பெரிதாக எழுத நினைத்துப் பல விமர்சனங்கள் எழுதப்படாமலே போய் விடுவதை விட, பன் மொழிப் படங்கள் சிறு விமர்சனங்கள் எழுதுவது நல்லது. Image Credit
பன் மொழிப் படங்கள்
North 24 kaatham (2013) மலையாளம்

மாறுபட்ட குணங்களைக் கொண்டவர்கள் பயணிக்கும் “அன்பே சிவம்” மாதிரியான ஒரு கதை. Fahadh Faasil ரொம்ப சுத்தக்காரர். ஒரு இயந்திரம் போல நடந்து கொள்வார்.
இதனால் அலுவலகத்தில் கூட இவரைக் கண்டால் அனைவருக்கும் பயம் மற்றும் கிண்டல் கேலி. சுத்தம் செய்த கையையே சுத்தம் செய்து கொண்டு இருப்பார். எங்கே சென்றாலும் ஹைஜீனிக்காக இருப்பார்.
இவர் கதாபாத்திரம் (ரொம்ப சுத்தமாக இருப்பது) ஆங்கிலத்தில் லியனார்டோ டிகாப்ரியோ நடித்த ஒரு கதாப்பாத்திரத்தின் காபி.
சுத்தமாக இருப்பவர் பற்றிய கதை என்பதால், எனக்கு ஒன்று நினைவிற்கு வருகிறது.
நான் சென்னை மைலாப்பூரில் இருந்த போது குளம் அருகே உள்ள “சங்கீதா உணவகம்” செல்வேன். அங்கே ஒருவர் பட்டையும் கொட்டையுமா சாப்பிட வருவார் 🙂 .
சுத்தம் என்றால் அப்படியொரு சுத்தம். அருகே / எதிரே இருப்பவர் உடன் சண்டை நடக்காமல் இருக்கவே இருக்காது.
கொஞ்சம் நம் கை, இலையிலிருந்து கொஞ்சம் தண்ணீர், காய்கறி ஏதாவது அவர் இலையில் பட்டு விட்டால், அவ்வளோ தான்.
செம டென்ஷன் ஆகிடுவார். துவக்கத்தில் இவர் அருகே அமரவே எனக்குப் பயம். பின்னர் பழகி அவர் செய்யும் கலாட்டாக்களை!! ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.
வேண்டும் என்றே ஏதாவது செய்வேன் அவர் திட்டினால் எனக்குச் சிரிப்பு வரும்.
இவர் பற்றித் தெரியாதவர் யாராவது அருகே அமர்ந்து இவரிடம் மாட்டி விழிப்பதை பார்த்துச் சிரித்துக்கொண்டே இருப்பேன் 🙂 . ஹி ஹி நமக்கு அதில் ஓர் ஆனந்தம்.
Fahadh Faasil நெடுமுடி வேணு சுவாதி மூவரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டி வருகிறது.
இதில் கிடைத்த அனுபவங்களில் எப்படி Fahadh Faasil தன்னை மாற்றிக்கொள்கிறார் என்பது தான் கதை.
பயணிப்பது போல இருக்கும் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும் எனவே, இதுவும் பிடித்தது அதோடு கதையும் வித்யாசமாக இருந்தது.
பரிந்துரைத்தது – Shankar Muthuveeru
An Innocent man (1989) ஆங்கிலம்
கணவன் மனைவியாக நிம்மதியாக வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஒரு நாள் இரு துப்பறியும் உளவாளிகள் வேறு வீட்டில் நுழைய, தவறுதலாக உங்கள் வீட்டில் நுழைந்து உங்களைக் குற்றவாளி என்று நினைத்துச் சுட்டு விடுகிறார்கள் [ஆனால் சாகவில்லை] .
தங்கள் தவறை மறைக்க உங்கள் வீட்டிலேயே போதை மருந்து, துப்பாக்கி என்று வைத்துக் குற்றவாளி ஆக்கிச் சிறைக்கு அனுப்பினால், உங்கள் மன நிலை எப்படி இருக்கும்? இது தான் இந்தப் படத்தின் கதை.
சிறையில் நடக்கும் பிரச்சனைகள் பார்த்தால் பீதியாக இருக்கிறது. இங்கே கறுப்பர் வெள்ளையர் குழு இருக்கிறது.
நீங்கள் ஏதாவது ஒன்றில் இணைந்தே ஆக வேண்டும் இல்லை என்றால் உங்களைச் சிறையிலேயே கொன்று விடுவார்கள்.
