ஒரு நாள் பயணமாகச் சோளிங்கர் செல்ல திட்டமிட்டுக் கிளம்பத் தாமதமானதால், திட்டங்கள் மாறி வேறு இடங்கள், என் மற்றும் அக்கா குடும்பம் சென்று வந்தோம்.
வாலாஜாபேட்டை வழியாகச் செல்லும் போது எனது நண்பி ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவரின் குழந்தையைப் பார்த்து விடலாம் என்று அவரை அழைத்தோம்.
அவர் “சோளிங்கர் 1300 படிகள், அதனால் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்‘ என்று கூற எங்கள் திட்டம் மாறியது காரணம் நாங்க இவ்வளவு படிக்கட்டுகளை எதிர்பார்க்கவில்லை.
மோசமான பராமரிப்பில் தேசிய நெடுஞ்சாலை
காஞ்சிபுரம் வேலூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது ஆனால், படு மோசமாகப் பராமரிக்கப்படுகிறது. எதற்குக் கட்டணம் என்பதே தெரியவில்லை!
நாங்கள் வாலஜாபேட்டை வரும் போதே மணி 3 க்கு மேல் ஆனதால், இதன் பிறகு சென்று வர தாமதமாகி விடும் என்று திட்டத்தை மாற்றி விட்டோம்.
ராணிப்பேட்டை சிப்காட்
ஏற்கனவே இவரின் வீட்டுக்குச் சென்ற போது, இங்கே 1500 வருட பழமையான சிவன் கோவில் உள்ளது என்று கூறி இருந்தார், அங்கே சென்று வருவோம் என்று திட்டமிட்டோம்.
வீட்டுக்குச் சென்ற பிறகு இரத்தினகிரி, தங்கக் கோவில் பற்றிக் கூற, சரி இரண்டு இடங்கள் செல்லலாம் என்று திரும்பத் திட்டம் மாறியது.
இரத்தினகிரி பாலமுருகன் கோவில்
பின்னர் இரத்தினகிரி பாலமுருகன் கோவில் கிளம்பினோம், கூகுள் சரியாக வழிகாட்டியது. இவர் வீட்டுக்கும் கூகுளின் வழியாக யாரிடமும் கேட்காமலே சென்றோம்.
கோவிலுக்கு நெடுஞ்சாலை Service Lane ல் இடது புறம் திரும்ப வேண்டும் ஆனால், கூகுள் சரியாகக் குறிப்பிட்டும் நான் கவனிக்காததால், 2.3 கிமீ சுற்றி வந்தோம்.
வட இந்தியர்கள் எண்ணிக்கை அதிகம்
முருகன் கோவில் பிரம்மாண்டமாக உள்ளது. இங்கே நான் கவனித்தவரை வட இந்தியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தார்கள்.
கோவிலில் மூலவரின் மண்டபத்தில் வள்ளி தெய்வானை முருகன் பெயர்கள் தமிழ் ஆங்கிலத்துடன் இந்தியும் இருந்தது.
இங்கே வட இந்தியர்கள் அதிகளவில் வருவதற்கான காரணம் குறித்து யாராவது தெரிந்தவர் கூறினால், தெரிந்து கொள்வேன்.
பிரம்மாண்ட கோவில்
கோவில் மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு இருந்தது. காருக்கு 15 கட்டணத்துடன் மலை மேலேயே செல்ல முடியும்.
நான் நடந்து தான் செல்ல வேண்டும் என்று விரும்பினாலும், நேரம் காரணமாகக் காரிலேயே சென்றோம்.
வாகனங்களை நிறுத்தப் பெரிய வாகன நிறுத்தமுள்ளது.
கோவில் உற்சவர், மூலவர் இரு மண்டபங்கள் உள்ளது. உள்ளே நல்ல கருத்துகளை எழுதி வைத்து இருந்தார்கள். கோவிலின் உள்ளே இடம் விட்டு நன்கு விசாலமாக உள்ளது.
கோவில் வெளியே வந்து பார்த்தால், தேசிய நெடுஞ்சாலையும் மலைகளும் பசுமையும் மிக அழகாக இருக்கிறது.
