வட்டியும் முதலும்

7
வட்டியும் முதலும்

ராஜூ முருகன் விகடனில் எழுதிய தொடரை “வட்டியும் முதலும்” என்ற பெயரில் புத்தமாக வெளியிட்டு இருக்கிறார்கள். Image Credit – www.vikatan.com

25% படித்தவுடனே ஒரு மனுசன் இத்தனை சம்பவங்களை அதுவும் நபர்களின் பெயருடன் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா?! என்று வியப்பாக இருந்தது.

இவர் கூறியதில் சில புனைவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இவ்வளவை நினைவு வைத்துக் கூறுவது ஆச்சர்யம் அளிக்கிறது.

இதைப் படிக்கும் போது படிப்பவர்களுக்குத் தங்களின் சிறு வயது நினைவுகள் திரும்ப வந்தால் ஆச்சரியமில்லை.

ஏனென்றால் இதில் கூறப்படாத சம்பவங்களே இல்லை எனும் அளவிற்கு அத்தனை கொட்டிக் கிடக்கிறது.

லாலா லாலா

புத்தகம் நடுத்தர நபரின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதால், சில நேரங்களில் விக்ரமன் படம் பார்ப்பது போல உள்ளது. “லாலா லாலா” மட்டும் தான் இல்லை.

சோகம், சிரமம், அடுத்தவர்கள் கஷ்டம் போன்ற விசயங்களைப் படிப்பதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு இந்தப் புத்தகம் சலிப்படைய வைக்கலாம்.

பெரும்பாலான மக்கள் இதில் கூறியுள்ளவற்றை தாண்டி வராமல் இருக்க வாய்ப்புகள் குறைவு. என் ஏராளமான சிறு வயது சம்பவங்கள் படிக்கும் போது நினைவில் வந்தது.

கம்யூனிசம்

ராஜூ முருகன் முன்பு கம்யூனிசத்தில் ஆர்வம் கொண்டு இருந்ததால் இதில் அவ்வப்போது கம்யூனிச எண்ணங்களும் வருகின்றன.

ஏழைகள் இவ்வளவு சிரமப் படுகிறார்கள் பணக்காரர்கள் இப்படி இருக்கிறார்களே என்ற ஆதங்கம் / கழிவிரக்கம் அவ்வப்போது வெளிப்படுகிறது.

அனுமதியின்றி பயன்படுத்தலாமா?

ராஜூ முருகன் ஏகப்பட்ட சம்பவங்களைப் பெயருடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதைப் படிக்கும் சம்பந்தப்பட்டவர்கள் கோபித்துக் கொள்ளமாட்டார்களா அல்லது தர்மசங்கடமாக உணரமாட்டார்களா?!

உறவினர்கள், நண்பர்கள், உடன் பணி புரிந்தவர்கள் என்று அனைவரைப் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார்.

எழுத அவருக்கும், படிக்கும் நமக்கும் சுவாரசியமாக இருக்கலாம் ஆனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதே போல இருக்குமா!!

சம்பந்தப்பட்டவர் வேறு மனநிலையில் கூறி இருக்கலாம் ஆனால், நாம் புரிந்து கொண்டது வேறு மாதிரி இருந்து இருக்கலாம்.

சென்டிமென்ட்

ராஜூ முருகன் எழுத்தில் சென்டிமென்ட் மட்டுமே டெம்ப்ளேட் ஆக உள்ளது மற்றபடி சரளமாக எழுதி இருக்கிறார்.

எந்த இடத்திலும் சலிப்புத் தட்டாமல் விறுவிறுப்பாகச் செல்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு உதாரணம் கூறி ரசிக்க வைக்கிறார்.

ஈழப் பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை போன்றவற்றில் தீவிரமாக இருக்கிறார்.

எந்த அளவிற்கு என்றால் புத்தகத்தின் அட்டைப் படத்திலேயே ஈழப் பிரச்சனைக்காகத் தீக்குளித்த “முத்துக்குமார், செங்கொடி” ஓவியங்கள் தான் உள்ளது. ஈழம் சம்பந்தமாகப் பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். Image Credit

ஹாசிப் கான் ஓவியம்

புத்தகதுக்கு ஏகப்பட்ட ஓவியங்களை ஹாசிப் கான் வரைந்து கொடுத்து உள்ளார். எழுதி இருக்கும் சம்பவத்திற்கு ஏற்ப ஓவியங்கள் இருப்பது ரொம்ப நன்றாக உள்ளது.

ஏகப்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இது புத்தகத்திற்கு கூடுதல் அழகைத் தருகிறது.

இப்புத்தகத்தின் பின் அட்டையில் ராஜு முருகன் படத்தோடு ஹாசிப் கான் படமும் போடப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும் போதே இதில் ஓவியங்களின் பங்கையும் முக்கியத்துவத்தையும் அறியலாம்.

