நட்சத்திர கிரிக்கெட்டும் 30% வரி விலக்கும்

7
நட்சத்திர கிரிக்கெட்டும் 30% வரி விலக்கும்

டிகர் சங்கக் கடனை அடைக்க நடிகர்கள் அனைவரும் இணைந்து நட்சத்திர கிரிக்கெட் நடத்துவதற்குப் பரவலாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. Image Credit

மக்களிடம் பணத்தைப் பெற்று எப்படி இதைச் செய்யலாம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

“நடிகர்களே தங்கள் பணத்தைப் போட்டுத் தான் கடனை அடைக்க வேண்டும். மக்களிடம் செல்லக் கூடாது. நான் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்” என்று அஜித் கூறியதாகச் செய்திகளில் வந்தது.

இதை அஜித் அதிகாரப்பூர்வமாகக் கூறவில்லை என்றாலும் கடந்த நடிகர் சங்கத் தலைவராகக் கேப்டன் இருந்த போது இது போல ஒரு நிலையில் சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி நடத்தி வசூல் செய்து கடனை அடைத்தார்கள். 

இந்த நிகழ்ச்சிக்கு அஜித் செல்லவில்லை.

அஜித் உண்மையாகவே இந்தக் காரணத்தால் செல்லவில்லையா வேறு தனிப்பட்ட காரணங்களா! என்பது உறுதி இல்லை. 

எனவே அந்தச் சம்பவத்தோடு தொடர்புபடுத்தித் தற்போது “அஜித் எதிர்ப்பு” என்று ஊடகங்களில் கூறி வருகிறார்கள்.

நான் இதுவரை அஜித் அதிகாரப்பூர்வமாகக் கூறியதாகப் படிக்கவில்லை. இவை அனைத்தும் ஊகங்களின் அடிப்படையிலேயே ஊடகங்களில் பேசப்படுகிறது.

இணையத்தில் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர்களை விமர்சித்து வருகிறார்கள்.

வார்டன்னா அடிப்போம்

தமிழக மக்கள் என்றாலே அதுவும் இணைய மக்கள் என்றாலே உணர்ச்சி வசப்படுகிறவர்கள் தான்.

என்ன எது என்று புரிந்து கொள்ளாமலே வடிவேல் நகைச்சுவையில் வருவது போல “வார்டன்னா அடிப்போம்” என்பது போல நடிகர்கள் என்றாலே நாங்கள் திட்டுவோம் என்றாகி விட்டது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிச்சை எடுக்கிறார்கள் என்று கூறுவதே தவறு.

அவர்களுக்கு அவர்கள் சங்கத்தில் பிரச்சனை ஏற்பட்டது, தவறுகள் நடந்தது.

இதைச் சரி செய்யப் பணம் தேவைப் படுகிறது அதை அவர்கள் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர கிரிக்கெட் நடத்தி அதில் வரும் பணத்தை வைத்துச் சரி செய்ய முயல்கிறார்கள்.

இதில் எங்கே மக்களிடத்தில் பிச்சை எடுக்கிறார்கள்?

முதலில் இதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் மக்களிடத்தில் நன்கொடை ஒன்றும் கேட்கவில்லையே!

நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் ரசிக்கிறார்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் அதற்கான கட்டணத்தைக் கொடுக்கிறார்கள்.

நடிகர் சங்கம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லையே!

விருப்பபடுகிறவர்கள் செல்லப் போகிறார்கள் மற்றவர்கள் தவிர்க்கப் போகிறார்கள்! இதில் எங்கே பிச்சை வந்தது? இதில் எங்கே மக்களை ஏமாற்றுகிறார்கள்?

இதுவும் திரைப்படம் போலத்தான் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விருப்பப்படுகிறவர்கள் செல்லலாம் மற்றவர்கள் புறக்கணிக்கலாம்.

நம்மில் பெரும்பாலனவர்களுக்குப் பொதுவாகவே அதிகம் சம்பாதிப்பவர்கள் மீது பொறாமை அதனால் அவர்கள் என்ன செய்தாலும் அதில் குறை கண்டு பிடித்துக் கொண்டே இருக்க வேண்டியது.

அதிலும் அது திரைத்துறை எனும் போது கூடுதலாக இருக்கிறது.

எது மக்கள் பணம்?

சாலையில் ஒருத்தன் வித்தை காட்டி 50 ₹ சம்பாதிப்பதை விமர்சிக்கும் நாம், நம் கண் முன்னாடி 5000 ₹ திருடுவதை அனுமதித்துக் கொண்டு இருக்கிறோம்.

இது போல மக்கள் பணத்தை நடிகர் சங்கம் கொள்ளை அடிக்கிறார்கள் என்று கொந்தளித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நேரடியாக ஏமாந்து கொண்டு இருப்பது தெரியவில்லை.