பின்னர் அங்கே இருந்து தங்கக் கோவில் கிளம்பினோம்.
தங்கக் கோவில்
தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து உள்ளே செல்கிறது, இங்கே எப்படி இவ்வளவு உள்ளே தள்ளிக் கட்டினார்கள் என்று தெரியவில்லை.
கூகுள் வழிகாட்டி மூலமாகவே சென்றோம்.
நான் தற்போது தான் முதல் முறையாகச் சென்றேன். திருப்பதி கோவில் போலக் கூட்டம். பவுர்ணமி (குரு பூர்ணிமா) என்பதால், கூட்டமா! என்று தெரியவில்லை.
முழுக்க ஆந்திரா, கர்நாடகா பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களே அதிகளவில் நிறைந்து இருந்தது. எங்கும் இவர்களே நிறைந்து இருந்தார்கள்.
கோவில் இருக்கும் மாநிலத்தை மறந்தால், நிச்சயம் இது தமிழ்நாடு என்று கூற முடியாது என்பது போலவே இருந்தது.
கட்டணங்கள் அதிகம்
அனைத்து மொழிகளிலும் அறிவிப்புகளைக் காண முடிந்தது. அதற்குக் கட்டணம் இதற்குக் கட்டணம் என்று 1500₹, 1300₹ என்று கட்டணங்களாக இருந்தது.
அதோடு பொதுவழி, சிறப்பு வழி என்று 100₹, 250₹, 500₹ என்று கட்டணங்கள் இருந்தது.
அங்கே அலுவலக அறையில் இருந்தவரிடம் கேட்ட போது தெலுங்கு கலந்த தமிழில் “இலவச வழி என்றால் இரண்டு மணி நேரமும் 100₹ என்றால் ஒரு மணி நேரமும் ஆகும்” என்றார்.
கோவிலில் பணம் கொடுத்து சென்று பார்ப்பதில் உடன்பாடில்லை. சென்றால் பொதுத் தரிசனம் வழியாகச் செல்ல வேண்டும் இல்லையென்றால் வெளியே நின்று கும்பிட்டு வர வேண்டும்.
குடும்பத்துடன் செல்லும் போது நம்முடைய கொள்கைகளைத் திணிக்க முடியாதே!
அக்கா மச்சானிடம் கேட்ட போது அவர்களும் பொதுத் தரிசனத்திலேயே செல்லலாம் என்றார்கள். சரி என்று எட்டு பேரும் பொதுத் தரிசனம் வழியாகவே சென்றோம்.
திருப்பதி போல ஒரு இடத்தில் அமர வைத்து பிறகு அனுப்பினார்கள்.
அலைபேசிகளுக்கு மற்ற பொருட்களுக்கு அனுமதியில்லை. நாங்கள் காரிலேயே வைத்து விட்டு வந்து விட்டோம். இதுல வேற Premium Parking தனி!
பொது வழி சிறப்பு வழி அனைத்து வழிகளும் ஒன்றே!
வளைந்து வளைந்து சென்று தோராயமாக 20 நிமிடங்கள் சென்ற பிறகு 100 ருபாய் சிறப்புக் கட்டண வரிசையும் எங்கள் வரிசையும் இணைந்தது.
நல்லவேளை கட்டணம் கொடுத்துச் செல்லவில்லை என்று திருப்தியடைந்தோம்.
இதன் பிறகு உள்ள செல்லும் இடங்கள் சிறிய கூண்டு போல இல்லாமல் பரந்து விரிந்து இருக்கிறது, இயற்கை சூழலுடன். மண்டப பாதை வடிவில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளே சென்றால், மருவத்தூர் அடிகளார் போல ஒருவர் “அம்மா” என்ற பெயரில் எங்கும் நிறைந்து இருந்தார். அவர் பெயர் நினைவில்லை.
எனக்கு இது போலப் பணக்கார கோவில்கள் செல்ல விருப்பமில்லை ஆனால், எல்லோரும் கூறியதால் பார்த்து வருவோம் என்று வந்தேன். இனி இந்தப்பக்கம் வர மாட்டேன்.
