நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்

11
நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்

ன்மோகன் அரசு காலத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்ற முடிவில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்.

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்

கிராமப் பகுதிகளில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்காக, வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வருடத்தில் நூறு நாட்கள் பணியை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை சிரமத்தைக் குறைக்க முடியும் என்ற எண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. Image Credit 

இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது என்னவோ நல்ல எண்ணத்தில் தான் என்றாலும், நமது இந்தியாவில் எந்தத் திட்டமும் நியாயமானதாக நடக்க முடியாத அளவிற்கு அதில் பொறுப்பில் உள்ளவர்கள், பங்கு பெறுபவர்களின் அலட்சியம், ஊழல், தவறாகப் பயன்படுத்துதல் போன்ற நமது நாட்டிற்கே உண்டான சாபக்கேடாக உள்ள காரணங்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்களைப் பெற்று இருக்கிறது.

எந்த ஒரு விசயத்திற்கும் இரு பக்கம் இருக்கும். எனவே, இதில் உள்ள நல்ல மற்றும் கெட்ட விசயங்களைப் பார்ப்போம்.

நன்மைகள்

அடி மட்ட மக்களின் வாழ்க்கை எப்போதுமே வசதி படைத்தவர்களின் உதவியை நம்பியே இருக்கிறது.

கடந்த காலங்களில் பண்ணையத்தார்களின் அறிவிக்கப்படாத அடிமை போலத்தான் பலர் இருந்தார்கள்.

விவசாயமே அப்போது முதன்மை தொழிலாக இருந்ததால் வசதி படைத்தவர்கள் முதலாளிகளாகவும், வசதி குறைந்தவர்கள் இவர்களின் நிலங்களில் பணி புரிபவர்களாகவும் இருக்க வேண்டிய கட்டாயச் சூழல் இருந்தது.

பழைய திரைப்படங்களில் பார்த்து இருக்கலாம். இதன் பிறகு தொழிற்சாலை போன்றவை பெருக ஆரம்பித்த பிறகு பலர் இதற்கு நகர்ந்தார்கள்.

இதன் பின்னர் விவசாயத்தில் இருந்தவர்கள் மட்டும் இதிலே தொடர்ந்தார்கள் ஆனால், முந்தைய அளவிற்கு இல்லாமல் கூலி உயர்ந்தது.

பணி புரியும் நேரம் பெரும்பாலும் இவர்களாலே தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய நிலைக்குப் பலரும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்வதால் விவசாயத்திற்கு யாரும் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.

அப்போதைக்கு பணம் தேவைப்பட்டால் மட்டும் பணிக்குச் செல்பவர்களும் அதிகரித்து விட்டார்கள்.

இந்த நிலையில் இந்த நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டம் பலருக்கு மிகவும் பயனாக அமைந்தது.

குறிப்பாக வயதானவர்கள், அதிக உழைப்பை செலவிட முடியாதவர்கள் இந்தத் திட்டத்தால் பயன் பெற்றார்கள்.

எதிர்பார்க்க வேண்டிய நிலை இல்லை 

யார் கையையும் எதிர்பார்க்க வேண்டிய நிலை இல்லாமல் இதில் வரும் பணத்தைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைச் சமாளிக்க முடிந்தது.

யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டிய நிலை இல்லை குறிப்பாகக் கௌரத்துடன் வாழ முடிந்தது யாருடைய நெருக்கடியும் இல்லை.

இவ்வளவு காலமாகக் கஷ்டப்பட்டார்கள் இனிமேலாவது கொஞ்சம் சந்தோசமாக இருக்கட்டுமே! என்பது ஒரு சாராரின் கருத்து.

இவை இந்தத் திட்டத்தில் உள்ள நிறைகளாகக் கூறலாம். இதில் விடுபட்டவைகளை மற்றவர்கள் கருத்துப் பகுதியில் தெரிவிக்கலாம்.

குறைகள்

இதில் குறைகளாக முக்கியமாகக் கூறப்படுவது ஊழல், பணி ஏய்ப்பு, விவசாயப் பணிகளுக்கு ஏற்படும் ஆள் பற்றாக்குறை ஆகியவை.

இப்பணியில் இருப்பவர்களுக்குத் தினமும் நூறு ருபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

நூறு ருபாய் முழுதாக இவர்களைச் சென்றடைவதில்லை. இந்த வேலைக்கு ஆள் எடுப்பவர்கள் குறைந்தது 20 ரூபாயாவது தரகு வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டைக் கூறுகிறார்கள்.

கொடுக்கப்படும் போதே இவை பிடிக்கப்பட்டுத் தான் கொடுக்கப்படுகின்றன.