நம்ம நாயகன் வெள்ளையர் அதனால் கறுப்பர்களிடம் மாட்டித் தர்ம அடி வாங்குவார்.
இறுதியில் என்ன ஆகிறது? தான் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க முடிந்ததா என்பது தான் படம். சிறை சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காகப் பார்க்கலாம்.
பரிந்துரைத்தது – K.Rahman
Seven Samurai (1954) ஜப்பான்
உலகின் பிரபலமான இயக்குநர் அகிரா குரசோவா இயக்கிய ஜப்பான் மொழி படம்.
கிராமத்தில் தங்கள் விளைச்சலை கொள்ளைக்காரர்கள் திருடிச் செல்வதை தடுக்க 7 சாமுராய் வீரர்களைக் கிராமத்தினர் அமர்த்துகின்றனர்.
அவர்கள் எப்படி கொள்ளையர்களை வீழ்த்தி மக்களைக் காக்கின்றனர் என்பதை மிக மிகச் சுவாரசியமாகக் கூறி இருக்கிறார்.
இந்தப் படத்தின் திரைக்கதை அதில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எல்லாம் பார்க்கும் போது மிரட்சியாக இருக்கிறது.
அருமை அருமை. அவசியம் பார்க்க வேண்டிய படம்.
பரிந்துரைத்தது பாமரன்.
D-Day (2013) ஹிந்தி
பாக்கில் உள்ள தாவூத்தை கைது செய்ய இந்தியாவிலிருந்து ஒரு குழு உருவாக்கப்படுகிறது.
பாக்கில் நீண்ட வருடங்கள் தங்கி, உளவு வேலைப் பார்த்துத் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றினார்களா என்பது தான் கதை. செம்ம படம்.
நம்மவர்களும் நாச வேலைகளில் ஈடுபடுகிறார்கள், பலரை கொல்கிறார்கள். இது நாள் வரை பாக்கில் உள்ளவர்கள் தான் (ISI) இந்தியாவில் இதுபோலச் செய்கிறார்கள் என்று நினைத்து இருந்தேன்.
இது இன்னொரு பக்கத்தைக் காண்பிக்கிறது.
தாவூத்தாக நடித்தவர் அருமையான நடிப்பு. இறுதியில் இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் இந்தியாவை பிரித்து மேய்கிறது.
இதில் அர்னாப் கோஸ்வாமி பற்றியும் கூறுகிறார் 🙂 . இறுதி 25 நிமிடத்தை நான் மூன்று முறை பார்த்தேன் 🙂 .
இப்படத்தில் தான் ஸ்ருதி கவர்ச்சியாக நடித்து இருக்கிறார்.
இதைத் தான் தமிழில் வெளியிடக் கூடாது என்னுடைய இமேஜ் போய்டும் என்று சண்டைப்போட்டார் ஆனால், படம் சமீபத்தில் வெளியானது. ஓடியதா என்பது தெரியவில்லை.
பரிந்துரைத்தது பாபு
Le Grand Voyage (2004) பிரெஞ்ச்
Adaminte Makan Abu படம் போல ஹஜ் செல்பவர் பற்றிய கதை. மூத்த மகன் வர முடியாத சூழ்நிலையால் தன்னுடைய கடைசி மகனைக் கார் ஓட்டக் கூறி பயணம் செய்ய ஆரம்பிக்கிறார்.
அவரின் மகனுக்கு உடன்பாடில்லை.
மிகவும் கண்டிப்பான இவருடன் பயணிக்கும் அவருக்கு நேர் எதிர் கருத்துகளைக் கொண்ட அவரது மகன், எப்படி இறுதியில் தன் அப்பாவைப் புரிந்து கொள்கிறான் என்பது தான் கதை.
பிரான்சில் இருந்து மெக்காவிற்கு காரிலேயே பயணம். இவர்கள் பல நாடுகளைக் கடந்து 3000 கிலோ மீட்டர் பயணம் செய்து ஹஜ் அடைகிறார்கள்.
இதில் ஹஜ் காண்பிக்கப்படுகிறது. ரொம்ப அருமையான படம்.
பயணங்கள் எனக்கு ரொம்பப் பிடித்தமானது அந்த வகையில் இந்தப் படத்தைக் கூடுதலாக ரசித்தேன்.
படம் அவங்க கார் போலவே கொஞ்சம் மெதுவாகச் செல்லும் ஆனால், என்னால் சலிப்படையாமல் ரசிக்க முடிந்தது.
