பேட்ட [2019] “Get Rajinified”

3
Petta-Movie

விடுதி காப்பாளராக வரும் ரஜினி அங்கே உள்ள ஒரு மாணவனின் காதல் பிரச்சனைக்கு உதவுகிறார். அந்தப் பையனை கொல்ல பலர் முயற்சிக்க, எதனால் கொல்ல முயற்சிக்கிறார்கள், அதன் பின்னணி என்ன? ரஜினியின் பின்னணி என்ன? என்பது தான் பேட்ட. Image Credit

பேட்ட

கார்த்திக் ஒரு முடிவோட தான் படம் எடுத்து இருப்பார் போல. பழைய ரஜினியை கொண்டே வந்தே ஆகணும் என்று முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

படம் முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் ரஜினியாக உலவ விட்டு இருக்கிறார். இந்தத் தலைமுறை ரசிகர்களுக்கு இது போல ஒரு ரஜினியை திரையில் காண ஒரு வாய்ப்பு.

நக்கல், கோபம், கிண்டல், மாஸ், ஆக்ரோஷம், ஸ்டைல் என்று அனைத்தையும் இதில் கண்டுகளிக்கலாம். இது மாதிரி பார்த்து எவ்வளோ வருடங்கள் ஆகி விட்டது.

த்ரிஷாக்குக் காட்சிகள் குறைவு என்று முன்பே தெரியும் என்றாலும், சிம்ரனுக்கும் குறைவு.

இப்படத்தில் சிம்ரன் தேவையே இல்லை. அடுத்தப் படத்திலையாவது சிம்ரன் படம் முழுக்க வரும்படி யாராவது எடுங்கப்பா! இருவர் பொருத்தம் அவ்வளவு அசத்தல்.

Nunchaku

இடைவேளை சண்டை காட்சிகள் எல்லாம் பட்டாசா இருக்கு, ரஜினி எப்படி Nunchaku செய்தார்? எனக்கு புரியலை! செமையா சுத்துறாரு. என்னால இப்பவரை நம்ப முடியல!!

மிகப்பெரிய நடிகனான நவாஸுதீன் சித்திக்கை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் அசத்தி இருக்கலாம் ஆனால், அவரை டம்மியாகக் காட்டியது ஏனோ?

படத்துக்குக் கெத்து தருவதும், நாயகனை ஒரு படி மேலே தூக்கி வைப்பதும் வில்லனோட முக்கியத்துவம் தான். மிகப்பெரிய வாய்ப்பை கார்த்திக் தவறவிட்டுள்ளார்.

“உல்லாலா” பாடலில் ரஜினி ஆடுவது.. ப்ப்பா! எப்படிங்க இந்த வயசுல இது எல்லாம் சாத்தியம்! நான் மிகைப்படுத்தி கூறவில்லை, படம் பார்த்தால் நீங்களே இப்படித்தான் நினைப்பீங்க.

கலக்கலான ஆட்டம். ரொம்ப ரசித்துப் பார்த்தேன் 🙂 .

விஜய்சேதுபதி பயன்படுத்தப்படவில்லை

விஜய்சேதுபதிக்கு இதில் முக்கியமான வேடம் ஆனால், கெத்தான வேடம் என்று சொல்ல முடியாது.

இன்னும் சிறப்பா பயன்படுத்தி இருக்கலாம். சசிகுமாருக்கும் சொல்லிக்கொள்ளும்படி காட்சிகள் இல்லை, வந்து போகிறார் அவ்வளவே.

இரண்டாம் பாதியில் உத்திரபிரதேச காட்சிகள் வருகிறது அதோடு இந்தி வசனங்களும். சப் டைட்டில் கூட இல்லை, சில காட்சிகள் என்ன பேசுறாங்க என்றே புரியலை.

மாஸ் காட்சிகள் ரஜினி செய்தால் மட்டுமே ரசிக்கும்படி உள்ளது. மற்றவர்கள் செய்தால் மிகை நடிப்பாகவோ எரிச்சல் வரும்படியோ உள்ளது தான் ரஜினிக்கு கிடைத்த வரம்.

ஒளிப்பதிவு & பின்னணி இசை

படத்துக்கு அழகு சேர்ப்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல், திரு ஒளிப்பதிவு.

மலைப்பிரதேச பகுதி என்பதால், புகையை விட்டுக் கடுப்படிக்காமல் இயல்பான பனி மூட்டத்தோட எடுத்து இருக்கிறார்கள். அதோட காட்சிகள் பளிச்சுன்னு இருக்கு.

