பொங்கல் கொண்டாட்டம்

8
பொங்கல் கொண்டாட்டம்

 

து ஆறிப் போன பொங்கல் தான் இருப்பினும் இதில் உள்ள தகவல்கள் அப்படி இருக்காது என்று நம்புகிறேன் 🙂 . சுமாராக இருந்தால் பொறுத்தருள்க.

எப்போதுமே நம்ம வீட்டில் / ஊரில் / நாட்டிலிருந்து விலகி இருந்தால் அது நமக்குப் பல்வேறு அனுபவங்களைக் கற்றுத் தரும்.Image Credit

வீட்டுச் சாப்பாட்டின் அருமை தினமும் உணவகத்தில் சாப்பிடும் போது தான் புரியும் என்பது இதை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

ஒரு வேளை நல்ல சாப்பாடு கிடைக்காதா என்று ஏங்குபவர்கள் அதிகம்.

வெளிநாட்டு வாழ்க்கை எனக்குத் தமிழ் / தமிழ்நாட்டின் மீதும் சென்னை மற்றும் எங்கள் ஊரின் மீது அதிக அன்பை தோற்றுவித்து விட்டது.

அதோட சில அறிவுரைகளையும் அனுபவம் வழங்கி விட்டது.

பொங்கல்

பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் / நண்பர்களுடன் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். அதற்கான வாய்ப்பு இந்தப் பொங்கலில் தான் வாய்த்தது அதுவும் எதிர்பாராத விதமாக.

அலுவலக வேலை காரணமாகப் பொங்கலுக்குச் செல்வது சந்தேகமானதால் ஊருக்குச் செல்ல முன்பதிவு செய்யவில்லை அதோடு ஊருக்குப் போகும் எண்ணமுமில்லை.

திடீர் என்று, நிறுவனத்துக்காக உழைத்தது போதும் கொஞ்சம் குடும்பத்தையும் பார்ப்போம் என்று கிளம்பி விட்டேன்.

ஊருக்குப் போன பிறகு தான் எத்தனை சந்தோசங்களை நான் செல்லாமல் இருந்து இருந்தால் இழந்து இருப்பேன் என்று புரிந்தது.

இரண்டே நாட்கள் தான் இருந்தேன் ஆனால், இரண்டு நாட்களும் மறக்க முடியாத நாட்களாகி விட்டன.

பாரியூர்

எப்போதுமே கோபி அருகே உள்ள “பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்” கோவில் திருவிழா தோராயமாக ஜனவரி 7 , 8, 9 அன்று தான் வரும்.

இந்த முறை ஒரு வாரம் தாமதமாகப் பொங்கலோடு இணைந்து விட்டது. இதுவே என்னுடைய கொண்டாட்டத்துக்குக் காரணம்.

கோபி சுற்றுவட்டாரப் பகுதிக்கே பாரியூர் திருவிழா மிகப்பெரிய விழா.

பள்ளிகளில் உள்ளூர் விடுமுறை உண்டு. கொண்டத்தில் (தீ மிதி விழா) 30,000 பேர் இந்த வருடம் கலந்து கொண்டதாகக் கூறினார்கள்.

சென்னையில் காலையில் கிளம்பி மாலை சென்று கோபியில் இறங்குகிறேன்… வழக்கமான திருவிழா ஒலிப்பெருக்கி அறிவிப்புகளுடன் கோபியே களை கட்டி இருக்கிறது.

இவற்றைப் பார்த்தவுடனே மனதில் தானாகவே உற்சாகம் வந்து விட்டது.

வீட்டுக்குப் போனதும் பசங்க (வினய் + யுவன்) இருவரும் கதையடிக்க ஆரம்பித்து விட்டார்கள். யுவன் மூன்று விரலைக் காட்டி “அப்பா! எனக்கு நாலு நாள் லீவ்” என்றான் 🙂 .