ஏன் இவ்வளவு தூரத்தை விமானத்தில் வராமல் காரில் பயணிக்கக் கூறுகிறார் என்று கூறுவது நன்றாக இருக்கும், இறுதியில் அதன் முக்கியத்துவமும் புரியும்.
பரிந்துரைத்தது – யாசின்
The Wolf of wall street (2013) ஆங்கிலம்

எப்படி தன்னுடைய பேச்சுத் திறமையால் பங்குச்சந்தையில் / வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார் அதனால், அவர் பெறும் சிக்கல்கள் என்று போகிறது.
லியனார்டோ டிகாப்ரியோ பட்டாசாக நடித்துள்ளார். இவர் பெயர் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பல முறை பரிந்துரைக்கப்பட்டும் இவருக்கு விருது கிடைக்கவில்லை.
இவரை ரொம்பப் பிடிக்கும். வித்யாசமான படங்களில் நடித்துப் பட்டையைக் கிளப்புகிறார். இந்தப் படத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லை (நிஜமாகவே). படம் போர் அடிக்காமல் செல்கிறது.
இதில் உடலுறவு காட்சிகள் மற்றும் குரூப் செக்ஸ் காட்சிகள் அதிகம் எனவே, முடிவு செய்து பார்க்கவும். இது உண்மைக் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
லியனார்டோ டிகாப்ரியோவிற்கு ஆஸ்கார் கிடைத்தால் சந்தோசப்படுவேன்.
பரிந்துரைத்தது – NIL
Red beard (1965) ஜப்பான்
“வாகை சூடவா” படம் போல கதை. இதில் ஆசிரியர் அதில் மருத்துவர். பயிற்சிக்காக வருபவர் மூத்த மருத்துவரின் கண்டிப்பு பிடிக்காமல் கோபத்தில் இருக்கிறார்.
விரைவில் கிளம்பி விட வேண்டும் என்றும் நினைப்பவர் எப்படி மூத்தவரின் அன்பில் தொடர்ந்து இங்கேயே இருக்க விரும்புகிறார் என்பது தான் கதை.
இடைவேளைக்கு முன்பு கொஞ்ச நேரம் ரொம்ப போர் அடிக்கிறது. மற்றபடி படம் நன்றாக இருந்தது. இதில் வரும் சண்டைக் காட்சி செம்மையாக இருந்தது.
பழைய ஜப்பான் மொழிப் படங்களில் இடைவேளை விட்டால் 5-10 நிமிடத்திற்கு இருட்டாக இருக்கும், பின்னணி இசை ஓடிக்கொண்டு இருக்கும்.
நாம் இதைக் கேட்க வேண்டும் அல்லது ஃபார்வர்ட் செய்ய வேண்டும். வித்யாசமாக இருக்கிறது 🙂 .
மேலே கூறிய Seven Samurai படத்திலும் இப்படித்தான் இருந்தது.
பரிந்துரைத்தது – பாமரன்
Body of lies (2008) ஆங்கிலம்

லியானார்டோ டிகாப்ரியோ நடித்த படம். ஈராக் அமெரிக்கா சண்டை கதை. ஒன்றுமே புரியலை.
சில படங்கள் சப் டைட்டிலுடன் பார்த்தால் கூடப் புரியாது அது போல படங்களில் இதுவும் ஒன்று.
அப்படி இருந்தும் இந்தப் படம் ஏன் நான் பார்த்தேன் என்றால், இதில் வரும் ஒரு ஃபிகருக்காகத் தான். Image credit – timcallister.blogspot.com
ஈரான் நாட்டைச் சார்ந்த நடிகையாம். இந்தியப் பெண் என்றே நினைத்து இருந்தேன்.
ஆங்கிலப் படத்தில் நம்ம ஊர் பெண் இருக்கிறாரே என்று நினைத்துத் தான் முதலில் பார்க்க ஆர்வமானேன்.
இதில் ஒரு காட்சியில் தீவிரவாதிகள் அல்லாவை வணங்கி விட்டு லியனார்டோ டிகாப்ரியோவை கொல்லத் தயாராகும் காட்சி மிரட்டலாக இருந்தது ப்ப்ப்பா!
இந்தப் படத்தில் ஆளில்லா விமானம் மூலம் அனைவர் நடவடிக்கையும் அமெரிக்கா கண்காணிக்கும்.
