திருமணத்துக்குப் பெண் தேடும் படலம்!

24
திருமணத்துக்குப் பெண் தேடும் படலம்!

பெண் குழந்தை வேண்டாம் என்று 1980 / 1990 ல் கூறி அழித்துக் கொண்டு இருந்த பெண்களும் ஆண்களும் தற்போது அதற்கான தண்டனையை அனுபவிக்கிறார்கள்.

எங்கள் பகுதியில் திருமணத்துக்குப் பெண் தேடும் படலம் எப்படியுள்ளது என்று பார்ப்போம்.

தமிழகத்தில் ஆண்கள் பெண்கள் சதவீத அளவில் இருக்கும் மாற்றத்தால் தற்போது திருமணத்திற்கு ஆண்களுக்குப் பெண் கிடைப்பது மிகச் சிரமமாக இருக்கிறது.

ஒரு காலத்தில் வரதட்சணை இவ்வளவு கொடுத்தால் தான் திருமணத்திற்கு சம்மதிப்போம் என்று இருந்தவர்கள் தற்போது பெண் கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் இருந்தும், பெண் கிடைத்தபாடில்லை. Image Credit 

பின் வருபவை முக்கியமாக எங்கள் கொங்குப் பகுதியில் நடைபெற்ற சம்பவங்களை வைத்தும் மற்ற இடங்களில் உள்ள நண்பர்கள் கூறியதை வைத்தும் கூறப்பட்டுள்ளது.

சில சம்பவங்கள் உறுதியாகத் தெரிந்தவை சில கேள்விப்பட்டவை.

இது யாரையும் குறை கூற எழுதப்படவில்லை, நடக்கும் சம்பவங்களை மட்டுமே விவரித்து இருக்கிறேன்.

பெண் வீட்டு எதிர்பார்ப்புகள்

ஒருகாலத்தில் திருமணத்தின் போது பெண்களைக் காட்சிப்பொருளாக (தற்போதும் நடைபெறுகிறது) கண்டவர்களுக்கு, தற்போது தர்ம அடி விழுந்து கொண்டு இருக்கிறது.

அன்று பெண்கள் / ஆண்கள் செய்த பாவங்களுக்கு அலட்சியங்களுக்கு இன்றைய தலைமுறை ஆண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

மாப்பிள்ளையை ஏற்றுக்கொள்வதில் இரு பிரிவினர் இருக்கிறார்கள்.

  1. பையன் வெளிநாட்டில் இருக்க வேண்டும், நிரந்த குடிவாசி (Permanent Resident), IT துறையில் இருக்க வேண்டும், ஆடி கார் வைத்து இருக்க வேண்டும், உடன் பையனின் பெற்றோர் இருக்கக் கூடாது.
  2. பையனுக்கு சென்னை அல்லது பெங்களூருவில் வேலை. குறைந்தது 75000 முதல் ஒரு லட்சம் சம்பளத்தில் இருக்க வேண்டும். பையன் பெற்றோர் உடன் இருக்கக் கூடாது, குறிப்பாகத் தாத்தா பாட்டி என்று யாரும் இருக்கக் கூடாது.
  3. சொந்த வீடு அவசியம் (EMI OK). இதில் சிலர், பையன் IT துறையில் இருக்கலாம் என்பவர்களும் இருக்கக் கூடாது என்பவர்களும் இருக்கிறார்கள்.

சம்பவங்கள்

இது எங்கள் சொந்தத்தில் நடந்தது. திருமணம் நிச்சயிக்கப்பட்டு முடிவான பிறகு திருமணம் வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.

திரும்பச் சில கால இடைவெளியில் இன்னொரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டு பத்திரிகை அடிக்கப்பட்டு திருமணத்திற்கு சில நாட்களே இருக்கும் நிலையில் அந்தப் பெண் வேறு (காதலித்த) பையனை திருமணம் செய்வேன் என்று கூறி விட்டார்.

இதனால் திருமணம் நின்று போனது. இதன் காரணமாகப் பையனின் பெற்றோர் மிகுந்த அவமானத்திற்குள்ளாகி விட்டனர்.

தற்போது அந்தப் பையனின் நிலை பரிதாபமாகி விட்டது.

இந்த இரு சம்பவங்களும் பெண் வீட்டில் நடந்த தனிப்பட்ட பிரச்சனைகள். ஆனால், அனைத்திற்கும் சகுனம் பார்க்கும் சமூகம் எப்படி திரும்ப இவருக்குப் பெண் கொடுக்க முன் வருவார்கள்?!

சொந்தக்காரர்களின் விசேசத்திற்கு கூடத் தலைகாட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

பெண் பார்க்கும் படலம்

எங்கள் சமூகத்தில் திரைப்படங்களில் வருவது போல வீட்டில் பெண் பார்க்க வர மாட்டார்கள்.

முதலில் நிழல் படம் பார்த்து இருவருக்கும் பிடித்த பிறகு, கோவில் அல்லது பொது இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்வார்கள்.

இது முடிந்த பிறகு தான் இரு வீட்டுப் பெரியவர்களும் “நிச்சயம்” என்ற பெயரில் சந்தித்து உறுதி கூறுவார்கள். பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுவிட்டு பின் முடிவைச் சொல்லும் முறை கிடையாது.

நான் மேற்கூறியது ரொம்பச் சின்ன எடுத்துக்காட்டுகள் தான்.

இது மாதிரி பல கதை இருக்கு! உண்மையில் இன்னும் சில சம்பவங்களை எழுதினேன்.

ஆனால், என் உறவினர்கள் சிலரும் என் தளத்தைப் படிப்பதால் அது தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வரும் என்று, எழுதிப் பின் நீக்கி விட்டேன்.

முன்பே கூறுவதில் என்ன பிரச்சனை?

யாரை வேண்டும் என்றாலும் காதலிக்கட்டும் தவறு இல்லை.

இந்தப் பெண் கடைசியில் கூறியதை முதல் நாளே அழைத்துக் கூறி இருந்தால், எத்தனை பேருக்கு அவமானத்தைத் தடுத்து இருக்கலாம்!

திருமணம் ஆன பிறகு கூறாமல் எதோ இப்பவாவது கூறினாரே என்று மனதை தேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

இது மாதிரி நடந்தது ஒரு சம்பவம் அல்ல. ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து உள்ளது. அனைத்தையும் பொதுவில் கூறமுடியவில்லை.

