குருநாதசாமி கோவில் திருவிழா | குதிரைகளின் சங்கமம்

6
குருநாதசாமி கோவில் திருவிழா

குருநாதசாமி கோவில் திருவிழா என்றால், அந்தக்கடவுள் அனைவருக்கும் நினைவிற்கு வருவாரோ இல்லையோ! அங்கே நடக்கும் குதிரை திருவிழா பற்றித்தான் ஆவல் அதிகம் இருக்கும்.

குருநாதசாமி கோவில் திருவிழா

அந்தியூர் என்ற ஊரை உங்களில் பலர் கேள்விப்பட்டு இருக்கலாம், எங்கள் கோபியிலிருந்து முக்கால் மணிநேரப்பயணத்தில் செல்லும் இடம் மற்றும் ஈரோடு, கோவை மாவட்டத்தில் பலருக்கும் பரிச்சியமான ஊர்.

இங்கே வருடாவருடம் குருநாதசாமி கோவில் திருவிழா நடக்கும். திருவிழாவில் குதிரை மற்றும் மாட்டுச் சந்தை நடக்கும். இதைக்காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருப்பார்கள்.

குதிரை என்றால் 50, 100 இருக்கும் என்று நினைக்க வேண்டாம், ஆயிரக்கணக்கில் இருக்கும். வெளிநாட்டினர் பலர் இந்தச் சந்தையைக் காண வருவார்கள், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போல.

அந்தப்பகுதியிலிருந்து பல நூறு மக்கள் தங்கள் குதிரைகளை விற்பனைக்கு அழைத்து வந்து இருப்பார்கள்.

நான் என்னுடைய மிகச்சிறிய வயதில் இங்கே வந்தது, அதன் பிறகு இந்த வருடம் தான் செல்ல முடிந்தது. இந்த விழாவின் போது ஊரில் இருக்க மாட்டேன் என்பதால், இது வரை கலந்து கொள்ளும் வாய்ப்பே கிடைக்கவில்லை.

இந்த முறை அக்குறை பல வருடங்களுக்குப் பிறகு நீங்கியது.

அழைப்பு

எங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர், “கோவிலுக்கு செல்கிறேன் வாருங்கள் போகலாம்” என்று அழைத்தார்.

எனக்கும் திருவிழாவிற்கு சென்று நீண்ட வருடங்கள் ஆகி இருந்ததாலும் அதோடு, மகன் வினய், குதிரைகளைப் பார்த்தால் மகிழ்ச்சியடைவான் என்பதாலும் அவனையும் அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினோம்.

அந்தியூர் அருகே வரும் போதே, மக்கள் சாரை சாரையாக கோவிலை நோக்கிப் படையெடுக்கத் துவங்கி இருந்து இருந்தார்கள்.

அன்று கோகுல அஷ்டமி அரசு விடுமுறை வேறு, கூட்டத்திற்கு சொல்லவா வேண்டும். கடுமையான போக்குவரத்து நெரிசல்.

லட்சக்கணக்கில் மக்கள்

கூட்டம் எதிர்பார்த்தேன் என்றாலும், இந்த அளவுக் கூட்டத்தை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

எங்கள் பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் திருக்கோவில் திருவிழாவின் போது செம கூட்டம் இருக்கும் அந்தக்கூட்டத்தை விட நான்கு மடங்குக் கூட்டம்.

கார் எல்லாம் முன்பே நிறுத்தி விட்டார்கள். சாலையெங்கும் மக்கள் வெள்ளம். நடக்கக் கூட இடமில்லை. லட்சக்கணக்கில் மக்கள் வந்து இருந்தார்கள்.

இவனை வேறு கூட்டி வந்து இருந்ததால், என்னால் இவனை நடக்க விட்டுக் கூட்டிக்கொண்டு வரவும் பயம்.

கூட்டத்தில் காணாமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற உதறல்.

