கூட்டணி கட்சியினரும், மற்றவர்களும் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராவார் என்று கூறி வருகிறார்கள். Image Credit
ஸ்டாலினின் பிரதமர் கனவு!
ஸ்டாலினை உயர்த்த கூட்டணி கட்சிகள் இதுபோல எதையாவது மிகையாகக் கூறுவது வழக்கம். அதை ஸ்டாலின் நம்பி பிரதமர் கனவில் இருப்பது வியப்பே!
இதை ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டத்தில் மற்ற மாநில தலைவர்களும் கூறியதில் புளாங்கிதம் அடைந்தார்.
கூறியவர்கள் பிறந்தநாளுக்கு அழைத்தாரே என்று பாராட்டுவதற்காக மிகையாகக் கூறி இருக்கலாம் அல்லது சரியான நபரில்லாத விரக்தியில் கூறி இருக்கலாம்.
ஆனால், அவர்கள் உண்மையாகக் கூறினார்கள் என்று கருத முடியவில்லை.
இந்தி எதிர்ப்பு
திமுக கொள்கையே இந்தி எதிர்ப்பு என்பதால், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்திக்கு எதிரான பேச்சுகள் அதிகமாக இருந்தன.
திராவிடன் ஸ்டாக், இந்தி தெரியாது போடா! போன்றவை முன்னெடுக்கப்பட்டன.
இதற்குத் திரையுலகை சார்ந்தவர்களில் பலரும் (திமுக அனுதாபிகள்) ஆதரவு அளித்ததால், பலரையும் சென்றடைந்தது.
திமுக தலைவர்கள் வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனையைப் பேசினார்கள். இந்திக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
சமூகநீதி பேசிக்கொண்டு மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார் போன்றவை தமிழக வரிப்பணத்தை எடுத்துக்கொள்வதாகக் கூறி வருகிறார்கள்.
பிரதமர் கனவில் உள்ளவர் மேற்கூறியபடியான எண்ணங்களைக் கொண்ட கட்சியினராக இருந்தால், எப்படி இந்தியா முழுமைக்கான தலைவராக முடியும்?!
இந்து மதம்
தமிழ்நாட்டில் இந்துக்களைக் கேவலப்படுவது போலச் சிறுபான்மைன்மையினர் வாக்குக்காக வட மாநிலங்களில் பேசினால் அடித்துத் துரத்தி விடுவார்கள்.
வட மாநில கட்சிகள் சிறுபான்மையினரை ஆதரிப்பதோடு நிறுத்திக்கொண்டார்கள் ஆனால், இங்கே சிறுபான்மையினரின் வாக்குக்காகவும், இந்துக்கள் மீதுள்ள வெறுப்பிலும் இந்து மதத்தைத் திமுகவினர் இழிவுபடுத்துகிறார்கள்.
முழுக்க நேரடியாக இல்லையென்றாலும், திருமாவளவன், வீரமணி, சுபவீ போன்றவர்களைப் பேச வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்.
இது போன்ற சூழ்நிலையில் பிரதமர் பதவி என்பது நகைப்புரியதாக உள்ளது.
பிரதமர் பதவி
யாரோ ஸ்டாலினுக்குப் பிரதமர் ஆசையை ஆழ் மனதில் உருவாக்கி விட்டார்கள் ஆனால், அடிப்படையே புரியாமல் ஸ்டாலினும் இக்கனவில் மிதக்கிறார்.
ஏற்கனவே தேசிய அரசியலில் இருக்கிறேன் என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். எப்போது இருந்தார் என்று யாருக்கும் தெரியாது.
தேசிய அரசியலுக்கு அடிப்படையே இந்தி மாநிலங்கள் தான். இந்தியை பகைத்துக்கொண்டு எப்படித் தேசிய அரசியல் செய்ய முடியும்?!
பிரதமர் பதவி என்றால், எப்படி இந்தி எதிர்ப்பை முன்னெடுக்க முடியும்? அப்படி முன்னெடுத்தால், எப்படி மற்ற பெரும்பான்மை இந்தி மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும்.
இந்த அடிப்படை பிரச்சனை கூடத் தெரியாமல் ஸ்டாலின் ஆசைப்பட்டாரா!
வடமாநில அரசியல்
தற்போது பீகார் பாஜக அவங்க மாநில அரசியலுக்காக வடக்கன் பிரச்சனையைக் கிளப்பியதால், திமுகவினர் இதற்கு முன் இந்திக்கு எதிராகப் பேசியதை வட மாநில ஊடகங்கள் ஒளிபரப்பி வருகிறார்கள்.
கெஜரிவால் ஏற்கனவே இரண்டாவதாக பஞ்சாபில் வெற்றி பெற்று விட்டார், மற்ற மாநிலங்களில் வாக்கு வங்கியைப் பெற முயற்சித்து வருகிறார்.
தெலுங்கானா தலைவர் சந்திரசேகர் ராவ், பிரதமர் கனவில் கட்சி பெயரை TRS என்றிலிருந்து BRS என்று மாற்றி, வெற்றி பெற முடியாது என்றாலும் மற்ற மாநிலங்களில் போட்டியிடுகிறார்.
மமதா, நிதிஷ்குமார் உட்படப் பலர் பிரதமர் கனவில் உள்ளார்கள். இதில் ராகுல் நிலை பரிதாபம் என்பதைத் தனிக்கட்டுரையாகக் கூறுகிறேன்.
