யவன ராணி

8
Yavanarani யவன ராணி

சாண்டில்யன் யவன ராணி, கடற்புறா நாவல்கள் பலரிடையே பாராட்டுப் பெற்ற நாவல்களாக உள்ளன. Image Credit

சரித்திர நாவல் படித்தால், தமிழகத்தின் பெருமையை அதன் வீரத்தை படிக்கப் படிக்க எவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தில் பிறந்து இருக்கிறோம் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் வாழ்கிறோம் என்று பெருமையாக உள்ளது.

யவன ராணி

சோழநாட்டில் யவனர்களின் (கிரேக்கர்கள்) ஆட்சியை அமைக்க அந்த நாட்டு சோதிடர்களால் கணிக்கப்பட்டு யவன ராணியை அவர்களின் போர் தலைவன் டைபீரியஸ் உதவியுடன் சோழ நாட்டுக்கு அனுப்புகிறார்கள்.

அவர்கள் வரும் கப்பல் உடைந்து அதில் இருந்து தப்பிக்கும் யவனராணி கரையோரம் ஒதுங்குகிறாள். இக்கதையின் நாயகன் சோழர் படைத் தலைவன் இளஞ்செழியன் இவளைக் கரையில் கண்டு காப்பாற்றி அழைத்துச் செல்கிறான்.

இதன் பிறகு என்ன நடக்கிறது? யவனராணி டைபீரியஸ் உதவியுடன் ஆட்சியைப் பிடித்தாளா? தமிழகம் என்ன ஆனது? இளஞ்செழியன் என்ன ஆனான்?

என்பதே யவன ராணி கதை.

நீண்ட விளக்கங்கள்

உண்மையில் எனக்குத் துவக்கத்தில் யவனராணி படிக்கச் சுவாரசியத்தைத் தரவில்லை.

இந்நாவல் குமுதம் வாரப் பத்திரிகையில் வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் சீரியலில் இறுதியில் ஒரு பரபரப்பை கூட்ட ஏதாவது செய்வார்கள் ஆனால், அடுத்த நாள் பார்த்தால் அப்படி ஒன்றும் பெரியளவில் இருக்காது.

இதிலும் ஏதாவது ஒரு பரபரப்பை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் கொடுக்கிறார்.

ஆனால், பரபரப்பு இருந்தாலும் அந்தப் பரபரப்புக்கு சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சியாகச் சில வர்ணனைகளையும் விளக்கங்களையும் கொடுத்துப் பிறகு தான் விசயத்திற்கு வருகிறார்.

படிக்கும் போது சீக்கிரமாக விசயத்துக்கு வாங்க என்பது போல இருக்கிறது.

இக்குறை இரண்டாவது பாகத்தில் இல்லை அல்லது வெகு குறைவு. ஒரு பதிலைக் கூறுவதற்கு இரண்டு பக்க வர்ணனைகள் சில நேரங்களில் சலிப்பைத் தருகின்றன.

வர்ணனைகள்

சரித்திர கதை என்பதாலும் சாண்டில்யன் நாவலுக்கே உரிய பெண்களுக்கான வர்ணனைகளும் நிரம்பி உள்ளது.

அதற்கேற்றார் போலத் தலைப்பே “யவன ராணி” என்பதால் சொல்லவே வேண்டியதில்லை 🙂 .

இதிலும் யவன ராணி, பூவழகி, அலிமா போன்ற அழகுப் பெண்கள் இருக்கும் போது வர்ணனைகளுக்குப் பஞ்சமா இருக்கும்?!

யவன ராணி பற்றிய சாண்டில்யனின் வர்ணனைகளைப் படிப்பவர்கள், சூர்யா கால இயந்திர கடிகாரத்தை வாங்கிச் சோழ நாட்டுக்குச் சென்று யவன ராணியைப் பார்த்துட்டு வந்துடலாம் என்று நினைத்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை 🙂 .

யவனர்கள் என்பவர்கள் கிரேக்கர்களா சீனர்களா?

முதலில் எனக்கு யவனர்கள் என்பவர்கள் யார்? எந்த நாட்டைச் சார்ந்தவர்கள்? கிரேக்கமா சீனர்களா?! என்ற குழப்பம் இருந்தது. கிரேக்கர்கள் என்று கூறுகிறார்கள்.

முழுவதும் படிக்கும் போது நமக்கே அது கிரேக்கர்கள் என்று தெரிய வருகிறது.

தமிழகத்தில் கிரேக்கர்கள் பணி புரிந்து இருக்கிறார்கள் என்பதையும் நம் சொல்படி கேட்டு நடந்து இருக்கிறார்கள் என்பதையும் அறியும் போது தமிழகம் எவ்வளவு பெருமை கொண்ட நாடாக இருந்துள்ளது என்று நமக்குப் தெரியவருகிறது.

எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகி விட்டதே என்று வருத்தமும் வருகிறது.

இது எப்படி?

தமிழ்ப் படம் போல யவன ராணியில் ஒரு காட்சி.

இளஞ்செழியன், பூவழகி மற்றும் பலர் வரும் போது டைபீரியஸ் பாதுகாப்புக் கெடுபிடியில் மாட்டிக் கொள்வார்கள் ஆனால், இளஞ்செழியன் மட்டும் தப்பித்து விடுவான்.

எப்படித் தப்பித்தான் என்று சொல்வார் என்று எதிர்பார்த்தால் இறுதிவரை கூறவே இல்லை.

தமிழ்ப் படங்களில் நாயகன் வில்லனுடன் சண்டைப் போடும் போது வில்லன் நாயகனிடம் இருந்து தப்பித்து வேறு பக்கம் ஓடுவான், திடீர் என்று நாயகன் முன்னே நிற்பார். எப்படி அங்கே வந்தார் என்று யாருக்குமே தெரியாது!

மந்திரவாதி மாண்ட்ரேக் மாதிரி நாயகன் வந்து நிற்பார். இது போல இளஞ்செழியன் எப்படி மறைந்து போனான் என்றே தெரியவில்லை! 🙂 .

இது போல நாவல் முழுக்கச் சில இடங்களில் “இது எப்படி?” என்ற கேள்வி வருகிறது.

போர்

வரலாற்று நாவல்கள் என்றாலே போர் காட்சிகள் இல்லாமல் இருக்காது, இதிலும் அற்புதமான வர்ணனைகளுடன் போர் காட்சிகள் உள்ளது.

இதில் வரும் போர் திட்டங்களும் அதற்கான முன்னேற்பாடுகளும் நம்மைப் பிரம்மிக்க வைக்கின்றன. இந்தத் திட்டங்கள் எல்லாம் முந்தைய வரலாற்று நூல்களில் இருந்து எடுக்கப்பட்டதா அல்லது சாண்டில்யன் புனைவா என்று தெரியவில்லை. அசத்தல்!

இலி ஆஸ்

சாம்பிராணி நாட்டு மன்னன் இலி ஆஸ் பற்றிய பகுதி படிக்கப் படு வேகமாகச் செல்கிறது.

இலி ஆஸ் உடல் குறித்த வர்ணனைகளும் அவரின் மிகக் கடுமையான தண்டனை முறைகளும் படிக்கும் போது திகிலை கூட்டுகின்றன.

நாவலிலேயே நான் ரசித்துப் படித்த பக்கங்கள் இலி ஆஸ் பகுதி தான்.

இவ்வளவு கொடுமையான இடத்தில் இருந்து தப்பிக்க இளஞ்செழியன் செய்யும் முயற்சிகளும் அப்போது ஏற்படும் பிரச்சனைகளும் பரபரப்பாக உள்ளது.

இலி ஆஸ் மிகக் கொடுமையானவன் என்றால் அவனுக்கே அண்ணனாக வரும் அவர்களின் மத குரு மிரட்டுகிறார்.

கப்பல் பயணமும் கடற்கொள்ளையரும் அடிமைகளும்

கப்பல் பயணம் அழகானது சுவாரசியமானது ஆபத்து இல்லாதவரை. கடற்கொள்ளையர் கப்பல்களைத் தாக்கும் காட்சிகளும் பயமுறுத்துவனவாக உள்ளன.

அடிமையாகச் சிக்கினால் ஏற்படும் நிலையும் தப்பிக்க நினைத்து மாட்டிக்கொண்டால் என்ன கதி நமக்கு ஏற்படும் என்பதையும் அறிந்தால் உடலைச் சில்லிட வைக்கிறது.

மனிதத்தன்மை கொஞ்சம் கூட இல்லாதவர்களிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகள் த்ரில்லர் படம் பார்ப்பது போலவே இருக்கிறது.

தமிழகத்தின் சிறப்புகள் அளவிட முடியாதவை

இருங்கோவேள், பிரும்மானந்தர், கரிகாலன், இரும்பிடையார் தலையார் என்று விவரிக்கப் பல கதாப்பாத்திரங்கள் உள்ளன.

கூற நினைத்ததை புத்தகத்தில் தேடுவது கடலில் போட்ட பெருங்காயத்தைத் தேடுவதைப் போல உள்ளது அதனால், பொறுமை இழந்து விட்டு விட்டேன்.

யவன ராணி விமர்சனம் எனக்குத் திருப்தியளிக்கவில்லை 🙁 . இன்னும் சிறப்பாகச் சுவாரசியமாக எழுதி இருக்க முடியும் குறிப்புகளை எடுத்து இருந்தால்.