இதனால் பாலைவனத்தில் இவரைக் கடத்த அவரைச் சுற்றி பலமுறை கார்களைச் சுற்ற வைத்துப் புழுதியை கிளப்பி அதனுள் இவரைத் தூக்குவார்கள்.
இதனால் இவர் எந்தக் காரில் கடத்தப்படுகிறார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போகும். எப்படி? 🙂 இந்தக் காட்சி பில்லா 2 வில் சுட்டு இருந்தார்கள்.
அந்த விமர்சனத்தில் யாரோ இப்படத்தில் இருந்து சுட்டது என்று கூறியதால் இதைப் பார்த்தேன். யார் என்று நினைவில்லை.
Thattathin Marayathu (2012) மலையாளம்
ஒரு அழகான காதல் கதை. ஒரு இந்து பையன் முஸ்லிம் பெண் காதல் தான் கதை. கதையில் புதிதாக ஒன்றுமில்லை ஆனால், திரைக்கதை அருமையாக இருக்கிறது.
இதை முழு விமர்சனமாக எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன் ஆனால், எழுத நேரமில்லை அல்லது தாமதித்து மறந்து விட்டேன்.
இது போல நிறைய படம் எழுத முடியாமல் போய் விட்டது. அவசியம் பாருங்க. நிறையப் பேர் பரிந்துரைத்து இருந்தார்கள்.
The Japanese wife (2010) பெங்காலி
கொஞ்ச மாதங்கள் முன்பு ஃபேஸ்புக்கில் காதலித்த இருவர் நேரில் சந்திக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.
இதில் பல கற்பனையோடு பொண்ணு சூப்பர் ஃபிகர் ஆக இருக்கும் என்று வந்தவனுக்கு பெண்ணை நேரில் பார்த்து அவனுடைய கற்பனைக்கு எதிராக இருந்ததால் வெறுத்துப் போய் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டானாம்.
இதை எதற்குச் சொல்றீங்க என்று கேட்கறீங்களா! 🙂 காரணம் இருக்கிறது.
இந்தப் படத்தில் பெங்காலி ஆணுக்கும் ஜப்பான் பெண்ணுக்கும் பேனா நட்பின் மூலம் காதல் வளருகிறது.
இருவரும் காதல் கோட்டை அஜித் தேவயானி மாதிரி கடிதங்களிலே காதலிக்கிறார்கள். இதில் இன்னொரு படி மேலே சென்று திருமணமும் செய்து கொள்கிறார்கள்.
நேரில் சந்திக்காமலே 15 வருடத்திற்கும் மேலே கணவன் மனைவியாக இருக்கிறார்கள்.
இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் படம்.
இதில் பெங்காலி நபராக “ராகுல் போஸ்” நடித்துள்ளார். விஸ்வரூபம் படத்தில் வில்லனாக வருவாரே அவரே தான். எனக்கு இவரின் நடிப்பு சுத்தமாகப் பிடிக்கலை.
உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன்
பன் மொழிப் படங்கள் எப்போதுமே சுவாரசியமானவை.
கொசுறு
இணையத்தில் தற்போது தலைவர் ரசிகர் உருவாக்கிய காணொளி சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கிறது. இதுவரை குறைந்தது 40 முறை பார்த்து இருப்பேன் .
பேசாம இவங்க எல்லாம் திரைப்படங்களில் எடிட்டிங் துறையில் முயற்சித்துப் பார்க்கலாம் 🙂 .
தற்போது இந்தக் காணொளியை மொபைலில் காபி செய்து வைத்து விட்டேன்.
ரஜினி பற்றித் தெரியாதவங்க (மற்ற நாட்டினர்) கேட்டால் கண்ணா! இதைப் பார்த்துக்கோ.. தலைவர் ஸ்டைல் / மாஸ் என்னன்னு புரிஞ்சுக்கோன்னு சொல்லிட வேண்டியது தான்.
VIP பின்னணி இசையில் இதைப் பார்த்தால் அவனவன் கிறுகிறுத்துப் போய்ட மாட்டான்…! 😉 .
The Wolf of wall street & D-Day, ம்ம் நோட் பண்ணிக்கிறேன். தேங்க்ஸ் கிரி.
சிறந்த சிறிய விமர்சனங்கள் கிரி சார்.. an innocent man படத்தை போல தமிழில் நெல்லை சந்திப்பு என்று ஒரு படம் வந்திருந்தது. city of god படத்தின் விமர்சனம் நீங்கள் முன்பு எழுதி இருக்கிறீர்களா என்பது தெரியாது. இதுவரை எழுதவில்லை என்றால் இனி உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.. நன்றி.
