தர்பார் (2020) Get Rajinified

2
Darbar தர்பார்

பெரும் எதிர்பார்ப்புடன் தர்பார் வெளியாகியுள்ளது.

மும்பையில் போதை மருந்துப் பிரச்சனையை ஒழிக்கக் கமிஷனராக ரஜினி பொறுப்பேற்கிறார்.

அதில் ஆரம்பிக்கும் அவரது பணி பின்னர் அவருக்கே வேறு வகையில் இழப்பைக் கொடுக்க, அதை எப்படிச் சமாளிக்கிறார் என்பது தான் படம்.

ஏற்கனவே, அனைவருக்கும் தெரிந்தது போல அடங்காத காவல் அதிகாரியாக ரஜினி வருகிறார். நேர்மையான வழி ஆனால், முரட்டுத்தனமான வழிமுறைகள்.

ரஜினி

பேட்ட படத்தை விடச் சிறப்பாகக் கொடுக்கணும் என்று முடிவோட முருகதாஸ் எடுத்து இருப்பார் போல, அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

முத்துப் படத்தில் எப்படியொரு வேகமான துறுதுறு ன்னு இருக்கும் ரஜினியைப் பார்த்தீர்களோ அவரை அப்படியே இதில் கொண்டு வந்துள்ளார்.

முருகதாஸ் பேட்ட படத்தைப் பார்த்தே இந்தத் தர்பாரை கொடுத்துள்ளார். எனவே கார்த்திக் சுப்புராஜ் பாராட்டுக்குரியவர் 🙂 .

படத்தின் துவக்க சண்டைக்காட்சியும், மனித உரிமை ஆணையம் காட்சியும் திருப்தி அளிக்கவில்லை.

என்னடா இது முருகதாஸ் எப்படியோ எடுத்து இருக்காரே! என்று எனக்குத் திக்குனு ஆகி விட்டது ஆனால், அதன் பிறகு படம் முடியும் வரை செம விறுவிறுப்பாகக் கொண்டு சென்றுள்ளார்.

‘தரம் மாறா சிங்கிள் நானடி’ பாட்டு யாருக்கு இருக்கும்? ஒருவேளை ரஜினிக்கு என்றால் எப்படி இருக்கும்?! என்ற ஆவல் இருந்தது. நான் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக எடுத்துள்ளார்.

இப்பாடல் சீக்கிரம் முடிந்து விடக் கூடாது என்று நினைத்தேன், அதோடு திரும்ப ஒரு முறை போட்டால் நன்றாக இருக்குமே என்று எண்ண வைத்த பாடல்.

ரஜினி நயன்தாரா காட்சிகள் ரொம்ப நன்றாக இருந்தது. அதாவது ரொம்ப மிகையாகவும் இல்லாமல், அதே சமயம் கலகலப்பாகவும் இருந்தது 🙂 .

இடைவேளை காட்சிக்குப் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் பேட்டியில் கொடுத்த பில்டப் அளவுக்கு எல்லாம் இல்லை, ரசிக்கும்படி இருந்தது அவ்வளவே!

வில்லன்

ரஜினி படத்தில் பாட்ஷா ரகுவரன் போல ஒரு வில்லனை எதிர்பார்க்கிறேன். இதுவரை ஓரளவு என்னைத் திருப்தி செய்தது, ‘காலா’ நானா படேகர் மட்டுமே.

சுனில் ஷெட்டி இன்னும் சிறப்பாக நடித்து இருக்க வேண்டும் அல்லது முருகதாஸ் நடிக்க வைத்து இருக்க வேண்டும்.

சுனில் ஷெட்டியை இன்னும் மிரட்டலான வில்லனாக, ரகுவரன் போலக் கெத்து வில்லனாகக் காட்ட ஏராளமான வாய்ப்பு இருந்தும் அதை முருகதாஸ் ஏன் பயன்படுத்தவில்லை!?

ஒரு சாதாரண வில்லன் போலத்தான் இருக்கிறார். சொல்லிக்கொள்ளுபடியான வில்லனாக தோன்றவில்லை.