வேட்டி

நான் ஊருக்குச் சென்றால் இனி வேட்டி தான் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன் அதனால், காலையில் வேட்டி சட்டையுடன் நண்பர்கள், உறவினர்கள், என் அக்கா வீட்டுக்கும் என்று கிளம்பி விட்டேன்.

திருவிழா மற்றும் பொங்கல் நேரம் என்பதால் அனைவருமே ஒரு கொண்டாட்ட மன நிலையில் சந்தோசமாக இருந்ததால், எங்குச் சென்றாலும் குதூகலமாக இருந்தது.

மாலை வரை வெளியே / அக்கா வீடு என்று சுற்றிய பிறகு வினய் “அப்பா பாரியூர் போய் விளையாடலாம்” என்று கேட்டான்.

எனக்கும் இவன் கூட வெளியே சுற்றி வருடங்கள் ஆனதால், என் அக்காக்கள் பசங்க கூடக் கிளம்பி விட்டேன். மொத்தம் நான்கு பேர். யுவன் தூங்கிட்டான்.

ஒலிபெருக்கியில் விளம்பரங்கள் / அறிவிப்புகள்

என் ஒரு அக்கா வீட்டுக்கு பாரியூர் கோவில் பண்டிகை முக்கியம் என்பதால் அவர்கள் வீட்டில் தான் விருந்து அது இது என்று களேபரமாக இருக்கும்.

அங்கே இருந்து கோவில் இரண்டு கிலோ மீட்டர் இருக்கும்.

வழியெல்லாம் மக்கள் நடந்தே கோவிலுக்குச் சென்று கொண்டு இருக்கிறார்கள், ஒலிபெருக்கியில் விளம்பரங்கள் / அறிவிப்புகள் என்று திருவிழா மன நிலையைக் கொண்டு வந்து விடுகிறது.

வினய் “ஜெயின்ட் வீல்” மற்றும் மற்ற விளையாட்டுகளை விளையாட மாட்டான். கேட்டால் “பயமாக இருக்கிறது” என்பான். இந்த முறை என்னவோ சரி என்றான்.

பின்னர் நாங்க நால்வரும் அங்கே இருந்த அனைத்து விளையாட்டையும் விளையாடி விட்டோம்.

ஒன்றில் அமர்ந்து இருக்கும் போது உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியிலிருந்து வந்த பெண் என் அக்கா பையன் ஒருவனைப் பேட்டி எடுத்தார்கள்.

அந்தப் பொண்ணு உங்களுக்குப் பிடித்த பாடல் என்று கேட்டதும் இவன் “நான் புடிச்ச மொசக்குட்டி” என்று ஈட்டி படத்திலிருந்து கேட்க,

யாரைங்க பிடித்தீங்க என்று கலாயித்து விட்டார். இவன் என்ன சொல்வது என்று தெரியாமல் “தனியா வாங்க சொல்றேன்” என்று சமாளித்து எஸ்கேப் ஆகி விட்டான்.

பின்னர் வந்து “மாம்ஸ் இப்படி அசிங்கப்பட்டுட்டேனேனே” என்று புலம்பிக் கொண்டு இருந்தான் 🙂 .

கோவிலில் கரும்பு ஜீஸ், மிளகாய்ப் பொடி தூவிய அண்ணாச்சி பழம் மற்றும் இதர பொருட்கள் என்று செமையாக இருந்தது.

என் நண்பன் குடும்பமும் அப்போது வர இன்னும் கூடுதல் கொண்டாட்டமாக இருந்தது.

கூட்டமே எனக்குப் பிடிக்காது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டத்தை ரசித்துக்கொண்டு இருந்தேன். கடைசி வரை கோவிலுக்குள் செல்லவில்லை.

திரைப்படம்

திடீர் என்று முடிவாகி இரவு காட்சி மொத்தம் எட்டுப் பேர் “ரஜினி முருகன்” சென்றோம். ஒலி படு மோசமாக இருக்கும் ஆனால், இந்த முறை நன்றாக இருந்தது.