இந்தப் பணியில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் நேரத்தைக் கடத்த மட்டுமே வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு, அது உண்மையும் கூட.

இவர்கள் ஐம்பது பேர் ஐந்து நாட்களில் செய்யும் பணியை ஒரே நாளில் ஐந்து பேர் செய்து முடிக்கக்கூடிய அளவில் தான் இவர்களின் வேகம் / பணி உள்ளது.

ஒரே இடத்தைத் திரும்பத் திரும்பச் சரி செய்து கொண்டு இருப்பார்கள். இது பற்றி விமர்சிக்க நிறைய இருக்கிறது என்றாலும் இது போல எங்கும் நிறைந்து இருக்கையில் இவர்களை இதை வைத்து விமர்சிக்கச் சங்கடமாக இருக்கிறது.

விவசாயத்துக்கு ஆள் இல்லை

ஊருக்குச் சென்றால் விவசாயிகள் பலரும் புலம்பும் விசயம் “விவசாயத்திற்கு ஆளே கிடைப்பதில்லை” என்பது.

பலரும் மில் பணிகளுக்குச் சென்று விட்டார்கள் மீதி இருப்பவர்கள் இந்த நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு சென்று விட்டார்கள்.

விவசாயத்தில் தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால், கஷ்டப்படுவது விவசாயிகள் லாபம் அடைவது தரகர்கள் என்றாகி, இவர்கள் வைப்பதே விலை என்றாகி விட்டது.

இவையல்லாமல் தண்ணீர் / மின்சாரப் பிரச்சனைகள்.

இவைகளே விவசாயிகளைக் கழுத்தை நெரிக்கும் போது ஆள் பற்றாக்குறையும் சேர்ந்து இந்தத் தலைமுறையோடு விவசாயம் அழிந்து விடும் என்ற அளவிலே உள்ளது.

சிறு விவசாயிகள் அழிந்து அதிக நிலம் வைத்து இருப்பவர்கள் மட்டுமே (அமெரிக்கா போல) சமாளிக்க முடியும் என்றாகி விடும்.

தற்போது விவசாயம் செய்பவர்களும் வேறு தொழில் எதுவும் தெரியாததால், இதையே சிறு வயதில் இருந்து செய்து கொண்டு இருப்பதாலும் வேறு துறைக்கு மாறாமல் அல்லது மாறப்பிடிக்காமல் லாபமோ நட்டமோ இதிலேயே கடைசி வரை இருப்போம் என்று தங்கள் பிள்ளைகளை வேறு துறைக்கு மாற்றி விட்டார்கள்.

விவசாயம் அழிவது இந்த நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தால் விரைவில் நடைபெறும் நிலை தான் தற்போது உள்ளது.

எந்த விவசாயிடமும் இந்த திட்டம் பற்றி விசாரித்தாலும் அவர்களின் நடைமுறைச் சிக்கல்களை அறிந்து கொள்ளலாம்.

லஞ்சம்

ஒரு கிராமத்தில் 100 பேருக்கு வாய்ப்பளிக்கிறார்கள் என்றால் ஒருவருக்கு 20 ருபாய் தரகு என்றாலும் தினமும் 2000 ருபாய் லஞ்சமாகப் பெறப்படுகிறது.

இதில் போலிப் பெயரில் உள்ளவர்கள் கணக்குச் சேர்க்கப்படவில்லை.

பணம் பெறுகிறவர்களும் 20 ருபாய் தரகாகக் கொடுப்பது குறித்து பெரியளவில் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், அவர்களும் முழுமையான பணி செய்வதில்லை.

காலையில் கொஞ்சம் செய்து விட்டுப் பின் மரத்தடியே தூங்கி விரைவில் கிளம்பி விடுகிறார்கள். எனவே, கிடைத்த வரை போதும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

அரசாங்கம் இலவசமாகப் கொடுப்பது,  அவர்களின் அடிப்படை தேவைகளுக்குப் போதுமானதாக இருப்பதால் மேலும் உடல் உழைப்பை கொடுக்கத் தயாராக இல்லை.

டாஸ்மாக்

டாஸ்மாக் முக்கியப் பங்கு வகிக்கிறது. வழக்கமாக டாஸ்மாக் செல்பவருக்குப் பணம் போதவில்லை என்றால் இதை ஈடுகட்ட மட்டுமே பணிக்குச் செல்கிறார்கள்.

ஒரு நாள் சென்றாலே குறைந்து 200 – 400 ருபாய் கிடைப்பதால், குடிப்பதற்கு அதிக பணம் தேவைப்பாட்டால் மட்டும் இது போலச் செல்லும் நபர்களும் கிராமங்களில் அதிகம்.

