பார்த்திபன் கனவு

7
Parthiban Kanavu பார்த்திபன் கனவு

காலத்தால் அழியாத பொன்னியின் செல்வன் என்ற நாவலைக் கொடுத்த கல்கி அவர்களின் நாவல் “பார்த்திபன் கனவு”.

பார்த்திபன் கனவு

சோழ மன்னன் பார்த்திப மகாராஜா தன் சோழ நாடு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டு அதை ஓவியமாக வரைகிறார்.

பல்லவ நரசிம்மவர்ம சக்கரவர்த்திப் பெரும் படையுடனான போரில் பார்த்திப மகாராஜா தோல்வி அடைந்து இறக்கிறார்.

பின்னர் அவருடைய மகன் விக்ரமன் திரும்ப நாட்டைப் பெற்றாரா பார்த்திப மகாராஜா கனவு நிறைவேறியதா என்பதே நாவல்.

நாவலை கால்வாசி படித்த பிறகு, கல்கி தான் நாவலை எழுதினாரா என்று சந்தேகம் வந்து இரண்டு முறை எழுதியவர் பெயரைப் பார்த்து விட்டேன்.

பொன்னியின் செல்வனில் முதல் இரண்டு பக்கங்கள் படித்தாலே நாம் அதில் மூழ்கி விடுவோம்.

நம்மை அப்படியே காந்தம் போல ஈர்த்து நாவலை முடிக்காமல் எந்த வேலையையும் செய்ய முடியாத அளவுக்குக் கல்கியின் எழுத்து கட்டிப் போட்டு விடும்.

ஆனால், “பார்த்திபன் கனவு” வெகுசாதாரணமான எழுத்து. பாதிக்கு மேல் நன்றாக இருந்தது.

நாவலின் தலைப்பு எவருக்கும் பார்த்திப மகாராஜா நாட்டைத் தன் கனவுப் படி எப்படி உருவாக்குகிறார் என்றே நினைக்கத் தோன்றும் ஆனால், இறுதிவரை அப்படி ஒன்று நடக்காமலே தொடர்வது நம்மைச் சலிப்படைய வைக்கிறது.

பொன்னன் வள்ளி குந்தவி

படகோட்டி பொன்னனும் அவனது மனைவி வள்ளியும் குறிப்பாகச் சக்கரவர்த்தி மகள் குந்தவியும் நம்மை ஈர்ப்புடன் வைத்து இருக்கிறார்கள்.

நாவலின் சுவாரசியமாக இவர்களே நம்மை வழி நடத்துகிறார்கள்.

குந்தவி பகுதியில் கல்கி சுவாரசியத்தைக் கொடுக்கத் தவறவில்லை.

குந்தவி விக்ரமன் குறித்து நினைப்பதும் விக்ரமனுக்காகத் தன் தந்தை நரசிம்மவர்ம சக்கரவர்த்தியுடன் வாக்குவாதம் செய்வதும் விக்ரமனுக்காக உருகுவதும் என்று கல்கி தன்னுடைய அழகான வர்ணனையைக் கொடுத்துள்ளார்.

விக்ரமன்

பார்த்திப மகாராஜாவின் மகன் விக்ரமன் கதாப்பாத்திரம் கத்துக்குட்டி போலவே உள்ளது.

முதலில் “பொன்னியின் செல்வன்” படித்தது என் தவறு 🙂 . இதில் பல மிரட்டலான கதாப்பாத்திரங்களைப் பார்த்து விக்கிரமனைப் பார்த்தால் சுமார்.

அவசரப்பட்டு எதையாவது செய்து மாட்டிக்கொள்வது அடுத்தவரின் உதவியில் தப்புவது என்று, இவர் மீதான மதிப்பைக் குறைத்து விடுகிறது.

முடிந்தவரை கல்கி விக்ரமனை சுவாரசியப்படுத்தி இருக்கிறார் ஆனால், திருப்திப்படுத்தவில்லை.

நரபலி

நரபலி கொடுப்பது பற்றி வருகிறது. அப்போது இதை முட்டாள்தனமான செயல் என்று கடுமையான தண்டனை கொடுக்கும் நிலை இருந்துள்ளது.

இது பற்றிய பேச்சு வரும் போது “தற்போதும் கூட இது போல இருக்கிறார்களா?!” என்று கேட்பதாக வசனம் வருகிறது ஆனால், இந்த நிலை தற்போது  வரை தொடர்ந்து கொண்டு இருப்பது நாம் இன்னமும் மாறவில்லை என்பதையே உணர்த்துகிறது.