இவர்கள் கலை நிகழ்ச்சி, நட்சத்திர கிரிக்கெட் மூலம் வசூல் செய்வது கொள்ளை அல்ல. அது நேர்மையான வழியில் சட்டம் அனுமதித்த முறையில் திரட்டப்படும் பணமே!

உண்மையான பகல் கொள்ளை எது தெரியுமா?!

அரசு 30% வரி விலக்கு அளிக்கும் படங்களைப் பார்க்கும் மக்களுக்குக் கட்டணச் சலுகை அளிக்காமல் அதைத் திரைத் துறையினரே ஆட்டையைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்களே..! இது தான் உண்மையான கொள்ளை.

நட்சத்திர கிரிக்கெட்டுக்குத் தையா தக்கான்னு குதிச்சிட்டு இருப்பவர்கள் நியாயமாகக் கொந்தளிக்க வேண்டியது இந்த 30% பகல் கொள்ளைக்குத் தான் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு அல்ல.

நாம் திரையரங்கில் கொடுக்கும் 120 ரூபாயில் வரிவிலக்குப் பெற்ற படங்களுக்கு 84 ₹ கொடுத்தால் போதும் ஆனால், ஒவ்வொரு முறையும் 120 ₹ கொடுக்கிறோம்.

வரி கட்டுபவன் என்ற முறையில் என்னுடைய (மக்கள்) பணத்தை யாரோ அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்களே! என்று ஆத்திரமாக வருகிறது.

அராசங்கம் எதற்கு இவர்களுக்கு 30% சலுகை அளிக்க வேண்டும்? இவர்களும் மற்ற மக்களைப் போலத் தொழில் செய்பவர்கள் தானே!

எதற்கு இவர்களுக்கு மட்டும் சலுகை? மக்களா இவர்களை அதிக முதலீட்டில் படம் எடுக்கக் கூறினார்கள்?!

இது கொள்ளையாகவோ திருட்டாகவோ தெரியாமல் பணத்தைக் கொடுப்போம் ஆனால், கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர கிரிக்கெட் மக்கள் பணம் என்று சண்டை போடுவோம்.

இது உங்களுக்கு முட்டாள்த்தனமான எதிர்ப்பாகத் தோன்றவில்லையா?!

அஜித்தின் எதிர்ப்பு

அஜித் மக்கள் பணம் என்று கூறி மறுப்பது உண்மையிலேயே சரியான செய்தி என்றால், அஜித் தன்னுடைய படத்தின் 30% வரி விலக்குப் பணத்தை மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று தான் கூற வேண்டுமே தவிர நட்சத்திர கிரிக்கெட்டை புறக்கணிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

இந்த 30% வரிப்பணம் தான் உண்மையான மக்கள் பணம்.

ஒருவேளை அஜித் மக்கள் பணம் என்ற காரணமில்லாமல் வேறு தனிப்பட்ட காரணங்களால் புறக்கணித்து இருந்தால் அது வேறு விசயம் விமர்சிக்க ஒன்றுமில்லை.

சக நடிகர் சங்கத்துக்கு ஏன் நிகழ்ச்சியில் பங்களிக்கவில்லை என்று கேட்கலாமே தவிரக் கட்டாயப்படுத்த முடியாது.

நம்மில் பெரும்பாலனவர்களுக்குப் பணக்காரன் என்ன செய்தாலும் தவறு தான் அதே ஏழையாக இருப்பவன் என்ன செய்தாலும் சரி.

நாம் துவக்கத்தில் 10000 சம்பாதித்துக் கொண்டு இருந்து இருப்போம் அப்போது அதற்குத் தகுந்த தேவைகள் இருந்தது.

தற்போது 50000 / 1 லட்சம் சம்பாதித்தாலும் அதற்குண்டான செலவுகள் இருக்கிறது. ஏன்?

திரைத் துறையினர் அவர்கள் நிலைக்கேற்ப செலவுகள் தேவைகள் கடன்கள் என்று இருக்கும். எனவே ஏன் கொடுக்கவில்லை என்று கேட்க நமக்கு உரிமையில்லை.

விருப்பமில்லை என்றால் செய்யக் கூடியது புறக்கணிப்பு மட்டுமே!

பெரிய நடிகர்கள் பணம் கொடுக்கலாம் மற்ற நடிகர்கள் இது போல நிகழ்ச்சிகளில் தங்கள் பங்களிப்பை மட்டுமே அளிக்க முடியும்.

தரக் குறைவான செயல் அல்ல

எனவே, தங்கள் கடனை அடைக்க அனைவரும் ஒற்றுமையாக இருந்து நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் தங்கள் நீண்ட நாளைய கனவான நடிகர் சங்கத்தைச் சட்டம் அனுமதித்த வழியில் கட்ட நினைப்பது எந்த விதத்திலும் தரக் குறைவான செயல் அல்ல.