கிடைக்கும் பணத்தை டாஸ்மாக்கில் விடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

ஆள் பற்றாக்குறை காரணமாகத் தமிழகத்தில் தற்போது வெளி மாநில மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது, இது பல்வேறு பல தவிர்க்க முடியாத சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.

Read: சிங்கப்பூரும் கோயமுத்தூரும்

மத்திய அரசாங்கம் இந்தத் திட்டத்தை நிறுத்தப்போவதாகக் கூறியது ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பது உறுதி.

அரசாங்கத்தால் இந்தத் திட்டத்தை நிச்சயம் நேர்மையாக நடத்த முடியாது, ஊழலைக் குறைக்க வாய்ப்பே இல்லை ஏனென்றால், இது 100 பேர் சம்பந்தப்பட்ட திட்டமில்லை.

இந்தத்திட்டத்தால் மக்கள் பயன்பெறுகிறார்கள் என்பது மறுக்க  முடியாத உண்மை என்றாலும் இதனால் விவசாயம் அழிந்து வருகிறது, மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது என்பதும் உண்மை.

அரசாங்கம் இந்தத்திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் ஆனால், அது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்பது என் கருத்து.

எதிர்காலத்தில் இது பல்வேறு பின்விளைவுகளை மக்களின் வாழ்வில் சங்கிலித் தொடராக ஏற்படுத்தும் என்பது உறுதி.

காலம் தான் பதில் கூற வேண்டும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

 1. அண்ணா எங்கள் ஊரில் நூறு வேலைக்கான ஊதியத்தை வங்கியின் மூலமாகத்தான் பயனாளிகள் பெறுகிறார்கள் …. இதனால் எங்கள் இந்த திட்டத்தில் தரகு பணம் செல்வது இல்லை..
  எங்கள் ஊராட்சியில் இந்த திட்டத்தின் மூலம் ஊராட்சி மக்களுக்கு பயன்படும் வகையில் இது வரை எதுவும் செய்யவில்லை ஏரி , குளம், பிறகு சாலையோரம் (கால்வாயாம்) இதைதான் இவர்கள் இது நாள் மனசாட்சியே இல்லாமல் திரும்ப திரும்ப சுத்தம் செய்து வருகிறார்கள்.
  கொடுமை கொடுமை …. என்ன இருந்தாலும் இந்த திட்டத்தை அரசு நிறுத்த கூடாது…

  இந்தத்திட்டத்தால் மக்கள் பயன்பெறுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை

  • வங்கியின் மூலம்தான் பணம் கொடுக்கப்படுகிறது ஆனால் பணம் நீங்கள் எடுத்ததுக்கு அப்புறம் கமிசன் கொடுக்கவேண்டும் இல்லைஎன்றால் மறுநாள் வேலைக்கு உங்களை எடுக்க மாட்டார்கள்.. இது தான் உண்மை நிலை..

   கிரி இந்த (நல்லா வேலை செய்யுற )போட்டோவை ரொம்ப கஷ்டப்பட்டு தேடி போட்டுருப்பருன்னு நினைக்கிறேன் 🙂

 2. இடது கையை பயன்படுத்தி டைப் செய்ததால் சில பிழைகள் வந்துவிட்டது அண்ணா மன்னிக்கவும் …..

 3. நிறைய தெரியாத தகவல்களுக்கு எனக்கு இந்த பதிவு பதில் சொல்லி இருக்கு
  நன்றி கிரி

  “அரசாங்கம் இந்தத்திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் ஆனால், அது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்பது என் கருத்து. எதிர்காலத்தில் இது பல்வேறு பின்விளைவுகளை மக்களின் வாழ்வில் சங்கிலித் தொடராக ஏற்படுத்தும் என்பது உறுதி.”
  – என்ன தீர்வு உங்களை பொறுத்த வரைக்கும் கிரி? ஊழல் அற்ற அரசாங்கமா ?

  – அருண்

 4. பாவபட்டவங்களுக்கு இது நல்ல திட்டம் தான்.. நேர்மையான அதிகாரிகள் தேவை. ஆனா நடக்கிற விசயமா?

