தொழில்நுட்பம் வளர வளர வசதிகள் எப்படி அதிகரிக்கிறதோ அதை விடப் பிரச்சனைகளும் அதிகரித்து நம் அந்தரங்கம் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
அந்தரங்கம்
தொழில்நுட்பங்களால் பிரச்சனை என்றால், அதை பயன்படுத்தத் தெரியாமல் அரைகுறையாக செய்து அனைவர் முன்பும் அசிங்கப்பட்டு நிற்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
தாங்கள் செய்யும் தவறு தங்களை எவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உணராமல் தவறை செய்து வருகிறார்கள்.
நம்முடைய அந்தரங்கம் உலகம் முழுக்க அனைவரும் பார்க்க நேரிடும் சில வாய்ப்புகளைப் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம். Image Credit
மொபைல்
பலரின் அந்தரங்கம் இணையத்தில் பல லட்சம் மக்கள் பார்க்கும் நிலை வர முக்கியக் காரணமே மொபைல் தான்.
கேமரா மொபைல் வந்த பிறகு இது போன்ற குற்றங்கள் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டது. துவக்கமாக டிஜிட்டல் நிழற்படங்களைக் கூறலாம்.
முன்பு ஃப்லிம் ரோல் போட்டு நிழற்படங்கள் எடுத்து வந்தோம்.
இதன் மூலம் எடுக்கப்படும் நிழற்படங்களை பார்க்க வேண்டும் என்றால் சாதாரண பொது ஜனத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஸ்டுடியோக்கள் மட்டுமே!
நாம் எடுத்த நிழற்படங்களைக் கொடுத்தால் அவர்கள் அதைக் கழுவி பிரின்ட் போட்டு நிழற் படங்களாகக் கொடுப்பார்கள்.
இதனால் இன்னொருவர் பார்க்கக் கூடிய நிலை இருந்ததால் நிழற்படங்கள் எடுப்பதில் சுய கட்டுப்பாடு இருந்தது.
டிஜிட்டல்
எப்போது டிஜிட்டல் வசதி வந்ததோ, ஸ்டுடியோ மூலமாக மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை மாறியதோ அன்று ஆரம்பித்தது தான் இந்தப் பிரச்சனை.
இது தான் மக்களின் அந்தரங்கம் உலகம் முழுக்க பரவ முதல் காரணம்.
இதன் பிறகு எவரும் என்ன வேண்டும் என்றாலும் எடுக்கலாம் என்றானது. கேமரா மொபைல் எப்போது அறிமுகமானதோ அன்றிலிருந்து இது உச்சத்தை அடைந்து விட்டது.
தற்போது கற்பனைக்கு எட்டாத அளவிற்கு மோசமான நிலையில் இருக்கிறது.
மைசூர் மல்லிகை
முதன் முதலாக இது போல கேமரா மூலம் ஒரு காதல் ஜோடி எடுத்த உடலறவு காணொளி தான் தமிழகத்தில் பரவலாக அறியப்பட்டது.
“மைசூர் மல்லிகை” என்று பெயர் வைக்கப்பட்டு இணையத்தில் அப்போது பரபரப்பாக பகிரப்பட்டது.
2003 என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை. இது தான் தமிழகத்தில் பரவிய முதல் அந்தரங்கக் காணொளி.
இதோடு டிஜிட்டல் கேமரா மூலமாக எடுக்கப்பட்ட பல படங்கள் அவ்வப்போது சுற்றிக்கொண்டு இருக்கும்.
எப்போது மொபைல் கேமரா பிரபலமாகத் துவங்கியதோ அன்றில் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான காணொளிகள் தற்போது இணையத்தில் சுற்றிக்கொண்டு உள்ளன.
செக்ஸ் என்பது எவருக்கும் ஆர்வத்தை தூண்டும் என்பது இயல்பான ஒன்று.
அந்த நொடியில் யோசிக்க மறந்த மன நிலையில் செய்த தவறால் வாழ்க்கை முழுதும் மன உளைச்சலில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
Read: செக்ஸ் ஒரு விரிவான பார்வை!
காணொளியாக எடுக்கலாமா?
உடலுறவு கொள்ளும் எவருக்கும் சிறு ஆசை வந்து போக வாய்ப்புகள் உள்ளது. நாம் உடலுறவு கொள்வதை காணொளி எடுத்து வைத்து பின்னர் ரசிக்கலாமே! என்பது தான்.
