ஜிகர்தண்டா A Dirty Carnival படத்தின் தழுவல் என்று கூறப்பட்டு பெரும் சர்ச்சையானது. சர்ச்சையானாலும் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
இதில் நடித்த பாபி சிம்ஹா க்கு நல்ல பெயர் கிடைத்தது.
A Dirty Carnival
ஜிகர்தண்டா “மூலம்” என்று கூறப்படும் A Dirty Carnival படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இதோடு என் சில கருத்துகளையும் கூற விரும்புகிறேன். Image Credit
படத்தை இயக்க வாய்ப்புத் தேடும் இயக்குநர் ஒருவர் தயாரிப்பாளரிடம் சென்று ஒரு கேங்ஸ்டர் கதையைக் கூறுகிறார் ஆனால், அதில் திருப்தியடையாத அவர் கதை இன்னும் உயிர்ப்புடன் நம்பும்படி இருக்குமாறு கதையை உருவாக்கக் கூறுகிறார்.
இதற்காக ரவுடியாக இருக்கும் தன் நண்பனின் உதவியை நாடி அவர் மூலம் கேங்ஸ்டர் வாழ்க்கை சம்பவங்கள் பற்றி தெரிந்து கொள்கிறார். இதற்கு ரவுடி நண்பனும் உதவுகிறார்.
சரக்கடித்து தன்னிலை மறந்த சமயத்தில் தான் செய்த ஒரு முக்கியக் கொலையைப் பற்றிக் கூறி விட அந்தச் சம்பவத்தையும் படத்தில் ஒரு காட்சியாக இணைத்து விடுகிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கேங்ஸ்டர் என்ன செய்கிறார், அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை.
கேங்ஸ்டர்
கேங்ஸ்டர் படங்கள் என்றால் கொரியர்களுக்கு எப்படித் தான் இருக்குமோ! எத்தனை எத்தனை வகையான கேங்ஸ்டர் படங்கள்!
ஒவ்வொன்றும் அவ்வளவு அற்புதமாக எடுக்கப்பட்டு இருக்கும். இந்தப் படமும் சுவாரசியமான கேங்ஸ்டர் படங்களில் ஒன்றாகக் கூறலாம்.
இதில் சின்ன ரவுடி கும்பலுக்கு தலைவனாக இருக்கும் Kim Byung-doo சிறு சிறு அடிதடி மிரட்டல்களில் ஈடுபட்டு வருவதும் பின் அதிரடியாக நம்புகிற விதத்தில் பெரிய கேங்கஸ்டராக உருவாவதும் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.
திட்டம் போட்டு எவரும் அறியாமல் கச்சிதமாக கொலை செய்வது, செய்த பின் எதுவுமே தெரியாமல் அமர்ந்து இருப்பது என்று அந்தத் தருணம் படம் பார்க்கும் எவரையும் பரபரப்பிற்குள்ளாக்கும்.
படம் நெடுக உறுத்தாத பரபரப்பு இருக்கும். அடுத்தது என்னவென்று ஊகிக்க முடியாத அளவில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பது தான் இந்தப் படத்தின் பலம்.
கேங்ஸ்டர் படங்கள் என்றாலே அடிதடி தான் என்பது அனைவரும் அறிந்தது. இதிலும் சரமாரியான சண்டைக் காட்சிகள் உள்ளது.
துரோகம், வன்முறை, பாதுகாப்பு, குடும்பம், காதல், அன்பு என்று தமிழ் படங்களுக்கே உரிய அனைத்துமே உள்ளது ஆனால், அனைத்துமே இயல்பான அளவில் இருப்பதே படத்தை ரசிக்க வைக்கிறது.
எந்த ஒரு இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள்.
துப்பாக்கி
இது போல கேங்க்ஸ்டர் படங்களில் துப்பாக்கியை விட கத்தி, கட்டை, இரும்புத்தடி போன்றவை தான் அதிகம் பயன்படுத்துப்படுகிறார்கள்.
இதன் காரணம் என்ன?
துப்பாக்கியால் சுட்டு ஒரு நொடியில் முடிக்க வேண்டிய ஒரு வேலையை எதற்கு அடிதடி செய்து முடிக்கிறார்கள் என்பது எனக்கு எப்போதும் இருக்கும் சந்தேகம்.
