நான் புதுப்பேட்டை படத்தை வெளிவந்த போதே ரசித்தவன், பல வருடங்கள் கழித்து அதைப் புகழ்ந்தவன் அல்ல 🙂 .
வெளியான போதே தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாள் சத்யம் திரையரங்கில் பார்த்தேன்.
அப்போது இருந்து புதுப்பேட்டை இயக்கம், இசை, ஒளிப்பதிவு, வசனம், நடிப்பு மற்றும் உருவாக்கத்துக்கு அதி தீவிர ரசிகன். Image Credit
கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக இதற்குத் திரைவிமர்சனம் எழுதணும் என்று கூறிக்கொண்டுள்ளேன் ஆனால், எதோ காரணங்களால் தள்ளிபோய்க்கொண்டு இருந்தது.
“வெற்றி” திரையரங்கம் தனது RGB Laser தொழில்நுட்பத்தில், Classic என்றழைக்கப்படும் பழைய சிறந்த திரைப்படங்களைத் திரையிடுவதாக அறிவித்தது.
அதில் புதுப்பேட்டை, ஆரண்யகாண்டம், உறியடி, ஆயிரத்தில் ஒருவன், அவதார், Mad Max Fury Road போன்றவை அடங்கும்.
புதுப்பேட்டை பார்த்தவுடன் முன்பதிவு செய்து விட்டேன்.
நான் ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்த படங்களில் புதுப்பேட்டையும் ஒன்று எனவே, விமர்சனம் பெரியதாக இருக்கும். என் மனத் திருப்திக்காகவும் புதுப்பேட்டை படத்தை ரசித்தவர்களுக்காகவும் எழுதுகிறேன்.
விருப்பமுள்ளவர்கள் மட்டும் நேரம் இருக்கும் போது பொறுமையாகப் படிக்கவும். இது போகிற போக்கில் படித்துச் செல்லும் விமர்சனம் அல்ல.
நன்றி
இனி புதுப்பேட்டை விமர்சனம்
எப்படி, தலைவரே நினைத்தாலும் “பாட்ஷா” போல ஒரு Don படத்தைக் கொண்டு வர முடியாதோ அது போல ஒரு படம் தான் “புதுப்பேட்டை”.
““பாட்ஷா” ஒரு மேஜிக்! அதைத் திரும்பக் கொண்டு வர முடியாது. எனவே, இரண்டாம் பாகம் எடுத்து அதைக் கெடுக்க விரும்பவில்லை” என்று ரஜினி கூறி விட்டார்.
செல்வா “புதுப்பேட்டை” இரண்டாம் பாகம் வர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். புதுப்பேட்டை போல வருமா?! என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திரைப்படங்கள் திட்டமிடப்பட்டு Classic என்ற வகையில் சேருமாறு இயக்கப்படுவதில்லை. சில அதுவாகத் தானாக அமையும். அப்படி வரும் படங்கள் தான் Classic ஆக நிலைத்து நிற்கும்.
செல்வா புதுப்பேட்டையை எடுக்கும் போது தனது இயக்கத்தில் சிறந்த கேங்ஸ்டர் படமாக எடுக்க வேண்டும் என்று தான் நினைத்து எடுத்து இருப்பார்.
ஆனால், அவரே எதிர்பாராத அளவுக்குச் சிறப்பாக அமைந்து விட்டது.
அது கூட இப்படம் வெளிவந்த போது, தற்போது கொண்டாடப்படுவது போலப் பெரியளவில் கொண்டாடப்படவில்லை. நிச்சயம் அப்போது அவருக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்து இருக்கும்.
இயக்கம், இசை, நடிப்பு, ஒளிப்பதிவு, வசனம், திரைக்கதை என்று அனைத்துமே அட்டகாசமாக அமைந்த படம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்தேன் .
தனுஷ் என்ற அற்புதக் கலைஞன்
தனுஷ் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்துவார் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஒவ்வொரு காட்சியிலும் நம்மை வியக்க வைப்பார்.
இது எதோ சொல்ல வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. உண்மையாகவே நடிப்பில் மிரட்டி இருப்பார்.
“துள்ளுவதோ இளமை” படத்தில் “இவனெல்லாம் ஹீரோவா?!” என்று பலரால் நக்கல் அடிக்கப்பட்ட தனுஷ் “காதல் கொண்டேன்” படத்திலேயே தன்னை நிரூபித்து இருப்பார்.
புதுப்பேட்டையில் பலரை வியப்பில் ஆழ்த்தி விட்டார்.
“இந்தப்பையனுக்குள்ளும் எதோ இருக்கு பாரேன்!” என்று நினைக்கும் அளவுக்கு இருக்கும்.
அப்பா கொலை செய்து விடுவார் என்று பயந்து, கதவை திறக்கும் போது திறக்காததால், பயத்தில் பேண்ட்டோடு சிறுநீர் கழித்துத் தெறித்து ஓடுவதில் ஆரம்பிக்கும் இவரின் நடிப்பு, படம் முடியும் வரை தொடர்ந்து கொண்டு இருக்கும்.
