இந்தியாவை விமர்சிக்கும் இந்தியர்கள்

8
இந்தியாவை விமர்சிக்கும் இந்தியர்கள்

லகமே திண்டாடிட்டு இருக்கும் நிலையில் சிறப்பாகக் கையாண்டு வரும் இந்தியாவை இந்தியர்கள் விமர்சித்து வருகிறார்கள். Image Credit

இந்தியாவை விமர்சிக்கும் இந்தியர்கள்

உள்ளூரில் இருப்பவருக்கு அவங்க ஊர் அருமை தெரியாது, தமிழ்நாட்டின் அருமை தமிழ்நாட்டில் உள்ளவருக்குத் தெரிவதில்லை, இந்தியாவின் சிறப்பு இந்தியர்களுக்குப் புரிவதில்லை.

நம் சிறப்பைத் திறமையை நாமே உணராமல் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகப் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பது சலிப்பை தருகிறது.

எந்த ஒரு விசயத்துக்கும் அனைவருக்கும் விமர்சனம் இருக்கும் ஆனால், அது புரிந்து கொண்ட சரியான விமர்சனமாக இருக்க வேண்டும்.

ஆனால், மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்பதையே புரிந்து கொள்ளாமல் இந்தியாவை விமர்சித்துக்கொண்டுள்ளார்கள்.

இந்தியா

கொரோனா காலத்தில் உலக நாடுகள் அனைத்துமே மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பெரியளவில் உயிரிழப்புகளை எதிர்கொண்டன, பொருளாதார ரீதியாக இழப்புகளைச் சந்தித்தன.

இந்தியாவும் விதிவிலக்கு இல்லாமல் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது ஆனால், சிறப்பாகக் கையாண்டது.

இந்திய, உலக ஊடகங்கள் போட்டி போட்டு இந்தியாவை இகழ்ந்து கொண்டே இருந்தன ஆனால், இவை அனைத்தையும் கடந்து இந்திய அரசு செயல்பட்டுள்ளது.

வல்லுனர்களும், ஊடகங்களும் இந்தியாவில் இவ்வாறு நடக்கும் என்று பயமுறுத்திய எதுவுமே நடக்கவில்லை.

எப்பவுமே மிக மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளவில்லையென்றால், அச்சூழ்நிலை எப்படி இருந்து இருக்கும் என்று நம்மால் உணர முடியாது.

அனைவரும் கூறுவது எரிபொருள் விலையேற்றம் அதிகமாகி விட்டது என்பது. நியாயமான குற்றச்சாட்டு, இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனால், இப்பிரச்சனை இந்தியாக்கு மட்டுமல்ல உலகம் முழுக்க இருக்கக்கூடிய பிரச்சனை. ஐரோப்பா நாடுகளில் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் வரி மூலம் மத்திய அரசு மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கிறது என்று அரசியல் செய்து வருகிறார்கள் ஆனால், அப்பணத்தை மத்திய அரசு எப்படிப் பயன்படுத்தியது என்பதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

எதிர்க்கட்சிகள் பேச மாட்டார்கள் ஏனென்றால், அது தான் அவர்கள் அரசியல் ஆனால், பாஜக வினர் கூட முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.

கடந்த இரு வருடங்களில் அனைத்து மக்களுக்கும் விலையில்லா உணவுப் பொருட்களைக் கொடுத்தது, தடுப்பூசி வழங்கியது, சிறு தொழில் செய்பவர்களுக்குக் கடனுதவி வழங்கிச் சேதாரத்தைக் குறைத்தது என்று மிகச்சிறந்த செயலை மத்திய அரசு செய்துள்ளது.

இதற்கெல்லாம் பணம் எப்படி வந்தது? மத்திய அரசு செய்த சிறப்பான நடவடிக்கைகள் பலருக்கு இன்னமும் தெரியாது. இங்குள்ள ஊடகங்கள் பாஜக எதிர்ப்பு மனநிலையை மக்களிடையே பரப்பி வருகின்றன.

பாஜகவினரே மத்திய அரசு செய்த செயல்படுத்திய திட்டங்களை மக்களிடையே கொண்டு கொண்டு சேர்க்காத போது ஊடகங்களைக் குறை கூறி என்ன பயன்?