இதில் ஒரு காதலும் உறுத்தாமல் வருகிறது. எப்படித்தான் இதையும் நம்புகிற மாதிரி அசத்தலாக நுழைக்கிறார்களோ!
எனக்கென்னமோ கேங்க்ஸ்டர் படமாக இருந்தாலும் அதிலும் ஒரு பாடலை வைத்து நாம் சொதப்பி விடுகிறோம் என்று நினைக்கிறேன்.
இதில் ஒரு பெண் வருவதும் அவர் எப்படி இந்தக் கதையில் தொடர்பு உடையவராக வருகிறார் என்பதும் ரொம்ப நன்றாக எடுக்கப்பட்டு இருக்கும்.
கேங்ஸ்டருக்கு காதலா..! என்றெல்லாம் நமக்கு 1% கூட தோன்றாதபடி திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள்.
அதிர்ச்சி தருணம்
தன் நண்பன் படம் எடுத்த பிறகு அதில் தான் கூறிய ஆனால், இது பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறிய சம்பவமே காட்சியாக வந்ததை அறிந்து அதிர்ச்சியாகும் தருணம், அதன் பிறகு நண்பன் என்பதால் கொல்வதா மன்னிப்பதா! என்று குழம்பும் காட்சிகளிலும் நல்ல நடிப்பு.
ஆள் பார்க்க முரட்டுத்தனமாக இல்லையென்றாலும் நடந்து கொள்வதைப் பார்த்தால், வயிற்றில் பயப்பந்தை உருள வைக்கிறார், குறிப்பாக துவக்கத்தில் கடன் வசூலிக்கும் இடம்.
இவருக்கு உதவியாளராக வருபவர் பட்டையக் கிளப்பி இருக்கிறார்.
தலைவன் தன்னை அடித்தாலும் அமைதியாக வாங்கிக்கொள்வதும் பிரச்சனை வரும் போது மிரட்டலாக இருப்பது இவரும் ஒரு நாயகன் போலத்தான் இருக்கும்.
பிரச்சனைகளை மனதில் இருந்து தீர்வு தேடாமல் மூளையை பயன்படுத்தி யோசிக்கும் கதாப்பாத்திரம். அருமையாக பொருந்தி இருக்கிறது.
இவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இருக்காது, அமைதியாகவே முகம் இருக்கும் ஆனால், செயலில் ரணகளமாக இருக்கிறார்.
புலி வாலைப் பிடித்த கதை
இயக்குநராக வருபவர் தன் முன்னேற்றத்திற்காக Kim Byung-doo வை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்.
இதற்காக இவர் செய்யும் சுயநலமான காரியங்கள் உன்னிப்பாக கவனித்தாலே நமக்குப் புரியும்.
தான் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்ததும், மிரட்டப்பட்டதும் அவரின் பயம் கலந்த நடிப்பு ரொம்ப நன்றாக இருக்கும்.
படம் வெற்றி பெற்று அனைவரும் கொண்டாடும் நேரத்தில் அதன் வெற்றியைக் கொண்டாட முடியாத நிலையில் இந்த மிரட்டல் அவரை நிம்மதி இழக்க வைத்து இருக்கும்.
இறுதி வரை புலி வாலைப் பிடித்த கதையாக இவர் கதாப்பாத்திரத்தைக் கொண்டு சென்று இருப்பது அருமை.
சில விசயங்களில் நாம் இறங்கக் கூடாது. இறங்கினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதையும் மீறி தவறு செய்து விட்டால் அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பதை இவரது கதாப்பாத்திரம் அழகாக விளக்குகிறது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் வரை தான் அது ரகசியம். அதற்கு மேல் விசயம் ஒருவருக்குச் சென்றாலும் அது சிக்கலில் சென்று விடும்.
எந்தத் தருணத்திலும் தடுமாறிவிடக் கூடாது என்பதை இந்தப் படம் மீண்டும் ஒரு முறை எனக்கு உணர்த்தி இருக்கிறது.
என் மனம் கவர்ந்த கேங்க்ஸ்டர் படங்களில் இந்தப் படத்திற்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.