வீட்டை விட்டு வெளியே சென்று சாப்பிட எதுவுமில்லாமல், கார் துடைத்து எதுவும் கிடைக்காமல், பசி மயக்கத்தில் தள்ளாடி வரும் போது கிட்டத்தட்ட பிச்சைக்காரனை போலவே இருப்பார்.
“தொண்டையில ஆபரேசன்! காசு கொடு” ன்னு பிச்சை எடுத்து, உணவகத்தில் “மூணு தோச” என்று சொல்லும் போது பல நாள் பசியில் குரல் கூடக் கம்மியிருக்கும் அதைக் கூட மிகச் சிறப்பாகப் பிரதிபலித்து இருப்பார்.
சென்னைத் தமிழ்
தனுஷ் இப்படத்தில் சென்னை தமிழை அட்டகாசமாகப் பேசி இருப்பார்.
இது போல ஒரு சரளமான சென்னை தமிழைச் சமீபத்தில் வந்த “வட சென்னை” படத்தில் கூடப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷுக்கு அழுகை அப்படியொரு இயல்பாக வருகிறது எப்படி? “யாருக்குத் தான் அம்மான்னா பிடிக்காது” என்று கண்களில் கண்ணீருடன் கூறுவதெல்லாம் தூள்.
நிறையக் காட்சிகளில் தனுஷின் நடிப்பை பாராட்டுவதா? அவரை அப்படி இயக்கிய செல்வாவை பாராட்டுவதா? என்ற குழப்பமே இருக்கும். அண்ணனும் தம்பியும் மிரட்டி இருக்கிறார்கள்.
ஒரு காட்சியில் சாலை கடையில் அனைவரும் பரோட்டா ஆம்லெட் என்று (விஜய் சேதுபதி இக்காட்சியில் இருப்பார்) சாப்பிட, தனுஷ் கேட்டுப் பார்த்து, எவரும் கண்டு கொள்ளவில்லை என்று திரும்பிச் செல்வார். பாவமாக இருக்கும்.
இப்பவும் எப்பவாவது இது போலச் சாலைக்கடைகளில் சாப்பிடும் போது யாராவது பிச்சை கேட்டால், எனக்கு இக்காட்சியே நினைவுக்கு வரும்.
தனுஷ் மட்டுமல்ல ஒவ்வொருத்தரும் நடிப்பில் மிரட்டி இருப்பார்கள். யாரையுமே இவர் சிறப்பு அவர் சுமார் என்று சொல்லக்கூடிய அளவிலேயே இல்லை.
பால சிங்கம்
இவருடைய திரைப்பட வாழ்க்கையில் எனக்கு இரு படங்கள் எப்போதும் பளிச்சென்று நினைவுக்கு வரும். ஒன்று புதுப்பேட்டை இன்னொன்று அவதாரம்.
“அன்பு சார்” என்று தனுஷ் கூறியதும், வெட்கம் கலந்த பொய் கோவத்தில் ஒரு முகபாவனையைக் காட்டியிருப்பார் பாருங்கள், அசத்தல்.
தனுஷ் அடித்ததை விவரிக்கும் காட்சியில், “பொங்குனு ஒரு அடி… நெஞ்செலும்பே உடைஞ்சுருச்சாமே!” என்று கூறும் போது உண்மையான வியப்பு கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார்.
சினேகாவை அடிக்கும் காட்சிகளில் தனுஷை திட்டும் காட்சிகளில் எல்லாம் இத்தனை நாளா இவரெல்லாம் எங்கே இருந்தாரு என்று நம்மை யோசிக்க வைத்து விட்டார்.
இவருடைய கதாப்பாத்திரத்தை நீட்டிக்க முடியாது ஆனால், இன்னும் கொஞ்சம் தொடர்ந்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ண வைத்த நடிப்பு.
காலத்துக்கும் மறக்க முடியாது.
கவனம் பெற்ற தனுஷ் “பயிற்சியாளர்” 🙂
தனுஷ் ஒரு கொலை செய்ததால் அவரைக் குழுவில் சேர்த்துக் கொள்ள மூத்த கொலைகாரர்கள் கவுரவம் பார்ப்பார்கள் 🙂 . எனவே, அவரைப் பயிற்சியில் சேர்த்து விடுவார்கள்.
தனுஷுக்கு கொலை மற்றும் மற்ற வழிகளைச் சொல்லிக்கொடுக்க வருபவர் (அவர் பெயர் தெரியவில்லை) அப்படியொரு இயல்பான நடிப்பு.
“டேய்ய்ய் இன்னாடா.. உன்னைப் போய் என் தலையில கட்டுனாங்க பாரு” என்று திட்டியபடி அவருக்குப் பயிற்சியளிப்பது மிரட்டல்.
தனுஷ் கிட்ட “எட்டிப் பார்த்து என்ன இருக்குனு சொல்லு” என்று கூறும் காட்சியில் அதகளம்.
“சைடு லாக் போடக்கூடாது” என்று கூறியதை, எப்படி இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தது என்று நிஜ ரவுடிகள் கேட்டு அது செய்தியில் வந்தது நினைவில் உள்ளது.