அடுத்து “கடற்புறா” படிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன்.

எப்போதும் என்னைப் பிரம்மிக்க வைக்கும் நாவல் 

பொன்னியின் செல்வன்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

8 COMMENTS

  1. கடல் புறா சாண்டில்யனின் மிக சிறந்த நாவல் .. கடல் போரை பற்றிய அற்புதமான நாவல்

  2. யவன ராணி புத்தகம் இது வரை படித்திராத ஒன்று.. நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் (குறிப்பாக சரித்திர புத்தகங்கள்). சரியான மன நிலையும், ஓய்வு, இல்லாமலும், என்மகனும் இருப்பதால் படிக்கின்ற நேரம் குறைந்து விடுகிறது. நீங்கள் படிக்கின்ற புத்தகங்களை குறித்து அவ்வவ்போது பதிவுகள் இடுவது மகிழ்ச்சியான ஒன்று. இந்த பணி என்றும் தொடர வேண்டும்.. அடுத்தப் பதிவு கபாலி படத்தை குறித்து இருக்கும் என நினைக்கிறேன்… பகிவுக்கு நன்றி கிரி.

  3. நலமா கிரி. பல மாதங்களுக்கு முன்பு ஒரு பதிவின் வாயிலாக உங்களுடன் உரையாடும் போது புத்தகங்கள் நிறைய படிங்க கிரி என்றேன். நினைவில் இருக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் கனகச்சிதமாக இன்று வரை விடாமல் எழுதிக் கொண்டு படித்துக் கொண்டு அதை பகிர்ந்து கொண்டு வர்றீங்க. ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ஓரே பாதை என்றாலும் கூட மிக அழகாக தெளிவாக நடை போடுவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது கிரி.

  4. சாண்டில்யன் அவர்களின் புத்தகங்கள் ஏனொ எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. நானும் நீங்கள் விரிவான விமர்சனம் செய்வீர்கள் என்று தான் எதிர்பார்த்தேன். ஏனெனில் உங்களின் விமர்சனம் மூலம் அவரின் புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை தூண்டுவீர்கள் என்பதால். இருந்தாலும் விமர்சனம் நன்றாகவே உள்ளது. ஆனால் அவரின் நாவல்கள் முழுவதும் கற்பனையா அல்லது உன்மை சம்பவங்களின் கலவையா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. யவனரானியை விட கடல்புறா இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன் ஏனெனில் சாண்டில்யன் என்றாலே அனைவரும் கூறுவது கடல்புறா நாவல் தான். கல்கியின் பொன்னியின் செல்வன் போலே……..

    கடல்புறா விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்…….

  5. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் இல்லை.. மைலாப்பூர் பற்றிய பதிவு 🙂

    @ஜோதிஜி மிக்க நலம். நான் தொடர்ந்து படித்து வருகிறேன். இனியும் படிப்பேன். நன்றி 🙂

    @கோகுல் & பிரகாஷ் தற்போது சிவகாமியின் சபதம் படித்துக்கொண்டு இருக்கிறேன். கடல் புறா தொடர்ச்சியாக சாண்டில்யன் நாவல் படிக்க வேண்டாம் என்று இந்த முடிவு.

  6. பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்றது இந்த பதிவு. கல்லூரியில் படிக்கும் போது குறிப்பிட்ட பாடத்தின் ஆசிரியர் வரவில்லை என்றால் அந்த 1 மணி நேரம் நூலகம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் அப்படி ஒரு ஒரு மணி நேரமாக நண்பனுடன் போட்டி போட்டு ஓடி சென்று புத்தகத்தை எடுத்து படித்து, சில சமயங்களில் அவன் எடுத்தால் அவனிடம் கதை கேட்டு தெரிந்து கொண்டு புத்தகத்தை படித்து முடிக்க 2 வருடம் ஆயிற்று.
    ஒரு சந்தேகம்: “தமிழ் மொழியல்ல .நம் அடையாளம்”, இங்கு நடுவில் ஏதாவது வருமா அரைபுள்ளி, கால்புள்ளி? I feel it gives meaning like this “Tamil language is not our identity”. I am not sure; if it’s wrong I am sorry.

  7. இரண்டு வருடமா? உண்மையிலேயே பெரிய விஷயம் தான் 🙂

    “,” வரும் ஆனால், தலைப்பில் இருந்ததால் வைக்கவில்லை. அதோடு நீங்கள் நினைப்பது போல அர்த்தம் நிச்சயம் வராது, இரண்டாம் பாதி படித்த பிறகு முழு அர்த்தமும் புரிந்து கொள்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!