Directed by Yoo Ha
Produced by Cha Seung-jae, Kim Mi-hee, Choi Seon-jeong
Written by Yoo Ha
Starring Jo In-sung, Lee Bo-young, Namgoong Min, Jin Goo, Chun Ho-jin
Music by Jo Yeong-wook
Cinematography Choi Hyeon-gi
Edited by Park Gok-ji, Jeong Jin-hee
Production company Sidus FnH
Distributed by CJ Entertainment
Release date(s) June 15, 2006
Running time 141 minutes
Country South Korea
Language Korean
Spoiler
நீல வண்ணத்தில் இருப்பது A Dirty Carnival & ஜிகர்தண்டா படங்களின் spoiler எனவே படம் பார்க்காதவர்கள் இதைத் தவிர்த்து விடுங்கள்.
- ஜிகர்தண்டா படத்தின் “மூலம்” அதாவது ஒரு இயக்குநர் எப்படி கேங்ஸ்டர் வாழ்க்கையை துப்பறிந்து ஒரு உண்மையான கேங்ஸ்டர் படம் எடுக்கிறார் என்பது இதில் இருந்து தான் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
- தமிழில் தயாரிப்பாளர் கேங்க்ஸ்டர் பட DVD களைக் கொடுத்து இது போல ஒரு படம் வேண்டும் என்று கூறுவார்.
- கொரியனில் கொடுக்கப்பட்டு இருக்கும் கேங்க்ஸ்டர் கதையில் உயிர்ப்பு இல்லை இன்னும் நம்புகிற மாதிரி வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்பார்.
- தமிழில் நண்பன் உதவியின் மூலம் கேங்ஸ்டர் வாழ்க்கையை அறிந்து கொள்ள முயற்சிப்பது. கொரியனில் நண்பனே ஒரு கேங்கஸ்டராக இருப்பது.
- தமிழில் ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்து அவர்கள் பேசுவதை கேட்கும் படி இருக்கும். கொரியனில் அவர்களே பல கதைகளைக் கூறுவார்கள் அதை பதிவு செய்து போட்டுக் கேட்டு திரைக்கதையை தயார் செய்வார்.
- கேங்ஸ்டர் தன்னை காமெடியன் போல இயக்குநர் படம் எடுத்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி இருப்பார். கொரியனில் தான் செய்த கொலையை தான் யாரிடமும் கூறக் கூடாது என்று கூறிய சம்பவத்தை காட்சியாக வைத்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாவார்.
- Rough cut என்ற படத்தில் இருந்தும் காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. தமிழில் நகைச்சுவையாக எடுக்கப்பட்டு இருக்கும் (சிம்ஹாவை நடிக்க வைக்கும் காட்சி) கொரியனில் கோபமான ஒன்றாக இருக்கும்.
இது போல காட்சிகள் தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
எச்சரிக்கை
இயக்குனர்களிடமும் எழுத்தாளர்களிடமும் பதிவர்களிடமும் பேசும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் ஒருவர் தனிப்பட்ட முறையில் கூறும் சம்பவத்தைக் கூட தனக்கு எழுத ஒரு விசயம் கிடைத்தது என்று ஒரு கட்டுரையாக எழுதி விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இப்பவும் நண்பர்களுடன் பேசும் போது சிலர் “கிரி! இதை Blog ல எழுதி விடுவியா?” என்று கேட்பதுண்டு.
தனிப்பட்ட விஷயங்கள் எதையும் நான் எழுதுவதில்லை, ஒருவரை பெயரைக் குறிப்பிடாமல் குறிப்பிடுகிறேன் என்றாலும் அவரது அனுமதி பெற்ற பிறகு தான் எழுதுவேன்.
இருப்பினும் இந்தக் கேள்வி மனதில் வருத்தத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை.
எழுத வந்த துவக்கத்தில் தனிப்பட்ட முறையில் நான் கூறியதை பதிவாக என் பெயருடன் சிலர் எழுதி விட்டார்கள்.
இது எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி விட்டது. இதை தவறாக நினைக்கவில்லை, அனுபவமாக எடுத்துக்கொண்டு அதன் பிறகு எச்சரிக்கையாகி விட்டேன்.
சில நேரங்களில் பதிவர்கள் சிலருடன் பேசும் போது அமைதியாக இருக்க இதுவும் ஒரு காரணம்.
