தமிழகத்தில் வடக்கன் என்று பலரால் கூறப்படும் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாகச் சர்ச்சை எழுந்து பீகார் சட்டசபையில் விவாதிக்கப்படும் அளவுக்கு ஆகியுள்ளது.
வடக்கன்
விளையாட்டுப்போல வடக்கன் என்று யாரோ ஆரம்பித்தார்கள். Image Credit
பின்னர் தமிழக அரசியல்வாதிகளும் தற்போது அமைச்சராக உள்ள பொன்முடி, RS பாரதி உட்பட பல தலைவர்கள் அவர்களை இழிவுபடுத்தினார்கள்.
இவர்களே சமூகநீதி பேசுவார்கள் ஆனால், அதே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக வன்மத்தை கக்குவார்கள். இதுவே திராவிட மாடல் சமூகநீதி.
தமிழர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்கள் மூளையை மழுங்கடிக்கும் வேலையைத் திறம்படச் செய்யும் சீமான் இதை வைத்து இடைத்தேர்தலில் பரப்புரையைச் செய்தார்.
ஆனால், தற்போது இந்த அளவுக்குப் பேசப்படுவதற்குப் ‘பரிதாபங்கள்’ கோபி சுதாகர் நகைச்சவையும் காரணம்.
அவர்கள் நகைச்சுவைக்காகச் செய்தது இந்தளவுக்கு வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு கான்செப்டில் நகைச்சுவை செய்வதால், இதை இவர்கள் எடுத்து இருக்கலாம்.
வன்மத்துடன் எடுத்து இருப்பார்கள் என்று கருதவில்லை.
ஆனால், இதற்குக் கிடைத்த வரவேற்பு (யூடியூப் பார்வைகள்) மற்றவர்களையும் இதே போல எடுக்க வைத்தது. இதுவொரு அட்சய பாத்திரமாகி பலரும் பார்வைகளுக்காக எடுக்க ஆரம்பித்தார்கள்.
சமூகத்தளங்கள், WhatsApp ல் அதிகம் பகிரப்பட்டதால், இது குறித்த பேச்சுகளும் அதிகரித்தன.
இடைத்தேர்தல்
இதே நேரத்தில் இடைத்தேர்தலும் வந்ததால், இதை வைத்துத் திமுக, சீமான் ஆகியோர் அரசியல் செய்தார்கள்.
ஆனால், பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாகி விட்டது.
அங்கிங்கு ஒரு சம்பவங்கள் பெரிதாக, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலையிட, அங்குள்ள அரசியலால் பீகார் பாஜக இதை முன்னெடுத்ததால், பரபரப்பாகி தமிழக DGP அறிக்கை விடும் அளவுக்குச் சென்று விட்டது.
தமிழக அரசியல் கட்சிகள் போலப் பீகார் பாஜக இதை வைத்து அரசியல் செய்கிறது. இதனால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தற்போது பீகார் குழு தமிழகம் வந்து விசாரித்துள்ளது.
எதார்த்தம்
இங்குள்ள பலருக்கு எதார்த்தம் புரியவில்லை. தமிழ், தமிழன்னு கிறுக்குத்தனமான உணர்ச்சி மட்டுமே உள்ளது. மூளையைக் கழட்டி வைத்துள்ளார்கள்.
தமிழகம் பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலம். எனவே, இயல்பாகவே உடல் உழைப்புக்கான பணியில் ஆர்வம் காட்டுபவர்கள் குறைந்து வருகிறார்கள்.
இங்கே ஆவேசமாகத் தமிழ், தமிழன்னு பேசுபவர்கள் கட்டிட வேலைக்கோ, உணவகத்துக்கோ, சுகாதாரப் பணிகளில் பணி புரியவோ தயாரா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
நானும் எந்த வேலையைச் செய்ய மாட்டேன், வருகிறவனையும் விட மாட்டேன் என்பது என்ன மாதிரியான மனநிலை.
தனி நபருக்கு வட இந்தியர்கள் உதவி தற்போது தேவைப்படாமல் இருக்கலாம் ஆனால், நிறுவனங்களுக்குக் கட்டாயம் தேவை.
தொழிலை நடத்துவது எளிதல்ல
நம்மாட்கள் பலர் வேலைக்கு ஒழுங்கா வர மாட்டார்கள், வேலையை விரைவில் முடிக்காமல் காலம் தாழ்த்துவது, சரக்கைப் போட்டுட்டு விருப்பம் போல விடுமுறை எடுப்பது போன்ற பிரச்சனைகளால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.
அதோடு அரசு கொடுக்கும் இலவசம் மற்றும் மற்ற வாய்ப்புகளால் சரக்குக்குப் பணம் தேவையென்றால் மட்டுமே பலர் வேலைக்குச் செல்கிறார்கள்.