இரண்டாம் பாதி

முதல் பாதி வேகம் என்றால், இரண்டாம் பாதியில் கண்ணுல திமிரு, நிவேதா தாமஸ் செண்டிமெண்ட் காட்சி, ஜிம் காட்சி என்று பல மாஸ் காட்சிகள்.

இரண்டாம் பாதி எனக்கு மிக வேகமாகச் சென்றது போல இருந்தது.

கண்ணுல திமிரு பாடல் காட்சிக்குத் திரையரங்கம் அதிர்ந்து விட்டது. என்னால், பாடலையே கேட்க முடியவில்லை அந்த அளவுக்கு ரசிகர்களை மிகக் கவர்ந்து விட்டது.

நிவேதா தாமஸ் நடிப்பில் இரண்டாம் பாதியில் அசத்தியுள்ளார். சொல்லப்போனால் என்னைக் கண் கலங்க வைத்து விட்டார்.

எனக்கு என்னமோ நிவேதா தாமஸ் ரஜினியை சொந்த அப்பா போலவே நினைத்து நடித்தது போல இருந்தது. தந்தை மகள் உறவு அட்டகாசமாக வந்துள்ளது.

யோகி பாபு நகைச்சுவைக்காக இருக்கிறார் மற்றபடி முக்கியக் கதாப்பாத்திரம் இல்லை.

ஒளிப்பதிவு & பின்னணி இசை

சந்தோசிவன் ரஜினியை அழகாகக் காட்ட வேண்டும் என்று முடிவோடு படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இருப்பார் போல, ரஜினி செமையாக இருக்கிறார்.

‘தளபதி’ போல ஒரு ஒளிப்பதிவை சந்தோஷ் சிவனால் கொடுக்க முடியாது ஆனால், பளிச்சென்று கொடுத்துள்ளார்.

அனிருத் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். சில இடங்களில் இரைச்சலாக இருந்தது.

பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது குறிப்பாகச் சும்மா கிழி, கண்ணுல திமிரு, தரம் மாறா சிங்கிள் எனக்கு ரொம்பப் பிடித்தது, எடுத்த விதமும் அருமை.

முருகதாஸ், நடன இயக்குநர்கள், சந்தோஷ் சிவன் ஆகியோருக்குப் பாராட்டுகள்.

ரஜினிக்கு வயசே ஆகாதான்னு?! தான் தோன்றுகிறது, அவ்வளவு வேகம், சுறுசுறுப்பு. நான் சொன்னா நீங்க நம்ப முடியாமல் போகலாம், படம் பாருங்கள் புரியும்.

சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் போல, புரிந்து கொள்ள அனைவரும் தமிழ் பேசுவதாகக் காட்டியிருக்கிறார்கள்.

இந்தி, ஆங்கிலம் வசனங்கள் வரும் காட்சிகள் சிலருக்கு நேட்டிவிட்டி ஒட்டாமல் இருக்கலாம்.

படத்தில் சில மிகைப்படுத்தல்கள் இருந்தாலும், பெரியளவில் உறுத்தாத அளவுக்குத் திரைக்கதை அமைத்துக் காட்சிகளை விறுவிறுப்பாகக் கொண்டு சென்று இருக்கிறார் முருகதாஸ்.

நாம் பல வருடங்களாகத் தவற விட்ட ரஜினி காட்சிகள் ஏராளம் உள்ளது.

அதே போல வழக்கமான ரஜினி படங்களில் உள்ளது போல இல்லாமல் வித்யாசமான காட்சி அமைப்புகளையும் கொண்டுள்ளது. எனவே, இது ரஜினி + முருகதாஸ் படம்.

தர்பார் அனைத்துத் தரப்பினரையும் கவரும். அனைவரையும் இப்படம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். இந்தப் பொங்கல் தர்பார் பொங்கல் தான் 🙂 .

Directed by AR Murugadoss
Produced by Allirajah Subaskaran
Screenplay by AR Murugadoss
Starring Rajinikanth, Nayanthara, Nivetha Thomas, Sunil Shetty
Music Anirudh Ravichander
Cinematography Santosh Sivan
Edited A. Sreekar Prasad
Production company Lyca Productions
Release date 9 January 2020
Running time 150 minutes

தொடர்புடைய கட்டுரை

பாட்ஷா (1995) The King Of Don

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here