அதோடு படமும் அதே கொண்டாட்ட மனநிலையைத் தந்ததால் அனைவருக்கும் பிடித்து இருந்தது.

குளிர் பின்னி எடுத்தது, வீடு போய்ச் சேருவதற்குள் விரைத்து விடுவோம் போல அந்த அளவுக்குக் குளிர். குளிர் இந்தச் சமயங்களில் நமக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது என்று நினைக்கிறேன்.

குளிர் எனக்குப் பிடிக்காது ஆனால், திருவிழா சமயங்களில் குளிர் சூழ்நிலையையே சுவாரசியமாக மாற்றி விடுகிறது.

அடுத்த நாள் உறவினர்கள் வீடு அப்படி இப்படி என்று விரைவிலேயே முடிந்து விட்டது. இருந்தது இரண்டே நாட்கள் என்றாலும் இரண்டு வாரம் இருந்து அனுபவித்தது போல இருந்தது.

எத்தனை பேரை சந்தித்தேன்?! அடேங்கப்பா! 🙂 .

பொங்கலுக்கே என் வாக்கு 🙂

இந்த இரண்டு நாள் பொங்கலை முதன்மை பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று என் எண்ணத்தை மாற்றி விட்டது.

தீபாவளி ஒரே நாளில் முடிந்து விடுகிறது ஆனால், பொங்கல் நான்கு நாட்கள். இதுவே ஒரு கொண்டாட்ட மன நிலையைத் தருகிறது.

எனவே அடுத்த வருடம் தீபாவளியை விடப் பொங்கலைத் தான் கொண்டாட வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

இந்தச் சமயத்தில் அனைவரையும் சந்திக்க முடிகிறது அதோடு ரொம்ப மகிழ்வாகவும் இருக்கிறது.

இப்ப எனக்கு இருக்கிற பிரச்சனை என்னவென்றால் பாரியூர் விழாவும் பொங்கலும் அடுத்தடுத்த வாரங்களில் வருகிறது. எதற்கு வருவது என்ற குழப்பம்?! 🙂 .

பண்டிகைக் காலங்களில் தொலைக்காட்சி வேண்டாம்

இந்த இரண்டு நாட்களில் யாருமே தொலைக்காட்சி பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்னுடைய அன்பான அறிவுரை குறைந்த பட்சம் பண்டிகைக் காலங்களிலாவது தொலைக்காட்சியை விட்டொழியுங்கள்.

குடும்பத்துடன் / நண்பர்களுடன் / உறவினர்களுடன் நேரம் செலவழியுங்கள்.

உறவினர்கள் என்றதும் ஒன்று நினைவுக்கு வருகிறது. இதிலும் கூற சில விசயங்கள் இருக்கிறது. பின்னர் இன்னொரு சமயத்தில் விரிவாகக் கூறுகிறேன்.

நான் எப்போதும் கூறுவது தான், பணம் மட்டுமே வாழ்க்கையில்லை, அதோடு அலுவலகப் பணியே கதி என்று இருப்பதும் சரியில்லை.

கொஞ்சம் இதையெல்லாம் விட்டு வேற உலகத்துக்கு வந்து பார்த்தீர்கள் என்றால் நீங்கள் தவற விட்டது எவ்வளவு என்று புரியும்.

நான் என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவோ தவற விட்டு விட்டேன் ஆனால், அதெல்லாம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது, யாரையும் குறை கூறி பயனில்லை.

தொடர்ந்து எனக்கு நானே காரணம் / சமாதானம் கூறி மீதி வாழ்க்கையையும் இழக்க விரும்பவில்லை.

Commitment

“Commitment” என்ற ஒன்றுக்கு முடிவே இல்லை. அது தொடர்ந்து கொண்டே இருக்கும் காரணம் நம் அனைவரின் ஆசை மற்றும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் காரணங்கள்.