இதைப் படித்துக்கொண்டு இருக்கும் சிலர் கூட இது போல செய்து இருக்கலாம்.
இவ்வாறு எடுக்கப்படும் காணொளி நீங்கள் ஏமாந்த / கவனக்குறைவாக இருந்த தருணத்தில் மற்றவர் கையில் சிக்க 90% வாய்ப்பு இருக்கிறது.
இதன் ஆபத்து இன்னும் பலருக்குத் தெரியவில்லை. நம்ம கிட்ட தானே இருக்கிறது!
எப்படி வெளியே போக முடியும் என்று அசட்டு நம்பிக்கை தான் பலரின் வாழ்க்கை சீரழியக் காரணமாக அமைந்து விடுகிறது.
அதுவும் மொபைல் கேமரா மூலம் அனைத்தையும் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்கள். நிஜமாகவே இவர்களுக்கெல்லாம் மூளை இருக்கிறதா!! என்று சந்தேகமாக இருக்கிறது.
காணொளிகளில் ஆண்கள் முகம் தெரிவது மிகக் குறைவாக இருக்கும் அல்லது தெளிவாக இருக்காது. நாளை இதையே வைத்து மிரட்டினால் என்ன செய்வார்கள்?
இது போல எத்தனை செய்திகள் தினம் வருகிறது . இதையெல்லாம் படித்தும் அறிவு வரவில்லை என்றால் இவர்களை எல்லாம் என்ன செய்வது?!
நீக்கினாலும் பயனில்லை
மொபைலில் சேமிக்கும் காணொளியை நீக்கினாலும் (Delete) அது அதிலேயே இருக்கும் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
உங்கள் உடலுறவு / அந்தரங்க காட்சிகளை எடுத்து பின் புத்திசாலியாக இருப்பதாக நினைத்து அதை டெலிட் செய்து இருக்கலாம்.
டெலிட் செய்தாச்சு இனி ஒன்றும் செய்ய முடியாது, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தால், உங்களை நினைத்து பரிதாபப்பட மட்டுமே முடிகிறது.
இவ்வாறு டெலிட் செய்தாலும் எளிதாக திரும்ப எடுக்க முடியும். அர்ச்சகர் தேவநாதன் பாலியல் காட்சிகள் வெளிவந்தது இந்த முறையில் தான்.
தன்னுடைய மொபைல் பழுதானதால் சரி செய்ய கொடுத்த இடத்தில், இதில் இருந்த காணொளிகளை எடுத்து இணையத்தில் விட்டு விட்டார்கள்.
கடந்த வாரம் கூட ஒரு பைனான்சியர் தனக்கு வர வேண்டிய பணத்தை சரிகட்ட சம்பந்தப்பட்ட (தெரிந்தவரை 27) பெண்களுடன் உறவு கொண்டு அதை காணொளியும் எடுத்து இருக்கிறார்.
இவரும் தன்னுடைய மொபைல் பழுதானதால் கொடுத்து, அதை சரி செய்பவர்கள் எடுத்து இணையத்தில் விட்டு விட்டார்கள். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Android
நான் கூறுவது அதிகாரப்பூர்வமாக திறமையான நபர்களால் சோதனை செய்யப்பட்ட ஒரு விசயம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு 20 Android மற்றும் iPhone முற்றிலும் தகவல்கள் அழிக்கப்பட்ட (factory reset) மொபைல்களில் Android மொபைலில் இருந்து அனைத்துத் தகவல்களையும் எடுத்து இருக்கிறார்கள்.
iPhone ல் இருந்து Encryption காரணமாக எடுக்க முடியவில்லை. இந்தியாவில் Android தொலைபேசிகளே பெரும்பாலனவர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
ஓரளவு தொழில்நுட்பம் தெரிந்தவர்களே அழித்த தகவல்களை எடுக்க முடியும். அப்படி இருக்க.. உங்கள் தகவல்களை எடுத்தே ஆக வேண்டும் என்று முயற்சித்தால் ஒரு பெரிய விசயமே இல்லை.
இன்று வரை இது போல ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால், எவரும் இது குறித்து அலட்டிக் கொள்வது போல தெரியவில்லை.
ஒருவேளை தங்கள் காணொளி வெளியே வந்தால் பராவாயில்லை என்று நினைக்கிறார்களா!?
