ரொம்ப வருடங்களாக, தடதடக்கும் Royal Enfield Bullet ல் செல்ல வேண்டும் என்பது விருப்பம், அதற்கான வாய்ப்பு அமையாமல் இருந்தது.
“Royal Enfield” Classic 350CC
நண்பன் விஜயகுமார் “Royal Enfield” Classic 350CC பைக் வாங்கி இருந்தான். இவன் வாங்கியதும் ஒரு சவாரி செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கூறி விட்டேன்.
சுதந்திர தினத்தன்று, கடற்கரை சாலை (ECR) வழியாக மாமல்லபுரம் வரை செல்லலாம் என்று முடிவு செய்து காலை 5.30 க்கு கிளம்பினோம்.
நீலாங்கரை தாண்டி வண்டியை வாங்கிக்கொண்டேன். Splender+ ஓட்டுற ஆளு, கூடுதல் எடை வண்டியை எப்படி ஓட்டுவது என்று கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது.
இதனுடைய கியர் Yamaha RX 100 போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. நான் வண்டி ஓட்டிப்பழகியதே RX 100 தான் என்பதால், கியர் எனக்குச் சிரமமாக இல்லை.
5 கியர் வரை உள்ளது ஆனால், நான் 40 – 45 கிமீ வேகத்தில் சென்றதால் 4 வது வரையே போட முடிந்தது, அதற்குமேல் தட தடக்கிறது.
ஏப்ரல் முதல் அனைத்து வாகனங்களும் BS4 (Bharat Stage 4) முறையைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, முன் பக்கம் எப்போதும் விளக்கு ஒளிர்ந்து கொண்டே இருக்கும். இது ஐரோப்பா போன்ற நாடுகளுக்குப் பொருந்தும், நமக்கு ஏன் என்று புரியவில்லை.
கோவளம்


வழியில் “கோவளம்” வந்ததால், கடற்கரை செல்லலாம் என்று திடீர் முடிவு செய்து திட்டம் இல்லாமல் சென்றோம்.
அந்த நேரத்திலும் அதிகாலையை ரசிப்பவர்களும், நிழற்படம் எடுப்பவர்களும், பைக் பிரியர்களும் இருந்தனர்.
அதிகாலையில் கடற்கரையில் அமர்ந்து கடலை ரசிப்பது உற்சாகமான அனுபவம். இது போலக் கடலைப் பார்க்கும் போதெல்லாம் உலகம் வட்ட வடிவம் தான் என்று உறுதிப்படும் 🙂 .
படகிலிலோ கப்பலிலோ செல்லும் வாய்ப்புக் கிடைத்தால், பாருங்கள். செமையாக இருக்கும். மலேசியா, லங்காவி சென்ற போது படகில் கடலில் சில கிமீ அழைத்துச் சென்றார்கள். பந்தின் மீது செல்வது போலவே இருந்தது.
அதிகாலையில் யாரையோ எடுத்துக்கொண்டு இருந்த DSLR நபர் 🙂 .

இது ஒரு முஸ்லீம் இணை, அந்தப் பெரியவர் உடன் வந்த பெண் யார் என்று தெரியவில்லை, இந்தக் காலை நேரத்திலேயே மிக உற்சாகமாகத் தண்ணீரில் நனைந்து கொண்டு இருந்தார்.

