டீசல் விலை உயர்வு காரணமாக என்று நினைக்கிறேன், 80 ருபாயாக்கி தற்போது (அக்டோபர் 2018) 85 ருபாயாக உயர்ந்துள்ளது.

சரவணபவன் என்றாலே கூட்டம்

உணவகம் சென்றால், அலைமோதும் கூட்டத்தை மட்டுமே பார்த்துப் பழகிய எனக்கு, கூட்டமில்லா திரையரங்குகளைப் பார்ப்பது போல நிலை உள்ளது.

மூலைக்கு ஒருவர், இருவர் அமர்ந்து இருக்கிறார்கள்.

உச்சத்தில் இருந்த போது மனசாட்சியே இல்லாமல் இவர்கள் வைத்த உணவு விலையை நினைத்தால், காதில் புகை வருகிறது.

இதனால் டிபன் கட்டுப்படியாகாது என்று மதியம், இரவு சாப்பாடு தான். டிபன் என்றால், என்ன சாப்பிடுவது என்ற குழப்பம், விலை அதிகம் வேறு.

சாப்பாடு என்றால் அந்தப்பிரச்சனையே இல்லை, வயிறும் நிரம்பி விடும்.

புதிய தலைமுறையைக் கவரத்தவறிய சரவணபவன்

வாடிக்கையாளர்கள் குறைந்ததுக்குக் காரணம், GST மட்டுமேயல்ல, இதுவும் ஒரு காரணம்.

சரவணபவன் புதிய தலைமுறை மக்களைக் கவரத் தவறி விட்டது முக்கியக்காரணம். இங்கு வருபவர்கள் பெரும்பாலும் 35 / 40 வயதுக்கு மேற்பட்டவர்களே!

உணவும் பழைய சுவையில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டி உணவகங்கள் அதிகரித்து விட்டது.

உணவகம் சென்றால், கூகுள் வழிகாட்டியில் “Trendy People களை கவரும் இடமா?” என்று ஒரு கேள்வி கேட்கப்படும், அதில் “ஆமாம்” என்று கூற முடியாது என்பது சோகம்.

காலத்துக்கு ஏற்ப மாறியே ஆக வேண்டும், இல்லையென்றால் காணாமல் போய் விடுவோம்.

உலகம் முழுக்கக் கிளைகளை நிர்வகிக்கும் அண்ணாச்சிக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, நிச்சயம் இது குறித்து விவாதித்து இருப்பார்கள்.

அண்ணாச்சிக்கு தெரியாததா?!

20+ வருட வாடிக்கையாளனாக ஒரு அக்கறையில் மட்டுமே இவற்றைக் கூறி இருக்கிறேன்.

எனவே, இளைஞர்களைக் கவர்ந்தால் மட்டுமே இவர்கள் வளர்ச்சி பெற முடியும். அதற்குண்டான முயற்சிகளை, மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

அதோடு இதே பெயரில் இல்லாமல், கொஞ்சம் ட்ரெண்டியான பெயரில் ஏதாவது ஒரு, மாதிரி கிளையைத் துவக்கி சோதித்துப் பார்க்கலாம்.

ஏனென்றால், சரவணபவன் என்ற பெயர் மக்கள் மனதில் பதிந்து விட்டது. சரவணபவன் என்றால் இப்படித்தான் என்று ஒரு பிம்பம் உள்ளது, அதை இனி மாற்றுவது எளிதல்ல.

மேலும் கூறலாம் ஆனால், எனக்கே அதிகப்பிரசங்கித்தனமாக உள்ளது. உலகம் முழுக்கக் கிளை வைத்துள்ளவர்களுக்குத் தெரியாததா நமக்குத் தெரிந்து விடப்போகிறது.

ஏனோ மனசு கேட்கலை, அதனால் இவற்றைக் கூறினேன்.

“சரவணபவன்” பழைய பன்னீர் செல்வமாக வர வேண்டும் 🙂 .

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

7 COMMENTS

  1. கிரி, உங்கள் கட்டுரையில் பல விஷியங்களை ஒத்துக்கொள்கிறேன்.. சரவணபவன் நிர்வாகத்தில் உள்ள எவரேனும் உங்கள் கட்டுரையை படிக்க நேரிடின் கண்டிப்பாக தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புண்டு!!! எல்லா துறைகளிலும் மாற்றம் என்ற ஒன்று கண்டிப்பாக நிகழும்.. அதற்கு எந்த தொழிலும் விலக்கு கிடையாது.. என்னுடைய 10 வருட வெளிநாடு அனுபவத்தில் சரவண பவன் சென்றது கிடையாது.. ஒரே காரணம் நண்பர்கள் கூற கேட்டுள்ளேன் விலை அதிகம் என்று..