இது போன்ற காணொளிகள் மற்றவர்களுக்கு (நண்பர்கள், உறவினர்கள்) தெரியாதவரை பிரச்சனை இல்லை ஆனால், இருவரில் ஒருவரைப் பற்றி தெரிந்தவர் பார்த்தால் கூட போதும் அவர் ஊர் முழுக்க பரப்பி விடுவார்.
அதுவும் இவர்களைப் பிடிக்காத ஒருவருக்குத் தெரிந்தால், நிலை என்ன ஆகும்?!
கணினி, மொபைல், கேமரா, இணையம் என்று எதுவுமே பாதுகாப்பில்லை.
உங்களுடைய குடும்ப நிழற் படங்கள், சான்றிதழ்கள் போன்றவை மற்றவர்களிடம் கிடைத்தால் அதனால் பெரிய இழப்பு உங்களுக்கு வந்து விடப்போவதில்லை ஆனால், அதே உங்கள் அந்தரங்கம் கிடைத்தால்?!
ஏன் சிரிக்கிறார்?
எடுத்துக்காட்டுக்கு உங்களுடைய நண்பரோ உறவினரோ அழைத்து உங்கள் அந்தரங்கக் காணொளி இணையத்தில் ஒரு தளத்தில் இருக்கிறது என்று ஒரு சுட்டியை (லிங்க்) கொடுத்தால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?!
ஒரு நிமிடம் மூச்சு நின்று விடாதா?! அருகில் வசிப்பவர்கள் சாதாரணமாக சிரித்தால் கூட இதற்காகத் தான் சிரிக்கிறார்களோ என்று தோன்றாதா?!
இருவர் நம்மைப் பார்த்து ரகசியமாகப் பேசினால்…! சிலருக்கு இதெல்லாம், தான் மாட்டாதவரை இதன் முக்கியத்துவம் புரியாது.
விடுதியில் தங்கினால் அங்கே கேமரா, கழிவறை / குளியலறை சென்றால் அங்கே கேமரா, உடை மாற்றும் இடத்தில் என்று வரைமுறையே இல்லாத அளவிற்கு பாதுகாப்பு இல்லாது சென்று விட்டது.
அங்கே சுற்றி இங்கே சுற்றி இறுதியில் நம் வீட்டிற்கு மின்சார வேலை, இரும்புக் குழாய் வேலை பார்க்க வருகிறவர்கள் கூட கேமரா வைத்த செய்தி வந்து கொண்டு இருக்கிறது.
இத்தனை ஆபத்து இருக்கிறது ஆனால், பலரும் எந்த எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள்.
நான் கூறியது எதுவுமே என் கற்பனை செய்தியல்ல, அனைத்துமே செய்திகளில் வந்த அதிகாரப்பூர்வச் சம்பவங்கள்.
என்னென்ன செய்யக்கூடாது / செய்ய வேண்டும்
முதலில் உங்கள் அந்தரங்கச் செயல்களை கேமரா / மொபைல் கேமரா போன்றவற்றில் காணொளி / நிழற் படங்கள் எடுக்கக் கூடாது.
உங்கள் துணை எவ்வளவு வற்புறுத்தினாலும், சமாதானம் கூறினாலும், பிரச்சனை இருக்காது என்று கூறினாலும் ஒப்புக்கொள்ளக் கூடாது. உறுதியாக மறுக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் ஏற்கனவே இது போல காணொளி எடுத்து இருந்தால், அந்த நினைவகத்தை (SD Card) வீணானாலும் பரவாயில்லை என்று உடைத்து விடுங்கள்.
சில நூறு ருபாய்கள் சேமிக்க எண்ணி வாழ்நாள் அவமானம் அடைந்து விடாதீர்கள்.
கண்டிப்பாக உங்கள் தொலைபேசியில் Passcode activate செய்து இருக்க வேண்டும்.
SD card
தொலைபேசி பழுதானால் கடையில் கொடுக்கும் போது SD card ஐ எடுத்து விட்டு மொபைலை மட்டும் கொடுக்கவும்.
மொபைலை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தால், அதில் உள்ள SD Card ஐ மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எதுவும் முக்கியமாக அதில் சேமித்ததில்லை என்றால் பிரச்சனையில்லை, அப்படியே கொடுக்கலாம்.