செல்வா இதற்காக Home Work செய்து இருந்தார்.
தனுஷிடம் “எங்க.. கத்தியை உள்ளே வை, எடு… உள்ளே வை.. எடு..” ன்னு பயிற்சி அளிப்பது, பயத்தைப் பற்றிக் கூறுவது என்று அசத்தல் வசனங்கள் மற்றும் இயக்கம்.
“சரி சரி கவலைப்படாத உன்னைப் பற்றி நல்ல ரிப்போர்ட்டா கொடுக்கிறேன்” என்று கூறுவதற்குத் திரையரங்கு அதிர்கிறது.
“த்தா.. என்ன ஆனாலும் பயத்தை மட்டும் மூஞ்சில காட்டிடாதே!” என்பது மிரட்டல்.
20 வருடங்களுக்கு முன், முகத்தில் பயத்தைக் காட்டி தேவையே இல்லாமல் ஒரு முறை செவுள்ளையே அடி வாங்கியது நினைவில் வந்து சென்றது 🙂 .
பாலசிங்கத்தைக் கொலை செய்து, அழகம் பெருமாளை சந்திக்கும் போது, அழகம் பெருமாள் தனுஷை கண்டபடி திட்டி அவரை காலி செய்வதாக மிரட்டியதும்..
“என்ன விட்டீங்கன்னா நான் உங்களை விடுறேன்” என்று தனுஷ் பின்னாடி இருந்து கத்தியை எடுக்கும் போது அவர் பின்னால் நிற்கும் தனுஷ் பயிற்சியாளர், ஒரு அதிர்ச்சியைக் காட்டியிருப்பார் பாருங்க, அருமை அருமை.
இவரை எனக்கு ரொம்பப் பிடித்தது, இப்பவும் 🙂 . இவரை சந்திக்க விருப்பம்.
அழகம் பெருமாள்
செல்வா எந்தத் தைரியத்தில் அழகம் பெருமாளை இக்கதாப்பாத்திரத்துக்குத் தேர்வு செய்தார் என்றே எனக்குப் புரியவில்லை, பேச்சுக்குக் கூறவில்லை, உண்மையாகவே இச்சந்தேகம்.
மனுசன் அரசியல்வாதியை அப்படியே கண் முன்னே நிறுத்தி இருப்பார். இவருக்குள்ளே இப்படியொரு இயல்பான நடிப்புத் திறமையா?! என்று வியக்க வைத்தார்.
“அப்படியே டபுக்கு டபுக்குனு வளர்ந்துடுறீங்க” என்று தனுஷிடம் கூறும் போதும், “ஏத்தி விட்டு அழகு பார்ப்பவன்டா.. கால்ல விழு குமாரு“, என்று கூறி நிழற்படம் எடுத்து வண்டை வண்டையா திட்டி, மேடையில் பேச திரை விலகியதும் “செந்தமிழ் கவிஞன் நான்” என்பதெல்லாம் சரவெடி.
“எதுக்குங்க என் வீட்டுல குண்டு போட்டீங்க?” என்று தனுஷ் கேட்டதும்.
“அப்படியா! எனக்குத் தெரியாது குமாரு.. என் மீது அன்புள்ளம் கொண்ட தொண்டன் யாராவது செய்து இருக்கலாம்” என்பார் 😀 .
“செஞ்சேன்னு சொல்லுங்க… இல்ல.. இல்லைனு சொல்லுங்க.. அதென்ன தெரியாதுன்னு சொல்றீங்கன்னு” தனுஷ் கேட்டதும்…
“தரையில தான போட்டாங்க.. உன் தலையிலையா போட்டாங்க” என்பதும், “அரசியல்.. அரசியல் குமாரு” என்பதும் அட்டகாசம்.
அழகம் பெருமாளுக்கும் ஆகச்சிறந்த படம். இதன் பிறகு பல படங்களில் நடித்து இருந்தாலும், புதுப்பேட்டை அருகே கூட மற்ற படங்கள் வர முடியாது.
தனுஷ் அப்பா ரமேஷ்
இவருடைய “கடவுள் இருக்கான் குமாரு” “ஒரே அசிங்கமா போய்டுச்சு குமாரு” வசனங்கள் 13 வருடங்கள் கடந்தும் இன்றும் மீம்களாக உலா வருகின்றன 🙂 .
“பணம் என்ன பணம் குமாரு.. எல்லோரும் ஒண்ணா இருக்கலாம்ன்னு… “என்று பொய்யாகக் கூறும் போது ரசிக்க வைப்பார்.
அதாவது அவர் கூறுவது பணத்துக்காக என்று பார்க்கும் நமக்குத் தெரியும் அதனால் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கும்.
வீடு காட்டுகிறேன் என்று அழைத்துச் சென்று வெட்டி வைத்த குழியில் படுக்கக் கூறியதும் அதிர்ந்து தனுஷிடம் பேசும் போது
“குமாரு.. குமாரு.. இந்த மணி பய என்னமோ குழில போய்ப் படுங்குறான், நான் கூடப் பயந்துட்டம்ப்பா.. உன் அம்மாவை கொன்னதை மனசுல வைத்து தான் இப்படிப் பண்ணுறியோன்னு” என்பதெல்லாம் செம நடிப்பு.
இதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார், இதே போல சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.
சாதாரண காட்சி இன்று வரை மறக்கவில்லை
தனுஷ் அடுத்தப் பெரிய தலயாக உருவாகி வசூல் செய்யும் போது, பணம் கொடுக்க மாட்டேன் என்று கூறும் நபர் நடிப்பெல்லாம் தாறுமாறு.
“ஒரு கொலை பண்ணிட்டாராம் உடனே தூக்கி கொண்டு வந்து வைத்துட்டாங்க.. கர்மம் கர்மம்.. கண்ட நாயெல்லாம் கேள்வி கேட்குது” எனும் போது பலத்த கைதட்டல்.
தனுஷ் அப்பாவும், அவரது நண்பரும்.. “எதுனா பிரச்சனைனா குரல் கொடு குமாரு” என்றதும் அவர் கொடுக்கும் உடல்மொழியும் வசனமும் நக்கலும் செம செம 🙂 .
வந்த கொஞ்ச நேரமும் மனதை விட்டு அகலாத நடிப்பு. இக்காட்சி நான் மிக ரசித்தது.
இவர் “காக்கா முட்டை” படத்தில் அரசியல்வாதியாக வந்தார். இதன் பிறகு இவருக்கு ஏன் அதிகம் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று புரியவில்லை. திறமையான நடிகர்.
துணை நடிகர்கள்
மணியாக வருபவரும், வெள்ளை சட்டை வேட்டி அணிந்து இருப்பவரும் மற்றும் மற்ற நபர்களும் தங்களுடைய மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
“அவசரப்பட்டுட்டியே குமாரு” “பயப்படுறியா குமாரு” வசனங்கள் இன்றும் பிரபலம். இவ்வசனங்களைக் கூறும் இடம் மிகப் பொருத்தமாக இருக்கும்.
இதைச் சரியான இடங்களில் பயன்படுத்தியதாலே இன்றும் இவ்வசனங்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன.
“ண்ணா! ஆனா மூணு வேளையும் பிரியாணியா போட்டு கவனிச்சுக்கிட்டாங்க” என்பது கலகலப்பு 🙂 . இவரை அடிக்கும் போது சிலை மாதிரி நின்னுட்டு இருப்பாரு.
வசனம் பாலகுமாரன்
வசனம் மிகப்பெரிய பலம். 13 வருடங்கள் கடந்தும் வசனங்கள் நினைவில் உள்ளது என்பதெல்லாம் சாதாரண விசயமில்லை.
இந்த விமர்சனத்திலேயே படித்தது எல்லாமே நீங்களும் ரசித்த வசனங்களாகத் தான் இருக்கும்.
வசனங்கள் படத்தை ஒரு படி மேலே கொண்டு செல்ல உதவியது என்றால் மிகையில்லை. சொல்லி ரசிக்க ஏகப்பட்ட வசனங்கள் உள்ளது.
பாலகுமாரன் எப்படி இது போல கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப மிகப் பொருத்தமாக எழுதினார் என்று குழப்பமாக இருந்தது.
செல்வாவின் மனதைப் படித்து எழுதியது போல இருக்கிறது. மிகமிகத் திறமை வேண்டும் இது போல எழுத.
பாட்ஷா & புதுப்பேட்டை இரண்டுமே பாலகுமாரன் வசனங்களுக்குப் பிரபலம்.
அரசியல் காட்சிகள்
தனுஷ் MLA “Seat” கேட்டுச் சண்டை போடும் காட்சிகளில், “தினம் தினம் உயிரோட இருக்கோமான்னு தலையைத் தொட்டுப் பார்த்துட்டே இருக்க முடியுமா?” என்று எகிறுவார்.
கட்சிகள் எப்படித் தொகுதிகளைப் பிரிக்கிறார்கள் என்பதை அக்காட்சியில் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
அதே போலத் தனுஷ் இடம் கிடைக்காததால் கோபத்தில் வார்த்தையை விட்டதும், அங்கே உள்ள நபர்கள் தனுஷை அடிக்கப் பாய்வதும், மிரட்டுவதும் என்று அப்படியே தத்ரூபமாகக் காட்டியிருப்பார்கள்.
முதல் முறையாகத் தனுஷ் கண்ணில் கோபம் கலந்த பயம் தெரியும்.
ஆளுங்ககட்சி தலைவராக (முதல்வராக) வரும் பாரதி மணி அவர்களைக் கலைஞரோடு ஒப்பிட்டு அப்போது சர்ச்சையானது நினைவில் உள்ளது.
தனுஷுக்கு பகுதி செயலாளராகவோ எதோ பதவி கொடுப்பார்கள். உடனே அதற்குக் கிடைக்கும் மதிப்பை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது.
எதோ MLA ஆனது போலக் காட்சி இருக்கும். இக்காட்சிகள் எல்லாம் அரசியலை புரிந்து கொள்ள உதவியது.