இதுக்குத் தான் இந்தப் பொண்ணுகளையே படிக்க வைக்கக் கூடாது என்று வழக்கம் போல புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இது விரக்தியில் வரும் வார்த்தைகளே தானே தவிர படிக்க வைக்கக் கூடாது என்பதல்ல, அது சாத்தியமும் அல்ல.

செலவுகள்

முன்பு பெண் வீட்டில் அனைத்துச் செலவையும் செய்யக் கூறுவார்கள். தற்போது நிலைமை தலை கீழ்.

பையன் வீட்டில் அனைத்துச் செலவுகளையும் செய்யத் தயாராக இருந்தும் பெண் கொடுக்க ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள்.

தலை சுற்றும் நிபந்தனைகள்

பெண் வீட்டில் கூறும் நிபந்தனைகளை எல்லாம் கேட்டால், எனக்குத் தலை சுற்றுகிறது.

இவர்கள் எல்லாம் மனதில் என்ன நினைத்துக் கொண்டுள்ளார்கள் என்றே புரியவில்லை. இன்னமும் கூட என்னால் சில விசயங்களை நம்ப முடியவில்லை.

நிஜமாகவா!! என்று கேட்பதை பார்த்து வினோதமாகப் பார்க்கிறார்கள். அன்று ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்த பையன் வீட்டாரின் நிலை அப்படியே உல்டாவாகி இருக்கிறது.

சமூகம்

இதில் இன்னொரு பிரச்சனை, பெண் அதே சமூகத்தில் / சாதியில் வேண்டும் என்பது. சாதி என்பது இன்னும் அப்படியே தான் இருக்கிறது.

இப்பெல்லாம் யார் சார் சாதி பார்க்குறா!” வசனம் எல்லாம் நகரத்திற்கு வேண்டும் என்றால் சிலதுக்கு பொருந்தலாம் ஆனால், இன்னமும் அப்படியே தான் உள்ளது.

மாறித் திருமணம்  செய்யலாம் என்றால், அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு (அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி திருமணங்கள்) நெருக்கடிகள், நடைமுறை சிக்கல்கள் வருகின்றன.

பெயரளவில் புரட்சி செய்யலாம் என்றாலும் அதன் பிறகு வரும் பின்விளைவுகள் நடைமுறை பிரச்சனைகள் பலரை பயமுறுத்துகின்றன.

இதற்குப் பயந்தே பலரும் யோசிக்கிறார்கள்.

வேறு வழியே இல்லை என்றால் ஏறக்குறைய ஏற்றுக்கொள்ளும் / அந்தச் சாதிக்குச் சமமான!!! வேறொரு சாதியில் எடுக்கிறார்கள்.

இதில் மூத்த மகனாகவும் இருந்து, தங்கச்சியும் இருந்து போனசாகச் செவ்வாய் தோஷமும் இருந்தால் சோலி சுத்தம்.

வீட்டுக்கடன், தங்கச்சி திருமணம் முடிந்து பார்க்கும் போது வயது 32 / 33 க்கு மேலே இருக்கும்.

இதைவிட ஊரில் இடம் வாங்கியது போதாது என்று பெரிய பிரச்சனையாக இயற்கை தலையில் இடம் ஆக்கிரமிப்பு செய்து இருக்கும்.

இந்த நிலையில் பெண் தேடும் கொடுமை இருக்கே…! அதெல்லாம் அனுபவிக்கிறவங்களுக்குத் தான் புரியும்.

விவசாயமா? வாய்ப்பில்லை ராஜா

எங்கள் சமூகத்தில் பலர் விவசாயத்தில் இருக்கிறார்கள். தற்போதைய தலைமுறை பையன்கள், விவசாயத்தில் இல்லாமல் மற்ற துறைகளில் இருக்கிறார்கள்.

இரண்டும் கெட்டான் காலத்தில் பிறந்தவர்களுக்குப் பெண்ணே கிடைக்கவில்லை.

விவசாயத்தில் உள்ளவர்களுக்கு யாரும் பெண் கொடுக்கத் தயாராக இல்லை.

ஒரு விதத்தில் முற்றிலும் இதை ஒதுக்கி விட முடியாது.

காரணம், தற்போதைய பெண்கள் நன்கு படித்துச் சென்னை பெங்களூர் என்று வேலையில் இருக்கிறார்கள்.

அவர்கள் எப்படி விவசாயம் செய்யும் நபரைக் கட்டிக்கொண்டு கிராமத்தில் இருப்பார்கள்?!

இது போல நடைமுறைப் பிரச்சனையால் கிராமத்தில் இருப்பவர்களில் இன்னும் பலர் முதிர் கண்ணன்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் நிலை தான் பரிதாபம்.

பொதுவாக எங்கள் பகுதியில் பெண்களுக்குக் கட்டுப்பாடு அதிகம். அதனால், இதில் இருந்து தப்பிக்க பெண்கள் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பார்கள்.

படிக்க வெளியே செல்லும் போது சுதந்திரமாக இருக்கலாம் என்பது காரணம் அதோடு சிலருக்கு உண்மையிலேயே படிப்பின் மீது உள்ள ஆர்வம்.

இதன் காரணமாக நிறைய பட்டம் படித்து விடுகிறார்கள்.

இவர்கள் இப்படி என்றால் இரண்டுக்கும் சேராத தலைமுறை பையன்கள் சொத்து இருப்பதால், பலர் படிப்பில் நாட்டம் கொள்ளாமல் விவசாயம் மற்றும் ஊர் விசயங்களில் கவனம் செலுத்தி படிப்பில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

நன்கு படித்து இருப்பதாலும், அதோடு வேலைக்கும் சென்று விடுவதாலும் பெண்களால் இவர்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இதில் தவறு காண முடியவில்லை. ஏனென்றால் எவருமே படித்த நல்ல வேலையில் உள்ள நபரைத் தான் திருமணம் செய்ய விரும்புவார்கள்.

திருமணம் செய்து கொண்டு வீட்டிலேயே இருக்க விரும்ப மாட்டார்கள்.

கேரளா

இது போன்ற நேர்மையான காரணங்களாலும் பையன்களுக்குப் பெண்கள் கிடைக்காமல் போகிறது. இதனால் கேரளா சென்று அங்கே திருமணம் செய்து வருபவர்கள் அதிகம் ஆகி விட்டார்கள்.