இந்நிலையில் திமுக அடிப்படையான இந்தி எதிர்ப்பை வைத்துக்கொண்டு, ஸ்டாலின் எப்படிப் பிரதமர் கனவு காண முடியும்?
இதுல வடமாநில தலைவர்களை ஸ்டாலின் சந்தித்துக் கூட்டணி உருவாக்க வேண்டுமென்று திருமாவளவன் உசுப்பேத்திக்கொண்டுள்ளார்.
ஒருமுறை சொன்னதுக்கே பீகார் அரசியலில் பாஜக புயலை கிளப்பி விட்டது.
பேச்சுவார்த்தை என்றால், நிதிஷ்குமார் தலையில் துண்டைப் போட்டுட்டு போக வேண்டியது தான். முதலுக்கே மோசமாகி விடும்.
காரணம், பீகார் அரசியலில் பாஜக ஆதரவை அதிகரித்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் பீகார் பாஜக கூடுதல் தொகுதிகளைப் பெறலாம் என்று கூறப்படுகிறது.
‘இதைச் சும்மா விட மாட்டேன், பீகாரிகள் தமிழகத்தில் தாக்கப்பட்டது உண்மை தான் என்று நிரூபிக்கப் போகிறேன்‘ என்று பிரசாந்த் கிஷோர் கூறி வருகிறார்.
தமிழ்நாட்டில் மட்டுமே!
தமிழகக் கூட்டணி தலைவர்கள், ஊடகங்கள் கொடுக்கும் பில்டப்பை வைத்து ஸ்டாலின் தன்னைப் பெரிய தலைவராகக் கற்பனை செய்து கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் வலிமையாக இருக்கலாம் ஆனால், தமிழ்நாடு தாண்டினால் பூஜ்யம் தான். அதுவும் ஊடகங்கள் கையில் இருப்பதால் மட்டுமே!
தமிழக ஊடகங்கள் செய்திகளைச் செய்திகளாக மறைக்காமல் அனைத்தையும் கூறி இருந்தால், இந்நேரம் திமுக ஆட்சியே கலகலத்து இருக்கும்.
இது தான் நிதர்சனம். இதை எப்படி உணராமல் தேசிய அரசியலில் இருக்கிறேன் என்று கூறுகிறார் என்பது புரியாத புதிராக உள்ளது.
‘தமிழ்நாட்டை மட்டும் அல்ல இந்தியாவையும் என்னால் காப்பாற்ற முடியும்‘ என்று கட்சி விழாவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடே தத்தளித்துட்டு இருக்கு, இதுல இந்தியாவா!
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, ஸ்டாலின் பலமான தலைவராக உருவாகவில்லை, எதிர் கட்சி தலைவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள். அவரை மக்கள் பெரும் தலைவராக ஏற்று இருந்தால் 2021 தேர்தலில் 200 தொகுதியாவது அவரது கூட்டணி கட்சிகள் பெற்றிருக்கவேண்டும். 10 வருட தொடர் ஆட்சியை மாற்றவே தி மு க கூட்டணிக்கு வாக்களித்தார்கள் என்பது என் கணிப்பு. 2019 தேர்தலின் வெற்றிக்கு மோதி எதிப்பு மற்றும் காங்கிரஸின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளாக இருக்கலாம்( கல்விக்கடன், விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி)
பெரும் தலைவராக உருவாக அல்லது நிலைத்து நிற்க, அவர் vision மற்றும் mission யை முன்வைக்க வேண்டும் . கள நிலவரம் அறிந்து மக்களிடம் relavent ஆக இருக்க வேண்டும். எதிர்ப்பு அரசியல், போலி பிம்பத்தை கட்டமைத்தல் என்று இருந்தால் மக்கள் எளிதில் சலிப்படைவார்கள். ஆட்சி மாற்றம் உறுதி. அவர் சொல்வதுபோல், சொந்த கட்சி அமைச்சர்களே அவர் பேச்சை கேட்டகவில்லை. எல்லை மீறும் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பெரிய நடவடிக்கை எடுக்கவும் தயங்குகிறார். இவர் எப்படி டெல்லி அரசியலை கையாளுவர் என்பது கேள்விக்குறி.. கருணாநிதி அவர்களை விடவா இவர் ராஜதந்திரி ?
10 வருடத்திற்கு முன்பு உருவான ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபை கைப்பற்றுகிறது இவர்கள் இன்னும் தமிழ்நாட்டை தாண்டவில்லை.
அவர் தொண்டர்கள், அபிமானிகள் ஆசைப்படலாம் தவறில்லை அதற்கு அவர் தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும் இல்லையேல் அவரை எளிதாக வீழ்த்திவிடுவார்கள்…
@மணிகண்டன்
“அவர் சொல்வதுபோல், சொந்த கட்சி அமைச்சர்களே அவர் பேச்சை கேட்டகவில்லை. எல்லை மீறும் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பெரிய நடவடிக்கை எடுக்கவும் தயங்குகிறார். இவர் எப்படி டெல்லி அரசியலை கையாளுவர் என்பது கேள்விக்குறி.”
சரியான விமர்சனம். நானே இதைக்குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
அடுத்த வாரம் ஸ்டாலினின் நிர்வாகம் குறித்த ஒரு கட்டுரை வெளியிடுகிறேன். அதில் நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள 80% தகவல்கள் குறித்து எழுதியுள்ளேன்.
படித்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.