பெண் முழுக்க கருப்பு உடை அணிந்து அமர்ந்து இருப்பதால், அவர் பாறையோடு பாறையாகத் தோன்றலாம் ஆனால், தண்ணீரில் அமர்ந்து இருப்பது பெண்.
இது போலத் தண்ணீரில் நனைந்து கொண்டாட்டமாக இருந்தது வியப்பாகவும் மகிழ்வாகவும் இருந்தது. எந்தக் கவலையுமற்ற உற்சாகமான காலை! 🙂 .
விர்ர்ர்ர்ரும்
பைக் பிரியர்கள் 30 பேருக்கும் மேல் வரிசையாக எங்கோ சென்று கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கென்று குழுமம் உள்ளது, இது போல இணைந்து விடுமுறை நாளில் செல்வார்கள்.
எல்லோரும் கருப்பு ஜெர்கின் உடை அணிந்து விர்ர்ர்ர்ரும் என்று பட்டையைக் கிளப்பிக்கொண்டு சென்றார்கள், சிலர் பைக்கில் தேசியக் கொடியும் இருந்தது.
மாமல்ல பவன் உணவகம்
பின்னர் மாமல்லபுரம் சென்று மாமல்ல பவன் என்ற உணவகத்தில் (பேருந்து நிலையம் அருகேயே உள்ளது) காலை உணவு சாப்பிட்டோம்.
பொங்கல், வடை செம்ம, சாம்பார் அவ்வளவு ருசி. இவ்வளவு சுவையை எதிர்பார்க்கவில்லை.
பெரும்பாலும் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகங்களுக்கு வருபவர்கள் வாடிக்கையாளர்கள் அல்ல, ஒருமுறை வந்து செல்பவர்கள்.
எனவே, சுவையில் அதிகம் கவனம் செலுத்தமாட்டார்கள் ஆனால், இங்கே வேற மாதிரி இருந்தது 🙂 . இங்கே மறக்காமல் காலை உணவை முயற்சித்துப்பாருங்கள்.
ஸ்தல சயன பெருமாள் கோவில்
அருகே இருந்த பெருமாள் கோவில் சென்றோம். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று என்று நண்பன் கூறினான்.
பேரூராட்சி நினைத்தால், கோவில் பகுதியைச் சுத்தமாகப் பராமரிக்கலாம், ஆனால்.. வழக்கம் போலத்தான்.
ஒரே கல்
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், குகைகள் மற்றும் கோவிலைக் கண்டு வந்தோம். வெளிநாட்டினர் வியப்பாகப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

இக்கோவில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. நம்ம ஆளுங்க கலைகளில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள்.
எந்த நவீன தொழில்நுட்பமும் இல்லாமல் கட்டியிருக்கிறார்கள்.

குரங்கு கையில் பூ மாலை
இது போன்ற அதிசயங்கள் வெளிநாட்டினரிடம் இருந்து இருந்தால், புதையல் போலப் பாதுகாப்பார்கள், பராமரிப்பில் அசத்துவார்கள்.
ஆனால், குரங்கு கையில் பூ மாலை போல நம்மிடம் சிக்கி சின்னாபின்னமாகிறது, தமிழ் மொழி உட்பட.
தகுதியானவர்களிடம் பொறுப்பைக்கொடுத்தால், உலகத்தரத்தில் இல்லையென்றாலும், சிறப்பான முறையில் மாமல்லபுரத்தை பலரும் பாராட்டும் வண்ணம் பராமரிக்கலாம்.
வாய்ப்பு இருந்தும் பொறுப்பற்று இருக்கிறார்களே! என்பதை ஏற்றுக்கொள்ளாமல் மனம் வலிக்கிறது.
“7G ரெயின்போ காலனி” படத்தில், சோனியா அகர்வால் ஒரு பொறுக்கியைத் திருமணம் செய்வதாக வரும்.
சோனியா அகர்வாலைப் பார்த்து ரவி கிருஷ்ணா.. “உன்னோட ரேஞ்சு என்ன தெரியுமா? நீயெல்லாம் என்கிட்டே இருந்தால் ராணி மாதிரி பார்த்துப்பேன்!” என்பார்.
நான் ரவி கிருஷ்ணா நிலையில் இருக்கிறேன். ம்ஹீம்! 🙁
கடற்கரை கோவில்
தொலைவில் தெரிவது பிரபலமான கடற்கரை கோவில். மாமல்லபுரம் என்றால், நமக்குக் காண்பிக்கப்படும் இடங்களில் ஒன்று.
நுழைவுக் கட்டணம் நமக்கு 30₹ வெளிநாட்டினருக்கு 500₹. இங்குப் பராமரிப்பு நன்றாக இருந்தது.