சிறப்பான வசதிகள்
கோவில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு இருந்தது. தண்ணீர் வசதிகள், உட்கார இடம் என்று சிறப்பான வசதிகள். அனைத்து இடங்களிலும் வசூலிக்கும் கட்டணங்களின் பலம் தெரிந்தது.
வயதானவர்கள், கால் வலி உள்ளவர்கள் இதில் நடந்து வருவது கடினம் அல்லது அமர்ந்து அமர்ந்து மெதுவாக வர வேண்டும். மிகத் தொலைவு நடந்து செல்ல வேண்டும்.
தங்கக் கோவில் நாங்கள் இரவில் சென்றதால், விளக்கு ஒளி வெளிச்சத்துடன் பளீர் என்று இருந்தது. சுற்றியும் தண்ணீர் சூழ்ந்து நடுவில் கோவில் அழகாக இருந்தது.
இது வரை விரைவாகச் சென்று, கோவிலினுள் கூட்டம் காரணமாகத் தாமதம் ஆனது.
தங்கக் கோவிலைத் தாண்டி நடந்து வெளியே வரும் போது திருப்பதி கோவில் போல “பெருமாள்” சிலை (அறையில் பச்சைக் கற்பூரம் வாசனையுடன்) பிரம்மாண்டமாக உள்ளது.
“கோவிந்தா” கோஷம் திருப்பதிக் கோவிலை நினைவுபடுத்தியது.
அறிவிப்பு வசதிகள் இல்லை
லட்சுமி நாராயணி (தங்கக் கோவில்) கடவுளை வணங்கி வெளியே வரும் போது கூட்டத்தில் என்னுடைய மனைவியையும் இரு பசங்களையும் தவறவிட்டு விட்டோம்.
“ஒருவேளை கூட்டத்தில் தவறவிட்டால் கார் இருக்கும் இடத்துக்கு வந்துவிடுவேன்” என்று மனைவி கூறி இருந்தார், இருப்பினும் பசங்க இருவரும் இவருடன் தான் இருக்கிறார்களா! என்ற சந்தேகம் அனைவரையும் குழப்பியது.
கோவிலின் உட்பகுதியில் வெளிப்பகுதியில் என்று அனைத்து இடங்களிலும் சென்று தேடிப் பார்த்துப் பின்னர் கார் பகுதியில் நின்று கொண்டு இருந்தனர்.
ஒரு மணி நேரம் அனைவரையும் பதட்டமாக்கி விட்டார்கள். என் அக்கா தான் ரொம்ப பயந்து விட்டார்.
மனைவி மிகப் புத்திசாலி மற்றும் தைரியமானவர் எனவே, எனக்கு அவர் குறித்து எந்தப் பயமுமில்லை.
ஆனால், அவருடன் தான் இவர்கள் இருவரும் இருக்கிறார்களா இல்லையா என்ற கேள்வியே பதட்டமாக்கியது.
மாற்றுத் தொடர்பு வசதிகள் இல்லை
இங்கே உள்ள பிரச்சனை அலைபேசியையும் அனுமதிப்பதில்லை, அறிவிப்பு வசதியுமில்லை அதோடு பொதுத் தொலைபேசி வசதியும் இல்லை.
இதனால், யாரையும் தொடர்பு கொள்ளமுடியாமல் செம்ம கடுப்பாகி விட்டது.
அலைபேசிகளை வாங்கி வைத்தால், அதற்குண்டான மற்ற வசதிகள் கோவிலின் உள்ளே இருக்க வேண்டும்.
இப்படி எந்த வசதியும் இல்லாமல், வாங்கி வைத்துக்கொண்டால், தவறவிட்டால் எப்படி ஒவ்வொருவரையும் தொடர்பு கொள்வது.
அலைபேசிகளை அனுமதித்து இருந்தால், நிழற்படம் எடுத்து அந்த இடத்தை நாசம் செய்து விடுவார்கள் என்பது புரிகிறது ஆனால், அதற்காக மாற்று வழிகள் இல்லையென்றால், எப்படி!