இது போல அனைவரும் செய்வதில்லை இருந்தாலும், இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
தற்போது சமூகத் தளங்கள் பிரபலமாகத் தொடங்கிய பிறகு ப்ரைவசி என்பது சுத்தமாகப் போய் விட்டது. எதையும் எவர் அனுமதி இன்றியும் பகிர்ந்து விட முடியும்.
எடுத்துக்காட்டுக்கு ஒரு பெண் தன் நிழல் படம் இணையத்தில் பகிரப்படுவதை விரும்பாமல் இருக்கலாம் ஆனால், குழுவாக ஒரு படம் எடுத்தால் அதில் உள்ள இன்னொருவர், தான் இருப்பதால் அந்தப் படத்தைப் பகிரலாம்.
இதனால் ஒருவர் அனுமதி இன்றி இணையத்தில் அவர் நிழல் படம் பகிரப்படுகிறது. இதையெல்லாம் தடுக்கவே முடியாது என்பது தான் கசப்பான உண்மை.
இந்த கொரியன் படத்தில் கேங்ஸ்டர், “நீ இதை ஏன் செய்தாய்?” என்று தன் நண்பனிடம் கேட்கும் போது “நான் யாரையும் குறிப்பிடாமல் தானே காட்சி அமைத்தேன் அதனால் பிரச்சனை இருக்காது என்று நினைத்தேன்” என்று கூறுவார்.
இவர் தரப்பில் இருந்து பார்த்தால் சரி என்று தான் தோன்றும் ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் மன நிலை அதனால் ஏற்படப்போகும் பிரச்சனைகள் இவர்கள் அறியாதது.
Inspiration
இயக்குநராக இருந்தாலும் எழுதுபவர்களாக இருந்தாலும் அனைத்துமே தானாக தோன்றி விடாது. ஏதாவது ஒரு சம்பவம் / காட்சி உந்துதலாக இருக்கும்.
ஏதாவது ஒரு செய்தி எழுதக் காரணமாக இருக்கும்.
இன்னொருவர் எழுதிய ஒரு கட்டுரையில் உள்ள ஏதாவது ஒரு வரி, வார்த்தை நமக்கு ஒரு கட்டுரையே எழுதும் அளவிற்கு காரணியாக இருக்கும்.
இதில் உள்ள ஒரு வரியை எடுத்துக்கொண்டு அதை நம் கருத்தில் விளக்கமாக முன் வைக்கலாம்.
கட்டுரையையே அப்படியே வைத்தால் அது தவறு ஆனால், அதில் உள்ள ஒரு மையக் கருத்தை வைத்து நம்முடைய பாணியில் எழுதுவது தவறல்ல.
இது போலத் தான் எழுத முடியுமே தவிர அனைத்துமே ஒருவர் சொந்தமாக யோசித்து ஒன்றை எழுத வேண்டும் என்றால் அது நடைமுறையல் சாத்தியமல்ல.
Spark
இது போல சட்டென்று ஒன்றைப் பார்த்து நமக்குத் தோன்றுவது தான் spark என்று கூறப்படுகிறது.
சாலையில் செல்கிறோம் அங்கே நடக்கும் ஒரு சம்பவம் நமக்கு எழுத கட்டுரை அளவிற்கு செய்தியைத் தருகிறது. தொ
டர்ந்து எழுதுபவர்கள் ஒரு சிறு சம்பவத்தைக் கூட ரசிக்கும்படி ஒரு கட்டுரையாக கொடுக்க முடியும்
ஆனால், இது போல ஒருவர் எழுதியதை சில வரிகளில் / வார்த்தைகளில் மாற்றம் செய்து அப்படியே இன்னொரு கட்டுரையாக எழுதினால் அது தவறு.
ஒருவேளை அப்படி எழுதினால் இங்கே இருந்து எடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
எந்த ஒரு செய்தியைக் கொடுத்தாலும் அதில் நம்முடைய தனித்தன்மை இருக்க வேண்டும்.
சமீபத்திய சர்ச்சை மருத்துவர் பொதுமக்கள் தலைப்பு மற்றும் நான் பார்க்கும் சிலரின் கருத்துகள் எனக்குப் போதும், என்னால் என் கருத்துடன் ஒரு கட்டுரையைக் கொடுக்க முடியும்.
இந்தத் தலைப்பு என் சொந்த யோசனையில் வந்ததல்ல.