என்னனா இவ்ளோ வும் இங்கிலிஸ் படமாவே இருக்கு … இந்த படத்தோட டிவிடிகளை எப்போ நான் வாங்குறது எப்போ நான் பாக்குறது .. யாருக்கோ வெளிச்சம் ….
எப்படியாவது பாக்கணும் …
அனைத்து படங்களின் சிறு விமர்சங்களும் சிறப்பாக இருந்தது … நச்சுனு இதான் மேட்டர்னு தெளிவா சொல்லி இருக்கிங்க …
உங்களின் எழுத்துகளில் ஒரு தெளிவு வசீகரம் அழகு இருக்குனா இப்படி எழுத எப்படி கத்துகிட்டிங்க அண்ணா …
நான் இந்த கலையை வளர்த்துக்கொள்ள என்ன மாதிரி பயிற்சி எடுக்கணும் அண்ணா
கிரி.. இது போன்ற பதிவுகளை என்றும் வரவேற்பவன் நான்..நீங்கள் கூறியது முற்றிலும் சரியே.. உங்கள் தளத்தில் நாங்கள் எதிர்பார்ப்பது உங்களுக்கு பிடித்த சுதந்திரமான எழுத்துகளே.. ஒரே மாதிரியான சாயலில் பதிவுகளை தராமல் வெவ்வேறு கலவையாக இருப்பது இன்னும் சிறப்பே!!!
Excel ஃபைல் :
============ இந்த ஒரு வார்த்தை 8 வருடம் என்னை பின்னோக்கி செல்ல வைத்துவிட்டது… நண்பன் சக்தியுடன் சேர்ந்து கோவையில் தினமும் பார்த்த படங்கள், அடுத்து பார்க்கவேண்டிய படங்கள் என அனைத்தையும் என் அலுவலக கணினியில் Excel ஃபைலில் சேமித்து வைத்து இருந்தேன். சக்தியிடம் இன்றும் நகல் இருக்கும் என நினைக்கிறேன்..
படங்கள் தொகுப்பு அருமை ஆனா இதுல எதையும் இன்னும் நான் பார்க்கல.. டிடே டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன்.
எக்ஸ்சல் பைல் போடுற அளவுக்கு என் கலெக்ஷன் இல்ல… இருந்தாலும் ஒரு 800 க்கும் மேற்பட்ட படங்கள் பார்ப்பதற்காக 2டெரா பைட் ஹார்ட் டிஸ்கில் வச்சிருக்கேன்.
பாடி ஆப் லைஸ் – படம் புரியாததால இன்னும் பார்க்கல.
இவ்வளவு இருந்தாலும், பல படங்களை யுடுபிலேயே பார்த்துவிடுவேன்.
இப்போதைக்கு நான் 300 ரைஸ் ஆப் எம்பெரர் படத்துக்காகத்தான் வெயிட்டிங்.
கோச்சடையான ரொம்பவே நம்புறீங்க… பார்ப்போம்.
அண்ணே உங்களுக்கு எடிட்டிங் அவுளவு கேவேலமா போச்சா
அனைவரின் வருகைக்கும் நன்றி
@சரத் City of god விமர்சனமாக எழுதவில்லை ஆனால் சிறு விமர்சனமாக எப்போதோ எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். சார் எல்லாம் வேண்டாம் சரத், கிரி போதும்.
@கார்த்திகேயன் நான் DVD வாங்கிப் பார்க்கவில்லை அனைத்துமே இணைய தரவிறக்கம் தான். DVD வாங்கி அதை யாரு Maintain செய்வது. subtitle உடன் தான் அனைத்துப் படங்களையும் பார்த்தேன்.
நான் எழுதக் கற்றுக்கொண்டு பின் பதிவு எழுதவரவில்லை. எழுத வந்த பிறகு தான் கற்றுக்கொண்டேன். இயல்பா எழுதுவது எனக்கு தானாகவே வந்தது.. நான் இதற்காக முயற்சிக்கவில்லை ஆனால், தொடர்ந்து எழுதியதின் மூலம் மட்டுமே என் தவறுகளை திருத்திக் கொள்ள முடிந்தது.