 5. கிரி.. இதே பிரச்சனை எங்க ஊரிலும் உண்டு.. அரசாங்கத்தின் உதவியெலாம் எங்கள் பகுதி மக்கள் பெற்று ரொம்ப நாட்கள் இருக்கும் என நினைக்கிறேன்.. 10 வருசத்துக்கு முன்னாடி இலவசமாக பேரூராச்சியில் கிரிக்கெட் விளையாட பேட், பந்து, ஸ்டம்ப் தருகிறார்கள் என்று சொன்னார்கள்.. நாங்களும் நம்பி தினமும் பள்ளிக்கு கூட போகாமல், பேரூராச்சி அலுவலகத்துக்கு போய் நடையா நடந்தது தான் மிச்சம்…இடைல காபி, டீ வேற .. எங்களுக்கு இல்ல… அவங்களுக்கு.. கடைசி வரைக்கும் கண்ணுல கூட காட்டல!!!!

 6. இது வரையிலும் வலைதள அனுபவத்தின் வடிவமைப்பு என்று பலவிதங்களில் உங்கள் தளம் நம்பர் ஒன்.

  ஆனால் இன்று பல பிரச்சனைகள் உருவாகி உள்ளது.

  விமர்சன பகுதி அடம் பிடிக்கின்றது. உருப்படியான கட்டுரைக்கு என் விமர்சனம் இது. தொழில் நுட்ப கோளாறு உருவாகி உள்ளது என்று நினைக்கின்றேன்.

  உங்களைப் போலத் தான் பல வற்றை பொதுப் பார்வையில் வைத்து பார்த்துள்ளேன். ஏனிந்த அக்கிரமம்? இப்படி அரசாங்க பணம் வீணாகின்றதே என்று? ஆனால் வேறு சிலவற்றை பார்க்க வேண்டும்.

  இந்த திட்டத்திற்கு என்று ஒரு வருட மொத்த செலவை ஒரு பக்கம் வைத்துக் கொள்வோம். இந்தத் தொகை தண்டக்கருமாந்திரம் என்பதையும் மனதில் வைத்துக் கொள்வோம்.

  மற்றொரு புறம், வருடந்தோறும் வராக்கணக்கு என்கிற ரீதியில் வசூலிக்க முடியாத வங்கிக் கணக்கு என்கிற ரீதியில் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்

  மானியம் என்கிற (பெட்ரோல், டீசல், எரிவாயு, இதரபல) ரீதியில் அரசாங்கத்திற்கு வருடந்தோறும் இழப்பு என்கிற ரீதியில் உத்தேசமாக மூன்று லட்சம் கோடி என்பதை கணக்கில் வைத்துக் கொள்ளுங்க. அதே சமயம் இந்த விற்பனை மூலம் வரி வருவாய் மூலம் அரசுக்கு கிடைக்கின்ற (மத்திய மாநில) அரசுக்கு ஏறக்குறைய அதிகார பூர்வமாய் இரண்டு மடங்கு
  (என் கணக்குப் படி பத்து லட்சம் கோடி) என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்க.

  ஏறக்குறைய வராக்கடன் என்கிற ரீதியில் அரசுக்கு வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத அத்தனை பேர்களும் மிகப் பெரிய பணக்காரர்கள்.

  மத்திய மாநில அரசாங்கத்திற்கு எரிபொருள் மூலம் செல்கின்ற வரிகள் அனைத்தும் முழுமையாக மக்கள் நலத்திட்டத்திற்குத் தான் செலவளிக்கப்படுகின்றது என்று நம்புகின்றீர்களா?

  இப்போது கதைக்கு வருவோம்.

  மேலே சொன்ன இரண்டின் மூலம் நமக்கு இழப்பு ஒரு லட்சம் என்றால் (நமக்கு என்றால் சாதாரண குடிமகனுக்கு கிடைக்க வேண்டிய இலவச கல்வி, பொதுசுகாதாரம், பொது போக்குவரத்து, வெளிப்படையான அரசின் கொள்கைகள் மூலம் அடைய வேண்டிய ஆதாயங்கள்) நூறு ரூபாய் வேலைத்திட்டத்தினால் அரசுக்கு இழப்பு வெறுமனே பத்து பைசா கூட இருக்காது. ஆனால் பலன் அடைபவர்கள் அத்தனை பேர்களும் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ள இந்தத் தொகையாவது உதவுகின்றதே என்கிற ரீதியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இந்தத் தொகையும் அவர்களுக்கு கிடைக்க விட்டால் உருவாகும் சமூக ஏற்றத் தாழ்வுகள், அதன் மூலம் ஆதிக்கம் செலுத்த விரும்புவர்களின் ஏறி மிதித்தல், பாகுபாடுகள் அதன் மூலம் உருவாகும் சமூக சீர்கேடுகள் இது போல பலவற்றைச் சொல்ல முடியும்.