பாடல்கள் எல்லாம் ஏற்கனவே பெரிய வெற்றி. பின்னணி இசையையும் அனிருத் சரியான இடத்தில் நுழைத்து ரசிக்க வைத்து இருக்கிறார்.

படம் துவக்கத்திலேயே Goosebump கொடுத்து விட்டார். உங்களுக்கு ஆகுதா பாருங்க 🙂 .

பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், இயக்குநர் மகேந்திரன் சார் போன்றவர்களுக்கு குறைவான காட்சிகளே! ஆனால், மனதில் நிற்கும் காட்சிகள்.

ஆடுகளம் நரேன் வீட்டில் சென்று ரஜினி அலப்பறை செய்வதெல்லாம், அக்மார்க் ரஜினி நடிப்பு. இதையெல்லாம் தான் எல்லோரும் தவறவிட்டு இருந்தார்கள், இதோடு சில வசனங்களும்.

இரண்டாம் பாதி

ஜிகர்தண்டா போலப் பலமான கதாப்பாத்திரங்கள், காட்சியமைப்புகள் இல்லை.

இரண்டாம் பாதி காட்சிகளைக் குறைக்கலாம், லாஜிக் இடறல்கள் போன்ற குறைகள் இருந்தாலும், சுவாரசியமான திருப்பங்களும், காட்சிகளும், ரஜினியுமே படம் ரசிக்கப்பட காரணங்கள்.

பேட்டயை படமாக பார்க்காமல் ஒரு கொண்டாட்டமாகத் தான் பார்க்கிறார்கள். அப்படியென்ன படத்தில் இருக்கு?! என்று குழம்புவர்களுக்கு இது தான் பதிலாக எனக்குத் தோன்றுகிறது 🙂 .

கொசுறு 

பேட்ட கதையை விட நான் படம் பார்த்தது பெரிய கதை. அடேய் ரோகிணி! உன்னால FDFS பார்க்க முடியலடா! 22 வருடங்களாக கொண்டாடியதை பேட்டக்கு காலி பண்ணிட்டான் 🙁 .

மாலை 4 மணிக்கு தான் போக முடிந்தது. அதுவும் நண்பர்கள் யாரும் இல்லாமல், தனியாளாக.

பேட்ட படத்தை எப்படி ரணகளமாகப் பார்த்து இருக்க வேண்டியது ஆனால், கையில் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கொடுத்த மாதிரி உட்கார வைத்துட்டான்.

இவனை மறக்கவே மாட்டேன். இனி ரோகிணி திரையரங்கம் பக்கமே போக மாட்டேன்.

என் தளத்துக்குப் புதிது, ரஜினி பட FDFS கட்டுரையை இதுவரை நீங்கள் படித்தது இல்லையென்றால், இதைப் படித்துப் பாருங்கள், சுவாரசியமாக இருக்கும்  😀 .

“ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி, பேட்ட படம் உங்களின் முழு எதிர்பார்ப்பையும் கண்டிப்பாக 80 % பூர்த்தி செய்து இருக்கும் என நம்புகிறேன்.. நான் வழக்கம் போல இரண்டு படங்களையும் பார்க்க வில்லை.. இரண்டு படமும் நன்றாக இருப்பதாக நண்பர்கள் கூறினார்கள்.. கதாபாத்திரங்கள் அதிமாகும் போது நிச்சயம் எல்லோருக்கும் சமமான ரோல் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது..கதாபாத்திரங்களை விளக்குவதே இயக்குனருக்கு பெரிய சவால்!!! கார்த்திக் சுப்புராஜ்க்கு எத்தனை பெரிய வாய்ப்பு.. வாழ்த்துக்கள் மேலும் உயரம் தொட…

    FDFS கட்டுரையை தற்போது மீண்டும் ஒரு முறை படித்தேன்.. சிரிப்பாக இருந்தது.. நமக்கெல்லாம் இதெல்லாம் தோணவே இல்லையே என வருத்தமாகி விட்டது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. அருமை.இன்று இணையத்தில் நடக்கும் ரசிகர்களின் சண்டையை பற்றி எழதவும்.நன்றி

  3. Antariksham 9000 KMPH (2018) தெலுங்கு படம் பார்த்தேன் English subtitle டன் டிக் டிக் டிக் அ விட நன்றாக இருக்கு சாதாரண விண்வெளிப்பயணம் பற்றிய கதைதான் இரண்டு இடங்களீல் ஹீரோயிஷம் தெரிகிறது. மற்றபடி செம

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here