கண்முண்ணே நேரடியாகப் பார்த்தவன் என்ற முறையில் இதைக்கூறுகிறேன்.
இது எந்த அளவுக்கு உண்மையென்பதை திருப்பூர் முதலாளிகளிடம் குறிப்பாகக் கார்மெண்ட்ஸ் தொழிலில் உள்ளவர்களிடம் விசாரித்துப் புரிந்து கொள்ளலாம்.
அதிக ஊதியம் கொடுத்தாலே வருகிறார்கள் ஆனால், நிறுவனங்கள் நட்டத்தில் வியாபாரத்தை நடத்த விரும்பமாட்டார்கள்.
எனவே, அவர்களுக்கு எது லாபமோ அதைச் செய்கிறார்கள்.
இவ்வளவு பேசுபவர்கள் ஒரு நிறுவனத்தை (உணவகம் உட்பட) நடத்தினால், ஊழியர் பிரச்சனை எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
சமூகத்தளங்களில் தமிழ் தமிழன் புரட்சி பேசலாம் ஆனால், எதார்த்தம் அதுவல்ல.
சீமான்
சீமான் போன்றவர்கள் குறிப்பாக வாட்டாள் நாகராஜ் போன்ற அவரது கொள்கைகள் மிக ஆபத்தானது, உணர்ச்சியைத்தூண்டி அதன் மூலம் அரசியல் செய்வது.
சீமானே ஒரு நிறுவனம் வைத்து இருந்தால் வட இந்தியர்களைத் தான் வைத்து இருப்பார், இருக்க முடியும் காரணம், மேற்கூறிய சூழ்நிலை தான்.
ஆனால், அரசியல் இலாபத்துக்காக இளைஞர்கள் மற்றும் அப்பாவிகளைத் தனது பேச்சின் மூலம் மூளைச்சலவை செய்து வெறுப்புணர்வை வளர்த்து வருகிறார்.
தற்போதைய சர்ச்சைக்கு இடைத்தேர்தலில் சீமான் பேசிய பேச்சுகளும் ஒரு காரணம். இவரது வெறுப்பு அரசியல் பிரச்சனைகளையே ஏற்படுத்தும்.
சீமான் மீது கடும் நடவடிக்கை எடுத்தாலே அமைதியாகி விடுவார். சீமான் வெறும் வாய் தான், சட்டரீதியாக நடவடிக்கை என்றால் பயந்து விடுவார்.
சீமானின் ஆதரவாளர் சாட்டை முருகனை சிறையில் வைத்துத் திமுக சுளுக்கு எடுத்த பிறகு தற்போது அனைத்தும் அடங்கி உள்ளார்.
சீமான் போன்றே உணர்ச்சி அரசியல் செய்யும் இன்னொரு மோசமான அரசியல்வாதி வேல்முருகன்.
இவர்களைக் கண்டிக்க வேண்டிய அரசே ஒன்றியம், திராவிடன், வடக்கன், பானி பூரி, பீடா வாயன் என்று பிரிவினை பேசும் போது இவர்களை யார் கண்டிப்பது?
திமுக
பாஜக வளர்ச்சி மீதுள்ள கோபத்தில் அவர்களுக்கு எதிராக மக்களைத் திருப்ப வடக்கன் பிரச்சனையைப் பயன்படுத்தினார்கள்.
ஆனால், இன்றோ அதுவே பாம்பாக மாறிக் கழுத்தை இறுக்குகிறது.
ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வந்தவர்கள் அவரைப் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வேண்டும் என்று கூறியதால் ஸ்டாலினுக்குப் பிரதமர் ஆசை வந்து விட்டது.
இதைக்கூறியவர்களில் முக்கியமானவர் பீகார் துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி யாதவ் (லல்லு பிரசாத் யாதவ் மகன்).
ஏற்கனவே தேசிய அரசியலில் இருக்கிறேன் என்று கூறி பிரதமர் கற்பனையிலிருந்த ஸ்டாலினுக்கு பிரச்சனை, ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த பீகாரிலிருந்தே வந்தது அதிர்ச்சியாகி விட்டது.
எனவே, இதுவரை விமர்சித்து வந்தவர்கள் தற்போது அலறியடித்து வட இந்தியர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து வருகிறார்கள்.
இந்தி தெரியாது போடா! என்று டி ஷர்ட் போட்டுக் கும்பலாக வெறுப்புணர்வை வளர்க்க வேண்டியது அப்புறம் பிரச்சனை ஏடாகூடமாகி விட்டது என்று தெரிந்தவுடன் தேச ஒற்றுமையைப் பற்றிப் பேச வேண்டியது.
