பயணக் குறிப்புகள் (ஜூலை 2019)

3
பயணக் குறிப்புகள் (ஜூலை 2019)

சென்னையில் தண்ணீர் பிரச்சனை என்று ஊருக்கு வாராவாரம் செல்ல ரயிலில் முன்பதிவு செய்தேன் ஆனால், தற்போது வரை தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒருநாள் அரை மணி நேரம் வந்தாலும் சமாளிக்கக் கூடிய அளவிலேயே தண்ணீர் பிரச்சனை இருக்கு.

மழையும் சில நாட்கள் பெய்து இருப்பதால், மழைக்காலம் வரை ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறேன்.

இதுமட்டுமல்லாமல் உறவினர் வீட்டுத் திருமணம், வாகனம் வாங்க, மருத்துவத்திற்காக என்று பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களுக்காகக் கோபி செல்ல வேண்டியதாக இருந்தது.

அம்மாக்கு கிட்டத்தட்ட வாராவாரம் நான் ஊருக்கு வருவதால், மகிழ்ச்சி.

ஜுபிடர்

பல்வேறு பரிந்துரை, ஆலோசனைகளுக்குப் பிறகு ஊரில் டிவிஎஸ் ஜுபிடர் இரு சக்கர வாகனத்தை வாங்கினேன். ஓட்ட செமையாக உள்ளது, பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

வெரிகோஸ் பிரச்சனை

நின்று கொண்டே இருந்தால், வெரிகோஸ் பிரச்னை வரும். அமர்ந்து இருந்தாலும் இது போலப் பிரச்சனை வரும் என்று எனக்கு வந்த பிறகே புரிந்தது 🙂 .

இவ்வளவுக்கும் நான் தினமும் ஒரு மணி நேரம் நடக்கிறேன்.

காலை மடக்கி தொடர்ச்சியாக அமர்வதால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இப்பிரச்சனை ஏற்படுகிறது. சைக்கிளிங் பயிற்சி செய்தால், இப்பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

இது குறித்து விரிவாகப் பின்னர் எழுதுகிறேன். பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகக் கருதுகிறேன், குறிப்பாக 35+ வயதினர்.

வெய்யில்

கோபியில் வெய்யில் பொளக்கிறது. கடந்த வாரம் ஒரு நாள் நன்கு மழை பெய்தது ஆனால், வெய்யில் கோடை போல உள்ளது.

கோபியில் நகர வளர்ச்சி காரணமாக முதன்மை சாலைகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டது, வீடுகள் எண்ணிக்கை அதிகரிப்புக் காரணமாக வெப்பம் அதிகரித்துள்ளது.

குளுகுளு என்று இருந்த கோபி, வளர்ச்சியால் வெப்பம் ஆனது வருத்தமளிக்கிறது.

ஈரோடு ரயில்நிலையம்

ஈரோடு ரயில் நிலையத்தில் “ஒளிரும் ஈரோடு” அமைப்பு மிகச் சிறப்பாகப் பூங்காவை பராமரித்து வருகிறார்கள். ஏகப்பட்ட மரங்கள் வளர்த்து அப்பகுதியே அழகாக உள்ளது.

பூங்கா வெளிப்பகுதியில், சாலை ஓரங்களில் ரயில்வே மரங்களை வைத்தார்களா என்று தெரியவில்லை. நன்கு வளர்ந்து இருந்த மரங்களின் கிளைகளைக் கடந்த மாதம் வெட்டி விட்டார்கள். பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டேன், எப்படித்தான் வெட்ட மனசு வருகிறதோ!

எதற்கு வெட்டினார்கள் என்று எப்படி யோசித்தும் பிடிபடவில்லை. அந்த இடங்களில் மரங்களால் எந்தப் பாதிப்புமில்லை.

தற்போது வெட்டப்பட்ட கிளைகள் மீண்டும் அழகாக துளிர்த்துள்ளன. திரும்ப வெட்டி விடுவார்களோ என்று யோசனையாக உள்ளது.

ஈரோடு ரயில் நிலையம் முன்பை விட மிகச் சுத்தமாக, வசதியாக உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டு, வசதியாக உள்ளது, அரசுத்துறைக்கே உண்டான தகுதியான அவ்வப்போது வேலை செய்யாமலும் உள்ளது.

