கிட்டத்தட்ட இரண்டு வருட ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் வழக்கங்களை மாற்றி உள்ளது. பல பெற்றோர்களும் செய்வதறியாது திணறி வருகிறார்கள்.
ஆன்லைன் வகுப்புகள்
கொரோனா தாக்கம் காரணமாக, வழக்கமான நேரடி வகுப்புகள் அல்லாமல் அனைவரும் ஆன்லைன் வகுப்பிலேயே பாடம் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
தேர்வுகள் முதற்கொண்டு அனைத்தும் ஆன்லைனிலேயே நடந்து, பள்ளி, கல்லூரி செல்லாமலே வகுப்பை மாணவர்கள் கடந்து விட்டனர். Image Credit
நேரடி வகுப்புகள் இருந்த போது கட்டுப்பாட்டில் இருந்த மொபைல் பயன்பாடு, ஆன்லைன் வகுப்பான போது கட்டுப்பாட்டை இழந்து விட்டது.
மாணவர்களுக்கு மொபைல், Tab, மடிக்கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலையானது.
வேறு வழி இல்லாததால் பெற்றோர் அனுமதித்து வந்தனர்.
விளையாட்டு
இணையம் என்றவுடன் மாணவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டு, YouTube ஆகியவற்றைப் பயன்படுத்துவது இயல்பாகி விட்டது.
இரு வகுப்புகளுக்கு இடையே உள்ள நேரத்தில் விளையாடி, YouTube பார்த்து வந்தவர்கள், வகுப்பு நேரத்திலேயே பயன்படுத்த துவங்கி விட்டனர்.
சில வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதாலும், மற்ற பணிகளாலும் இதைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால், வகுப்பு அல்லாத நேரங்களிலும் விளையாட்டு, YouTube என்று நேரத்தை நகர்த்த ஆரம்பித்து விட்டனர்.
தற்போது ஆன்லைன் வகுப்புகள் முடிந்து நேரடி வகுப்புகள் துவங்கி இருக்கும் நிலையில், விளையாட்டுக்கு அடிமையான மாணவர்கள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர்.
ரொம்பவும் அடிமையான மாணவர்கள் பள்ளிக்கு செல்லவே மறுக்கின்றனர். காரணம், பள்ளிக்கு சென்றால், விளையாட முடியாது என்பதால்.
இன்னும் சிலர் ஆபாச தளங்கள் செல்வதையும் வழக்கமாக்கி விட்டனர்.
பெற்றோர் பலர் இதன் காரணமாகக் கடுமையான மன உளைச்சல் அடைந்து வருகின்றனர்.
என்ன செய்யலாம்?
இதைப்படிக்கும் பெற்றோர் அனைவருக்கும் அவரவர் வீடுகளில் நடக்கும் சம்பவங்கள் நினைவுக்கு வந்து சென்று இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
காரணம், இது ஏதோ ஒரு குடும்பத்தில் நடக்கும் சம்பவமில்லை.
எனவே, பசங்க கிட்ட ரொம்பக் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். அதிரடியாகச் செயல்பட்டீர்கள் என்றால், எதிர் விளைவுகளையே கொண்டு வரும்.
இவை உங்களுக்கு மேலும் சிக்கலையே கொண்டு வரலாம்.
முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது, இப்பிரச்சனை உங்கள் வீட்டில் மட்டுமே நடப்பதாகக் கற்பனை கொள்ள வேண்டாம். இது பொதுவான பிரச்சனை.
எனவே, பசங்களிடம் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதில் தடாலடியாகத் தடை போடாமல், மணிக்கணக்காகக் குறைத்துக்கொண்டு வாருங்கள்.
அதோடு தொடர்ச்சியாக விளையாடுவதின் மூலம் ஏற்பட்ட படிப்புப் பாதிப்பை அவர்கள் கோபமடையாதபடி பொறுமையாக எடுத்துக்கூறுங்கள்.
மாணவர்கள் இரு வருடங்களாகப் பள்ளிக்குச் செல்லாமல், அதிகம் படிக்காமல் சோம்பேறி ஆகி இருப்பார்கள்.
எனவே, திடீர் என்று அனைத்தும் அதிகரிக்கும் போது அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். பலவற்றைச் செய்ய மறுப்பார்கள்.
இந்நிலையில் அவர்களிடம் பக்குவமாகப் பேசி மட்டுமே குறைக்க முடியுமே தவிர, முரட்டுத்தனமாகச் செயல்பட்டால், மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
விளையாட்டைத் தடுத்தால்…
திடீர் என்று விளையாட கூடாது என்று தடா போட்டால், பசங்க சந்திரமுகி ஆகி விடுவார்கள். இதுவரை பார்க்காத முகத்தை பார்க்க வேண்டியது இருக்கும்.