கணினியை பழுது சரி செய்யக் கொடுத்தாலும் இதே பிரச்சனை வரும். Hard disk ல் உள்ள எவற்றையும் இதற்கு என்று உள்ள மென்பொருள் மூலம் எடுக்க முடியும்.
Hard disk ஐ கழட்டிவிட்டு கொடுப்பது என்பதும் அனைவருக்கும் சாத்தியமில்லை.
எனவே, அந்தரங்கக் காணொளிகளை சேமிக்கக் கூடாது. சேமித்தாலும் வேறு ஒருவரிடம் கொடுக்க வேண்டிய நிலை வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
துணிக் கடைகளில் உடை மாற்றும் இடங்களில், தங்கும்விடுதிகளில் சந்தேகத்திற்கு இடமான எதுவும் உள்ளதா என்று பார்த்துக்கொள்வது நல்லது, குறிப்பாகப் பெண்கள்.
உங்கள் வீட்டில் உள்ள குளியறை / படுக்கையறையில் பழுது பார்க்க எவரும் வந்தால் அவர் செல்லும் வரை உடன் இருந்து கண்காணிக்க வேண்டும்.
அவர் தவறாக நினைத்துக் கொள்வார் என்றெல்லாம் நினைக்க வேண்டியதில்லை.
அவர் தவறாக நினைத்துக் கொள்வதால் நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை.
இணையத்தில் சேமித்தால் அவசியம் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையை செயல்படுத்தி இருக்க வேண்டும்.
இதுவே 100% பாதுகாப்பில்லை எனும் போது இதை செயல்படுத்தாமல் இருந்தால் உங்கள் நிலை என்ன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!
ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி
ஃபேஸ்புக் அந்தரங்கப் பாதுகாப்பு
ஹேக்
உங்கள் இணையக் கணக்கு “ஹேக்” செய்யப்படவில்லை என்றால், நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அர்த்தமில்லை. உங்களை யாரும் இது வரை குறி வைக்கவில்லை என்று அர்த்தம்.
Read: ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?
இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது ஆனால், தினமும் ஆயிரக்கணக்கான காணொளிகள் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு உங்களின் துணை இது போல ஒரு காணொளி எடுத்து நாளை உங்கள் காதல் முறிந்து போனாலோ, விவாகரத்து ஆனாலோ, வேறு காரணங்களாலோ இதை வைத்து மிரட்ட ஏராளமான வாய்ப்பு.
இது போல காணொளி எடுத்து இதை வைத்து மிரட்டி பணம் பெறும் சம்பவங்கள், வெளியிட்டு விடுவேன் என்று பெண்களை மிரட்டி மீண்டும் உறவுக்கு அழைத்த சம்பவங்கள் வாரம் ஒன்றாவது செய்தியில் வருகிறது.
உங்களுக்கு இந்தச் சம்பவங்கள் நடக்காது என்பதற்கு யார் உத்ரவாதம் கொடுக்க முடியும்?!
செக்ஸ் உரையாடல்
தொலைபேசிகளில் பேசப்படும் செக்ஸ் உரையாடல் பதிவு செய்யப்படுகிறது.
காதலர்கள், துணையை நீண்ட காலங்களாக பிரிந்து இருப்பவர்கள், இதற்காகவே இருப்பவர்கள் என்று பலரது செக்ஸ் உரையாடலும் பதிவு செய்யப்படுகிறது.
தற்போது காணொளிகளே இணையத்தில் எளிதாகக் கிடைப்பதால் இதற்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது. இருப்பினும் இதிலும் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
கடந்த மாதம் பிரபல ஹாலிவுட் நடிகைகளின் ஆப்பிள் நிறுவனக் கணக்குகளை ஒரு ஹேக்கர் ஹேக் செய்து அவர்கள் வைத்து இருந்த அவர்களுடைய நிர்வாணப் படங்களை வெளியிட்டு விட்டார்.
இது உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹாலிவுட் நடிகைகள் ஏற்கனவே நிர்வாணமாக / ஆடை குறைவாக நடித்து இருக்கிறார்கள் என்றாலும், திரைப்படம் வேறு தனிப்பட்ட வாழ்க்கை / அந்தரங்கம் வேறு.
இதில் இவர்கள் கணக்கின் கடவுச்சொல் (Password) மிக மோசமாக இருந்ததே இவர்கள் கணக்கை இழக்கக் காரணம்.