நன்றாக எழுதுவது என்பது நிறைய புத்தகங்களை படிப்பதன் மூலம் கற்றுக்கொள்ளலாம். சுஜாதா புத்தகங்கள் படித்தால் உங்களுக்கு எளிமையான எழுத்துக்கள் பிடிபடும். (நான் படித்த புத்தகங்கள் ரொம்பக் குறைவு)
எப்போதுமே எழுதும் போது நமக்கு அனைத்தும் தெரியும் படிப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற மன நிலையில் எழுதினால், நாம் மற்றவர்களை கவர முடியாது. அதே போல ரொம்ப தன்னடக்க சீன் போட்டாலும் இவன் ரொம்ப நல்லவன்டா என்று ஆர்வம் காட்ட மாட்டார்கள். இது இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் எழுத வேண்டும். அதோடு முக்கியமா அனைவருக்கும் புரியும் படி எழுத வேண்டும். புரியாமல் எழுதினால் தான் நம்மை பெரிய ஆள் என்று நினைப்பார்கள் என்று சிலர் நினைப்பார்கள். அது ஓரளவு உண்மை தான் ஆனால், அது நிலைக்காது.
கமெண்ட் போடுபவர்கள் நம் தவறை சுட்டிக் காட்டினால் அவர்கள் மீது கோபப்படாமல் நம் மீது தவறு இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும். இது தான் உங்கள் எழுத்தை மேம்படுத்த உதவும்.
கடைசியா, யாரையும் பார்த்து காபி அடிக்கக் கூடாது. மற்றவரைப் போல எழுத நினைக்கக் கூடாது. நமக்கு என்று ஒரு தனி ஸ்டைல் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே உங்களை மற்றவர்களிடத்து இருந்து வேறுபடுத்திக் காட்டும்.
@யாசின் வேற வழியே இல்ல.. உங்க ஆளு சக்தியை சந்தித்தே ஆக வேண்டியது தான் 🙂
@ராஜ்குமார் செம்மையா படம் வைத்து இருப்பீங்க போல இருக்கே 🙂 சூப்பர் பாஸ். YouTube ல அனைத்துப் படங்களுக்கும் subtitle இருக்காது அது தான் பிரச்சனை. நானும் 300 க்கு காத்திருக்கிறேன்.
கோச்சடையான் .. ராஜ்குமார் என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே! 🙂 இந்தப் படம் ஓடினால் தலைவர் சென்ற பிறவியில் செய்த புண்ணியமாகத் தான் இருக்க வேண்டும். எனக்கு படம் மீது சுத்தமா நம்பிக்கையில்லை. தலைவரின் குரல், ரவிக்குமார் திரைக்கதை, ரகுமான் இவை தான் எனக்கு இருக்கும் நம்பிக்கை. படம் ஓடினால் ரொம்ப சந்தோசம். ஓடவில்லை என்றால் வருத்தம் இருக்கும் ஆனால், பெரிய ஏமாற்றம் இருக்காது.
@வெங்கட் நீங்க சொல்வதைப் கேட்டு எனக்கு கவுண்டர் கூறும் வசனமான “டேய்! உன்னை எல்லாம் யார்ரா இப்படி யோசிக்க சொல்றது” என்பது தான் 🙂 🙂 (Jus kidding)
நான் முயற்சி செய்யலாம் என்று தானே கூறி இருக்கிறேன், தொழில்முறை திறமையாளர்களும் இவர்களும் ஒன்று என்றா கூறி இருக்கிறேன். இதுவும் ஒரு திறமை தான் வெங்கட். என்னால் இது போல சத்தியமாக செய்ய முடியாது. முன்பு குறும்படம் எடுப்பவர்கள் திரைப்படம் எடுக்க முன் வந்த போது “குறும்படம் எடுப்பதும் திரைப்படம் எடுப்பது ஒன்றா?” என்று கேட்டார்கள். தற்போது அவர்கள் சாதிக்கவில்லையா!
அதெல்லாம் இருக்கட்டும்.. இங்க ஒருத்தன் இவ்வளோ பெரிய பதிவு கஷ்டப்பட்டு எழுதி இருக்கேனே அதைப் பற்றி ஒன்றுமே கூறாமல் இப்படி இந்த ஒரு வரிக்காக டென்ஷன் ஆகி இருக்கீங்களே! 🙂
என்ன பாஸ் கலைனர் மதிரியிய கேட்ட கேள்விக்கு சம்பத்மே இல்லாம பதில் சொல்லறீங்க பேசாம அரசியல்க்கு போய்டுங்க