‘வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள், இந்திய நாட்டுக்கு எதிரானவர்கள்‘ என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது போல ஸ்டாலின் கூறுவதே வரவேற்க வேண்டிய மாற்றம், அது என்ன காரணத்துக்காக இருந்தாலும்.
தற்போது திராவிடத்தின் முதலீடான இந்தி எதிர்ப்பு என்னவாகும் என்ற கேள்வியுள்ளது. இனி இதை வைத்து வெறுப்பு அரசியல் செய்தால், ஆளுங்கட்சியே பிரச்சனையை ஏற்படுத்துவதாக விமர்சிக்கப்படும்.
இதில் ஸ்டாலின் பிரதமர் கனவு வேறு உள்ளது! என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.
நடவடிக்கை
முன்னரே நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். இந்தளவுக்கு மோசமாக விட்டுத் தன் கனவுக்குப் பிரச்சனை வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதே அரசியல்.
ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஏறுகிறார்கள் என்றால், தென்னக ரயில்வே உடன் இணைந்து பணி புரிந்து இதை நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை விட்டு, இதை அரசியல் செய்தால் என்ன நடக்கும்?! ஊடகங்களும் பரபரப்புக்காக இதைச் சர்ச்சை செய்தியாக்குகின்றன.
பிரச்சனைகள் நடந்தால் அதைத் தவிர்க்க முறைப்படுத்த வேண்டுமே தவிர மேலும் அதைச் சிக்கலுக்குள்ளாக்குவது சரியான வழிமுறையல்ல.
வெறுப்புணர்வை வளர்த்த திமுக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை ஆனால், அவர்கள் தவறை சுட்டிக்காட்டிய அண்ணாமலை மீது வழக்கு.
YouTube ல் வெறுப்புணர்வை வளர்க்கும் சேனல்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. வாழ்க ஜனநாயகம்!
நிதர்சனம் புரியாதவர்கள்
பிடிக்கிறதோ இல்லையோ தமிழ்நாட்டில் இனி வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் எந்த நிறுவனத்தையும், வளர்ச்சிப் பணிகளையும் செய்ய முடியாது.
மீமில் வந்தது போலத் திராவிட மாடல் அரசு வைக்கப்போகும் பேனா சிலைக்கு வேலை செய்ய வருபவர்களே இவர்கள் கூறும் வடக்கன்களாகதான் இருப்பார்கள்.
தமிழகத்தில் உடல் உழைப்புச் செய்பவர்கள் குறைந்து விட்டார்கள். விவசாயத்துக்குக் கூட ஆள் கிடைக்காமல், இவர்களை நம்பி உள்ளார்கள்.
நம்மவர்கள் காலையில் தாமதமாக வருகிறார்கள், மாலை விரைவிலேயே கிளம்பி விடுகிறார்கள். அதிக ஊதியம் கேட்கிறார்கள், பலர் 100 நாட்கள் வேலை திட்டத்துக்குச் சென்று விட்டார்கள்.
இவர்களை வைத்து ஒரு விவசாயி போட்ட முதலையே எடுக்க முடியாத போது எப்படி இலாபத்தை எடுக்க முடியும்?
எனவே, நிறுவனங்கள் மட்டுமல்ல, விவசாயிகளும் கூட எதிர்காலத்தில் இவர்களை நம்பியே இருக்கிறார்கள்.
விவசாயம் செய்பவர்களைக் கேட்டுப்பாருங்கள், அவர்களின் சிரமம் புரியும். எங்கேயோ அமர்ந்து கொண்டு தமிழன்டா! ன்னு வீரமா பேசுவது எளிது.
வடக்கன் வேண்டாம் என்றால் வேறு யார்?
வடக்கன் வேண்டாம், அவனைத் துரத்தி விடுங்க! என்று வசனம் பேசுபவர்கள், அவர்கள் செய்யும் வேலையைச் செய்யத் தயாராக இருக்கிறார்களா?!
இது தமிழகப் பிரச்சனை மட்டுமல்ல, உலகப்பிரச்சனை. அனைத்து வளர்ந்த நாடுகளிலும் இதே பிரச்சனை உள்ளது.
சிங்கப்பூரிலும் இப்பிரச்சனையால் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்து கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தது. இதுவொரு அரசாங்கத்துக்கு அழகு.
வெறுப்பு அரசியல் செய்தால், பூமராங்காக அது தங்களையே தாக்கும் என்று தற்போது திமுக உணர்ந்து இருக்கும்.
இதில் என்ன கொடுமை என்றால், இவ்வாறு பேசும் அரசியல்வாதிகள் நிறுவனத்தின் பணிகளையும் வட இந்தியர்களே செய்து வருகின்றனர்.