ஒருத்தருடன் சண்டை என்றதும் மற்ற கட்சிகள் தனுஷை விலைக்கு வாங்க முயற்சிப்பது இன்றும் நடந்து கொண்டு இருக்கும் காட்சிகள்.
சினேகா
பாலியல் தொழிலாளியாக வரும் சினேகா ஏற்கனவே பல நல்ல கதாப்பாத்திரங்களில் பார்த்து விட்டதால், இக்கதாப்பாத்திரத்தில் மனதில் ஒட்ட சில நேரம் எடுக்கிறது.
முடிந்தவரை தன் நடிப்பை நியாயப்படுத்தி இருக்கிறார். இக்கதாப்பாத்திரத்துக்குச் செல்வா புதிய முகத்தைத் தேர்வு செய்து இருக்கலாம் என்று தோன்றியது.
பாலசிங்கத்திடம் அடி வாங்கும் காட்சிகளில் எல்லாம் உண்மையாகவே ரொம்பப் பாவமாக இருக்கும்.
இறுதியில் சாகும் நிலையில், தனுஷ் தன்னுடைய குழந்தையைச் சந்தேகப்படவில்லை என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டதும், நிம்மதியுடன் சாவதை கண்களாலே நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சினேகாவின் மிகச் சிறந்த நடிப்பு.
நடிகைகளுக்குத் தங்கள் நடிப்பில் பாலியல் தொழிலாளி கதாப்பாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்பது விருப்பம். அதற்காகச் நடித்தாரா என்பது தெரியவில்லை.
முழுமையாகத் தன்னை அக்கதாப்பாத்திரத்துக்கு நியாயப்படுத்தவில்லை என்றாலும், தன்னுடைய முழுமையான நடிப்பை வழங்கியிருப்பார்.
யுவன்
படத்தின் இன்னொரு நாயகன் யுவன் தான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
பின்னணி இசையில் சரவெடியாக நொறுக்கி இருப்பார். சிறு இடத்தில் கூட நம்மை இசை கவரவில்லை என்று கூற முடியாத அளவுக்கு இசையிருக்கும்.
பாடல்கள் அனைத்தும் அவ்வளவு அசத்தலாக இருக்கும். படத்தை வேறு ஒரு பரிணாமத்துக்கு இசை கொண்டு சென்றது.
தனுஷுடைய ஒவ்வொரு காலக் கட்டத்துக்கும் ஏற்ற வகையில் இசையில் வித்யாசம் காட்டியிருப்பார்.
கேங்ஸ்டர் படங்களுக்கு என்றே இருக்கும் பின்னணி இசைகளில் கலக்கி இருக்கிறார்.
யுவன் அவருடைய இசையின் உச்சத்தில் இருந்த நேரம் இது. தொட்டதெல்லாம் பொன் என்பது போல, இசையமைத்த படங்கள் பொன் என்றால், புதுப்பேட்டை இரத்தினம்.
அதிலும் புதிய மேம்படுத்தப்பட்ட ஒலியில் கேட்பதில் இருக்கும் பரவசமே தனி!
ஒளிப்பதிவு
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் வேறு எல்லையை எட்டி இருக்கிறார்.
எத்தனை காட்சிகளை நான் கூறுவது? உண்மையாகவே ரொம்பக் கடினம். கூற ஆரம்பித்தால் படத்தின் பெரும்பாலான காட்சிகளைக் கோணங்களைக் கூற வேண்டும்.
இயல்பு தன்மை என்றால் அப்படியொரு இயல்பு தன்மையைக் காட்சிகளில் கொண்டு வந்து இருப்பார். கேங்ஸ்டர் படங்களுக்கே உரிய சூழ்நிலையைக் கொண்டு வந்து இருப்பார்.
படத்தில் நிறைய இடங்களில் கலை இயக்குநர் அமைத்த அரங்குகளை நிஜம் போலவே காட்டியிருப்பார்.
ஏராளமான அரங்க அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன ஆனால், வெகு சிலரே கண்டு பிடித்து இருக்க முடியும்.
கலை இயக்குநரும் அரவிந்த் கிருஷ்ணாவும் போட்டி போட்டு காட்சிகளைக் கொடுத்து இருக்கிறார்கள்.
வெற்றி திரையரங்கில் RGB Laser வசதியில் காட்சிகள் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருந்தது.
13 வருடங்களுக்கு முன்பு வந்த படத்தை இப்படி ஒரு தரத்தில் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம் தானே.
படத்தொகுப்பு (Editing)
கோலா பாஸ்கர் படத்தொகுப்பில் கொல மாஸ் செய்து இருக்கிறார் 🙂 . ஒரு படம் எப்படி சிறப்பாக எடுக்கப்பட்டாலும் படத்தொகுப்பு சரியில்லை என்றால், மொத்தப்படமும் பயனற்றதாகி விடும்.
பலரின் உழைப்பு படத்தொகுப்பாளரிடம் தான் உள்ளது.
அவ்வகையில் மிகச்சிறந்த பணி.
செல்வராகவன்
இயக்குநர் செல்வா எப்படி இது போலப் படத்தை எடுக்க நினைத்தார்? எது இப்படியொரு திரைப்படத்தை எடுக்கத் தூண்டியது?