இதெல்லாம் இல்லாமல் நன்கு படித்தும், நல்ல சம்பளத்தில் இருந்தும், அட! இவை எல்லாவற்றையும் விடப் பையன் நல்ல பையனாக இருந்தும் பெண் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

தற்போது பையன் எப்படி இருந்தாலும் ஓகே ஆனால், அதிக சம்பளம், சொந்த வீடு, வெளிநாடு என்றால் தான் கொடுக்கலாமா என்று “யோசிக்கிறார்கள்”.

சில பெண்களும் குணத்தை விடப் பணத்திற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இதெல்லாம் எங்கே சென்று முடியுமோ! ஒரு காலத்தில் பெரும்பாலான ஆண்கள் செய்து கொண்டு இருந்த தவறை தற்போது பெண்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நான் பெண்களுக்கு எதிராகக் கூறவில்லை, ஏனென்றால் பையனின் அம்மாவும் ஒரு பெண் தானே! அவர்கள் கூறும் அனுபவங்களை / கதைகளைக் கேளுங்கள். வெறுத்துப் போய் விடுவீர்கள்.

கொஞ்ச நஞ்சமல்ல

திருமணம் செய்து வைக்க ஒவ்வொரு பையனின் பெற்றோரும் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

எனக்குப் பெண் தேடும் போது இந்த அளவு பிரச்சனை இல்லை ஆனாலும், இருந்தது. தற்போதெல்லாம் உச்சத்தில் இருக்கிறது.

இவை அனைத்துப் பெண்களுக்கும் / சமூகத்தினருக்கும் பொருந்தாது என்றாலும், அதிகம் இது தான் நடந்து கொண்டு இருக்கிறது.

திருமணம் தள்ளிப் போய்க்கொண்டு இருக்கும் பையனிடம் கேட்டால், ஒவ்வொருவரும் பல கதை கூறுவார்கள்.

இதை விட அவரது பெற்றோரிடம் குறிப்பாகப் பையனின் அம்மாவிடம் கேளுங்க..! கொட்டித் தீர்த்து விடுவார்கள். “உலகத்துல இல்லாத பெண்ணைப் பெத்து வைத்து இருக்காங்களா.. இப்படி பந்தா பண்ணுறாங்களே!” என்று பொங்கிடுவங்க.

அப்புறம் கடைசியா ஒண்ணு.. திருமணம் ஆகாதவங்க கிட்ட அது பெண்ணோ / பையனோ எப்ப திருமணம்! எப்ப கல்யாணச் சாப்பாடு போடுவீங்க!! என்று கேவலமாக் கேட்டுச் சிரிச்சு வைக்காதீங்க.

அவனவன் கடுப்புல இருக்கிறான்.

Read : நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

24 COMMENTS

  1. முதலில் கிளாஸ்கோ யுனிவர்சிட்டியை சேர்ந்த Dr. Lan Donald , Er. Tom Brown இருவருக்கும் ஒரு ஓ போட்டு பேஸ் புக்கின் லைக் போட்டு ஆரம்பிப்போம்.

    நீங்கள் கூறும் பிரச்சனையின் காரணம், அதே கொங்கு பகுதியில் உள்ள குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள். அதுவும் அதே சாதியில் தான் பெண் வேண்டும் என்று சாதியை விட்டுவிட முடியாதவர்களின் நிலை தான் நீங்கள் சொல்வது.

    இதில் சாதியை தூக்கி எறிந்துவிட்டு, கேரளா உள்ளிட்ட வேற்று மானில பெண்களை மணந்தவர்களின் பட்டியல் வங்கியில் கடன் வாங்கி திரும்ப சேலுத்தாத தொழிலதிபர்களின் பட்டியல் போல நீளமானது.

    மேலும் இதனால் கணவனை இழந்து குழந்தையுடன் இருக்கும் பெண்களையும் குழந்தையை பெண்ணின் அம்மா வீட்டில் விட்டு விட்டு வர செய்து திருமணம் செய்பவர்களூம் உண்டு.

    “பழையன கழிதலும் புதியன புகுதலும் காலவிதியினால் வழுவல” என்று அடிப்படை நூலாகிய தொல்காப்பியம் இரண்டாயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னரேயே இலக்கணம் வகுத்து வழிவகுத்துள்ளது.
    சாதி மத வேறுபாடுகளை விட்டுவிட்டு தகுதியான பெண் தேடினால் கிடைக்காமல் இருக்க போவது இல்லை.

    காலவிதியை ஏற்றுகொள்ளாமல் சாதியை பிடித்துகொண்டு இருப்பவர்களை சாதியுடன் சேர்த்து கால விதி தள்ளிவிடும்.

    ஆனாலும் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிலர் இன்றும் உள்ளனர். இன்னம் சாதி மதக்கொடுமையால் பாதிக்கப்பட்ட பலரையும் நானறிவேன்

    என்னுடன் படித்த பெண் காதல் திருமணம் செய்ய நினைத்ததற்காக, அதுவும் பையன் வேறூ சாதி என்பதால் பெண்னை உயிருடன் கொளூத்திவர்களை பார்த்திருக்கின்றேண்.

    இன்றும் அது உண்டே..

    http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1301/22/1130122007_1.htm
    https://www.facebook.com/creatorsharmony1/posts/364413733656722
    http://kavinmalar.blogspot.com/2013/02/blog-post.html

    இன்றய தேதியில் பெரும்பான்மை மக்களிடத்திலும் சாதிய மனப்பான்மை வேரறுந்து வருகின்றது.

    1980-90 களில்.. தேசிய அளவில் கணினித்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த பெண்ணின் நிலை ….

    கொஞ்சம் நீளமானது என்றாலும் உண்மையானது.. பயனுள்ளது ..
    http://moonramsuzhi.blogspot.com/2013/08/blog-post_17.html

    1960ல் கலப்பு மணம் பற்றி நினைத்து பார்த்த்ருக்க முடியுமா? அதுவும் ஆச்சரமான பிராமண குடும்பங்களில் ?…

    நம் இன பையன்களுக்கு என்ன குறை.. என்று இளம் பெண்கள் கலப்பு மணத்தை ஆதரிப்பதை … கலப்பு மணம் புரிவதை எதிக்கிறார் பாருங்கள்..

    நீங்கள் சொல்லும் படித்து வெளியூரில் வேலை பார்க்கும் பெண்களில் பெரும்பகுதியினர் கலப்பு திருமணமே புரிவர்.