இதனால் இவனை எடுத்துக்கொண்டே நடந்து சென்றேன், வழியெங்கும் உள்ள கடைகளில் இருக்கும் பொம்மைகளை வாங்கித்தரக் கேட்டுக்கொண்டே வந்தான்.

வரும் போது வாங்கிக்கொள்ளலாம் என்று சமாதானம் கூறி அழைத்துச் சென்றேன்.

மழை

நாங்கள் சென்ற அன்று வெய்யில் இல்லை ஆனால், முதல் நாள் மழை பெய்து இருந்ததால் சேறாக இருந்தது.

இங்கே உள்ள சேறு களிமண் போல வழுக்கு அதிகமாக இருக்கும் எனவே, கவனமாக நடக்க வேண்டியதாக இருந்தது.

நடக்கிறோம் நடக்கிறோம் நடந்து கொண்டே இருக்கிறோம் கோவிலே வரவில்லை.

ஒரு வழியாக ஒரு கிலோ மீட்டர் மேலே நடந்து அருகில் வரும் போது கூட்டத்தால் அந்த இடமே மூச்சுத் திணறிக்கொண்டு இருந்தது.

கோவிலுக்குள் போவது சாத்தியமே இல்லை என்பதால், குதிரையை மட்டும் பார்த்து விட்டுச் செல்வதாக முடிவானது.

இதில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம். வானம் மேக மூட்டமாக இருந்தது. மழை வந்து விடுமோ என்று எனக்கு பயம்.

இந்தக்கூட்டத்தில் மழை வந்தால் ஒதுங்கக் கூட இடம் கிடையாது. அந்த இடமே ரணகளமாக மாறி விடும். இதுவே பயத்துக்குக் காரணம் அதோடு, களிமண் இடம் வேறு.

போதாததுக்கு இவன் வேறு கையில்.

எச்சரிக்கை

காவலர்கள் ஏகப்பட்ட பேர் நின்று கொண்டு இருந்தார்கள். பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

இதில் மூத்த அதிகாரி ஒருவர் ஒலிப்பெருக்கியில் கொடுத்த எச்சரிக்கை பலரை சிரிக்க வைத்தது.

அது “யாராவது குழந்தையைக் காணவில்லை என்று வந்தால் குதிரைச் சாட்டை தயாரா இருக்கு, வெளுக்க” என்று கூறியதும் பலரும் தன்னிச்சையாக குழந்தைகளை இறுகப் பிடித்தது பார்க்கச் சிரிப்பாக இருந்தது.

பலரும் கூட்டத்தில் குழந்தைகளைக் கவனிக்காமல் தொலைத்து விடுவார்கள் எனவே, அசட்டையாக இருக்காதீர்கள் என்ற அக்கறையில் அவர் கூறியது ஆகும்.

நானும் உடன் வந்தவரும் மாற்றி மாற்றி இவனை வைத்துக்கொண்டோம்.

நான் என் சிறிய வயதில் வந்த போது, குதிரைக் குட்டி ஒன்றை வாங்கியே ஆக வேண்டும் என்று அட்டகாசம் செய்தது நினைவிற்கு வந்தது.

அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டேன். இதை என்னுடைய அம்மா, இங்கே செல்கிறேன் என்றதுமே இதை நினைவு கூர்ந்தார்கள்.

பின் வேறு வழி இல்லாமல் என்னைச் சமாதானப்படுத்த ஊருக்கு வந்து ஒரு மானை எங்களுக்கு தெரிந்தவர் இடத்திலிருந்து வாங்கி வந்து கொடுத்தார்கள்.

அது கொஞ்ச நாள் இருந்தது பின் பராமரிக்க முடியாமல் அங்கேயே விட்டு விட்டோம்.

என்னைப் போல, என் மகன் பிடிவாதம் செய்யவில்லை 🙂 .

1000 குதிரைகள்

இத்தனை குதிரையை எப்படி இந்தக்காலத்தில் வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

முன்பெல்லாம் அனைவரும் மாட்டு வண்டி போலக் குதிரை வண்டி வைத்து இருப்பார்கள் மற்றும் எங்கும் காடாக இருக்கும் எனவே, குதிரை வைத்து இருக்க முடிந்தது.