இதன் பிறகு கிளம்பி அப்படியே புதுச்சேரி சாலையில் 10 கிமீ வரை சென்று திரும்பி விட்டோம்.
பைக் சும்மா கிஜு கிஜுன்னு போகுது 🙂 . உடம்பு வலி எல்லாம் இல்லை, வேகத்தடை எல்லாம் அதிர்வு இல்லாமல் கடக்கிறது. ஓட்டுவதில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை.
வண்டியை மட்டும் சாய்த்து விடக் கூடாது, அப்புறம் கோவில் பட வடிவேல் முகத்தில் விழும் எடை சாதனம் போல ஆகி “கீ கீ” ன்னு கத்த வேண்டியது தான் 😀 .
சங்கீதா உணவகம்

மாயாஜாலுக்கு முன்னாடி சங்கீதா உணவகம் (திருவான்மியூர் செல்லும் வழியில் வலது புறம்) உள்ளது. இங்கே கொழுக்கட்டை செமையாக இருக்கும் ஆனால், நாங்க சென்ற நேரத்தில் இல்லை. இந்த வழியே சென்றால் முயற்சித்துப்பாருங்கள்.
ISKCON Temple

செல்லும் போது திடீர் என்று ISKCON கோவில் வழியில் தென்பட, அப்படியே வண்டியை அங்கே திருப்பி விட்டோம்.
ரொம்ப நாளா ISKCON கோவில் சென்று அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க நினைத்தேன், இந்த முறை சாத்தியமானது.
திங்கள் கிருஷ்ண ஜெயந்தி என்பதால் செவ்வாயும் சிறப்பாக இருக்கும் என்று சென்றோம், குறிப்பிடத்தக்க அளவில் கூட்டம் இருந்தது.
பக்தர்களைவிடத் தன்னார்வலர்கள் (volunteer) அதிகளவில் இருந்தார்கள் 🙂 .
பக்தி இங்கே விற்பனைக்கு
வரிசையில் உள்ளே சென்றோம், பக்தர்கள் செல்லும் வழியெங்கும் புத்தகங்கள், பொருட்கள், உடை, நன்கொடை என்று ஏகப்பட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இது கோவிலா பொருட்காட்சியா என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது.
ISKCON மிகப்பெரிய அமைப்பு, உலகம் முழுக்க அதி தீவிர பக்தர்கள் உள்ளார்கள்.
அமெரிக்காவில் இவர்கள் ஊர்வலம் கடந்த வருடம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்ததாகச் செய்தியில் படித்து இருக்கிறேன்.
கோவிலில் பூரி ஜெகந்நாதர் சிலை இருந்தது ஆனால், பார்க்கப் பொம்மை படம் போல இருந்தது. நான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.
அங்கே இருந்தவரிடம் கேட்டேன், கிருஷ்ணரின் ஒரு அவதாரம் என்று கூறினார், என் நண்பனும் ஆமோதித்தான்.
சிறப்பாக அலங்காரம்
கிருஷ்ணருக்கு மிகச் சிறப்பாக அலங்காரம் செய்து இருந்தார்கள், பார்க்கவே மிக அழகாக இருந்தது.
அங்கே பஜனையும் நடைபெற்றுக்கொண்டு இருந்தது, “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா”.
மீண்டும் புத்தகம், உடை, சிலை என்று வியாபார இடத்தை விட்டு நகர்ந்து வந்தோம்.
ஒருவர் என் நண்பனிடம் ஒரு புத்தகத்தை நீட்ட, அவனும் புத்தகத்தைக் வாங்கிக்கொண்டு நகர, அவர் 20₹ என்று கூற, “இந்தாங்க வைத்துக்குங்க” என்று புத்தகத்தைக் கொடுத்து விட்டு வந்தான்.
“யோவ்! இலவசமா வாங்கிட்டு போலாம்னு பார்த்தியா!” ன்னு நான் கலாய்க்க நம்ம ஆளு “ஹி ஹி” ன்னு நகர்ந்துட்டான் 😀 .