    இனி சாதியம் செத்தே தீர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. 15 வருடம் வரும் தலைமுறையில் தாய் ஒரு சாதியும், தந்தை ஒரு சாதியும் இருந்தால், அடுத்த தலைமுறையில் கலப்பு திருமணமே பெரும்பான்மை ஆகும், அது மட்டுமல்ல.. யாரும் நான்_____ டா என்று நெஞ்சை நிமிர்த்த முடியாது. சாதி கொடுமையும் இரட்டை குவளை முறையும் தானாக வீழும்.

    இவை ஒரு வகையில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியே. ஏனெனில் பெரியார் 90 வருடம் வாழ்ந்து பிரச்சாரம் செய்த ஈரோடு மண்ணில் இன்றும் இருக்கும் இரட்டை குவளை முறையை, Dr. Lan Donald , Er. Tom Brown இருவரும் கண்டுபிடித்த அல்டிரா சவுண்டு ஸ்கேன் எந்திரம் சுடுகாட்டுக்கு அனுப்பி கொண்டு இருப்பதை என்னவென்றூ சொல்வது.

    http://www.livescience.com/32071-history-of-fetal-ultrasound.html

    நியாயமாக பார்த்தால் இவர்கள் இருவருக்கும் திக செயல் வீரர் விருது வழங்கி கவுரவிக்க வேண்டூம்.

    உங்கள் மனம் வருந்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. ஆனால் சாதியத்துடன் இந்தியாவில் வாழ்ந்து, சாதிய பாதிப்பு இல்லாத வெளி நாட்டில் வசிக்கும் உங்களுக்கு சாதியத்தின் பாதிப்பு என்ன, சில உயர் சாதியர்களின் நலனுக்காக எத்தனை திறமையாளர்களை சாதியம் குழி தோண்டி புதைத்திருக்கின்றது , என்பது புரியலாம். புரிந்தாலும் உங்கள் சமுதாய பற்றை விட்டுகொடுக்காமல் பேசலாம் அது உங்கள் விருப்பம்.

    ஆனால் பெண் தேடும் படலம் உட்பட பல நடப்புகளை பார்க்கும்போது , சாதி மத பேதம் இல்லாத சமுதாயம் எதிர்காலத்தில் வருகின்றது என்பதை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியே.

  2. மிக அருமை

    அப்புறம் கடைசியா ஒண்ணு.. திருமணம் ஆகாதவங்க கிட்ட அது பெண்ணோ / பையனோ எப்ப திருமணம்! எப்ப கல்யாணச் சாப்பாடு போடுவீங்க!! என்று கேவலமாக் கேட்டு சிரிச்சு வைக்காதீங்க. அவனவன் கடுப்புல இருக்கிறான்.

  3. இப்போவெல்லாம் பெண் கிடைப்பது கஷ்டம் தான் கிரி. அப்படி இப்படி என்று எனக்கு 35 வயதில் தான் திருமணமே நடந்தது.

    மேற்சொன்ன 7ஆவது பாரா சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது. (என்னை டிராக் பன்றீங்களோ ?? :-))

    முன்னால் எனக்கு பார்த்த பெண் (சென்னை ஐடியில் வேலை – சென்னையில் இருக்கும் சிலர் எதோ வானத்திலிருந்து குதித்தது போலவும் மற்ற நகரத்து / கிராமத்து மக்கள் எதோ நாகரிகமற்றவர் என்ற என் எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்தினார்). இவருடைய போக்கு என்னை வாழ்வில் பல விஷயங்களை கற்றுகொடுத்தது)

    என்னை விட நான் வேலை செய்யும் நாட்டை காரணம் காட்டி (அவருடைய சம்பளத்தை விட அதிகமாக நான் வருமானம் ஈட்டினாலும் – அவர் ஐரோப்பா மாப்பிள்ளையை எதிர்பார்த்து – இதற்க்கு பெயர் வேற… கண்ணியம் கருதி தவிர்க்கிறேன்) திருமணத்தை நிறுத்தி ஒருவருடம் என் குடும்பத்தினர் யாரிடமும் சகஜமாக பேசுவதையே நிறுத்திவிட்டனர். (இந்த லச்சனத்தில் திருமணம் சம்பந்தமாக A to Z எல்லாவற்றிற்கும் செலவு செய்ய நான் ஒத்துக்கொண்டிருந்தேன்) இத்தனைக்கும் நான் வரதட்சிணையே எதிர்பார்க்கவில்லை (வாழ்வில் சுயமாக முன்னேறிய எனக்கு என்னை ஏதோ விற்பனை பொருள்போல் பார்க்க விருப்பமில்லை).

    ஒன்பது மாதம் பழகி, என்னை எஸ்டிமேட் செய்து கடைசியில் பெண் வேறொருவனை விரும்புகிறேன் என்று காரணம் சொன்னபோது, சங்கத்தில் என்னப்பா சொல்றே என்று கேட்டனர்… நான் (அப்போதுகூட) பெண்ணுக்கு என்ன விருப்பமோ அதையே செய்யுங்க என்றேன். நிச்சயதார்த்த செலவு (கிட்டத்தட்ட 7௦௦௦௦) பெண்வீட்டார் கொடுப்பார்கள் என்றபோதும் பெண்ணே இல்லை இப்போ பணம் மட்டும் வேணுமா என்று வேண்டாமென்று சொல்லி அந்த பெண் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் எரித்துவிட்டேன் (சில நினைவுகளை தவிர). அதற்க்கு பின் தான் பிரச்சனை; பெண் உன்னை வேண்டாமேன்றாலா அல்லது நீ பெண்ணை வேண்டாம் என்று சொல்லிவிடாயா காரணம் என்ன என்று எல்லோரும் கேட்க எனக்கு பதில் சொல்லியே வருடம் ஓடியது. (அதிலும் கொடுமை குடும்பத்தினரே என்னை நம்பவில்லை).