கொள்ளையடிக்கவில்லை

எதிர்க்கட்சிகள் 1000 குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீது வைக்கலாம் ஆனால், 8 வருடங்களாகியும் இன்னமும் ஏன் ஊழல் குற்றச்சாட்டு வைக்க முடியவில்லை?!

யாரும் யோசித்தீர்களா?

கொள்ளை அடிக்கிறான் என்று கூறுகிறார்களே தவிர அதை மக்களுக்கே தான் பல்வேறு வழிகளில் திருப்பித் தருகிறார்கள் என்பதைக் கண்டு கொள்வதில்லை.

திருப்பித் தருவது முக்கியமில்லை மக்களின் வரிப்பணத்தை விரையமாக்காமல் சரியான நபர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கிறார்கள், உட்கட்டமைப்பை மேம்படுத்தப் பயன்படுத்துகிறார்கள்.

இவ்வளவு கொரோனா பிரச்சனையிலும் 130 கோடி மக்களைக்கொண்ட, சீனா போன்ற சிறப்பான கட்டமைப்பு இல்லாத நாட்டில் பெரிய சிக்கல்கள் இல்லாமல் இந்தியா சமாளித்துள்ளது.

இது மிகப்பெரிய சாதனை.

இலங்கை தற்போதுள்ள நிலையென்ன? பாகிஸ்தானின் நிலையென்ன? அவ்வளோ ஏன் வல்லரசாக இருக்கும் சீனா தற்போது கொரோனா பிரச்சனைகளைக் கையாள முடியாமல் திணறி வருகிறது.

அங்கு ஊடகங்கள் செய்திகளை உலகுக்குக் கூற முடியாது. செய்திகள் வெளியே தெரியவில்லையென்பதாலையே சீனா சிறப்பு என்று கூற முடியுமா?!

இவை அனைத்தையும் தாண்டி மக்கள் படும் துன்பங்கள், உணவுக்காகச் செய்யும் கலவரங்கள், மன உளைச்சல்களால் கூச்சலிட்ட மக்களின் நிலை சமூகத் தளங்கள் வழியாகக் கசிந்து வருகிறது.

சீனா போல இந்தியா ஒரே தலைமையின் கீழ் இயங்கவில்லை. பல மாநிலங்களை அதன் அரசியல்களை உள்ளடக்கி ஆட்சி புரிகிறது.

சுயாட்சி என்ற பெயரில் மாநில அரசே அனைத்தையும் செய்ய அனுமதி வேண்டும் என்று வாங்கி அனைத்தையும் சொதப்பிப் பின்னர் மத்திய அரசே ஏற்றுக்கொண்டது.

வெற்றுப் பரபரப்பை, பற்றாக்குறையை, பயத்தை ஏற்படுத்தி ஆக்சிஜன் பிரச்சனையில் பல மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாகக் கெஜரிவால் நடந்து கொண்டதை நீதிமன்றமே கண்டித்தது நடந்தது.

கிட்டத்தட்ட 190 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது சாதாரண விஷயம் என்று கருதுகிறீர்களா?

இவ்வாறு பல்வேறு உள்நாட்டு அரசியல்களையும் தாண்டி இந்தியா சாதித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றம் விமர்சிக்கப்படக் கூடாது என்பது என் கருத்தல்ல ஆனால், அதோடு மத்திய அரசு செய்த பணிகளையும் உதவிகளையும் மனதில் கொள்ளுங்கள்.

உலக ஊடகங்கள்

இந்தியாவைக் கொத்துக்கறி போடும் உலக ஊடகங்கள் சீனா, அமெரிக்காவில் நடப்பதை கூறவில்லை. ஏன்? அமெரிக்காவில் தினமும் 5000 பேர் இறந்தார்கள் அவை ஏன் விவாதிக்கப்படவில்லை?

சீனாவில் தற்போது (ஏப்ரல் 2022) ஷாங்காய் நகரில் மிக மோசமான நிலை நிலவுகிறது. ஏன் உலக ஊடகங்கள் அமைதியாக உள்ளன?