தற்போது காடும் இல்லை வண்டியும் இல்லை, பின் எதற்கு இத்தனை குதிரை என்று புரியவில்லை. 750 ல் இருந்து 1000 குதிரைகள் இங்கே இருக்கும் என்று நினைக்கிறேன்.

இவனைத் தூக்கிக்கொண்டு சுற்றியதால் பல விசயங்களை விசாரிக்க முடியவில்லை.

குதிரைச் சந்தையில் பல வரிசைகள் உண்டு. அதன் நடுவே, அங்கே உள்ள குதிரை உரிமையாளர்கள் அல்லது அதைப் பராமரிப்பவர்கள் ரேஸ் வைக்கிறார்கள்.

குதிரையின் கம்பீரம்

நான் இது வரை திரைப்படங்களில் மட்டுமே குதிரைகள் ஓடிப் பார்த்ததுண்டு.

இங்கே தான் முதல் முறையாக ஓடிப் பார்க்கிறேன்.

அதனுடைய பிரம்மாண்ட உடலும், உறுதியான கால்களும், மிரள வைக்கும் கால் குளம்புகளையும் வேகமாக வரும் போது பார்த்தால், ஒரு ராட்சசன் வருவதைப் போலப் பிரம்மாண்டமாக உள்ளது.

மழை வேறு பெய்து இருந்ததால் சேறாக இருந்தது. வேகமாக குதிரை வரும் போது தெறித்த சேறு, பலரின் சட்டைகளில் அபிஷேகம் ஆகி விட்டது 🙂 . எங்கள் சட்டையிலும் கொஞ்சம்.

குதிரை வரும் போது பொதுமக்கள் சாலையின் இரு பக்கமும், தெறித்து ஒதுங்குவது பார்க்க வேடிக்கையாக இருந்தது.

குதிரை வருகிறது என்றால் உடனே எல்லோரும் “குதிரை குதிரை ஒதுங்குங்க ஒதுங்குங்க” என்று அலறுகிறார்கள்.

நமக்கும் அது வரும் வேகத்தைப் பார்த்தால் வயிற்றைப் புரட்டுவது நிஜம். காலை எங்காவது குதிரை மிதித்து விட்டால் சட்னி தான்.

மின்னல் வேகத்தில் வருவதால், படம் எடுக்க ரொம்பச் சிரமமாக இருந்தது. இவனையும் பார்க்க வேண்டும் கூட்டத்தையும் சமாளிக்க வேண்டும் என்றதால் எடுத்த படங்கள் எல்லாம் அரைகுறையாகவே வந்தது.

நாம் குதிரையைப் படம் எடுக்க முயற்சிக்கும் போதே அது நம்மை வேகமாக கடந்து சென்று விடுகிறது.

அதில் உள்ளவர்களும் ஹோய்! ஹோய்!! என்று கத்திக்கொண்டு ஒட்டுவதால் நாலு கால் பாய்ச்சலில் பறக்கிறது.

காளை

இங்கே காளை மாடுகளும் இருக்கும். இங்கே இருந்த காங்கேயம் காளை ஒன்று மிரட்டலாக இருந்தது. இது வயது குறைந்த காளை மாடு என்றார்கள்.

இதே இப்படி இருக்கிறதே, இன்னும் கொஞ்சம் சீனியர்!! காளை என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன்.

கற்பனை தாறுமாறாகப் போனதால் உடனே நிறுத்தி விட்டு திரும்பக் குதிரையைப் பார்க்கச் சென்று விட்டோம். கறுப்புக் காளை ரொம்ப செக்ஸி 🙂 .

இங்கே நடனம் ஆடும் குதிரைகள் வரும். பாடலுக்கு / இசைக்கு ஏற்ப நடனம் ஆடும். அதற்கு அலங்காரம் செய்து அட்டகாசமாக வைத்து இருப்பார்கள்.

நாங்கள் உண்மையில் இதைக்காணத் தான் வந்தோம்.