தெளிந்த நீரோடை

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏதாவது ஒரு தலைப்பில் எழுதுகிறார், அதில் நான்கு அல்லது ஐந்து சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்.

ஆனால், அது எதுவுமே உறுத்தலாகத் திணித்தலாக இல்லாமல் இருப்பது தான் இவரது வெற்றி என்று நினைக்கிறேன்.

நிறையைப் பேர் எழுத்தைக் கவனித்து இருக்கிறேன், ஆரம்பிக்கும் போதே தெரிந்து விடும் வேறு எதையோ கூற இதை ஆரம்பிக்கிறார்கள் என்பது.

கடைசியில் அவர்கள் கூறியதில் பாதி வேறாகவும் மீதி வேறாகவும் இருக்கும்.

இது அப்படி இல்லாமல் சொல்ல வந்ததை தெளிந்த நீரோடை போலக் கூறிக்கொண்டு வருகிறார். நாம் அதில் இருந்து விலகவே முடியாது.

திரைத்துறை

ராஜுமுருகன் திரைத்துறையில் முயற்சித்துக்கொண்டு இருந்ததால் அது குறித்த சம்பவங்கள் / கனவுகள் பற்றி நிறையக் கூறி இருக்கிறார்.

திரைத்துறையில் இருப்பவர்கள் “கட் பண்ணா” என்ற வார்த்தையை அதிகம் கூறுவார்கள் என்று ஒரு அத்தியாயம் கூறுகிறார்.

இங்க “கட் பண்ணா” என்று ஒவ்வொரு சம்பவத்தையும் கூறி அடுத்த விசயத்திற்குப் போவது பட்டாசாக இருக்கிறது 🙂 .

குறிப்பிட்டுக் கூற ஏகப்பட்ட விசயங்கள் இருக்கிறது ஆனால், எத்தனையைக் குறிப்பிடுவது?!

நான் குறிப்பிட ஆரம்பித்தால் இந்தப் புத்தகத்தில் பாதிக்கு மேல் குறிப்பிட வேண்டும். மிகைப் படுத்தவில்லை.

இவர் முன்பு விகடனில் பணி புரிந்து இருக்கிறார். அப்போது பணியில் இருந்த போது நடந்த சம்பவங்களும் இவர் எழுத்து நடையும் புன்னகையை வரவழைக்கத் தவறாது.

அட்டைப் படத்தையும் தலைப்பையும் இந்தப் புத்தகத்தின் மையக் கருத்திற்கு தகுந்த மாதிரி வடிவமைத்து இருக்க வேண்டும்.

படித்த புத்தகங்களிலேயே எழுத்துப் பிழை, சந்திப்பிழை இல்லாமல் இருந்தது இது தான் (ஒன்றிரண்டு இருக்கலாம்).

கண்களை உறுத்தாத தெளிவான அச்சு என்று சிறப்பான புத்தகம்.

அமேசானில் வட்டியும் முதலும் வாங்க –> Link

7 COMMENTS

  1. சரிங்கண்ணா நிச்சயம் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கிறேன் அண்ணா …

    #அட்டைப் படத்தையும் தலைப்பையும் இந்தப் புத்தகத்தின் மையக் கருத்திற்கு தகுந்த மாதிரி வடிவமைத்து இருக்க வேண்டும். இவர் ஏற்கனவே இவற்றை விகடனில் எழுதி பிரபலம் ஆனதால் பிரச்சனையில்லை. இல்லை என்றால் இது எந்த வகையான புத்தகம் என்பது தெரியாமல், நான் முதன் முதலில் இந்தப் புத்தகத்தை பார்த்த போது அடைந்ததைப் போல, புதிதாகப் பார்ப்பவர்கள் குழப்பம் அடைவார்கள். புறக்கணிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.#

    இது உண்மை தான் அண்ணா . நான் சென்னை சென்று வரும்போது ஒரு முறை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்த புத்த கடையில் இந்த புத்தகத்தை பார்த்தேன் . முழுக்க பிளாஸ்டிக்கால் கவர் செய்யப்பட்டு இருந்தது. அதனால் இந்த புத்தகம் பற்றி அறிந்துகொள்ள முடியாமல் வாங்காமல் விட்டுவிட்டேன். .. எனக்கு புத்தகம் படிப்பது , வாங்குவது என்றால் ரொம்ப பிரியம். ஆனால் படிக்க தான் நேரம் இல்லாமல் போகிறது. இப்படி பணம் கொடுத்து வாங்கி படிக்காமல் இருக்கும் புத்தகம் ஒரு முப்பது இருக்கும். நண்பர்களிடமாவது கொடுக்கலாம் என்றால் அவர்களுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் இல்லை அதனால் தான் நான் புத்தகம் வாங்கும் போதே தேர்வு செய்து வாங்குவேன்.
    இணையத்தளத்தில் பிளாக்கர்களால் பரிந்துரைக்கப்பட்டவை பாப்புலரான புத்தகங்கள் மட்டுமே தான் தேடிபிடித்து வாங்குவதை வழக்காமாக வைத்து உள்ளேன்… தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது போன்ற நல்ல புத்தகங்கள் இருந்தால் பரிந்துரைக்கவும் ….