    உண்மை காரணம் பெண்ணின் தம்பி வேற்று மத பெண்ணை (அவர் பிரான்ஸ் நாட்டு பிரஜை இந்திய வம்சாவழி) திருமணம் செய்தததால், பெண்ணிற்கும் அங்கு செல்லும் எண்ணம். அதிலும் அவர் அம்மாவை அழைத்துகொள்ளவேண்டுமாம், என் பெற்றோரை விட்டு பிரிந்து வர வேண்டுமாம்… ஆகையால் தேவையில்லாத காரணங்கள் சொல்லி, உதாசீனப்படுத்தி, கனவுகளை கலைத்தார். சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது… இப்போ அந்த பெண் யாரையோ (இப்போ என் சாதி சங்கம் எங்கே போனது என்று தெரியவில்லை) திருமணம் செய்து ஐரோப்பாவில் இருக்கிறார். எதுவாயிருந்தால் என்ன அவருக்கு தேவை ஐரோப்பா.

    எப்படியிருந்தாலும் அவர் செய்தது எனக்கு நன்மையில்தான் முடிந்தது. கடைசியில் அன்பான மனைவி வாய்க்க உதவி செய்துள்ளார்..இப்போ எனக்கும் அழகான பெண் குழந்தைதான்.

    என் விருப்பங்களை கொட்டி வர்ணித்து பின்னால் நடக்கபோவதை அறியாமல் அவரைப்பற்றி கவிதையெல்லாம் (?) ப்ளாகில் எழுதி… இப்போ என் அன்பான மனைவியை பற்றி எழுத வார்த்தைகளை தேடிகொண்டிருக்கிறேன்.

    • ராஜ்குமார்… நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் அனைத்தும் தடுப்பூசிகள்… அவைகள் தான் உங்களை பக்குவப்பட வைத்து இருக்கிறது… திருமணத்திற்கு வயது என்பது ஒரு காரணியே அல்ல… மனதால், குணத்தால் இளமையாகவே இருந்தாலே என்றும் மகிழ்ச்சி தான்…(இப்போ என் அன்பான மனைவியை பற்றி எழுத வார்த்தைகளை தேடிகொண்டிருக்கிறேன்.),… உங்கள் மண வாழ்க்கை மென் மேலும் சிறக்க என் வாழ்த்துகள்…

    • சார் இதல்லாம் எங்க போய் முடியுமோ தெரியல !! ஆனா ரொம்ப பெண்கள் கஷ்ட காலத்த நோக்கி தான் போராங்ககிறது 100% sure …………….

  4. கடைசியா ஒரு வார்த்த சொன்னீங்க பாருங்க, சூப்பர் ஜி……..என் ஆபீஸ் நண்பர்கள் இதே கடுப்புல தான் இருக்காங்க…….ஒவ்வொருத்தரோட கதையும் கேட்ட ரொம்ப கொடுமையா இருக்குங்க, பொண்ணுங்கள திருப்தி படுத்தி, சம்மதம் வாங்குறது எவ்ளோ கஷ்டம்னு தெரியும்……..எல்லாம் எங்க போயி முடியுமோ…….

  5. “என்று கேவலமாக் கேட்டு சிரிச்சு வைக்காதீங்க. அவனவன் கடுப்புல இருக்கிறான்”
    மிகவும் உண்மை.

    பொண்ண விட, பொண்ண பெத்த அம்மாவோ இல்ல அப்பாவோ பண்ற அளப்பர இருக்கே… முடியல. என் தம்பிக்கு பெண் தேடும் போதுதான் இப்படி பல பேரை சந்தித்தேன். அதும் ஒரு பெண், பொண்ணுக்கு பிடித்திருந்தது (என் தங்கைக்கு அவள் friend), ஆனால் அவளின் அப்பாவுக்கு சிங்கப்பூர் மாப்பிளைதான் வேண்டுமாம். அதை அவர் முன்னமே கூறி இருந்தாலும் பரவாளை, கடைசி நேரத்தில், அதுவும் எங்கள் மாமா காரணத்தை கண்டுபிடித்தார்.
    இப்படி பல கதை இருக்கு…
    என்ன கொடுமை சார் இது.

  6. நல்லவேளை கிரி நாமெல்லாம் கொஞ்சம் முன்னமே பொறந்துட்டோம். அதனால தப்பிச்சுட்டோம்.

  7. அதிர்ச்சியான விஷயங்களை அருமையாக தொகுத்து இருக்கிறீர்கள் கிரி.. சமூகத்தின் இந்த தாக்குதல்களால் பாதிக்கப்படும் இளைஞர்கள் இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு ஓய்வு கொடுத்து விட்டு “காதல் திருமணம்” என்னும் மாற்று வழியை குறித்து சிந்திப்பது சிறந்தது. ஆனால் தற்போது காதலிலும் பல வகைகள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

  8. இப்பவெல்லாம் கவுண்டங்க கோயில்ல முதலில் பெண் பார்த்துட்டு பின் பெண் வீட்டுக்கு செல்லுவதில்லை. 🙁 மிகப் பெரும்பான்மையானவர்கள் விவசாய மாப்பிளையை தவிர்த்து விடுகிறார்கள், பெண் படிக்காமல் மட்டுமல்லாது விவசாய குடும்பத்தில் இருந்து வந்தாலும். ஏனென்றால் காட்டுல\வயல்ல பெண் வேலை செய்யக்கூடாதாம், இந்த காட்டுல\வயல்ல வேலை செய்யும் பொழப்பு அவங்களோட போகட்டும் என்ற நல் எண்ணம் காரணமாம். இக்கால பெண்களும் காட்டுல\வயல்ல வேலை செய்ய இப்ப விரும்பறதில்லை, நகரத்தில் வசதியா இருக்கத்தான் விரும்பறாங்க. பெண்ணை விட மாப்பிள்ளை சமமாக அல்லது அதிக படிப்பு படித்து இருக்க வேண்டும். எனக்கு தெரிந்து கவுண்டர்களில் நிறைய ஆண்கள் நிறைய படிக்காமல் குடும்ப வேலையை செய்ய போயிட்டாங்க. (பணம் உள்ள குடும்பங்கள்) படிப்பு தேவையில்லை பணம் தேவைன்னு நினைச்சாங்க இப்ப வருத்தப்படறாங்க. கேரளா பெண்களை போய் திருமணம் செஞ்சுக்கிட்டு வருவாங்களே இன்னும் அந்த நிலை அங்க வரலையா?