சொர்க்கமே என்றாலும்…

சிவனடியாராக வருபவர் படகோட்டி பொன்னனிடம் கூறும் வார்த்தைகள் என்னை மிகவும் ஈர்த்தது. காரணம் எனக்குப் பொருத்தமாக இருந்தது தான் 🙂

பொன்னா! ஒருவனுக்குத் தன்னுடைய பிறந்த நாட்டில் அன்பு எப்போது பூரணமாகும் என்று உனக்குத் தெரியுமா? கொஞ்ச காலமாவது அயல் தேசத்திலிருந்து விட்டுத் திரும்பி வரும் போது தான்.

இரண்டு மூன்று வருஷம் அயல்நாட்டிலிருந்து விட்டு ஒருவன் திரும்பித் தன் தாய் நாட்டுக்கு வரும் போது, பாலைவன பிரதேசமாயிருந்தாலும் அது சொர்க்க பூமியாகத் தோன்றும்.

யாருக்கு இப்படித் தோன்றுகிறதோ இல்லையோ எனக்குத் தோன்றுகிறது 🙂 .

யுவான் சுவாங்

நாம் பள்ளியில் படித்த “யுவான் சுவாங்” பற்றியும் வருகிறது.

அப்போது பல நாடுகளை அறிஞர்கள் சுற்றி வந்ததும் அவர்களுக்கு மற்ற நாட்டு அரசர்கள் இவர்களுக்குத் தகுந்த மரியாதை கொடுத்ததையும் இதில் அறிய முடிகிறது.

இந்நாவலை வழக்கமான ஒரு நாவலாகப் படித்தால் நன்றாக இருக்கும் ஆனால், பொன்னியின் செல்வன் ஏற்படுத்திய பாதிப்பில் படித்தால் ஏமாற்றமாக இருக்கும்.

கல்கியின் வரலாற்றுப் புதினங்கள்

பார்த்திபன் கனவு (1941 – 1943)
சிவகாமியின் சபதம் (1944 – 1946)
பொன்னியின் செல்வன் (1951 – 1954)

அமேசானில் வாங்க –> பார்த்திபன் கனவு Link

கொசுறு

எழுதியதிலேயே மிகப்பெரிய புத்தக விமர்சனம் பொன்னியன் செல்வன்.

எழுதிய போது உப தலைப்புகள் இல்லாமல் எழுதி இருந்தேன். எனவே, படிக்கச் சிரமமாக இருந்து இருக்கலாம். தற்போது (சில மாதங்கள் ஆகிறது) மாற்றியமைத்துள்ளேன்.

முன்பு படிக்கச் சிரமப்பட்டவர்கள் திரும்ப ஒருமுறை முயற்சிக்கலாம் 🙂 .

பொன்னியின் செல்வன் எழுதிய போது கல்கி அவர்களின் கைகளுக்குள் எதோ ஒரு மந்திர சக்தி வந்து விட்டதாகவே கருதுகிறேன்.

இரண்டே பக்கங்களில் நம்மைச் சோழ ராஜ்ஜியத்துக்குள் கொண்டு சென்று விடுவார்.

சோழ ராஜ்ஜியம் எப்படி இருக்கும் என்று கால இயந்திரத்தில் சென்று பார்க்க விரும்புவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை அவசியம் படிக்கவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

சிவகாமியின் சபதம்

பொன்னியின் செல்வன்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

 1. இதுவரை படிக்கவில்லை கிரி. ஆனால் எதிர்கால திட்டத்தில் உள்ளது. பள்ளி பாடத்தில் யூவங் சுவாங் பற்றி படிக்காதவர்கள் மிகக் குறைவே!!! ஒரு சிறு நாவலை பின்பு உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறேன். படித்து விட்டு உங்கள் கருத்தை பதியவும். பகிர்வுக்கு நன்றி கிரி.

 2. ‘அனிதா – இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணேஷை களத்தில் இறக்குகிறது. வஸந்த் உருவாகாத, இணைந்திராத காலகட்டத்தில் ஒரு தனி ஹீரோவாக கணேஷைச் சந்திப்பது திரில்லான அனுபவம்தான். ‘இது எப்படி இருக்கு’ என்கிற பெயரில் இந்த இளம் மனைவி திரைப்படமாகவும் வடிவெடுத்தாள்.

  “இது எப்படி இருக்கு?” படத்திற்கும் பார்த்திபன் கனவு படத்திற்கும் ஒரு ஒற்றுமையைக் கஷ்டப்பட்டு பார்க்கலாம்.