விளையாட்டுக்கு அடிமையானவர்களால் உடனடியாக அதை நிறுத்த முடியாது. நிறுத்த முயன்றால், மிக உக்கிரமாக நடந்து கொள்வார்கள்.
எனவே, படிப்படியாக நிறுத்தும் போது அவர்களுடன் பெற்றோர் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.
அவர்களுடைய கவனத்தை வேறு வகையில் திசை திருப்ப வேண்டும்.
வெளியே அழைத்துச் செல்ல வேண்டும், அவர்களுடன் நேரம் செலவழித்து அவர்களுக்கு விளையாட்டைப் பற்றி யோசிக்க நேரம் தராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து ஓரிரு நாட்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ மாற்றங்களைக் காணலாம்.
பொறுமை தேவை
இப்பிரச்சனை அனைவருக்குமானது என்றாலும், பசங்களிடம் பொறுமையாகக் கையாள வேண்டியது மிக அவசியம் ஆனால், சரி செய்ய முடியாத ஒன்றல்ல.
எதற்கும் அதிரடியாகத் தடை போடாதீர்கள். இரு வருடங்களாகப் பழகியதை இரு நாட்களில் நிறுத்துவது சரியான முறையல்ல.
ஆன்லைன் வகுப்புகள், YouTube மற்றும் விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிட்டு மற்றவர்களுடன் பழகுவதில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும்.
அதாவது தனிமையை அதிகம் விரும்புவார்கள். எனவே, அவர்களுடன் நேரம் செலவழித்துத்தான் இதை மாற்ற முடியும்.
எனவே, அவர்களிடம் எரிந்து விழாமல், திட்டாமல் பொறுமையாக அவர்களுக்கு விளக்குவது மட்டுமே ஒரே வழி.
என்னடா இது! நம்ம பசங்க இப்படிக் கெட்டுப்போய்ட்டாங்களே, விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார்களே, பழகும் விதமே மாறி விட்டதே என்று கவலை வேண்டாம்.
முன்னரே கூறியபடி இது அனைத்து வீடுகளிலும் நடக்கும், நடந்த சம்பவங்கள்.
எனவே, வீண் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு பயப்பட வேண்டாம்.
அவர்களுடன் நேரம் செலவிடுங்கள், ஆன்லைன் விளையாட்டின் ஆபத்தைப் பொறுமையாக விளக்குங்கள். பயன்படுத்தும் நேரத்தை படிப்படியாகக் குறையுங்கள்.
நிச்சயம் மாற்றம் கிடைக்கும். அதற்கு உங்களுக்குத் தேவை பொறுமை மட்டுமே.
தொடர்புடைய கட்டுரைகள்
குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள்
குழந்தைகளை அழைத்துச் செல்லும் முறை தெரியுமா?!
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
எங்கள் குடும்பத்திலும் இந்த பிரச்சினை வந்து விட்டது.எனது சித்தி பெண் பன்னிரெண்டம் வகுப்பு படிக்கிறார். பள்ளிக்கு செல்ல மறுக்கிறாள். ஆன்லைனில் மட்டுமே படிப்பேனல என்று அடம்பிடிக்கிறார்.நண்பர்களிடம் பேசுவிதில்லை.YouTube ல் உள்ள பேய்கள் சம்பந்தமான வீடியோ,கிருஷ்ணர் தொடர்களை பார்த்துவிட்டு மனதளவில் பாதிக்கபட்டு கிருஷ்ணன் பேசுகிறார் என்றும் தன்னை குடும்பத்தில் இருக்கவேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். மருந்திற்கும் மனநல மருத்துவருக்கு காசை அழித்தது தான் மிச்சம்.
Hi Giri,
Naan kumarapushpagiri. Ungaludaya website nandraga ulladhu. Idhil you can put advertisements through google & other platforms and earn some income. Please contact me if you are interested. I am earning from the website officetricks. Naan kadandha 7 varusama blog pannugiren. Thanks for your time.
கிரி, ஆன்லைன் வகுப்புகள் வேண்டுமா / வேண்டாமா என்று கேட்டால் என்னை பொறுத்தவரை வேண்டாம் என்று தான் கூறுவேன்..(வேறு வழியில்லை ஒத்து கொள்கிறேன்.. ஆனால் மாற்று ஏற்பாடுகளை பற்றி யாருமே யோசிக்க வில்லை என்பதே உண்மை) இதில் நன்மை / தீமை இரண்டும் இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகளால் பள்ளியின் கடமை முடிந்து விட்டது என்று கருத்தலாமே தவிர பயிற்சிகள் செம்மையாக இருந்தது என்று கூற முடியுமா என்று தெரியவில்லை..
