தொடர்ந்து மூன்றாவது வருடமாகப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடி விட்டோம்.
குளிர்
இந்த முறை குளிர் பின்னி எடுத்து விட்டது. குளிராக இருந்தாலும், நன்றாக இருந்தது. பகலில் கூட வெய்யில் அதிகமில்லாமல் குளிரான நிலையே காணப்பட்டது.
இந்தமுறையும் வயல்கள், வாய்க்கால்கள், ஆறு சூழ்ந்த “பங்களாபுதூர்” வழியாக அதிகாலை 6.30 மணிக்கு அக்கா பையனுடன் சென்று வந்தேன். பனி படர்ந்த அதிகாலை குளிர் 16 / 17 டிகிரி செல்ஸியஸ் இருக்கலாம்.
அப்படியே ஆறுக்கு சென்று காலை நனைக்கலாம் என்று சென்றோம். தண்ணீரின் மேலே ஆவி பறந்தாலும் தண்ணீர் குளிராக இல்லாமல், வெதுவெதுப்பாக இருந்தது. காலை தண்ணீரில் வைத்தால், மீன் கடித்து மசாஜ் செய்தது 🙂 .
அப்படியே கிளம்பி ஒரு ஓலைக் குடிசை கடையில் காஃபி சூடாகக் குளிருக்கு இதமாகக் குடித்து விட்டுப் புறப்பட்டபோது வெய்யில் மெதுவாக எட்டிப்பார்க்கத் துவங்கி இருந்தது.
வெய்யிலும், குளிரும் கலந்து ஒரு அற்புதமான சூழலை கொடுத்தது.
பாரியூர் கொண்டத்து காளியம்மன்
பொங்கலோடு எங்கள் ஊர் கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழாவும் இணைந்து வரும். தேர் திருவிழாக்களுக்கே உரிய அனைத்து அம்சங்களும் இருக்கும்.
பசங்க மகிழ்ச்சியாக அனைத்து விளையாட்டுகளிலும் (Ride) கலந்து கொண்டார்கள்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூட்டம் குறைவாக இருந்தது அதனால், விளையாட்டுகளுக்குப் பெரிய வரிசை இல்லாமல் அனைத்திலும் செல்ல முடிந்தது.
இளசுகளே விளையாட பயப்படும் ஒரு விளையாட்டில் ஒரு முதிய தம்பதி (70 க்கு மேலே இருக்கலாம்) அசால்ட்டாக பயமில்லாமல் விளையாடி பலருக்கு திகிலை கொடுத்தார்கள் 🙂 .
ஏர்டெல்
கோபியில் கடந்த சில மாதங்களாக ஏர்டெல் டேட்டா வேகம் படு மோசமாக இருந்தது. மோசம் என்றால் WhatsApp ல் Text Message அனுப்பினால் கூடச் செல்ல 15 / 20 நொடிகள் ஆனது.
ஏர்டெல்லிடம் மின்னஞ்சலில் செம்ம சண்டை நடந்தது. டிசம்பர் இறுதியில் சரி செய்து விடுகிறோம் என்று உத்தரவாதம் அளித்தார்கள்.
டிசம்பர் 20 ம் தேதி திரும்ப மின்னஞ்சலில் நினைவூட்டல் அனுப்பினேன், திரும்ப ஏதாவது நொள்ளை காரணம் கூறாதீர்கள் என்று.
இந்த முறை 4G வேகம் இல்லையென்றாலும், வேகம் நன்றாக இருந்தது. எனவே, கோபி மக்களே! உங்களுடைய ஏர்டெல் டேட்டா வேகம் அதிகரித்து இருக்க முழு முதல் காரணம் நானே! 🙂 .
நன்றி ஏர்டெல்!
இலந்தை வடை
நான் இலந்தை வடைக்குப் பெரிய ரசிகன். இந்த முறை வழக்கம் போல அக்கா செய்து வைத்து இருந்தார்கள்.
குளிர் காரணமாகவும், வெய்யில் அவ்வளவாக இல்லாததாலும் காய வைக்க முடியாததால், சென்னை கொண்டு வர முடியவில்லை.
அப்படியும் ஜூஸ் ஆகவே சாப்பிட்டு விட்டேன் 🙂 . இலந்தை வடை பிரச்சனையில் ஒரு சோகக்கதை உள்ளது.
சென்னையில் நண்பர்களுடன் இருந்த போது அவர்கள் யாருக்குமே பிடிக்காது அதனால், பங்குக்கு யாருமே இல்லாமல் நிம்மதியாக இருந்தேன்.
என்னோட பையன் வினய் வந்த பிறகு அவனுக்கும் மணம் பிடிக்கவில்லை.
நான் சும்மா இல்லாமல், “டேய்! கொஞ்சம் சாப்பிட்டு பாரு.. உனக்குப் பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதே!” என்று கூறினேன். சரி! என்று சாப்பிட்டு அவனுக்குப் பிடித்து, எனக்குப் போட்டியாக வந்து விட்டான். சொந்த செலவில் சூனியம் வைப்பது இது தான்.
Read : இலந்த வடை சாப்பிட்டு இருக்கீங்களா? 🙂
இன்னும் பங்காளிகள், கோபி கடைகள், பேட்ட, விவசாய சவால்கள் என்று கொஞ்சம் சம்பவங்கள் உள்ளது, அடுத்தப் பதிவில் கூறுகிறேன்.
பிற்சேர்க்கை – பொங்கல் கொண்டாட்டம் – 2 [2019]
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
புகைப்படம் சும்மா நச்சுனு இருக்கு!!!பொங்கல் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாக சென்று இருக்கும் என நம்புகிறேன்.. சிங்கப்பூரில் இருந்திருந்தால் நிச்சயம் தவற விட்டு இருப்பீர்கள்… அந்நியநாட்டில் எவ்வளவு மகிழ்வான தருணங்கள் இருந்தாலும், நமது சொந்த ஊரில் திருவிழா நேரங்களில் இருப்பது போல என்றும் வராது.. இலந்தை வடையை சாப்பிட்டதில்லை, ஆனால் பள்ளி பருவத்தில் கடைகளில் விற்கும் இலந்தை மட்டையை சுவைத்துள்ளேன்.. மிகவும் பிடிக்கும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
நம்ம ஊரு போல வருமா! 🙂