இப்படத்தை எடுக்கும் போது எப்படி மனநிலை இருந்தது? என்று கேட்க விருப்பம் 🙂 . Image Credit – Unknown
தனுஷ் ஒல்லியாக இருந்தது குறித்துப் பல விமர்சனங்கள் இருந்தன. காரணம், இது கேங்ஸ்டர் படம் என்பதாலும், தனுஷ் முக்கியக் கதாப்பாத்திரம் என்பதாலும்.
அதற்குச் செல்வா ஒரு விளக்கம் கொடுத்து இருந்தார்.
சென்னையில் பெரிய ரவுடியாக இருப்பவர்கள் பெரும்பாலோனோர் ஒல்லியாகவே இருந்தனர். உடல் பலத்தை விட, மன உறுதி, தன்னம்பிக்கை அவர்களுக்கு அதிகம்.
இதையொட்டியே தனுஷை நடிக்க வைத்ததாகக் கூறியிருந்தார். செல்வா கூறியதை ஏற்றுக்கொள்ள முடிகிறது.
சென்னையில் பிடிபட்ட பல ரவுடிகளின் உடலமைப்புத் தனுஷ் போல இருந்தது உண்மையே! எனவே, செல்வா கூறியதில் நியாயம் இருந்ததாகத் தான் தோன்றியது.
“அது எப்படித் தனுஷ் சோனியா அகர்வாலுக்கு தாலி கட்டலாம்! இது ஏற்றுக்கொள்ளும்படி இல்லையே” என்று பலர் கூறினார்கள்.
தனுஷாகப் பார்க்காமல் அவர் ஒரு ரவுடியாக நினைத்துப் பாருங்கள் என்று செல்வா கூறியிருந்ததாக நினைவு.
இப்படம் நீண்ட காலம் எடுக்கப்பட்டதாலோ என்னவோ, தனுஷ் முக அமைப்பு ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
சில காட்சிகளில் தலை முடி, தாடி வளர்ந்தும் சில காட்சிகளில் அப்படியில்லாமலும் காட்சிகள் அமைந்து இருக்கும்.
ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து எடுத்த செல்வா இந்த அடிப்படை விசயத்தில் ஏன் சமாதானப்படுத்திக் கொண்டார் என்பது எனக்குப் புரியாத புதிர்.
படத்தில் எனக்குப் பிடிக்காத ஒரே விசயம் இது மட்டுமே!
திரைப்பட அனுபவம்
செல்வாவை பார்த்தால் அதிகம் பேசாத நபராகத் தோன்றுகிறார் ஆனால், அவரிடம் இருந்து இப்படியொரு அதிரடிப்படம்!
திரையரங்கில் ஒவ்வொரு காட்சிக்கும் அப்படியொரு கைதட்டல். செல்வா பார்த்து இருந்தால், நிச்சயம் மகிழ்ந்து இருப்பார்.
காதை பொத்திக்கொண்டே சில காட்சிகளைப் பார்க்க வேண்டிய நிலை, அந்த அளவுக்குக் கத்திக்கொண்டு இருந்தார்கள்.
செல்வாவை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும், திரைப்பட அனுபவத்தைக் கெடுக்கிறார்களே என்ற வருத்தமும் இருந்தது.
இப்படத்தை ரசிக்கும் விதமே வேறு.. கைதட்டி கொண்டாடலாம் ஆனால், வசனங்களை நக்கல் அடித்து அதன் அனுபவத்தைக் கெடுக்கக் கூடாது.
இவர்கள் நிச்சயம் படத்தை ரசித்துப் பார்த்தவர்களாக இருக்க முடியாது. படத்தின் மதிப்பு தெரியாதவர்கள்.
என்ன செய்வது.. சில நம் கையில் இல்லையே! எதோ.. திரும்பப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததே அதிகம். எனவே, ரொம்ப எதிர்பார்ப்பது நியாயமில்லை.
புதுப்பேட்டை படத்தை ஏகப்பட்ட முறை பார்த்து இருக்கிறேன் ஆனால், இந்த முறை மற்ற எப்போதையும் விடக் கூடுதலாக ரசித்துப் பார்த்தேன்.
பலரும் வசனங்களுக்குக் கைதட்டியபடியே இருந்தார்கள், நானும்.
இன்று (மார்ச் 5) செல்வாக்கு பிறந்தநாள். பல வருடங்களாகத் தாமதித்து, எழுதியதையும் செல்வா பிறந்த நாளில் எழுத வேண்டும் என்று இருக்கும் போல!
மிக்க மகிழ்ச்சி 🙂 .
செல்வா! இன்னும் பல நல்ல திரைப்படங்களைக் கொடுக்க திரை ரசிகனாக வாழ்த்துகள்.
Directed by Selvaraghavan
Produced by K Muralidharan, V Swaminathan, G Venugopal
Screenplay by Selvaraghavan
Story by Selvaraghavan
Starring Dhanush, Sneha, Sonia Agarwal
Music by Yuvan Shankar Raja
Cinematography Arvind Krishna
Edited by Kola Bhaskar
Production company Lakshmi Movie Makers
Release date 26 May 2006
Running time 170 minutes
தொடர்புடைய கட்டுரைகள்
த்தா.. பயத்தை மட்டும் மூஞ்சில காட்டிடாதே!