எனவே, வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்டுத் திரைத்துறையினரை திட்டிக்கொண்டு இல்லாமல், எதற்கு விமர்சனம் செய்ய வேண்டும்? எதற்குக் கேள்விகள் கேட்க வேண்டும்? என்று புரிந்து கொள்ளுங்கள்.

அர்த்தமற்ற கோபங்களும் புரிதலும் அவசரமும் உண்மையான பிரச்சனையை மறைத்து ஒன்றுமில்லாத பிரச்னைக்குக் கொடி பிடிக்க வைக்கும். சென்னை மழைப் பேரழிவை ஒன்றுமில்லா “பீப்” பாடல் மறைத்து போல.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

7 COMMENTS

  1. 30% கொள்ளைபற்றி நீங்கள் சொல்லித்தான் தெரியும் கிரி!! இது அந்நியாயம்

  2. இதற்கு முன் இதே போன்று நடத்திய பொழுது வராத எதிர்ப்பு இப்பொழுது வர காரணம் விஷாலும் அவரது வாயும் தான். சென்னை வெள்ளத்திற்கு நிவாரணம் என்ற பொழுது அது அரசாங்கத்தின் வேலை என்று கூறியவர். இன்று அவர்களின் நடிகர் சங்க கடனுக்கு மட்டும் மக்களிடம் வருகிறார்களே என்ற நியாயமான கோவம் தான் மக்களின் எதிர்ப்புக்கு முக்கிய காரணம்.

    வெள்ள நிவாரண உதவி செய்ய வேண்டாம். திமிரான பேச்சையாவது பேசாது இருந்திருந்தால் இன்று கட்டாயம் இவ்வளவு எதிர்ப்பு இருந்து இருக்காது. ஏனெனில் இதற்கு முன் நடத்திய நிகழ்ச்சிக்கு இந்த எதிர்ப்பு இல்லை இப்பொழுது வர காரணம் அந்த பேச்சுக்கள் தான்….. ஆகையால் மக்களின் கோவம் நியாயமானதே…. வேண்டும் என்றால் அதிகமாக வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறலாம்…

    ஆனால் நீங்கள் சொல்வது போல் கண்டிப்பாக அனைவரும் வரி விலக்கு அளித்த படத்திற்கும் நம்மிடம் பணம் பிடுங்குவதற்கு இதே போன்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்….

    இந்த வரி விலக்கை ஆரம்பித்து வைத்தவர் கருணாநிதி. காரணம் சினிமாக்காரர்களின் ஓட்டுற்காக….

  3. கிரி… இதை பற்றி கூறுவதற்கு ஒன்றுமே இல்லை… விசாரணை படத்தில் கிஷோர் கூறுவது போல் அதிக பணம் சம்பரிப்பவனை சமூகம் ஏதோ ஒரு குற்றவாளியை போல் தான் பார்கிறது… அதுவும் சினிமா என்றால் கூற வேண்டியதில்லை… 30% திரையரங்கு கொள்ளை இதுவரை நான் அறியா ஒன்று!!!!!

    நடிகர்களை சாடும் நாம், நாம் ஒட்டு போட்டு தேர்ந்து எடுத்த கொள்ளை அடிக்கும் அரசியல்வாதியை ஒன்றும் செய்வதில்லையே???? நடிகர்களை தாண்டி கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் கல்லா வீரர்களை குறை கூறுவது இல்லையே???
    கொடுத்தால் நல்லவன், கொடுக்கவில்லை என்றால் கேட்டவன் இது தான் இன்றைய நிலை.

    நண்பர் பிரகாஷ் கூறியது போல் : வெள்ள நிவாரண உதவி செய்ய வேண்டாம். திமிரான பேச்சையாவது பேசாது இருந்திருந்தால் இன்று கட்டாயம் இவ்வளவு எதிர்ப்பு இருந்து இருக்காது. ஏனெனில் இதற்கு முன் நடத்திய நிகழ்ச்சிக்கு இந்த எதிர்ப்பு இல்லை.
    ===========================================
    மக்களுக்கு கோபம் இருக்கிறது என்றால் அவர்களின் எதிர்பை நிகழ்சிக்கு போகாமல் இருக்கலாம். ஆனால் தடை செய்ய கூறுவது எனக்கு சரியா பட வில்லை. சென்னை மழைப் பேரழிவை ஒன்றுமில்லா “பீப்” பாடல் மறைத்து போல. இதுவும் கடந்து போகும்.
    ==========================================
    கிரி, திரைபடங்களுக்கு செல்வது குறைந்து விட்டதா என்ன ??? விமர்சங்களை பார்க்க முடிவது இல்லையே?????

  4. பிரகாஷ் எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். மக்களிடம் திரைத்துறையினர் பிச்சை எடுக்கிறார்களா மக்கள் அவர்களிடம் எடுக்கிறார்களா என்று!