எங்கள் உறவினர் இதுபோல் ஒரு குதிரையை வைத்து இருக்கிறார்.

தூக்கம்

என்னுடன் வந்தவரும் நானும் அவர்களைத் தேடிக்கொண்டு இருக்க, அவர்கள் எங்களைப் பார்த்து “இங்க வாங்க இங்க வாங்க” என்று அழைத்த பிறகே அவர்கள் இடம் தெரிந்தது. செம கூட்டம்.

நாங்கள் இங்கே செல்லும் போது அலைச்சலால் இவனுக்கு தூக்கம் வந்து விட்டது. அரைத்தூக்கத்தில் இருந்தான்.

என்னடா இது வம்பா போச்சு என்று, சரி! ரொம்ப நேரம் தாங்க மாட்டான் என்று நடனத்தைப் பார்க்காமலே கிளம்ப வேண்டியதாகி விட்டது.

குதிரை நடனம் தொடர்ந்து இருக்காது குறிப்பிட்ட சில நேரங்கள் மட்டுமே.

உறவினர், “மாப்ளே! நமக்கு இல்லாத குதிரை நடனமா! பத்து நிமிஷம் உட்காரு தயார் செய்கிறேன்” என்றார்.

நீங்கள் கூறியதே போதும் எங்களுக்குக்காக வேண்டாம், பரவாயில்லை என்று கூறி விட்டேன்.

அவருடன் இருந்த என்னுடைய, எங்கள் ஊர் துவக்கப் பள்ளி நண்பன் சரி! வினயை குதிரை மேலே உட்கார வைக்கிறேன் அவனைக் கொடு என்று வாங்கிக்கொண்டார்.

அவன் ஏறக்குறைய தூங்கி விட்டான், பின் அப்படியே அரைத் தூக்கத்திலேயே உட்கார வைத்துப் படம் எடுத்தேன்.

அதன் பிறகும் விடாமல் அவனை அருகில் உள்ள, மற்ற அவர்களின் குதிரைகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்றார். மழை வேறு வந்து விடுமோ என்று எனக்கு பயம்.

மழை வந்தால் அதோ கதி தான். அந்த இடமே போர்க்களம் போல மாறி விடும்.

அதனால், “மாமா நான் கிளம்புகிறேன்” என்று கூறியவுடன் சரி! சாப்பிட்டு விட்டுத்தான் கிளம்ப வேண்டும் என்று பிடித்துக்கொண்டார்.

பிறகு அவரிடம் கெஞ்சிக்கூத்தாடி அடுத்த முறை வந்தால் நிச்சயம் வருகிறேன் என்று கூறி கிளம்பி விட்டோம்.

குதிரை நடனம்

குதிரை நடனம் கடைசி வரை பார்க்காமல் சென்றது வருத்தமாக இருந்தது. வினய் இல்லாமல் இருந்து இருந்தால் நிச்சயம் பார்த்து இருப்பேன், வந்ததே இவனுக்காகத் தான்.

இவனும் பார்க்க முடியவில்லை என்றதால் ஏமாற்றமாகி விட்டது.

பின் ஒரு வழியாக கூட்டத்தில் நீந்திக் காரை வந்தடைந்தோம்.

இன்னும் அந்த அதிகாரி “குதிரை சாட்டை வைத்து இருக்கிறேன், ஒழுங்கா குழந்தைகளைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்லுங்கள்” என்று பொதுமக்களை “அன்பாக” மிரட்டிக்கொண்டு இருந்தார் 🙂 .

வரும் போது, அந்தப் பொம்மை வேண்டும் இந்தப் பொம்மை வேண்டும் என்று கூறியவன், செல்லும் போது தூக்கம் வந்து விட்டதால் ஒரு காரே!!! போதும் என்று பெரிய மனது செய்து ஒத்துக்கொண்டான்.