இது போல பார்க்கும் போது அந்தத் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுத என்னால் முடியும். ஏனென்றால் இது குறித்த புரிதல் / அனுபவம் எனக்கு இருக்கிறது.
காட்சிப்படுத்துவது எளிதல்ல
எழுத்தில் இப்படி வேறுபாடு காட்ட முடிந்தாலும், திரையில் இதோடு ஒப்பிடும் போது சிரமமே!
காட்சிகளில் ஒற்றுமை ஒரு நிமிடம் இருந்தாலும் பழைய காட்சியை அல்லது மற்ற படத்தின் காட்சியை இதோடு ஒப்பிட்டுக் கிழித்து விடுவார்கள்.
எனவே, காட்சிப்படுத்துதல் என்பது மிகவும் சிக்கலானது.
என்ன தான் Inspiration என்றாலும் காட்சியாகப் பார்க்கும் போது காபி என்று தான் தோன்றும். இதில் சிக்காமல் எடுப்பவர்கள் திறமைசாலிகள்.
ரஜினியின் ஸ்டைல் அனைவரும் அறிந்தது ஆனால், பில்லா Remake எடுத்த போது அஜித் தனக்கு என்று ஒரு பாணியை உருவாக்கி நடித்து இருந்தார்.
இது ஸ்டைல் தான் என்றாலும் ரஜினியின் ஸ்டைலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
இது ஒரு Inspiration ஆனால், தன் பாணியில் கொடுத்தது.
ஜிகர்தண்டாவும் இது போல மையக் கருத்தை வைத்து படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இருப்பினும் சில காட்சிகள் நமக்கு A Dirty Carnival / Rough cut படக் காட்சிகளை நேரடியாக நினைவு படுத்தி விடுகிறது.
வார்த்தைகளில் வேறுபடுத்திக் காட்டலாம் ஆனால், காட்சியாகப் பார்க்கும் போது காபி என்று தான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.
Credit
இதற்கு என்ன செய்யலாம் என்றால் எந்தப் படத்திலிருந்து சில காட்சிகள் நமக்கு Inspiration ஆக இருந்ததோ அந்தப் படத்திற்கு படத்தில் நன்றி கூறி விடலாம்.
“ஆடுகளம்” படத்தில் இது போல Inspiration ஆக இருந்த சில படங்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார்கள். இதுவே ஒரு பெரிய பட்டியலாக வந்தது.
இது போல குறிப்பிட்டதால் வெற்றிமாறன் மீது ஒரு மரியாதை நமக்கு வருகிறது.
யாரும் இவர் காபி அடித்து விட்டார் என்று கூறுவதில்லை. இது Inspiration க்கு மட்டும் தான்.
மொத்தப் படத்தையும் சுட்டு எடுத்து விட்டு Inspiration என்று போட்டால், வழக்கு தான் போடுவார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டாவில் Inspiration என்று A Dirty Carnival படத்தைக் குறிப்பிட்டு இருந்தால், இந்த சர்ச்சையைத் தவிர்த்து / குறைத்து இருக்க முடியும்.
காபி
இணையம் பிரபலமான பிறகு இவ்வளவு நாட்களாக காபி அடித்து படத்தை எடுத்தவர்கள் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
ஒரு படத்தின் சுவரொட்டி முதற்கொண்டு உடனே கண்டு பிடித்து விடுகிறார்கள்.
இதெல்லாம் தெரிந்தும் படம் எடுப்பவர்களை விட பார்ப்பவர்கள் இது போன்ற விசயங்களில் மூளைக்காரர்கள் என்பதை உணராமல் தொடர்ந்து காபி செய்பவர்களை நினைத்தால்… என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
ஒரு படத்தை எங்கு இருந்தோ சுட்டுப் படமாக எடுப்பவர் ஒரு இயக்குநர் ஆனால், அந்தப் படத்தை இங்குள்ள எத்தனையோ கோடி மக்களில் ஒருவர் பார்த்து கூறினால் கூட போதும் இணையமே அலறி விடும்.
எனவே, நாம் திருடுவதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து எவரும் செயல்பட்டால் அவரை விட முட்டாள் யாரும் இல்லை.
அறிமுக இயக்குநர்கள்
இதில் சகிக்கவே முடியாத ஒரு விசயம். அறிமுக இயக்குநர்கள் செய்வது.