    எதற்கு எடுத்தாலும் அவர்களின் கருத்துகளை எதற்கு எதிர்பார்க்கிறார்கள்? எதற்கு அவர்கள் பணம் தரனும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    அரசாங்கம் அரசியல்வாதிகள் மக்களின் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரிகிறது.

    நியாயமாக இவர்களிடம் தானே மக்கள் தங்கள் கோபத்தை காட்ட வேண்டும்! இவர்களை விட்டு விட்டு திரைத்துறையினரை அனைவரும் தொங்கிக் கொண்டு உள்ளார்கள்.

    இவர்களுக்கா மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள்?!

    இவர்கள் மீது வரும் கோபம் ஏன் அரசாங்கம் மீது வருவதில்லை?! அரசியல்வாதிகள் மக்களிடம் கொள்ளை அடிக்கின்றனரா அல்லது திரைத் துறையினரா?

    திரைத்துரையினரிடம் மக்கள் விருப்பட்டு கொடுப்பது அரசியல்வாதிகள் மக்களிடம் பிடுங்குவது.

    இவர்கள் (நாசர் கூறியது என்று நினைக்கிறேன் விஷால் அல்ல) கூறியது தவறு என்றாலும் பல கோடிகளை வசூலித்து கொடுத்து இருக்கிறார்கள். பல நடிகர்கள் மழையின் போது உதவி இருக்கிறார்கள். மேலும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    இதையெல்லாம் செய்ய வேண்டியது அரசாங்கம். அவர்கள் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டிக்கொண்டு இருந்தார்கள்.

    யாரிடம் பிரச்சனை?! மக்களிடமா திரைத் துறையினரிடமா?!

    கலைஞர் தான் வரி விலக்கை ஆரம்பித்து வைத்தார். ஏன் இதை ஜெ நினைத்தால் நிறுத்த முடியாதா? இருவருமே வெவ்வேறு வகையில் மக்களின் பணத்தை வீணடிப்பவர்கள் தான்.

  5. @யாசின் திரைத்துறையினரை திட்டுவது என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. 30% திருட்டுக்கு கொந்தளிக்காமல் ஒன்றுக்கும் உதவாத விசயத்துக்கு கொந்தளிக்கிறார்கள்.

    அவர்கள் யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் தொலைக்காட்சி உரிமை, ஸ்பான்சர் வைத்தே 13 கோடிக்கு மேல் திரட்டி விட்டார்கள்.

    இங்கே பலர் கூட்டமில்லை என்று சிரித்து கொண்டு இருக்கிறார்கள். தொலைக்காட்சியில் பார்த்து TRP ஏற்றிக் கொண்டு இருக்கிறோம் என்று அறியாமல்.

    திட்டியவர்கள் ஒருவர் விடாமல் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறார்கள்.

    யாசின் திரைப்படங்களுக்கு தாமதமாக செல்கிறேன் அதோடு உடனே எழுதும் அளவுக்கு தற்போது வசதி இல்லை. இதுவும் விமர்சனம் குறையக் காரணம்.

    ஜூன் க்கு பிறகு சரியாகும் என்று நினைக்கிறேன் 🙂

  6. பணம் இருப்பவர்களிடம் இல்லாதவர்களின் எதிர்பார்ப்பு தான் இவை. அது அரசியல்வாதிகளானாலும் திரைத்துறையினர் ஆனாலும் சரி. அரசியல்வாதிகள் ஓட்டிற்காகவாவது ஏதோ செய்வது போல் பாசாங்கு செய்கிறார்கள். அதனால் மக்கள் அப்போதைக்கு அமைதி ஆனாலும் தேர்தல்களில் எதிர்ப்பை தீவிரமாக காட்டுகிறார்கள் என்பது உண்மை. ஆகையால் இவர்களை இன்று இல்லாவிட்டாலும் தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்று விட்டு விடுகிறார்கள். தேர்தலில் கோவத்தை தீர்க்கிறார்கள். ஆனால் திரைத்துறையினரிடம் உடனே காட்டுகிறார்கள்
    இதற்கு காரணமும் திரைத்துறையினரே. ஏனெனில் அவர்கள் தான் படங்களிலும் மக்களை சந்திக்கும் போதும் மக்களாகிய நீங்கள் தான் என் உயிர் என்று அறிக்கை விடுகிறார்கள். ஆகையால் மக்களுக்கு ஒரு இன்னல் வரும் போழுது கேட்கிறார்கள். இல்லையெனில் எதிர்க்கிறார்கள். மக்களுக்கு கோவம் வருவதற்கு இதுவே காரணம். ஏனெனில் மக்கள் மற்ற பணக்காரர்களிடம் இவ்வாறு கேட்பதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!