  9. என்னன்னா இப்படி பயமுறுத்துரிங்க … இல்ல எனக்கு பயம் வந்துடிச்சி னு தான் சொல்லணும்.
    ஏன்னா இந்த பங்குனி வந்ததும் எனக்கு பெண் தேடலாம் என என் அப்பா முடிவு செய்துள்ளார். பெண்ணையும் பார்த்து வைத்து உள்ளார் இன்னும் பெண் வீட்டில் பேசவில்லை. பங்குனியில் பேசலாம் என்று பொறுமையாக இருக்கிறார். நீங்கள் சொல்லியவற்றை எல்லாம் பசிக்கும் போது என் அப்பா எவ்ளோ கஷ்டப் பட போறார்னு தெரில. (நானும் தான் எனக்கு முக்கியமான் பயமே பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதித்து, கல்யாணத்துக்கு முன் தினம் யாரையாவது காதலித்து இருந்து அவரை திருமணம் செய்து கொண்டால் அசிங்கம் எனக்கு அல்லாவா )
    இதனால் முன்னமே பெண் பார்க்கும் போதே பெண்ணிடம் இதை பற்றி பேசிவிடலாம் என்று முடிவு செய்து உள்ளேன் . இந்த முடிவு சரியானதாக் அமையுமா என்று கூறவும் அண்ணா .
    மேலும் பெண் பார்க்கும் போகும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும், எதையெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம், எதையெல்லாம் தவிர்ர்க்க வேண்டும் என கூறவும் அண்ணா …
    நல்ல சமயத்தில் ஒரு பதிவு எழுதி இருக்கிறிர்கள் அண்ணா ..

    மேலும் ஒரு சந்தேகம் அண்ணா . எங்கள் வீட்டில் நானும் அப்பா உம மட்டும் தான் இருக்கிறோம். எனக்கு உடன் பிறந்தவர்கள் எவரும் இல்லை. அம்மா இறந்து எட்டு மாதங்கள் ஆகப்போகிறது.
    இந்நிலையில் பெண் பார்க்கலாமா. எனக்கு பெண் கொடுக்க சம்மதிப்பாங்களா, பெண் என்னை மணந்து கொள்ள சம்மதம் தெரிவிக்குமா,(இதற்கு முன் யாராவது பெண் இல்லாத வீட்டில் பெண் கொடுத்து இருக்கிறார்களா என தெரிவிக்கவும் அண்ணா

    மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் அண்ணா

    • பயம் வேண்டாம் சகோதரரே.. இந்தக்காலத்தில் காதல்/முறிவு எல்லாம் சகஜமாக போய்விட்டது. அதற்காக தேவை இல்லாமல் சந்தேகிக்கவும் வேண்டாம், வெளிப்படையாக கேட்கும் நேரமும் இது அல்ல (தெரிந்துகொள்ளும் வழியையும் நீங்களே எதிர் காலத்தில் அறிந்து கொள்வீர்கள்).
      தயக்கமில்லாமல் பெண் கேளுங்கள். உங்கள் ஆண்மைத்தன்மையை (ஈகோ, பிடிவாதம் போன்றவற்றை) ஒரு வருடத்திற்கு தள்ளி வையுங்கள். குடும்பத்தில் முடிவெடுக்கும் பொறுப்பு தந்தைக்குத்தான் உண்டு என்று (நிச்சயதார்த்தம் – திருமணம் இடைப்பட்ட காலத்தில்) பேசும்போது சொல்லுங்கள்… அதற்காக எதற்கெடுத்தாலும் அப்பா என்பதல்ல… அதே சமயத்தில் உங்கப்பாவுக்கு எது தெரியாதோ (உதா: நான் என் மனைவியிடம் பேசும்போது என் அப்பாவிற்கு கம்பியுட்டர் தெரியாது அதை கற்றுக்கொடுத்தால் நீ அவரிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என்று முன்கூட்டியே சொல்லிவைத்தேன்… நல்ல பலன்.. ஆனா மாமியார் மருமகள் பிரச்சினைதான் எப்பவாது வருது… அதுவும் பூதாகரமா) அதை கற்றுகொடுக்க சொல்லுங்கள். வரதச்சினை கேட்பதை தவிருங்கள்.. குறிப்பாக திருமணத்திற்கு பின்பு மனைவியிடம் அதிக பாசம் காட்டுங்கள்.
      குறிப்பு: இரண்டு பெண் கொண்ட வீட்டில் முதல் பெண் திருமணமாகியும் பெற்றோர் வீட்டிலேயே தங்கியிருந்தால் – பெண் எடுக்க சற்றே யோசியுங்கள். ஏனெனில் சிலர் வாழ்க்கை பாடத்தை வைத்து சொல்கிறேன்.

      • நன்றி ராஜ்குமார் சகோதரரே. உங்கள் ஆலோசனைகள் நான் நிச்சயம் பின்பற்றுவேன்.
        இப்ப கொஞ்சம் தெளிவா இருக்கு
        நன்றி

    • திரு கார்த்திகேயன் அவர்களே இதில் பயபடுவதற்கு ஏதும் இல்லை . திரு கிரி அவர்கள் தற்காலத்தில் நடக்கும் நிகழ்சிகளை மேலும் அவருக்கு கிடைத்த அனுபவைதை எழுதி உள்ளார் இது தங்களும் அப்படியே நடக்கும் என்று நியதி இல்லை . ஆம் ஒரு விஷயத்தை ஒத்துகொள்ளத்தான் வேண்டும் இப்போது உள்ள பெண்கள் அதிகம் எதிற்பகிரர்கள் குறிப்பாக பொருளாதாரம் மிக்க முக்கியம் அழகு படிப்பு எல்லாம் இரண்டாம் பட்சம் தான் , அவர்களுக்கு வேண்டியது பாதுகாப்பு . ஒரு சுகமான் கஷ்டமே இல்லாத வாழ்கை . ஆகவே தங்கள் பொருளாதாரம் நன்றாக இருக்குமைஎனில் வேறு எதை பற்றியும் பயப்பட தேவையில்லை . குறைந்தபட்சம் ஒரு சொந்த வீடு அவசியம் ! . பிறகு வங்கியில் ஒரு 5 இலக்க சேமிப்பு . இது போதும் . இதற்கும் மேல் ஒரு பெண் ஆசைபட்டால் என்றால் அவளுக்கு பெயர் வேறு என்று தான் வேண்டும்! ஒரு நல்ல குடும்பத்து பெண் இதற்கு மேல் ஆசை படமாட்டாள் . அவ்வாறு ஆசை படும் பெண்ணை திருமணம் செய்து கஷ்டபடுவதை விட கடைசிவரை பெற்ற தாய் தந்தைக்கு சந்தோசமாக சேவை செய்துவிட்டு போகலாம் !! …