கொசுறு
புதுப்பேட்டையை இன்னும் விரிவாக, இது போல இரண்டுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதும் அளவுக்கு எனக்கு விஷயங்கள் உள்ளது.
தமிழின் ஆகச் சிறந்த கேங்ஸ்டர் படம் “புதுப்பேட்டை”. தயாரித்த “லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்” க்கு நன்றி.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
ரொம்பவே மெனக்கெட்டு ரசிச்சு எழுதியிருக்கீங்க. சமீப காலமாக பல இடங்களில் நடிகர், நடிகை, இசையமைப்பாளர் என்று பட்டியலிட்டு இவர்கள் சாதனைகள் என்று என்று ஒவ்வொருவரும் எழுதுவதைப் பார்த்து எனக்கு தனிப்பட்ட முறையில் ஆதங்கமாக இருக்கின்றது. உள்ளே நடப்பதை ஓரளவுக்கு தெரிந்தவன் என்ற முறையில். ஒரு நாளில் எடுக்க வேண்டிய மூன்று காட்சிகள் (மட்டும்) எப்படி கோணம் வைப்பது, எங்கிருந்து தொடங்கி எங்கிருந்து முடிப்பது. அந்த ஒவ்வொரு காட்சியும் படத்தில் எத்தனை நொடிகள் வர வேண்டும் என்ற தெரியாத இயக்குநரும், அவருக்கு முழுமையாக எழுத்திலும் உழைப்பிலும் திறமையிலும் உடன் (பெயர் இல்லாமல் மாதச் சம்பளத்தில்) பணிபுரியும் ஆயிரக்கணக்கான துணை இயக்குநர்களைத்தான் உங்களின் ஒவ்வொரு வரியிலும் யோசித்துக் கொண்டிருந்தேன். திரைப்படம் என்பது கூட்டு முயற்சி. குறைந்த பட்சம் முப்பது பெரிய தலைகளின் மொத்த புத்திசாலித்தனமும் அடங்கியது. எனக்கு வேறொரு விசயத்தில் தனுஷை பிடிக்கும். அவர் சந்தைப்படுத்தும் முறை, அவர் தனிப்பட்ட முறையில் நடத்தும் நிறுவனங்களை நிர்வாக ரீதியாக செயல்படுத்தும் விதம், சாதக பாதங்களைக் கடந்து குடும்ப வாழ்க்கையில் அவர் காட்டும் ஈடுபாடு. மற்றொன்றும் சொல்லத் தோன்றுகின்றது. இதெல்லாம் ஒரு கதாநாயகனுக்கு உரிய முகமா? என்று சொன்னவர்கள் தனுஷை அவரின் வெற்றியிலிருந்து நம்பிக்கையாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
கல்லுரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது முதன்முதலில் துள்ளுவதோ இளமை படத்தின் பாடல்களை கேட்டு பிரமித்தேன்!!! அதன் பின் காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பு, விவரிக்க வார்த்தைகள் இல்லை!!! அதன் பின்புலம் நிச்சயம் இயக்குனர் செல்வராகவனை சேரும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.. இயக்குனர் சொல்லி கொடுத்தாலும் அதை சரியா வெளிகொண்டுவருவதில் நடிகரின் பங்களிப்பும் அதிகம் இருக்கிறது…
ஆரம்பம் முதலே தனுஷ் சிறிது சிறிதாக தன்னை செதுக்கி கொண்டே முன்னேறி வருகிறார்.. அவருடன் சம காலத்தில் பயணித்த பல நடிகர்களுக்கு இன்று விலாசம் இல்லை.. புதுப்பேட்டை படம் சக்தியுடன் கோவையில் தான் பார்த்தேன்.. உங்கள் அளவுக்கு எனக்கு பெரிய பிரமிப்பை ஏற்படுத்தவில்லை.. படம் பார்க்கும் போது சாதாரண பையன் எப்படி இவ்வளவு பெரிய ரவுடியாக மாறுகிறான் என்பதை ஏற்று கொள்ளமுடியவில்லை.. (தற்போது இருக்கிற பக்குவமும், அறிவும், அனுபவமும் அப்போது இல்லை என்பது தான் உண்மை)..
வேறுவிதமான பாத்திரங்களில் சினேஹாவை பார்த்து பழகியதால், இந்த படத்தில் நன்றாக நடித்து இருந்தாலும் எனக்கு சினேஹா பாத்திரம் பிடிக்கவில்லை.. நீங்க எப்போதும் கூறுவது போல உங்களை பொறுத்தவரை தரமான கைங்ஸ்டர் படம் என்றால் புதுப்பேட்டை தான்!!! மிகுந்த சிரம் கொண்டு எழுதி உள்ளீர்கள் என நினைக்கிறேன்..இந்த பதிவுக்கு எவ்வளவு நேரமாயிற்று என்பதை தெரிவிக்கவும்.. தற்போதைய சூழலுக்கு வட சென்னைக்கு முன், புதுப்பேட்டை இரண்டாம் பக்கம் வந்திருந்தாலும் மாஸாக இருந்திருக்கும்.. பகிர்வுக்கு நன்றி கிரி!!!