ஒரு துறைக்கு வந்து சாதிக்க நினைப்பவர்களுக்கு சொந்தமாக ஒரு கதை கூடவா இவ்வளவு நாட்களில் தோன்றி இருக்காது!
அவர்களது முதல் படமே வேறு மொழி படத்தில் இருந்து சுடப்பட்டது என்றால், இவர்களை என்ன தான் செய்வது! “விடியும் முன்” படம் சிறந்த உதாரணம்.
சமீபத்தில் வந்த சரபம் படமும் ஜப்பானிய படத்தின் காபி. இதற்கும் அறிமுக இயக்குனர் என்று நினைக்கிறேன்.
எப்போதுமே புதிதாக வருபவர்களுக்கு கூற பல செய்திகள் விசயங்கள் புதுமைகள் என்று இருக்கும்.
பெரும்பாலும் முதல் படத்திலேயே தங்கள் கற்பனைகள் புதுமைகள் அனைத்தையும் பயன்படுத்தி விடுவார்கள் இதனால் அடுத்த படம் தோல்வி அடைந்து விடும்.
திறமையானவர்கள் மட்டும் இதில் தப்பித்து வெற்றிப் படங்களை தருகிறார்கள் ஆனால், முதல் படமே காபி என்றால் என்ன கூறுவது?
அனைவருக்குமே எதோ ஒரு சம்பவம் / நிகழ்ச்சி / காட்சி தான் படமாக எடுக்க / எழுத உந்துததலாக இருக்கிறது.
அந்த விசயத்தை எடுத்துக்கொண்டு நம்முடைய பாணியில் அதை எப்படி கொடுக்கிறோம் என்பதில் தான் உண்மையான வெற்றி அடங்கி இருக்கிறது.
இதுவே காலத்திற்கும் நிலைக்கும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
அண்ணா சூப்பர் அண்ணா…..சொன்ன மாதிரியே கொரியன் படத்தை பார்த்து விமர்சனம் எழுதிட்டிங்க ….. என்னதான் ஜிகர்தண்டா காப்பி யாக இருந்தாலும் எனக்கு பிடித்த மாதிரி ஒரு படம் கொடுத்ததிற்காக ஜிகர்தண்டா குழுவை பாராட்டுகிறேன் …….
நீங்கள் குறிப்பிட்ட இரண்டு படங்களையும் பார்க்கவில்லை, ஆனால் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது..
கண்ணதாசன் அவர்களை பற்றி அவர் சுயசரிதையில் படித்த ஒரு விஷியம் (பத்திரிகையாளர்கள் கண்ணதாசனிடம் உங்கள் பாடல்கள் சிலவற்றில் பழைய புராணங்களிலிருந்து எடுத்தது போல் உள்ளது என கேட்ட போது, அவர் கூறிய பதில் சுவாரசியமானது!!!
பதில் : உண்மைதான், நான் கம்பனையும், பட்டினதாரையும், வள்ளுவனையும், பாரதியையும், நேசிக்கிறேன், இவர்களின் படைப்புகளை படிக்கிறேன், அவற்றை கண்டுவியக்கிறேன். இந்த படைப்புகளை நாம் பாட்டன் / முப்பட்டான் சொத்துகளாக கருதுகிறேன். அவற்றிலிருந்து கையாளுவது என்பது வேறு / களவாடுவது என்பது வேறு..எனவே கையாளுவதில் தவறில்லை என பதில் அளித்தார்…
==========================================================
கிரி, தமிழ் படங்கள் வேறு மொழி படங்களை தழுவி எடுக்கபட்டு இருந்தாலும், Inspiration ன்னு குறிப்பிடுவது வெகு அரிதாக மட்டும் காண முடியும்.. சில படங்கள், படம் பார்த்து விட்டு ஆஹா, ஓஹோ நம்ம நெனச்சிக்கிட்டு இருக்கும் போது, அந்த படம் வேறு ஒரு மொழி படத்தோட காபி என கேள்விப்படும் போது, உண்மையில் ஒரு பார்வையாளனாக வருத்தமாக இருக்கும்..அடுத்தமுறை, அந்த இயக்குனரின் வேறு படம் பார்க்கவே கொஞ்சம் யோசனையாக இருக்கும்.. பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி..