உங்கள் அடிப்படை பிரச்சனைகளை முடித்து “commitment” என்று கூறினால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றே அர்த்தம்.

நான் விழித்துக் கொண்டேன் இன்னும் தொடர்ந்து இருப்பவர்கள் இனியாவது சுதாரித்துக் கொள்ளுங்கள்.

சந்தோசம் என்பது நம்மிடமே உள்ளது. இதை உணராதவரை “சிரமம் சிரமம்” என்று காலம் முழுக்கப் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

ஷாருக்கான் தன்னால் விமானம் வாங்க (பணமில்லையே) முடியவில்லையே! என்று வருத்தப்பட்டு இருக்கிறார். இப்பவாவது தெரிகிறதா பிரச்சனை பணமில்லை என்று 🙂 .

பொங்கல் பற்றி எழுதக் கூறி கேட்ட நண்பர்களுக்கு நன்றி.

Read: நம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?

கொசுறு 1

இலந்தைப் பழ சீசன் துவங்கி வீட்டில் அடிதடி ஆரம்பமாகி விட்டது. இலந்த வடையைச் செய்யும் போதே என் அக்கா கொஞ்சம் காலி செய்து விட்டார்.

வினய் வேற “அப்பா! நீங்க வரதுக்குள்ள பாதியை காலி செய்து விடுவேன்” என்று கூறி பீதியக் கிளப்பிட்டு இருக்கான்.

இவன்கிட்ட தெரியாம “சாப்பிட்டு பாரு”ன்னு சொன்னேன்.. இது தான் நான் செய்த தவறாகி விட்டது.

வடிவேல் சொல்வாரே.. “இரண்டு ரூபாய் தாண்டா கேட்டேன்.. என்ன கோபத்தில் இருந்தானோ அடி பின்னிட்டான்” என்று.

அது மாதிரி “சாப்பிட்டு பாருடா”ன்னு தான் சொன்னேன் அரை தட்டத்தை காலி பண்ணிட்டான்.

Read: இலந்த வடை சாப்பிட்டு இருக்கீங்களா? 🙂

கொசுறு 2

சத்தி(யமங்கலம்) அருகே உள்ளே அரியப்பம் பாளையம் கிராமத்தில் உள்ள கோவிலில் வரும் வாரம் கும்பாபிஷேகம்.

அக்கா ஊர் என்பதால் அங்கே “டேன்ஸ்” பார்க்க வேண்டும் என்பதற்காகவே செல்கிறேன்.

டேன்ஸ் என்றதும் திண்டுக்கல் ரீட்டா மாதிரி டேன்ஸ் ன்னு நினைத்துக்காதீங்க 🙂 . இது கம்பத்துக்கு ஆடும் ஆட்டம்.

எனக்கு மேள தாளம், கொட்டு ரொம்பப் பிடிக்கும் என்பது என்னுடைய தளத்தை தொடர்ந்து படித்து வருகிறீர்கள் என்றால் தெரிந்து இருக்கும்.

மச்சான் நீண்ட வருடங்களாக அழைத்து இந்த முறை தான் செல்லச் சாத்தியமாகி இருக்கிறது.

என்னமோ போங்க.. ஊருக்கு வந்ததிலிருந்து மூன்று மாதங்கள் மூன்று வாரம் போல ஓடி விட்டது 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

 1. அருமை….

  “Commitment” என்ற ஒன்றுக்கு முடிவே இல்லை. அது தொடர்ந்து கொண்டே இருக்கும் காரணம் நம் அனைவரின் ஆசை மற்றும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் காரணங்கள்.

  உங்கள் அடிப்படை பிரச்சனைகளை முடித்து “commitment” என்று கூறினால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றே அர்த்தம்.

  நான் விழித்துக் கொண்டேன் இன்னும் தொடர்ந்து இருப்பவர்கள் இனியாவது சுதாரித்துக் கொள்ளுங்கள்.