ஆனால், பேசுவது மட்டும் தமிழ், தமிழன். இந்தப்போலிகளையும் நம்பி ஒரு கூட்டம்!
தலையெழுத்து.
வெறுப்பு அரசியல்
இத்தளத்தைத் துவக்கத்திலிருந்து (2008) படித்து வருபவர்களுக்குத் தெரியும் எனக்கு வட இந்தியர்களைப் பிடிக்காது என்று குறிப்பாகப் படித்த ஆணவமாகப் பேசும் வட இந்தியர்கள்.
இவர்களைக் கலாயித்து / திட்டிக் கட்டுரை எழுவதாகக் கூறியதால், அதை இன்னமும் கூடச் சிலர் எதிர்பார்த்துள்ளார்கள்.
ஆனால், அதைத் தவிர்த்ததற்குக் காரணம், எதோ ஒரு வகையில் வெறுப்புணர்வு வளர நாமும் ஒரு காரணமாக இருந்து விடக் கூடாது என்பது தான்.
ஒருவரை பிடிக்கிறது பிடிக்கலை என்பது வேறு விஷயம் ஆனால், எதார்த்தம் என்பது வேறு விஷயம்.
நமக்கு ஆயிரம் விருப்பு வெறுப்புகள் இருக்கலாம் ஆனால், அதையெல்லாம் கடந்தது தான் நடைமுறை எதார்த்தம்.
இங்கே உள்ளவர்கள் வட இந்தியர்கள் மட்டுமல்ல, ஏராளமான பங்களாதேஷி கள்ள குடியேறிகளும் உள்ளனர். இவர்களின் செயல்களும் வட இந்தியர்கள் கணக்கில் எழுதப்படுகிறது.
அதோடு வட கிழக்கிலிருந்து இந்தியே தெரியாதவர்களும் கூடப் பலர் மருத்துவமனைகள், அழகு நிலையங்கள், உணவகங்களில் பணி புரிகின்றனர்.
சொந்த செலவில் சூனியம்
நமக்குப் பிரச்னையில்லாதவரை ஆயிரம் அறிவுரை கூறலாம். நமக்கென்று வரும் போது தான் அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், பிரச்சனைகள் புரியும்.
முன்னரே கூறியபடி தமிழகப் புரட்சியாளர்கள் கிண்டலடிக்கும் உத்தரப்பிரதேசத்தில் வளர்ச்சி பணிகள் அதிகரித்து வருகிறது.
எதிர்காலத்தில், அருகேயுள்ள உத்தரப்பிரதேசத்துக்குச் செல்லவே அவர்களும் விரும்புவார்கள்.
தமிழகத்தில் அமைதியான சூழ்நிலை என்பதாலே வருகிறார்கள். தற்போது இங்கேயும் பிரச்சனை செய்கிறார்கள் என்றால், எதற்காகத் தமிழகத்துக்கு வர விரும்புவார்கள்?!
இதையெல்லாம் உணராமல் பேசுபவர்கள், ஆள் பற்றாக்குறையால் தனிநபரே நேரடியாக பாதிக்கும் போது தான் பிரச்சனையின் வீரியம் புரியும்.
சட்ட ரீதியான நடவடிக்கைகளே சரி!
வட இந்தியர்களின் பிரச்சனைகளுக்குச் சட்ட ரீதியான நடவடிக்கைகளே சரி! அவர்களைத் துரத்துவது வெறுப்புணர்வை வளர்ப்பது சரியான வழிமுறையல்ல.
வெறுப்புணர்வை ஏற்படுத்தும் YouTube சேனல்களைத் தடை செய்ய வேண்டும். ஒரு சேனலை தடை செய்தால், அனைவரும் பயந்து அமைதியாகி விடுவார்கள்.
வருமானத்தில் கை வைத்தால், ஒருத்தனும் வெறுப்புணர்வு பேச மாட்டான்.
வட மாநில ஊழியர்கள் தேவையில்லையென்றால், நாமே கொள்ளி கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போன்றதாகும்.
அதெல்லாம் முடியாது.. நான் தமிழன்டா! என்று முழங்கினால், பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.
தற்போது இப்பிரச்சனை பரபரப்பாக இருந்தாலும், இன்னும் கொஞ்ச நாட்களில் இது அடங்கி, அவரவர் அவர்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
திரும்ப இந்நிலை வருவதும் வராமல் போவதும் அரசின் கையிலேயே உள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
சிங்கப்பூரும் கோயம்புத்தூரும் (2014 ஆண்டு எழுதியது, தற்போதும் இதே நிலைப்பாட்டில் உள்ளேன்)
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.