ஆனால், இந்தியாவில் இறந்த மக்களை எரித்ததற்கு அதைப் படமாக வெளியிட்டு மிக மோசமாக அனைத்து ஊடகங்களும் விமர்சித்தன.

எரித்தால் தவறு ஆனால், சவப்பெட்டியில் அடுக்கினால் தவறில்லை.

இந்தியாவில் எது நடந்தாலும் பூதாகரமாக்கப்படுகிறது ஆனால், அமெரிக்கா சீனாவில் எது நடந்தாலும் வாய் மூடி அமைதியாக உள்ளன.

அவ்வளவு ஏன் உலகச் சுகாதார அமைப்பு இந்தியாவின் கோவாக்சினுக்குக் கொடுத்த குடைச்சல்கள் தான் எத்தனை?! இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ளது.

இது முழுக்க அரசியல் மட்டுமே!

இவ்வளவு பேசும் அமெரிக்காவே பல்வேறு கடனில் தான் உள்ளது. அங்கேயும் பண வீக்கம் உச்சத்தில் உள்ளது. இதுகுறித்துப் பின்னர் எழுதுகிறேன்.

சாதித்த இந்தியா

இந்தியாவில் பிரச்சனைகள் உள்ளது மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையேயும் மத்திய அரசு டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்தியுள்ளது, தற்சார்பு இந்தியா மூலம் உற்பத்தியை பெருக்கியுள்ளது.

இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலை இணைக்கப்பட்டு வருகிறது. புதிய பாலங்கள் கட்டப்பட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊழல் செய்வதற்கான வழிகள் டிஜிட்டல் இந்தியா மூலம் தடுக்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகளுக்கு உதவிப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு விலையில்லா உணவுப்பொருட்கள் வழங்கியது மிகப்பெரிய உணவுப் பற்றாக்குறையைத் தவிர்த்துள்ளது, வீடுகளைக் கட்டித்தருகிறது.

தற்போது அடுத்ததாகக் கோதுமை ஏற்றுமதியில் சாதித்துக்கொண்டுள்ளது.

ஊழல் செய்து இருந்தால் மேற்கூறிய எதையுமே மத்திய அரசால் செய்து இருக்க முடியாது. ஒருவேளை இலங்கையைப் போன்று பொருளாதாரச் சிக்கலில் மாட்டியிருக்கலாம்.

உலக அரங்கில் இந்தியா

பெரியண்ணனாக இருக்க நினைக்கும் அமெரிக்காவே தற்போது இந்தியாவிடம் அடங்கிச் செல்கிறது.

அமெரிக்காவின் மனித உரிமை குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தரமான பதிலடி கொடுத்த பிறகு அமெரிக்கா வாயை மூடிக்கொண்டது.

இது போல உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

இந்தியாக்கு நாட்டாமை செய்யலாம் என்ற எண்ணத்தையெல்லாம் மற்ற வல்லரசு நாடுகள் மறந்து விட வேண்டியது தான்.

மத்திய அரசு

மத்திய பாஜக அரசு தவறுகளைச் செய்து இருக்கிறது ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் கொரோனா காலத்தைச் சிறப்பாகக் கையாண்டுள்ளது.

பாஜக ஆட்சியில் இருப்பதால் மட்டுமே மோசமான நிலைக்கு இந்தியா செல்லாமல் தப்பித்தது. இதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் இது தான் உண்மை.

மத்திய அரசு ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார்கள் ஆனால், அது பற்றிய விவரங்கள் மக்களைச் சென்றடையவில்லை.

மோடி

மோடியை பல காரணங்களுக்காகப் பலரும் விமர்சிக்கலாம் ஆனால், அவரின் முன்னோக்கிய திட்டங்கள், சிந்தனைகள், அதற்கான தைரியமான முடிவுகள் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை.

சில முடிவுகள் துவக்கத்தில் கடினமான நிலையை ஏற்படுத்தி இருந்தாலும், அதனால் பிற்காலத்தில் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை.

டிஜிட்டல் இந்தியா & தற்சார்பு இந்தியா இவை இரண்டும் இந்தியாவின் வளர்ச்சிக்குக் கொடுத்த, கொடுக்கப்போகும் பங்கு அளவிட முடியாதவை.