    # அக்னிசிறகுகள் புத்தகம் படித்துகொண்டிருக்கிறேன் அண்ணா … கலாம் சாரின் பள்ளி நினைவுகள் போய்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே படித்து இருந்தாலும் மீண்டும் படிக்கும் போது நல்லாத்தான் இருக்கு அண்ணா (இதுதான் நான் இரண்டாவது தடைவையாக படிக்கும் கல்வி சம்மந்தமில்லாத முதல் புத்தகம் )

  2. தாங்கள் சொல்வது சரிதான், இந்த புத்தகத்தின் அட்டைப் படத்தை பார்த்துவிட்டு என்னவோ வழ வழா அரசியல் புத்தகம் என விட்டுவிட்டேன், ஆனால் உள்ளே விடயங்கள் பலமானவை என்பதை தற்சமயமே அறிய முடிந்தது. வாங்கிட வேண்டியது தான். 🙂

  3. நான் ஆனந்த விகடனில் வரும் போதே படித்திருக்கிறேன். படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். நானும் நிஜ சம்பவங்களை பற்றி எழுதும் போது சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் எழுதுவதில்லை

  4. பிரபல பதிவரின் குறிப்பிட்ட பதிவைப் படிச்சுட்டு அது தொடர்பான என்னுடைய கசப்பான அனுபவங்களை அவருக்கு பர்சனல் மெயிலா அனுப்பியிருந்தேன். நான் கொஞ்சம் உஷாரா சம்மந்தப்பட்டவங்க யார் பெயரையுமே குறிப்பிடாமதான் எழுதியிருந்தேன். ஆனா அவர் அந்த கடிதத்தை அப்படியே போட்டதோட மெயிலின் கடைசியில் இருந்த என் அலுவலக முகவரியையும் அடுத்த பதிவாக போட்டுவிட்டார். அதை நீக்கி விடும்படி மெயில் அனுப்பியும் அவர் என்னுடைய முகவரியை நீக்கியதுடன் சரி. இன்னும் பதிவு அப்படியே இருக்கிறது. அதனால் இப்போது பதிவர்களுக்கு மெயில் அனுப்பவே பயமாக இருக்கிறது.

  5. விமர்சனம் நன்றாக உள்ளது கிரி.. விகடனில் படித்து இருக்கிறேன். இறுதி பாகங்களை படிக்க இயலவில்லை. ராஜு முருகனின் எழுத்து நடை அருமையாக அமைந்திருந்தது. சிலரை அறிமுகப்படுத்தும் போது அவர்களுடைய தோற்றம், அங்க அடையாளங்கள், நடை,உடை போன்றவற்றை மிக அதிகமான வார்த்தைகளால் விவரித்து எழுதி இருப்பார். இது சிறு குறையாக தோன்றியது. “இதுவும் கடந்து போகும்” என்ற தலைப்பில் அவர் எழுதிய சம்பவங்களை மிகவும் ரசித்து படித்தேன். குக்கூ டிரைலர் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. கோச்சடையான் புதிய டிரைலர் விமர்சனத்தை எப்போது எழுதுவீர்கள்?

  6. @கார்த்தி எல்லாம் சரி.. அது எதுக்கு இத்தனை “அண்ணா” 🙂 ஒரு அண்ணா போதும்.

    நானே இப்பத்தான் புத்தகம் படிக்க ஆரமபித்து இருக்கிறேன். நல்ல புத்தகம் என்றால், படித்தால் நிச்சயம் அது பற்றி இது போல எழுதுவேன்.

    @இக்பால் செல்வன் வாங்குங்க.. உங்களை ஏமாற்றாது.

    @சரவணன் நீங்க புத்தகமே எழுதற ஆளு.. படிக்காம இருப்பீங்களா! 🙂

    @சரண் பிரபல பதிவர் பிராபள பதிவர் ஆகிட்டாரா! 🙂

    @சரத் “இதுவும் கடந்து போகும்” நீங்கள் கூறியது போல ரொம்ப நன்றாக இருந்தது. இந்தக் கருத்து உண்மையும் கூட.

    கோச்சடையான் பாடல்கள் விமர்சனம் அடுத்தது எழுதுகிறேன். பாடல் வந்து இரண்டு வாரம் ஆகி விட்டது.

  7. திரைப்பட விமர்சனங்களை போல உங்க புத்தகங்களின் விமர்சனமும் நன்றாகவே இருக்கிறது..மேலும் தொடர வாழ்த்துகள். வட்டியும் முதலும் வாங்கிட வேண்டியது தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here