    கடந்த 15 / 20 வருடங்களில் இளைய தலைமுறையில் பல மாற்றங்கள்.. குறிப்பாக வாழ்வியல் சார்ந்த மாற்றங்கள்.. அவற்றில் உடையும், உணவும் முக்கியமானவைகள்.. உணவை பொறுத்தவரை இன்றைய இளைய சமுதாயமும் / நடுத்தர வயதினரும் துரித உணவையே விரும்புகின்றனர்.. குறிப்பாக மேலைநாட்டு உணவுகள்.. உடம்பிற்கு ஓவ்வாது என்று தெரிந்தும் பல பேர் விரும்பி உண்ணுகிறோம்.. எதிர்காலம் எப்படி போகும் என்று தெரியவில்லை…

    உணவகத்தை பொறுத்த வரை தரம், சுத்தம், நியாமான விலை இது இருந்தால் நிச்சயம் வாடிக்கையாளர்கள் கை விடமாட்டார்கள் என்பது என் எண்ணம்… எதிர்காலத்தில் கூட சிறிய அளவில் ஒரு உணவகம் தொடங்க ஆசை உண்டு.. பல சமயங்களில் மனது பழமையை நோக்கி தான் அதிகம் பயணிக்கிறது.. முன்னோர்களின் வாழ்வியலை மையப்படுத்தி அவர்கள் போல் வாழ மனது ஏக்கம் கொள்கிறது… குறிப்பாக அவர்களின் உழைப்பு மட்டும் உணவு பழக்கவழக்கங்கள், அறம்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. விலை மற்றும் பொருள்களின் அளவு மிக முக்கிய காரணம். நான் ராயப்பேட்டைல வேலை செய்த பொது சத்யம் தியேட்டர் அருகே இருக்கும் சரவணபவன் செல்லும்போது விலையும் அதிகம், அளவும் குறைந்து சாப்பிட்டால் பத்தாது போன்று ஒரு நிலை ஏற்பட்டதால் வேறு ஹோட்டல்களை தேட வேண்டிய நிர்பந்தம். இப்பவும் கூட, வடபழனி கோவில் அருகே இருக்கும் சின்ன சின்ன ஹோட்டல் இருக்கும் சுவை, விலை மற்றும் அளவு இங்கு இருப்பதில்லை

  3. சரவணபவன் வியாபாரம் கார்பொரேட் பிசினஸ்க்கு மாறி ரொம்பநாள் ஆச்சி ,swiggy zomoto பெரும்பாலான உணவகங்களை வெறும் distribution center ஆக மாற்றிவிட்டன.

    சுத்தத்திற்கு பெயர்போன சரவணபவானில் இப்போது சுத்தம் இல்லை ,வடபழனி உணவகத்தில் உணவாக பணியாளர்களின் ஆடை அழுக்கு சுத்தம் இல்லவே இல்லை .

  4. அடையார் ஆனந்த பவனின் அசுர வளர்ச்சியும் ஒரு காரணம். சரவணபவன் ஹோட்டல் தொழிலுக்கு முன்னோடி என்று சொல்லலாம். அதன் பணியாளர்களுக்கு சிறப்பான சலுகைகள் வழங்குகிறது எனப் பெஊமையாகக் கூறுவர். முதன் முதலில் ஹோட்டல் பில்லை வாடிக்கையாளரிடம் கொடுத்தது சரவண பவன்தான் என நினைக்கிறேன்.

  5. @யாசின் 10 வருடங்களில் ஒரு முறை கூட முயற்சிக்கவில்லையா?! வியப்பே!

    உணவு பழக்க முறை மாறி விட்டது என்பது வருத்தமானது. தற்கால சூழலில் தவிர்க்க முடியாததாகவும் உள்ளது.

    @moththumess நானும் கேள்விப்பட்டேன். உண்மையா என்று தெரியவில்லை.

    @சரவணன் விலை உயர்வு மறுக்க முடியாத காரணம். நான் டிபன் ஜூஸ் போன்றவற்றை தவிர்க்க விலையே காரணம்.

    @கமலக்கண்ணன் “distribution center ” சரியான வார்த்தை.

    சுத்தம் அல்லது பணியாளர்கள் நிலையில் மாற்றம் காண முடிகிறது.

    @முரளிதரன் உண்மை தான். இவர்கள் A2B என்று ட்ரெண்டியாக பெயர் மாற்றியது போல, சரவண பவனும் முயற்சிக்கலாம்.

  6. ஸ்டாலின் எப்பேயோ சரவணபவன் வாங்கி விட்டார்கள், சமையல் செய்பவர்கள் மாறியதால் மக்கள் வருவதில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!