எதிர்காலத்தில் நன்மை பயக்கும் ஆனால், தற்காலத்தில் சிரமத்தைக்கொடுக்கும் முடிவை ஒரு தலைவர் எடுப்பது கடினம்.

யாருமே முயற்சிக்கத் துணியாத முடிவை எடுப்பவர்களே சிறந்த தலைவராகக் கருதப்படுகிறார்கள். எனவே, தைரியமான முடிவுகளை எடுக்கும் மோடி மிகச்சிறந்த தலைவர் என்பதில் துளி கூட எனக்குச் சந்தேகமில்லை.

மக்கள் விரும்புவதை செயல்படுத்துபவர் நல்ல தலைவரல்ல. மக்களுக்கு எது நன்மை கொடுக்கும் என எதிர்காலத்தேவையை அறிந்து திட்டங்களைச் செயல்படுத்துபவரே சிறந்த தலைவர்.

தற்காலச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் நல்லவராக இருக்க நினைத்து முடிவுகளைத் தள்ளிப்போட்டால் எதிர்காலம் மிக மோசமாக மாறிவிடும்.

மோடியையும் அவரின் முன்னோக்கிய திட்டங்களையும் நானும் குறைத்து மதிப்பிட்டு விட்டேன். முன்பை விட மோடியின் மீதான எனது மதிப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி

இங்கே பலரும் மோடியை / பாஜகவை விமர்சிப்பதாக நினைத்து இந்தியாவை இழிவுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

உலக அரங்கில் முக்கியமான நிலையை இந்தியா வந்தடைவதில் எந்தச் சந்தேகமுமில்லை. நினைத்ததை விட மிக வேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது.

தற்போதைய பொருளாதார பிரச்சனைகள் தாற்காலிகமானவையே.

சாமானியரும் இந்திய வளர்ச்சியின் முழுமையான பலன்களைப் புரிந்து கொள்ள, அனுபவிக்கச் சில வருடங்களாகும்.

டிஜிட்டல் இந்தியா ஆரம்பத்தில் நான் கூறியதை பலரும் நம்பவில்லை ஆனால், நடந்து விட்டது. இந்தியாவின் வளர்ச்சியிலும் இதே நம்பிக்கையுடன் கூறுகிறேன்.

ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை.

கொசுறு

டிஜிட்டல் இந்தியா எப்படி இந்தியாவை வளர்த்துள்ளது? தற்சார்பு இந்தியா எப்படி உதவியுள்ளது? GST / ஆதார் / ஜன்தன் வங்கிக்கணக்குகள் ஏன் முக்கியம்? போன்றவற்றைப் பின்னர் எழுதுகிறேன்.

மேற்கூறியவை அனைத்துமே கடுமையாக விமர்சிக்கப்பட்டவை, குறைத்து மதிப்பிடப்பட்டவை ஆனால், இவை இந்தியாவில் செய்துகொண்டுள்ள மாற்றங்கள் அசாதாரணமானவை.

தொடர்புடைய கட்டுரைகள்

பிரிவினைவாதிகளுக்கு செருப்படி கொடுத்த தமிழக மக்கள்

உலக ஊடகங்கள் அமைதியோ அமைதி! | COVID-19

நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?

மத்திய பாஜக அரசின் மூன்று அடிப்படை சர்ச்சைகள்

இந்தியாவை கிண்டலடிக்கும் சைக்கோ இந்தியர்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. நல்ல அலசல். அருமையான கட்டுரை. ஆனால் பெட்ரோல் விலை உயர்வு குறித்து மட்டும் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. பெட்ரோல் விலை கடுமையாக உலகஅளவில் சரிந்த போது மத்திய அரசு கலால் வரி போட்டு 80 ரூபாய்க்கு கீழ் வராமல் அதன் பயனை மக்களை அடையவிடாமல் தடுத்தார்கள். பாஜக சுப்பிரமணியன் சுவாமியே பெட்ரோல் விஷயத்தில் மத்திய அரசை கடுமையாக சாடுகிறார். மத்திய அரசு பெட்ரோல் விலையை ஏற்றுவதன் மூலமே பொருளாதார சரிவை சரிகட்ட பார்ப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். ஆயிரம் காரணங்கள் கூறினாலும் மத்திய அரசு பெட்ரோல் விஷயத்தில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே பிஜேபி வரும் பாராளுமன்ற தேர்தலில் கடுமையான சேதாரத்தை சந்திக்கும் என்பது என் அனுமானம். பார்க்கலாம்

  2. கிரி.. நீங்கள் குறிப்பிட்ட பல கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன் .. சிலவற்றில் முரண்பாடும் இருக்கிறது.. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து கொண்டு செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை..