@ஜோதிஜி நன்றி 🙂
நீங்கள் கூறியதை ஏற்றுக்கொள்கிறேன். திரைப்படம் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் கூட்டு முயற்சி தான். இதில் நாம் அனைவரையும் குறிப்பிட முடியாது என்பதாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்பதாலும் முதன்மை நபர்களை மட்டும் அவர்கள் சார்பாக குறிப்பிடுகிறோம்.
படத்தொகுப்பாளர் பங்கு மிக முக்கியமானது ஆனால், எத்தனை விமர்சனத்தில் அனைவரும் குறிப்பிடுகிறார்கள். நானே இது போல சில இடங்களில் தான் குறிப்பிடுகிறேன்.
எனவே, சில பின்னணி உழைப்பு அறியப்படமாலே அங்கீகரிக்கப்படாமலே சென்று விடுகிறது என்பது உண்மையும் தவிர்க்க முடியாததுமாகும்.
தனுஷ் வளர்ச்சி அசத்தல். சப்பையாக அறிமுகமாகி, தற்போது அவர் இருக்கும் உயரம் பிரமிக்க வைக்கிறது.
இது அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல, முழுக்க அவரது முயற்சி உழைப்பு.
அவருடைய துவக்கம் மட்டுமே அதிர்ஷ்டம் மற்றபடி அவரே தான் இவ்வளவுக்கும் காரணம்.
@யாசின் மிக்க நன்றி.
இக்கட்டுரை எழுத நான்கு மணி நேரமானது. ஒரே சமயத்தில் எழுதப்பட்ட கட்டுரையல்ல.
மூன்று நாட்களில் எழுதி திருத்தப்பட்டது. திருத்த தான் அதிக நேரமெடுக்கும், எழுத குறைவான நேரமே!
நான் கஷ்டப்பட்டு எழுதிய கமென்ட் இதில் வரவில்லை. ஏன்?
@ஹரிஷ்
இத்தளத்தில் comment Moderation கிடையாது.
சில நேரங்களில் கருத்துகளை SPAM என்று கருதிவிடும். அவ்வாறான நேரங்களில் நான் manual ஆக வெளியிடுவேன்.
ஆனால், உங்கள் கருத்து எதுவும் spam பகுதியில் காணவில்லை. எப்படி போனது என்று தெரியவில்லை.
வேறு எங்கும் சேமித்து இருந்தால், திரும்பப் பதிவிடவும்.
கிரி. விஜய் சேதுபதி மடோனா செபாஸ்டியன் நடித்து 2016 வருடம் வெளியான (காதலும் கடந்து போகும்) திரைப்படம் பார்த்து இருக்கிறீர்களா? அதிகாரப்பூர்வமாக கொரியன் படத்தின் உரிமையை வாங்கி அதை தமிழில் அழகாக எடுத்திருப்பார் இயக்குனர் நலன் குமாரசாமி. அற்புதமான படம். அந்த படம் பார்க்கவில்லையெனில் பாருங்கள். எனக்கு மிக மிக மிக பிடித்த திரைப்படம். Feel good movie. படம் கொஞ்சம் மெதுவாக தான் நகரும். ஆனால் ஒவ்வொரு சீனிலும் ஒரு உணர்வு இருக்கும். படத்தை பார்த்து உங்களுக்கு பிடித்து இருந்தால் விமர்சனம் எழுதுங்கள். படம் எந்த ஓடிடியிலும் இல்லை. சாட்டிலைட் உரிமை ஜெயா டிவி வாங்கியுள்ளது. எப்பயாவது ஜெயாவில் போடுவார்கள். நெட்டில் டவுன்லோட் செய்து பார்க்கலாம். அல்லது YouTube இல் கிடைத்தால் பாருங்கள். பார்த்து பிடித்து இருந்தால் விமர்சனம் எழுதுங்க
இல்லை. நான் எவ்வளவு முறை பதிவிட்டாலும் வரவில்லை. சரி. இந்த படத்தை ரசித்து எழுதியதை போலவே 2016 இல் வந்த விஜய் சேதுபதி மடோனா செபாஸ்டியன் நடித்த (காதலும் கடந்து போகும்) படத்தை முடிந்தால் பார்த்து எழுதுங்கள் என் விரிவாக அந்த படத்தை பற்றி கமென்ட் செய்தேன்.
காதலும் கடந்து போகும் படத்தை இதே போல விமர்சனம் எழுதுங்கள்
இப்படம் பற்றி ஏற்கனவே எதோ கட்டுரையில் கூறி இருந்தீர்கள், அதிலேயே பதிலளித்தாக நினைவு.
இப்படம் பார்த்து விட்டேன் ஆனால், உங்கள் அளவுக்கு என்னைக் கவரவில்லை. மோசமான படம் என்று கூறவில்லை ஆனால், புதுப்பேட்டை போல மிகவும் ரசித்து பார்த்த படமாக இல்லை.