கொரியன் படங்களை காப்பி அடிப்பது தமிழில் புதிது இல்லை, சரத் குமார் நடித்த ரிஷி படம் தி கில்லர் என்று 1995-ல் வந்தது, முடிந்தால் ஒருமுறை பாருங்கள் இப்போது பார்த்தாலும் அற்புதமாக இருக்கும்.
//ஒரு படத்தின் சுவரொட்டி முதற்கொண்டு உடனே கண்டு பிடித்து விடுகிறார்கள். // இது கமலின் உத்தம வில்லன் படத்தின் போஸ்டருக்கு கூட நிகழ்ந்தது……
நடிகர் கமல் இது போன்று உலகின் அனைத்து படங்களையும் பார்த்து, அதை தமிழில் எடுத்ததால் உலக நாயகன் என்று அறியப்படுகிறார்…..
@கார்த்தி நான் ஜிகர்தண்டா பார்க்கும் முன்பே இதை பார்த்து விட்டேன்.
@யாசின் நீங்க சொன்ன மாதிரி தெய்வத்திருமகள் படம் பார்த்து பாராட்டி பின்னர் பல்ப் வாங்கினேன் 🙂
@சிங்கக்குட்டி இதைப் பார்த்து விட்டேன் என்று நினைக்கிறேன். இதுவரை பார்க்கவில்லை என்றால் பார்த்துடுவோம் 🙂
@கோபி உத்தம வில்லன் காட்சி பொதுவான ஒன்று என்று அதன் பிறகு விளக்கி விட்டார்கள். அந்த முக ஒப்பனை எவர் செய்தாலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். கதகளி ஒப்பனை யார் போட்டாலும் எப்படி ஒரே மாதிரி இருக்குமோ அது போல.
மற்ற படங்கள் சர்ச்சை உண்மை தான்.
இன்றைக்கு தான் நாடு (சவூதி) திரும்பியிருக்கிறேன்.
நன்றாக விமர்சனம் செய்திருகிறீர்கள். இன்னும் இந்த படம் பார்க்கவில்லை. ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி தான் தி டார்கெட் என்ற கொரியன் படத்தை பார்த்தேன். கொரியன் படங்களில் ஈவு இரக்கம் கலாச்சார பிரச்சினை போன்றவைகளை கண்டுகொள்வதே கிடையாது. நாம் யாரை ஹீரோ அல்லது நல்லவன் என்று நினைத்திருக்கிரோமோ அவரை பொட்டென்று (உயிரையோ அல்லது நல்ல மதிப்பையோ) போட்டுத்தள்ளிவிட்டு நாம் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த காட்சி ஓடிக்கொண்டிருக்கும்.
கருந்தேள் இன்ஸ்பிறேஷனுக்கும் காப்பிக்கும் அழகாக வித்தியாசம் காட்டியிருந்தார். ஓல்டு பாய் போன்று (இந்திய கலாச்சாரத்து ஏற்றதன்று) வராத என்று எண்ணியபோது ஜிந்தா என்ற பெயரில் ஹிந்தியில் கொத்துக்கறி போட்டிருந்தனர்.. பார்த்து வெறுத்தே போய்விட்டேன்.
உலகில் யாரேனும் ஒருவராவது வேற்று நாட்டு இசையையோ திரைப்படத்தையோ பார்த்துவிடுகிறார்.. இன்றைய இணையதள வாயிலாக அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிவிப்பது ரொம்பவே எளிதாகிறது.
எனக்கு ஒரு டவுட்டு கூகிளில் ஒரு விஷயத்தை எப்படியாவது தேடிக்கண்டுபிடிப்பது எளிது. (உதா. படம் பெயர் தெரியாவிடில் நடிகர் / நடிகை / சவுண்ட் ஆர்டிஸ்ட் / எடிடர் என்று யாராவது ஒரு பெயரை போட்டு ஜாதகத்தையே கண்டு பிடிக்கலாம்) ஆனால் இசையை ?
ராஜ்குமார் இசை ரசிகர்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவர் பார்த்துக் கூறினாலும் கூட போதும்..YouTube வைத்து நாறடித்து விடுகிறார்கள்.
நான் கொரியன் படங்களின் தீவிர ரசிகன் காரணம் நான் ஹாரர், சண்டை மற்றும் கேங்ஸ்டர் படங்களின் தீவிர ரசிகன்.