எனவே, இங்கே செல்பவர்கள் உடன் வந்தவர்களை தவறவிட்டால் எங்கே வருவது, காத்திருப்பது போன்றவற்றை முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும்.
பின்னர் கோவிலில் இருந்து கிளம்பி வேலூர் வந்து அங்கே “பேபி” உணவகத்தில் (விருதுநகர் பரோட்டா நன்றாக இருந்தது) இரவு சாப்பிட்டு விட்டு வீட்டை அடைந்த போது இரவு 1.30.
மகிழ்ச்சி
ஒரு நாள் பயணம் நீண்ட மாதங்களுக்குப் பிறகு ஒரு மாற்றமாக இருந்தது குறிப்பாக அனைவரும் ஒன்றாகச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது மிக மகிழ்ச்சி 🙂 .
கொசுறு
நானும் என் மச்சானும் மட்டும் கோவைக்குக் காரில் செல்லலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அங்குச் சென்று உறவின நண்பர்களுடன் கலந்து கொள்வதாகத் திட்டம்.
நீண்ட பயணம் செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம்.
இதோடு என்னுடைய நெருங்கிய நண்பர்கள் இருவர் எனக்கு “Treat” கொடுக்க வேண்டியுள்ளது. பல வருடங்களாக என்னால் தாமதமாகி வருகிறது.
இப்பயணமும் எனக்குப் பாக்கியுள்ளது.
இரு பயணங்களும் விரைவில் செல்வேன் என்று எதிர்பார்க்கிறேன் 🙂 . கூகுள் வழிகாட்டி துணை இருந்தால், எங்கே வேண்டும் என்றாலும், யார் துணையும் இன்றிச் சென்று வர முடியும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
புகைப்படங்கள் இல்லையே?
புதிய இடங்களுக்கு பயணிப்பது என்றுமே ஒரு இனிய அனுபவம். கோவையில் பணிபுரிந்த நாட்களில் நண்பன் சக்தியுடன் சேர்ந்து பல இடங்களுக்கு சென்ற நாட்களை என்றுமே மறக்க முடியாது. ஆனால் கடந்த 8 / 9 வருடங்களில் குறிப்பிடும் படி எங்கும் செல்லவில்லை.
பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும், கனவும் எப்போதும் உண்டு. உங்களின் சில பதிவு அவ்வவ்போது நினைவூட்டுவது உண்டு. தற்போது கூட அங்கோர் வாட் கோவிலை பற்றி அதிகம் படித்து வருகிறேன். இதை விட பல சிறப்பான இடங்கள் பல இருக்கலாம் .
ஆனால் எந்த வித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கடல் கடந்து ராஜராஜ சோழன் ஆட்சியில் கட்டிய இந்த கோவில் என் பார்வையில் நிச்சயம் ஒரு உலக அதிசயமே!!! அவற்றில் உள்ள சிற்பங்கள்!!! கல் ஓவியங்கள் !!! கட்டிட அமைப்பு !!! தூண்கள்!!! வார்த்தைகள் இல்லை..
எந்த துறையிலும் முன்னோர்களின் சாதனைகளை கண்டு வியந்து எப்போதும் ஆச்சரியம் கொள்ளும் நான், மீண்டும் மீண்டும் ஆச்சரியம் கொள்கிறேன்… பகிர்வுக்கு நன்றி கிரி.
@சோமேஸ்வரன் தங்கக்கோவிலில் நிழற்படங்கள் எடுக்க அனுமதியில்லை. வெளியே வரும் போது இருட்டி விட்டது எனவே, வெளிப்பகுதிகளையும் எடுக்க முடியவில்லை.
@யாசின் வெளிநாடு சென்றாலே இங்குள்ள இடங்கள் செல்வது கனவாகி விடும். நண்பர்களுடன் திட்டமிட்டு சென்றால் மட்டுமே உண்டு.
தஞ்சாவூர் கோவில் எப்போதுமே வியப்பு தான். இதுல ஒன்னொரு விசயம் .. இது ஒன்று தான் உருப்படியாக ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டுள்ளது 🙁