  சந்தோசம் என்பது நம்மிடமே உள்ளது. இதை உணராதவரை “சிரமம் சிரமம்” என்று காலம் முழுக்கப் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

  ஷாருக்கான் தன்னால் விமானம் வாங்க (பணமில்லையே) முடியவில்லையே! என்று வருத்தப்பட்டு இருக்கிறார். இப்பவாவது தெரிகிறதா பிரச்சனை பணமில்லை என்று 🙂 .

  • கிரி அவர்களுக்கு வணக்கம்,

   என் பெயர் அழகர். நான் ஒரு Civil Engineer . என்னுடை family திருப்பூரில் இருக்கிறார்கள். நான் வேலை வேலை என்று சென்னை, கொச்சின் போன்ற ஊர்களில் சுற்றி கொண்டிருக்கிறேன் . வார வாரம் மற்றும் leave கிடைக்கும்போது எல்லாம் திருப்பூருக்கு வருவேன். சுற்று வட்டாரத்தில் சுற்றுலா தளங்கள், கோயில்கள் விரும்பி சென்று பார்ப்பேன். நீங்க சொன்ன கோயிலுக்கு போயிருக்கிறேன்.

   நான் நீண்ட நாட்களாக உங்கள் blogspot ஐ தொடர்ந்து படித்து வருகிறேன். உண்மையிலே எனக்கு உங்களோட கருத்துக்கள் மேல நிறைய உடன்பாடுகள் உண்டு. நிறைய பேரிடம் மேற்கோள் காட்டியிருக்கிறேன். எழுத்து நடை அருமையாக இருக்கிறது.

   என்னை பொறுத்தவரை நான் எப்போதும் பொங்கல் பண்டிகைதான் சிறப்பாக கொண்டாடி வருகிறேன்.

   வருங்காலத்தில் உங்களோட சேர்ந்து பல இடங்களுக்கு செல்லலாம் என்று எனக்கு தோன்றுகிறது உங்கள் விருப்பம் எப்படி என்று தெரியபடுத்தவும்.

   நன்றி

   அழகர்

 2. கிரி

  அற்புத கருத்து வாழ்த்துக்கள்

  கூடுதுறை சுந்தர்

 3. கிரி தாங்கள் கூறுவதும் சரிதான் தீபாவளி ஒரே நாளில் முடிந்துவிடும்,முன்பு போல பட்டாசு வெடிப்பதிலும் ஈடுபாடு இல்லை சிறுவர்களாவது வெடிப்பார்களா? என்றால் அவர்களும் டீவியில் ஐய்க்கியமாக விடுகின்றார்கள்,
  பொங்கலுக்கு மட்டும்தான் இரண்டு மூன்று நாள் விடுமுறை என்பதால் என் மாமா வீட்டிற்குச் சென்றுவிடுவேன் சில வருடங்களுக்கு முன் எங்கள் குடும்பம் ,என் சித்தி குடும்பம் பக்கத்து தோட்ட சொந்தக்காரர்கள் என30பேர் வரை சேர்ந்து விடுவோம்,காட்டின் ஒரு பகுதியில் மூன்று பக்கமும் தென்னை ஓலையை வைத்து பட்டி செய்து ,அதைச் சுற்றி பொங்கலே பொங்கல் என சப்தமிடுவதும் ,மாட்டுச்சாணத்தை வைத்துக் கட்டப்படும் சிறு தெப்பக்குளத்தை கன்றுக்குட்டியை வைத்து இடிப்பதும் என ஒரே மகிழ்ச்சியாக இருக்கும் ,இப்போது எல்லாம் 10 பேர் வரை குறைந்து பெயருக்கு கொண்டாட வேண்டியதாக விட்டது
  எனக்கு இலந்தை வடையை விட இலந்தைப்பழத்தில் உறுகாய் போல் செய்து அதைச் சிறு பாக்கெட்களில் விற்பார்கள் நான் இதற்குத்தான் தீவிர ரசிகன் இப்போதெல்லாம் இதை கடைகளில் பார்க்க முடிவதில்லை மருதமலை கோவிலில் மட்டும் அதிகமாக பார்க்கலாம் எனவே இக்கோவிலுக்குச் சென்று வரும் போது மட்டும் இலந்தைவடை, உறுகாய், பொடி என மூன்று வடிவத்தில் உள்ளதையும் வாங்கி ஒரு கை பார்த்து விடுவேன்.