  10. கிரி… பெண்கள் என்ற உடன் நினைவுக்கு வருவது இவைகள் தான்…
    ==================================================================
    ஏமாற்றங்களுக்கு பழக்கப்பட்டவள் பெண். ஆனால் அவர்களால் தான் எல்லோருக்குமான சந்தோஷங்களை சமைக்க முடியும். இருப்பதை வைத்து சிறப்பாக இருப்பது பெண்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.
    கிட்டிக்கு மரம் ஒடிக்கிற ஆண்கள் மத்தியில், உலகத்தில் மரபாச்சி பொம்மைகளுக்கும் சோறுட்டுவது பெண் மனம்…
    ==================================================================
    தெய்வங்களும் என்னை விட்டு விலகின
    பொழுதில் என்னை ஒரு தேவைதையாய்
    வந்து தாங்கியவள் – ஜென்னி (காரல் மார்க்ஸ்ன் மனைவி)
    ==================================================================
    உலக பெண்கள் அனைத்திலும் நான் விரும்பும் முதன்மையான பெண், காரல் மார்க்ஸ் மனைவி – (ஜென்னி). எத்தனை அற்புதமான பெண் இவர். எனக்கும் இந்த பெண்மணிக்கும் எந்த உறவும், தொடர்பும் இல்லை.ஆனால் எல்லாவற்றையும் மீறி ஒருவித பாசம் என்றும் உண்டு…

    சரித்திரத்தில் “தியாகம்” என்ற வார்த்தையை நீக்கி விட்டு “ஜென்னி” என்ற வார்த்தையை பதிய வேண்டும் என்பது எனது விருப்பம்.. உலக பெண்கள் தியாகம் அனைத்தையும் ஒரு எடை தராசிலும், ஜென்னியை ஒரு தராசிலும் வைத்தால் ஜென்னியின் எடை தான் கூடுதலாக இருக்கும்…

    நவீன காலத்து பெண்கள் ஜென்னியின் தியாகத்தை, அவளின் வாழ்க்கையை, துயரத்தை வாசித்தாலே வாழ்க்கையின் உன்னதம் என்ன என்பது விளங்கும்…

  11. எப்படி இருக்கீங்க கிரி..

    ரொம்ப நாளுக்கு அப்புறம் கமெண்ட் போட வைத்த பதிவு.

    தாங்கள் கூறியது 100% உண்மை. ஆனால் நம்மில் இன்னும் படித்தவர்கள் கூட ஆண் பிள்ளைகளை உயர்வு என்றும் பெண் பிள்ளைகளை சற்று குறைவாகவும் தான் கருதுகின்றனர். வரும் காலத்தில் இந்நிலைமை இன்னும் மோசமாகலாம்.

    கிரி.. தாங்கள் தளத்திற்கு வரும் அனைவரின் முகமரியாவிடடலும் எனது நெருங்கிய நண்பர்களாகவே உணர்கிறேன். குறிப்பாக நண்பர் ராஜ்குமார், முஹமத் யாசின், அருண் ஆகியோர்.

  12. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @வினோத் நீங்கள் கூறியதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முழுக்க வரவேற்கிறேன். நீங்கள் கூறியது போல எதிர்காலத்தில் இது போல மாற்று சாதி திருமணங்களால் தான் சாதியப் பிரச்சனை குறையும் (ஒழியும் என்று தோன்றவில்லை). உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    @ராஜ்குமார் நீங்க இதை ஏற்கனவே கூறி இருக்கீங்க என்று நினைக்கிறேன். தற்போது ஒரு பிரச்சனை இருக்கிறது.. வரதட்சணை வேண்டாம் என்று கூறினால் சிலர் பையனுக்கு எதோ பிரச்சனை போல என்று கூறி விடுகிறார்கள் 🙂 BTW எங்கள் சமூகத்தில் வரதட்சணை கிடையாது. திருமண செலவு கூட இரு வீட்டாரும் இணைந்து தான் செய்வார்கள்.

    உங்கள் நிலை ரொம்ப பரிதாபம் தான். மன உளைச்சலாக இருந்து இருக்கும். என்ன செய்வது இது போன்ற விஷயங்கள் நம் கையில் இல்லையே.

    உங்கள் மனைவியுடன் மேலும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.

    @கௌரிஷங்கர் உண்மை (உங்க இரண்டு பதிலுக்கும்)

    @சரத் காதலிலும் பல பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. இதெல்லாம் சரியாக பல தலைமுறைகள் எடுக்கும்.

    @குறும்பன் வாங்க ரொம்ப மாதமாக ஆளைக் காணோம்!

    படிக்காத பெண்கள் கூட விவசாய பையனை திருமணம் செய்ய மறுப்பது உண்மையில் வருத்தம் அளிக்கிறது. இது எங்கள் பகுதியில் நடந்து கொண்டுள்ளது.

    கேரளப் பெண்களை திருமணம் செய்வது பற்றி கூறி இருக்கிறேனே! நீங்கள் சரியாக கவனிக்காமல் இருந்து இருக்கலாம்.

    @யாசின் நீங்கள் கூறிய ஜென்னியைப் பற்றி நான் எங்கும் படித்ததில்லை. உலகத்தில் ஒருவரை விட ஒருவர் தியாகமா தெரிகிறார்கள். இவர் கதை தெரிந்ததால் பலர் கொண்டாடலாம் இன்னும் பலரின் தியாகம் உலகிற்கு தெரியப்படாமலே போய் இருக்கும். நம்ம ஊர்ல எடுத்துக்கொண்டாலே இது போல நிறைய இருப்பார்கள். நமக்கு தெரியவில்லை அவ்வளோ தான்.

    @சிட்டிபாபு நல்லா இருக்கேன் சிட்டி பாபு.

    நீங்கள் கூறுவது தற்போது உண்மை தான் ஆனால் எதிர்காலத்தில் இப்படி இருக்க வாய்ப்பில்லை.

    உண்மை தான் நான் இது வரை இவர்கள் யாரையும் பார்த்தது இல்லை, பேசியது கூட கிடையாது. இவர்கள் போன்றவர்களே என்னை தொடர்ந்து எழுத வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

  13. கார்த்தி நீ எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. இது வழக்கமாக அனைவரும் கடந்து வரும் ஒரு நிகழ்வு தான். எனக்கும் இது போல நடந்து இருக்கிறது ஆனால். இறுதியில் அனைத்தும் நல்லபடியாகவே முடிந்தது.