  இதுவொரு விதமான கருணைத் தொகை. இன்னோரு வகையில் பார்க்கப் போனால் அரசாங்கத்தில் உள்ளவர்களின் கையாலாகத்தனத்தினால், நடுத்தர ஏழை மக்களுக்கு தங்களால் செய்ய முடியாத கொள்கையினால் ( எந்த பணக்கார தொழில் அதிபர்களும் ஏழை நலத்திட்டங்களை ஆதரிப்பது இல்லை. அமெரிக்க அதிபர் ஓபாமா கூட இதில் தோற்ககத் தான் முடிந்தது) இது போன்ற திட்டத்தை நடைமுறைப் படுத்தி மக்களின் கோபத்தை அவ்வப்போது தணித்து விடுகின்றார்கள்.

  ஒரு பதிவாக எழுத வேண்டிய விசயத்தை விட்டு விட்டு சுருக்கமாக எழுதி உள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

 7. உண்மையிலேயே இது மிகவும் பயனுள்ள திட்டம். மக்களுக்கு மட்டுமல்லாது, நமது ஊருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும், ஊர்த்தலைவரும், மக்களும் மனது வைத்தால்… இத்திட்டத்தால், எங்கள் ஊர் கண்மாய் ஆங்காங்கே, சிறுசிறு பள்ளங்களுடன் காட்சி தருகிறது. ஆனால், தெளிவான திட்டத்துடனும், முழு மனதுடனும் அவ்வேலையினை செய்திருந்தால், முழுக்கண்மாயும் தூர்வாரப்பட்டு மழைக்காலத்தில் நீர் நிறைந்து, மிகுந்த உபயோகமாயிருந்திருக்கும். நமக்கு முதலில் சுய ஒழுக்கம் தேவை… அழகான கட்டுரை நண்பரே. நன்றி.

 8. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @கார்த்தி விஜய் கூறுவது உண்மை. இவர்கள் கமிசன் கொடுக்கவில்லை என்றால் அடுத்த நாள் இவர்களை அழைக்கமாட்டார்கள்.

  @விஜய் 🙂 யோவ்

  @அருண் “என்ன தீர்வு உங்களை பொறுத்த வரைக்கும் கிரி? ஊழல் அற்ற அரசாங்கமா ?”

  இதெல்லாம் சாத்தியம் என்று நினைக்கிறீர்களா அருண்?

  @அரிகரன் அதே!

  @யாசின் சின்ன பசங்க விசயத்துலையே ஆட்டயப் போடுறவங்க.. பெரியவங்க கிட்ட நினைத்துப் பாருங்க..

  @ஜோதிஜி நீங்கள் கூறுவதில் நான் மட்டும் அல்ல எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நம்முடைய நாட்டில் அனைத்தும் சரியாக இருந்தால், வளம் கொழிக்கும் நாடாகத் தான் இருக்கும். பணக்காரர்கள் வாராக்கடன் பற்றி கூறி இருந்தீர்கள்.. அதில் மறுப்பதற்கு ஒன்றுமே இல்லை. எவருமே அதை தவறு என்று தான் கூறுவார்கள்.

  இந்தத்திட்டத்தில் ஊழல் பணம் ஒரு ஒரு பிரச்சனையாக கூறலாமே தவிர முக்கியப்பிரச்சினை அழிந்து வரும் விவசாயம் தான். விவசாயிகள் எவரிடமும் கேட்டுப் பாருங்கள் இந்தத் திட்டத்தால் விவசாயம் படும் சிரமம் புரியும். நான் முன்னரே கூறியபடி இதை விவசாயக் கோணத்தில் யோசித்தால் நட்டம், இந்தத் திட்டத்தில் உள்ளவர்கள் எண்ணத்தில் யோசித்தால் லாபம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை.

  @ராம் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து. இவர்களை சரியான முறையில் பயன்படுத்தினால் நீங்கள் கூறுவது போல பல நன்மைகள் கிடைக்கும் ஆனால், அது நடக்காது என்பது தான் கசப்பான உண்மை. அதிகாரத்தில் உள்ளவர்கள் சரியாக இருந்தால் மட்டுமே ஒரு திட்டம் சிறப்பாக நடைபெறும் ஆனால், அது நம் கனவில் மட்டுமே நடக்க வாய்ப்பு.

 9. ஊழல் அற்ற அரசாங்கமா ?
  இதெல்லாம் சாத்தியம் என்று நினைக்கிறீர்களா அருண்?

  – சாத்தியம் தான் கிரி தன் மனசாட்சி கு பயப்படுற மக்களும், ஒழுக்கத்த கடை பிடிக்கற தலைவனும் இருந்தால் இது சாத்தியமே

  – அருண் கோவிந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here