மரமும் நானும்

என்னோட இரண்டாவது அக்கா பையன் முகிலை வார இறுதிக்கு எங்க ஊருக்கு வரக் கூறி விடுகிறேன். கல்லூரி நான்காம் ஆண்டு கோவையில் படிப்பதால், வார இறுதியில் வர அவனுக்கும் எளிதாக உள்ளது.

அவன் ஒன்று சொன்னான்.. எனக்குச் சிரிப்பாகி விட்டது, உண்மையும் கூட.

திருமணம், விழாக்களுக்குப் பெண்கள் சென்றால், மற்ற பெண்கள் அணிந்து இருக்கும் புடவை, நகை பற்றிப் பேசிட்டு இருப்பாங்க.. அது மாதிரி மாமா, எங்கே போனாலும் அந்த மரம் நல்லா இருக்கு.. இந்த மரத்தை வைக்கணும் என்று பேசிட்டு இருக்காங்க” என்றான்.

யோசித்தால், அவன் கூறியது உண்மை. செமையா இணைப்பு கொடுத்து இருக்கான் 🙂 .

உற்சாகம்

திருமணத்தில் என்னுடைய உறவினர் அக்கா ஒருவரிடம் “பளிச்சுனு இருக்கீங்க” என்றதும், “நீ தானே சொன்னே.. எப்போதும் இப்படி இருக்கணும்னு, அதான் இப்படி இருக்கேன்” என்றாங்க.

அட! நாம் சொல்வதையும் சிலர் முக்கியத்துவம் கொடுத்து பின்பற்றுகிறார்கள் போலன்னு மகிழ்ச்சியடைந்தேன். அழுது வடிபவர்களையும், எப்போதும் கோபமாக, சோகமாக முகத்தை வைத்து இருப்பவர்களையும் எனக்குப் பிடிக்காது.

உற்சாகமாக இருங்கள். நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. கில்லாடி, அடுத்த பயணக்குறிப்பில் உங்களுடைய வேஷ்டி சட்டை போட்டோ போடுங்க 🙂

  “உற்சாகமாக இருங்கள். நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்” சரியான வார்த்தைகள் – நன்றி

 2. எங்கள் ஊரிலும் தண்ணீர் பிரச்சனை ஆரம்பித்து விட்டதாக நண்பர்கள் கூறினார்கள்.. இறைவனின் கருணையால் தற்போது நல்ல மழை பெய்வதால் பிரச்சனை தீரும் என நம்புகிறேன்..

  வெரிகோஸ் பிரச்சனை : இதை பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.. உங்களுக்கு விவரங்கள் தெரியும் பட்சத்தில் பின்பு எழுதுங்கள்..

  மரங்களின் வெட்டப்பட்ட நிகழ்வு என்றாலே என் நினைவில் உடனே வருவது ” செம்மொழி மாநாடு” தான் எத்தனை ஆண்டுகள் இருந்த மரங்களை சில மணி நேரங்களில் வெட்டி சாய்த்து விட்டனர்.. ஆட்சியாளர்களுக்கு யார் தான் இதுபோல யோசனை கொடுப்பார்கள் என்று தெரியவில்லை.. எங்கள் பகுதியில் “தானே” புயலின் போது விழுந்த பல மரங்களால் ஏற்படுகின்ற, பாதிப்பை இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது..

  கவலைகள் மெல்ல மெல்ல நம்முடைய முகசாயலை மாற்றி விடுகிறது.. ஒரு மனிதனின் முகத்தை பார்க்கும் போதே நாம் யூகிக்க முடியும், அவன் எந்த மனநிலையில் இருக்கிறான் என்று..

  பணம் என்ற வெறும் காகிதங்கள் நம்முடைய சந்தோஷங்களையும், துக்கங்களையும் தீர்மானிக்கும் கருவியாக மாறிவிட்டது என்பது தான் உண்மை.. இதில் சிலர் சொற்ப எண்ணிக்கையில் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்.. நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும் என நம்புவோம்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 3. @விஜய் 🙂

  @யாசின் வெரிகோஸ் பற்றி விரிவாக எழுதுகிறேன், எழுத வேண்டும். எனக்கு சரியான பிறகு விளக்கமாக எழுதுகிறேன்.

  “கவலைகள் மெல்ல மெல்ல நம்முடைய முகசாயலை மாற்றி விடுகிறது.. ஒரு மனிதனின் முகத்தை பார்க்கும் போதே நாம் யூகிக்க முடியும், அவன் எந்த மனநிலையில் இருக்கிறான் என்று.”

  இதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு முன்பே சொல்லிட்டாங்க போல 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here