    தங்களின் இளமைக் காலங்களில் காதலிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். எனக்கும் ஒரு (தலைக்) காதல் உள்ளது அதற்காக நான் என்ன மோசமாகவா நடந்து கொள்கிறேன். பெண்களும் அப்படித்தான் கல்லூரி படிக்கும் போது இன்னொருவர் மீது கவரப்படும் போது அது காதலாகவோ ஒரு தலைக் காதலாகவோ முடிகிறது. எனவே இதற்காக டென்ஷன் ஆக வேண்டிய விசயமில்லை.

    Read: https://www.giriblog.com/bus-love/

    திருமணத்திற்கு முன் காதல் என்பது பிரச்சனையில்லை ஆனால், அது திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்தால் மட்டுமே பிரச்சனை. காதலிக்காதவர்களைத் தான் திருமணம் செய்வேன் என்றால் உலகில் யாருமே திருமணம் செய்ய முடியாது.

    அனைத்துப் பெண்களும் இதே போல என்று பயப்படத் தேவையில்லை. . ஆண்களும் இதே போல தான். காதலிக்காத ஆண்கள் என்று எவரும் இருப்பார்களா? இனக் கவர்ச்சியாவது இருந்து இருக்கும்.

    நிச்சயம் ஆன பிறகு நீங்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக் கொள்வீர்கள் அந்த சமயத்தில் இது குறித்து பேச்சு வரும் அந்த சமயத்தில் இது பற்றி தெரிந்து கொள்ளலாம். ராஜ்குமார் கூறியது போல சந்தேகத்தோடவே இருக்க வேண்டாம். அது சிக்கலில் சென்று விடும்.

    பெண் பார்க்கப் போன அனுபவம் எனக்கில்லை எனவே அது குறித்து எனக்கு ஐடியா இல்லை. தொலைபேசியில் பேசும் போது பக்குவமாக கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    உங்கள் வீட்டில் அம்மா இல்லாதது ஒரு கூடுதல் சவுகரியமாகத் தான் சிலர் நினைப்பார்கள். ஏனென்றால் மாமியார் மருமகள் சண்டை வர வாய்ப்பில்லை. எங்கள் சொந்தத்தில் இது போல நடந்து இருக்கிறது.

    தற்போதைய பெண்கள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்ன பணியில் இருக்கிறீர்கள்? சம்பளம் எவ்வளவு? இது குறித்து தான் யோசிப்பார்கள் மற்றவை பெரிய பிரச்சனையில்லை.

    கார்த்தி வீண் பயம் / சந்தேகம் வேண்டாம். இந்தக் கட்டுரை இப்படியும் நடக்கிறது என்பதை கூறத் தானே தவிர தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இப்படித்தான் என்பதல்ல. ஆண்கள் பற்றி எழுதினாலும் இந்தப் பிரச்சனை இல்லாமல் வேறு விசயத்தில் இதே போல எழுதலாம். பிரச்சனைகள் அனைத்துப் பக்கமும் இருக்கிறது.

    அனைத்தும் நல்ல படி நடக்கும். உனக்கு உன் மனசு போலவே நல்ல பெண்ணாக அமைய (அமையும்) என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙂

    • நன்றி அண்ணா ….

      நான் இதுவரை யாரையுமே காதலிக்காத பெண் தான் எனக்கு வேண்டும் என்பது என் நிலைப்பாடு இல்லை . ஆனால் ஒருவரை மனதில் வைத்துகொண்டு பெற்றோரின் கட்டாயத்துக்காக இன்னொருவரை திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் அதன் பிறகு குடுபத்தில் நிம்மதி இல்லாமல் இருக்க செய்துவிடுகிறார்கள். இதை நான் பல குடும்பங்களில் (திருவண்ணாமலை- சாத்தனூர் அணை பக்கம் )நடந்து சின்னாபின்னமானதை பார்த்து இருந்ததால் தான் நான் இப்படி ஒரு கேள்வியை தங்கள் முன் வைக்க வேண்டியதாயிற்று.

      இதற்கான சரியான பதிலை தாங்களும் . ராஜ்குமார் அண்ணாவும் எனக்கு கொடுத்துள்ளிர்கள் . அதை நான் சரியாக பயன்படுத்தி நல்வாழ்க்கை அமைத்திட பாடுபடுவேன்
      தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா …….
      **** என் கல்யாணத்துக்கு தாங்களும் வர வேண்டும் என்பது என் விருப்பம் அண்ணா .. ஆகையால் உங்களுக்கு இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதம் கழித்து இந்தியா வரும் எண்ணம் ஏதாவது இருக்கிறதா என தெரிவிக்கவும் அண்ணா.

  14. கார்த்தி நான் ஊருக்கு வந்தாலும் சென்னை வர மாட்டேன்.. நேராக கோவை சென்று விடுவேன். அடுத்த வருடம் மொத்தமாக சென்னை வந்து விடுவேன் என்று நினைக்கிறேன். அப்போது நிச்சயம் சந்திக்கிறேன். எனக்கும் திருவண்ணாமலை வர வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

  15. giri,

    These days when the bride is in foreign and esp in S A our people are hesitating. Enna dannu ketta.. avanga solra karaname vithyasama irukku.. I have a few friends of mine who are struggling to get married.. avan avan thalai kanji poi irukku.. eppayya kalyanam intha dialogue naan solliye pala varusham aachu… Unmai ithu. Ivanga podra conditions partha.. Manal Kayiru Ultava irukku..

  16. பாஸ் உங்க கட்டுரையை இப்ப தான் படித்தேன்.. நானும் இந்த கொங்கு மண்டலத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்.. இந்த பிரச்னை இந்த பகுதியில் தான் அதிகமாக இருக்குமா என எனக்கு சந்தேகம் வருது.. அப்பறம் 2011 ஆண்டில் எடுத்த ஆய்வு படி தமிழ்நாட்டுல ஆண் – பெண் விகிதம் 996. இது நல்ல ஆரோக்கியமான விகிதம். பிரச்சனை நம்ம வாழ்க்கை முறை மாறுதல் காரணமாய் வந்தது என நெனைக்கிறான்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!