இவர்களுக்கு நன்கொடையின் மூலம் உலகம் முழுக்க அவ்வளவு பணம் கிடைக்கிறது ஆனால், இங்கே கழிப்பிடத்துக்குக் கூடக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இந்தியாவில் கடவுளும் கல்வியும் வியாபாரம் மட்டுமே!
யப்பா! ஆளை விடுங்கடா.. கோவிலுக்கு வரலாம் என்று வந்தால், எதோ வியாபார நிறுவனத்தில் நுழைந்து வந்தது போல இருந்தது.
இந்தியாவில் கடவுளையும், ஆன்மீகத்தையும், கல்வியையும் வியாபாரமாக்கி அதன் புனிதத்தன்மையையே நாசம் செய்து விட்டார்கள்.
இஷ்க் இஷ்க் 😀
வெளியே வந்ததும்.. “எனக்கு “இஷ்க் இஷ்க்” என்று கேட்கிறது. உனக்கும் கேட்கிறதா? என்றேன்.. எனக்கும் “இஷ்க் இஷ்க்” என்று தான் கேட்கிறது என்றான்” 🙂 .
சுவாரசியமான Royal Enfield பயணம் முடிவுக்கு வந்தது 🙂 .
அவர் 20₹ என்று கூற *** இப்படி தான் எனக்கும் நடந்தது. இதை கூட கொடுக்க முடியாதா என்று நக்கல் விட்டார் அந்த நபர்
புகைப்படங்கள் மிகவும் அழகாக இயல்பாக இருக்கிறது. காலை வெயிலில் கடற்கரையின் அழகே அழகு!!! கடற்கரைக்கு அருகில் கல்லூரி இருந்ததால் வகுப்பறைக்கு சென்ற நாட்களை விட கடற்கரைக்கு சென்ற நாட்கள் தான் அதிகம். கரையில் இருந்து கொண்டே கடலை நோக்குவதில் உள்ள சுகம் வேறு எதிலும் கிடைக்குமா என்று தெரியவில்லை!!!
காதலியின் திருமணநாளன்று, நாள் முழுவதும் கடற்கரையின் மீது அமர்ந்து கொண்டு பழைய நினைவுகளை எண்ணி கொண்டே வெயிலில் குளித்த அனுபவத்தை இன்று எண்ணும் போது சிரிப்பாக தோன்றுகிறது. இது ஒருவித பைத்தியக்காரத்தனமாக இன்று தெரிந்தாலும் உள்மனதில் ஓரத்தில் அதையும் ரசிக்க முடிகிறது. காதலின் மீது கடற்கரைக்கு என்ன ஒரு கரிசனம்… “காலம்காலமாக காதலர்களை மட்டும் கடற்கரை வெயில் சுடுவதில்லை என்று”…
அதிக விலை கொடுத்துதான் கடவுளின் தரிசனம் கிடைக்கும் என்றால், அந்த தரிசனமே எனக்கு வேண்டாம் என்பது என் நிலைப்பாடு… பிராத்தனை என்பது நமது பிரச்சனைகளுக்கு ஒரு வடிகால். எல்லா மதத்திலும் நமது நம்பிக்கையை, நமது அறியாமையை பயன்படுத்தி போலியான வழிமுறைகளை கூறி ஒரு கூட்டம் காசாக்குகிறது என்பது தான் உண்மை!!! நிறைய பேசலாம், ஆனால் மனம் வெம்முகிறது… பகிர்வுக்கு நன்றி கிரி.
My iscon experience….
https://wwwsivamsakthivel.blogspot.com/2014/01/iskcon.html
@குமரன் “இதை கூட கொடுக்க முடியாதா”
இதையே நானும் உங்களுக்கு சொல்றேன்னு நீங்க சொல்லி இருக்கணும் 🙂
@யாசின் “காதலின் மீது கடற்கரைக்கு என்ன ஒரு கரிசனம்… “காலம்காலமாக காதலர்களை மட்டும் கடற்கரை வெயில் சுடுவதில்லை என்று”…”
அடடடா! கலக்கல் போங்க 🙂 மொட்டை வெயிலிலும் மெரினாவில் உட்கார்ந்து இருக்கிறார்கள்.
“அதிக விலை கொடுத்துதான் கடவுளின் தரிசனம் கிடைக்கும் என்றால், அந்த தரிசனமே எனக்கு வேண்டாம் என்பது என் நிலைப்பாடு”
நானும் அதே! சென்றால் பொது தரிசனம்… இல்லையென்றால் வெளியே நின்று வணக்கம் போட்டுட்டு வந்துடுவேன்.
@சிவம் எனக்கு மட்டும் தான் போலன்னு நினைத்தேன்.. 🙂