  • தீபாவளியை விட பொங்கல் அனைவரும் வெளியில் சென்று கொண்டாடவே விரும்புகிறார்கள்….

   உதாரணத்திற்கு பொங்கல் நாட்களில் பீச், வண்டலூர் பூங்கா போன்ற இடங்களில் உள்ள கூட்டமே இதற்கு சாட்சி….

   இருந்தும் தொலைக்காட்சிகள் நமக்கு தொல்லை-காட்சி ஆகி விட்டது…..

   பொங்கலுக்கு கிராமத்தில் இருப்பது இன்னும் சிறப்பு. அந்த சந்தோஷத்தை இந்த வருடம் நீங்கள் அடைந்து இருக்கிறீர்கள். வருடா வருடம் தொடர வாழ்த்துக்கள்…. பொங்கலுக்கு நான் குடும்பத்துடன் வெளியே சென்றாலும் இது போல கிராமத்து வாசம் கிடைப்பதில்லை. சென்னை தான் கதி…
   அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி ….

   ?வாழ்த்துக்கள்…….

 4. கலக்குங்க கிரி…
  குடும்பத்துடன் பண்டிகை விடுமுறையை அனுபவிப்பது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.. நீங்கள் முன்பு கண்ட கனவுகள் கண் முன்பு நிறைவேறுவது இன்னும் இனிப்பான ஒன்று… 7 வருட அயல்நாட்டு வாசத்தில் நாள், கிழமை, பண்டிகை அனைத்தும் மறந்து விட்டது.. மிகவும் வருத்தமான ஒன்று.

  கமிட்மென்ட் : முழுக்க முழுக்க 200% உங்களுடன் ஒத்து போகிறேன்… நண்பன் சக்தி 11 வருட கோவை வாழ்க்கைக்கு விடை கொடுத்து விட்டு அடுத்த மாத இறுதியில் சுய தொழில் மேற்கொள்ளலாம் என்று சொந்த ஊருக்கு புறப்படுகிறார்..

  என் விடுமுறையில் சக்தியுடன் வந்து உங்களை சந்திக்க கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்… நீங்கள் அரை மணித்துளிகள் நேரம் ஒதுக்க வேண்டும் என விண்ணபிக்கிறேன்..

  நான் விழித்துக் கொண்டேன் இன்னும் தொடர்ந்து இருப்பவர்கள் இனியாவது சுதாரித்துக் கொள்ளுங்கள் : நான் விழித்து கொண்டே உறங்குகிறேன் கிரி…

  ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த வரிகள் : சுதந்திரத்தின் அருமை, ஜெயில் கைதிகளுக்கு மட்டும் தான் தெரியும். சத்தியமான வரிகள்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 5. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @அழகு நன்றி 🙂

  @கார்த்திக் உங்கள் பொங்கல் கொண்டாட்டம் செமையா இருக்கு. இது போல கொண்டாடினால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

  இலந்த வடை ஜீஸ் பள்ளி நினைவை கொண்டு வருகிறது.

  @பிரகாஷ் பொங்கலுக்கு வெளியே செல்ல வேண்டி வரும் என்பதால் அனைவருடனும் மகிழ்ச்சியாக சுற்ற முடியும்.

  @யாசின் சீக்கிரம் வாங்க.. சந்திப்போம் 🙂

  சுதந்திரத்தின் அருமை, ஜெயில் கைதிகளுக்கு மட்டும் தான் தெரியும்.

  சரியா சொன்னீங்க 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here