வீட்டிற்கு வந்து இரண்டு முறை ஓட்டியதில், அந்த ஐம்பது ருபாய் டுபாக்கூர் பொம்மைக் கார் தன்னுடைய வேலையைச் சரியாகச் செய்ய, முன்னாடிச் சக்கரம் கழண்டு கொண்டது.

அப்பா! உடைஞ்சு போச்சு! என்று அவன் என்னைப் பரிதாபமாகப் பார்க்க, நான் இனி என்ன செய்வது என்று மண்டையை சொறிந்தேன்.

குழந்தைகளைச் சமாளிப்பது லேசுப்பட்ட காரியமல்ல 🙂 .

மேலும் குதிரை, மக்கள் கூட்டம் மற்றும் எங்கள் பகுதி அருமையான சாலைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

இவனையும் வைத்துக்கொண்டு எடுத்ததால், படங்கள் சுமாராகத்தான் இருக்கும். அதோடு குதிரை வேகத்திற்கு என்னால், என் கேமராவால் ஈடு கொடுக்க முடியவில்லை.

இயற்கை காட்சிப் படங்கள் காரில் செல்லச் செல்ல எடுத்தது.

கொசுறு

இணைத்துள்ள படங்களில் உள்ள பசுமை கொஞ்சும் இடங்கள் எல்லாம் சுவிட்சர்லாந்து போல இருக்கும்.

திரை உலகினர் தற்போது வெளிநாடுகளுக்கு சென்று விடுவதால், தற்போது எங்கள் பகுதி அதிகம் வருவதில்லை.

இந்த இடங்கள் எந்த இடத்திற்கும் சளைத்ததல்ல. எங்களுக்கு எங்கள் ஊர் தான் சுவிட்சர்லாந்து 🙂 .

எங்கள் பகுதிகளில் சாலையின் தரம் தமிழகத்தின் எந்தப் பகுதியையும் விடக் கலக்கலாக இருக்கும்.

இதை எங்கள் ஊர் என்பதால் கூறவில்லை, நிஜமாகவே சாலைகள் அனைத்தும் பட்டாசாக இருக்கும்.

ஒருமுறை வந்து சென்று பாருங்கள், நான் கூறுவது எவ்வளவு உண்மை என்று உணர்வீர்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. அறியாத தகவல்கள். வெள்ளைக் குதிரை மேல் குட்டி தேசிங்கு ராஜா:)!

    பசுமையைப் போற்றிக் காக்கும் உங்கள் ஊரினருக்குப் பாராட்டுகள்!

  2. கிரி, அருமையான பதிவு. என் வாழ்கையில் இந்த திருவிழா பார்க்க வாய்ப்பு இல்லை. வுங்கள் பதிவு என்னை ஈர்த்தது. நன்றி.

  3. விடாது கருப்பு அங்க தான் சூட் பண்ணாங்களா தல 🙂

    செமையா இருக்கு படம் எல்லாம். அழகான பயண கட்டுரை 7 , 8 பாகம் போனாலும் நல்லா இருக்கும்

    -அருண்

  4. பகிர்வுக்கு நன்றி கிரி.. சேரன் ஆட்டோகிராப் படத்தில் கூறுவது போல அடுத்த தலைமுறையினறுக்கு இந்த குதிரை சவாரி, மாட்டு வண்டி எல்லாமே எட்டா கனி தான்… வாழும் வாழ்கையில் நகர் புறத்தில் உள்ளவர்களுக்கும், கிராம புறத்தில் உள்ளவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்… புகழ்ச்சிக்காக அல்ல கிரி.. நீங்கள் மற்றும் உங்கள் ரசனைகள் அருமை… நானும் ஒரு கிராமத்தான் என்பதில் பெருமை படுகிறேன்…

  5. “யாராவது குழந்தையைக் காணவில்லை என்று வந்தால் குதிரைச் சாட்டை தயாரா இருக்கு, வெளுக்க” என்று கூறியதும் பலரும் தன்னிச்சையாக குழந்தைகளை இறுகப் பிடித்தது பார்க்க சிரிப்பாக இருந்தது.
    ரசிக்கவைத்த அறிவிப்பு..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here