என் பையனின் சொந்த அனுபவத்தில் மனைவிக்கு கூடுதல் மனஉளைச்சல் வந்ததே தவிர வேறு ஏதும் நன்மை நடக்கவில்லை..இணைய விளையாட்டுகள் பொறுத்தவரை திருத்தம் முதலில் பெற்றோரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்.. பெற்றோர்களே நாம் அதிகமாக நேரத்தை கைப்பேசியில் செலவழித்து கொண்டு, குழந்தைகளை குறை கூறி பயனில்லை.. முதலில் பெற்றோர்கள் திருந்த வேண்டும்..
========================================
(என்னடா இது! நம்ம பசங்க இப்படிக் கெட்டுப்போய்ட்டாங்களே, விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார்களே, பழகும் விதமே மாறி விட்டதே என்று கவலை வேண்டாம்.
முன்னரே கூறியபடி இது அனைத்து வீடுகளிலும் நடக்கும், நடந்த சம்பவங்கள்.
எனவே, வீண் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு பயப்பட வேண்டாம்.
அவர்களுடன் நேரம் செலவிடுங்கள், ஆன்லைன் விளையாட்டின் ஆபத்தைப் பொறுமையாக விளக்குங்கள். பயன்படுத்தும் நேரத்தை படிப்படியாகக் குறையுங்கள்.
நிச்சயம் மாற்றம் கிடைக்கும். அதற்கு உங்களுக்குத் தேவை பொறுமை மட்டுமே.)
========================================
வரிக்கு வரி உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.. எல்லா பெற்றோரும் இந்த உண்மையை விளங்கினால் இந்த பிரச்சனையை எளிதாக கையாள முடியும்..
அருமையான பொற்கால வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறோம்… விஞ்ஞானம் அனைத்தையும் எளியதாக்கியது ஆனால் அதற்கு விலையாக ஒட்டுமொத்த நிம்மதியை மொத்தமாக உருவி எடுத்தது…(இணையத்தில் படித்தது..) இளைய தலைமுறைக்கு பொருத்தமாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@விஜயகுமார்
இது அனைவர் வீட்டிலும் நடக்கும் சம்பவம் ஆகி விட்டது.
விரைவில் பள்ளிகள் திறந்து வழக்கமான சூழ்நிலை வந்த பிறகு இது மாறி விடும்.
“மருந்திற்கும் மனநல மருத்துவருக்கு காசை அழித்தது தான் மிச்சம்.”
வருத்தமான நிகழ்வு தான்.
@Kumarapushpagiri Raju
எனக்கும் கூகிள் AdSense கணக்குள்ளது. சில நாட்கள் வைத்து இருந்தேன் ஆனால், இவை தளத்தின் Core Web Vitals யைப்பாதிப்பதால் நீக்கி விட்டேன்.
பின்னாளில் இதற்குச் சரியான தீர்வு கிடைக்கும் போது வைப்பேன். உங்கள் ஆலோசனைக்கு அன்புக்கு நன்றி 🙂 .
@யாசின்
“ஆன்லைன் வகுப்புகளால் பள்ளியின் கடமை முடிந்து விட்டது என்று கருத்தலாமே தவிர பயிற்சிகள் செம்மையாக இருந்தது என்று கூற முடியுமா என்று தெரியவில்லை..”
கண்டிப்பாக இல்லை யாசின்.
மாணவர்களின் படிப்புத்திறன் குறைந்துள்ளது. நேரடி வகுப்புகள் போல இல்லை.
“என் பையனின் சொந்த அனுபவத்தில் மனைவிக்கு கூடுதல் மனஉளைச்சல் வந்ததே தவிர வேறு ஏதும் நன்மை நடக்கவில்லை.”
ஒவ்வொரு வீட்டிலும் இதே நிலை தான். பலரும் எப்படா பள்ளி திறப்பார்கள் என்று காத்துள்ளார்கள்.
குழந்தைகளின் அம்மா ஓய்ந்து விட்டார்கள். உண்மையிலேயே பாவமாக உள்ளது.
காலை முதல் இரவு வரை இவர்களை சமாளிப்பது எளிதல்ல.
“பெற்றோர்களே நாம் அதிகமாக நேரத்தை கைப்பேசியில் செலவழித்து கொண்டு, குழந்தைகளை குறை கூறி பயனில்லை.”
ஏற்றுக்கொள்கிறேன் யாசின். சரியான கருத்து.