  பார்த்திபன் கனவு வெளியான போது அது தோல்வியடைந்ததற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டது. கல்கி எழுதி தொடராக வந்தபோது பல்லவர்களின் எதிரியான சோழமன்னனின் மகனுக்கு ஒரு சாமியார் கதை முழுக்க உதவி செய்வார். அந்த சாமியார் ஒரிஜினல் சாமியார் அல்ல என்பது வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் யார் என்பது சஸ்பென்ஸ். இந்த சஸ்பென்ஸ் கதைமுடியும் போதுதான் உடையும். திரைப் படத்தில் இந்த பூடகம் முதலிலேயே கிழிந்து போய்விடும். பல்லவ மன்னராக வரும் ரங்காராவ் சாமியார் வேடத்தில் வந்த உடனேயே இரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். அதாவது படத்தின் கிளைமாக்ஸ் காலி!. நாவலின் முக்கிய நீரோட்டமே படத்தில் காலி!, எனவே படமும் காலி!.

  இதே போல் இது எப்படி இருக்கு படத்திலும் நடந்தது. இளம் மனைவியின் வயதான கணவரான தொழில் அதிபர் கொலை செய்யப் படுகிறார். அவரைக் கொலை செய்தது யார் என்பதுதான் சஸ்பென்ஸ். கடைசியில் கிளைமாக்ஸில்தான் கொலையுண்டது தொழில் அதிபரின் வேலைக்காரன் அவரைக் கொலைசெய்த்தே தொழில் அதிபர்தான் என்ற உண்மைத் தெரியவரும். படத்தில் தொழில் அதிபரான மேஜர் உயிரோடு இருப்பது இரசிகர்களுக்குத் தெரிந்து தேமே என்றே படம் பார்த்தார்கள். படத்தின் கிளைமாக்ஸ் முன்னமே உடைந்து படம் ஒரு பிடிப்பே இல்லாமல் ஊறும்.

  இதுதான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று அப்போது யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. தோல்விக்கு காரணம் ஜெய்சங்கர் சீசன் முடிவுக்கு வந்து கொண்டு இருந்ததுதான் என்று நான் நினைக்கிறேன்.

 3. Dear Giri,

  Have you read Sivagamiyin Sapatham… if not read that and then you will know as to why Vikraman and Parthiba Maharaja got a back seat in this novel… I love this story for the way .. Narsimha pallavar is portrayed this.. I read this as a continuation to mamallar’s life after Sivagamiyin Sapatham.. by the way I think you have not read kalki’s social works which includes.. Kalvanin Kathali and Alai Osai and epic Thyaga Bhumi..please read them also and you will feel as to what is Kalki’s social responsibility towards our nation.

 4. பார்த்திபன் கனவு ஏமாற்றமே….. உங்களிடம் இருந்து சாண்டில்யன் அவர்கள் புத்தகங்களின் விமர்சனம் எதிர்ப்பார்க்கின்றேன்….விரைவில் எழுதுங்கள்…..

 5. @சதீஷ் இந்தப் படம் இருப்பது முன்பே தெரியும் என்றாலும் நீங்கள் கூறிய பிறகு பார்த்தேன். அப்படியே எடுத்து இருக்கிறார்கள், வசனம் உட்பட. வித்யாசமான அனுபவமாக இருந்தது.

  ஆனால் காட்சிகள் மாறி இருக்கிறது.. பழைய படம் என்பதால் தரவேற்றம் செய்த காணொளி சரியில்லை.

  @யாசன் ரைட்டு

  @ஸ்ரீநிவாசன் இதில் குறிப்பிட்டுள்ளது போல ரங்காராவ் பற்றிய ரகசியம் முன்பே தெரிந்து விட்டதால் சப்புன்னு போய் விட்டது. நானும் படம் பார்க்கும் போது இதையே நினைத்தேன்.

  ஒருவேளை மச்சம் வைத்து வந்தால் அடையாளம் தெரியாது என்று நினைத்தார்களோ 🙂

  @காமேஷ் நன்றி ஏகப்பட்ட புத்தகங்கள் பரிந்துரைத்து இருக்கிறீர்கள். கலக்கறீங்க போங்க.. படிக்க முயற்சிக்கிறேன்.

  @பிரகாஷ் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். ஊருக்குச் சென்றதும் புத்தகங்கள் படிக்க நிறைய இருக்கிறது. சிவகாமியின் சபதம், உடையார், யவன ராணி உட்பட நிறைய படிக்க வேண்டியுள்ளது.

 6. கிரி..உங்களுக்கு டைம் கிடைச்சா, பொன்னியின் செல்வன் ஆடியோ புக் எ ரிலீஸ் பண்ணிருக்காங்க. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. ட்ரை பண்ணி பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here