கவனக்குறைவு
இவர்கள் பிரபலம் என்பதால் அனைவராலும் பேசப்படுகிறது. இவ்வாறு வைத்தது / வைத்ததோடு இல்லாமல் மோசமான பாதுகாப்பில் வைத்தது இவர்களுடைய தவறு. இது போலத்தான் நம்மவர்களும் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்தரங்கத்தை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் மூன்றாவது நபருக்கோ / வேறு சாதனத்திற்கோ / இணையக் கணக்கிற்கோ சென்றால் அது எப்போது வேண்டும் என்றாலும் உலகில் அனைவருக்கும் சென்றடைய வாய்ப்பு உள்ளது.
சிறு கவனக்குறைவு கூட உங்களை வாழ்நாள் மன உளைச்சலில் கொண்டு சென்று விடலாம்.
ஹேக்கிங் செய்பவர்களை என்றுமே குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்கள் மிக மிகத் திறமையானவர்கள்.
மிகப்பெரிய வங்கிகளின் கணக்கை, பெரிய நிறுவனங்களின் பாதுகாப்பு மிகுந்த கணக்கையையே ஹேக்கர்கள் ஹேக் செய்து விடும் போது நாமெல்லாம் ஒன்றுமே இல்லை.
இந்தக் கட்டுரையின் சுருக்கம் “உங்கள் அந்தரங்கத்தை எங்கும் சேமிக்காதீர்கள் / பதிவு செய்யாதீர்கள்”.
மேற்கூறியது எதுவுமே அறிவுரையல்ல, அனைத்துமே எச்சரிக்கை.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
great post anna.. ‘Nowadays’ respecting our own privacy is much more important than respecting others privacy…
கிரி.. மிகவும் சரியான எச்சரிக்கை பதிவாக கருதுகிறேன்.. நீங்கள் கூறிய விஷியங்கள் முற்றிலும் உண்மையே.. கைபேசியின் வருகைக்கு பின் அனைவரது நடைமுறை வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது .. எச்சரிக்கை என்பது மிகவும் அவசியமாகிறது.. குறிப்பாக பெண்களுக்கு..
என்னுடைய சிறு வயது பாதை கரடு முரடாக கடினமாக இருந்தாலும் முடிவில், ஒரு சரியான பாதையில் பயணிப்பதாக எண்ணுகிறேன்.. ஆனால் எதிர்கால என் சந்ததிகளை நினைத்தால் பயமாக இருக்கிறது.. பகிர்தமைக்கு நன்றி கிரி..
Well said Giri
கிரி தல,
செம பதிவு இது
அதுவும் “செக்ஸ் ஒரு விரிவான பார்வை!” – இந்த பதிவு செமையோ செம
என் மனசுல இருந்த பல கேள்விக்கு விடை செக்ஸ் பத்தின பதிவுல இருக்கு
“உங்கள் அந்தரங்கத்தை எங்கும் சேமிக்காதீர்கள் / பதிவு செய்யாதீர்கள்” – 100% ஒத்துகொள்கிறேன்.. இந்த மாதிரி ஒரு dry topic எடுத்து அதையும் ரசிக்குற மாதிரி கொடுத்து இருக்கீங்க
வாழ்த்துக்கள்
“உங்களின் சிறு கவனக்குறைவு கூட உங்களை வாழ்நாள் மன உளைச்சலில் கொண்டு சென்று விடலாம்.” – sex tape பார்த்தாச்சா, ஏன் கேக்குறேன் நா உங்க review (one liner kooda ok thaan) பாத்துட்டு தான் நான் பார்க்கணும் ?
– அருண்
all should read this post
நல்ல பதிவு…
ஹாங்காங் சீனாவில் – ஸ்பை கேமிரா விதங்களை பார்த்தால் அசந்து போவீர்கள். பிளக் பாயின்ட், சட்டை மாட்டும் ஹாங்கர், வால்கிளாக், பேனா (எங்கிட்ட இருக்கு), டிவியின் மூலையில் பல்பு மாதிரி, குளிக்கும் ஷவரின் நடுவே அப்படின்னு பலவாறு இருக்கு. எதற்கும் வெளியில் குடும்பத்துடன் தங்கும் நபர்கள் ஒரு முறை கூகிளில் கேமராவின் விதங்களை பார்த்துவிடுவதும் நல்லது. இப்போது வயர்லஸ் கேமிராக்களும் (ஸ்டிக்கர் போட்டு ஓட்டுவதை போல்) கிடைக்கிறது. மேலும்.. பாடாவதியான லாட்ஜுகளில் தங்காதீர்கள், குளியலறையில் குறைந்தபட்ச ஆடை அணிவதும் நல்லது.
வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்கள் – அதிகம் தொழில்நுட்பத்தை பற்றி அறியாதவர்கள் (இன்னும் இருக்கிறார்கள்) விடுமுறைக்கு வந்து செல்லும்போது நியாபகார்த்தமாக வச்சுக்குறேன் (??) என்று படம் பிடித்து வைக்கின்றனர்.. அந்த வீடியோக்கள் பல்வேறாக உலாவருது.
இதுவுமில்லாம சில சாப்ட்வேர்கள் மொபைலில் அல்லது கம்பியுட்டரில் ஏற்றும்போது இலவசமாக வேறேதும் இன்ஸ்டால் ஆகிறதா என்றும், (டிராப் பாக்ஸ் போன்று ஒரு முறை கிளிக் செய்தால்) சில சமயம் நீங்கள் எடுக்கும் படம் உடனடியாக உங்கள் அக்கவுண்டில் அப்லோட் ஆகிறமாதிரி.. சில பல ஆப்ஷன்கள் இருக்கும்.. தெளிவாக எது வேண்டும் எது வேண்டாம் என்று நீக்கிவிடுங்கள்.
”எப்போது டிஜிட்டல் வசதி வந்ததோ, ஸ்டுடியோ மூலமாக மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை மாறியதோ அன்று ஆரம்பித்தது தான் இந்தப் பிரச்சனை. இது தான் மக்களின் அந்தரங்கம் உலகம் முழுக்க பரவ முழு முதல்க் காரணம்”
100% உண்மை.
The article is very important for all…specially young student’s must read and understand. Thanks
அண்ணா இந்த சமுகத்தின் மீது உங்களுக்கு எவ்வளவு அக்கறை…
உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது…
நானும் என் நண்பனும் இப்படி ஆரம்பத்தில் எடுத்தோம்… நாங்கள் குளிப்பதை மட்டும் தன எடுப்போம் … என்ன காரணத்தினால் என தெரியவில்லை.. அப்போது நாங்கள் ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கி இருந்தோம் ..கல்லூரி படித்துகொண்டு இருந்த சமயம். எங்கள் நிகழ்வை ஒன்னு விடாமல் பதிவு செய்தோம்.. காலை கடனை தவிர அனைத்தையும் பதிவு செய்தோம்… பிறகு தான் இதில் இருக்கும் பேராபத்து எங்களுக்கு புரிய எங்கள் விடியோ இருக்கும் மெமரி யார் கையிலும் சிக்காமல் இது வரை பாதுகாத்து கொண்டு வருகிறோம்.. மேலும் இது போன்ற படங்களை எடுப்பதை அறவே தவிர்த்துவிட்டேன் நான் மட்டும் அவன் இன்னும் அப்படியே தான் எடுத்துகொண்டு இருக்கிறான்… நான் எவ்வளவு சொல்லியும் ஆண் கேட்கவில்லை… ஆனால் அவன் அந்த விடியோக்களை அவனுடைய கணினியில் எங்கும் பதிவு செய்யாமல் தனியாக ஒரு ஹார்ட் டிஸ்க் ல் பதிவு செய்து வைத்து கொள்கிறான்..
Really worth reading. Useful contribution Sir.
அனைவரின் வருகைக்கும் நன்றி
@அருண் செக்ஸ் டேப் தரவிறக்கம் செய்துட்டேன் ஆனால் விடுமுறையில் சென்றதால் பார்க்க முடியவில்லை. இந்த வாரம் பார்த்து விடுவேன்.
@ராஜ்குமார் தகவல்களுக்கு நன்றி. நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இது அறிவுறுத்துகிறது.
@கார்த்தி உன் நண்பன் எதையோ எடுத்துட்டுப் போறான்.. உன்னோட காணொளியை அவனிடம் இருந்து அழித்து விடு. அந்த ஹார்ட் டிஸ்க்கை எவனாவது ஆட்டையை போட்டால், உன் கதி அதோ கதி தான்.