    (இந்தியாவைக் கொத்துக்கறி போடும் உலக ஊடகங்கள் சீனா, அமெரிக்காவில் நடப்பதை கூறவில்லை. ஏன்? அமெரிக்காவில் தினமும் 5000 பேர் இறந்தார்கள் அவை ஏன் விவாதிக்கப்படவில்லை?) கிரி.. நீங்க குறிப்பிட்டு இருப்பது ஒரு உதாரணம் தான்.. இது போல எத்தனை நிகழ்வுகள்.. தினம் தினம் நடைபெற்று கொண்டு இருக்கிறது… வடிவேல் சார் காமெடி தான்.. தக்காளி சட்னி / ரத்தம் காமெடி தான்!!! உக்ரைன் போரை சமீபத்திய உதாரணமாக சொல்லலாம்….

    (இந்தியாவில் எது நடந்தாலும் பூதாகரமாக்கப்படுகிறது ஆனால், அமெரிக்கா சீனாவில் எது நடந்தாலும் வாய் மூடி அமைதியாக உள்ளன.)

    இதுவும் கடந்து போகும் கிரி..

  3. @ஹரிஷ்

    எரிபொருள் விலையேற்றம் உலகப்பிரச்சனை. விலையேற்றம் தவிர்க்க முடியாதது ஆனால், இவை மற்ற அனைத்தின் விலைகளையும் ஏற்றி விடுகிறது.

    இதனால் பணவீக்கம் ஏற்படுகிறது. எனவே, அரசு வேறு சேவைகளில் உயர்த்தி இதில் தவிர்க்கலாம் ஆனால், இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் எனக்குத் தெரியாது.

    இது குறித்த என் விமர்சனம் https://www.giriblog.com/central-bjp-govt-price-controversy/

    @யாசின்

    இந்தியா இன்னும் சில வருடங்களில் அனைவரையும் வியப்படைய வைக்கும் நாடாக மாறி இருக்கும்.

    “நீங்கள் குறிப்பிட்ட பல கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன் .. சிலவற்றில் முரண்பாடும் இருக்கிறது.”

    முரண்பாடு இருந்தால் என்னவென்று கூறுங்கள் யாசின். தவறு இருந்தால் திருத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.. ஒருவேளை உங்கள் புரிதல் தவறாக இருந்தால் விளக்கம் கொடுக்க வாய்ப்பாக அமையும்.

    இருப்பதிலேயே கேவலமான ஊடகங்கள் New York Times & BBC . இவர்கள் ஊரில் நடப்பதை பற்றி பேசாமல் இந்தியா பற்றியே பேசிக்கொண்டு இருப்பார்கள்.

  4. நிச்சயம் கிரி.. உங்களிடம் எந்த தயக்கமும் இல்லை.. நேரில் வாய்ப்பு அமையும் போது சிலவற்றை பேசலாம்.. விவாதிக்கலாம் .. கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம்..தெளிவு பெற்று கொள்ளலாம்.. எனக்கு பேசுவது மிகவும் பிடித்த ஒன்று … நான் இருக்கும் இடம் கல கல வென இருக்கும் ..தற்போது வயதாக, வயதாக பேச்சும், நகைச்சுவையும் கூடி கொண்டே செல்கிறது..கிரி..

    (முரண்பாடு இருந்தால் என்னவென்று கூறுங்கள் யாசின். தவறு இருந்தால் திருத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.. ஒருவேளை உங்கள் புரிதல் தவறாக இருந்தால் விளக்கம் கொடுக்க வாய்ப்பாக அமையும்.)

    இணையத்தில் எழுதும் எத்தனை நபர்கள் இந்த மன நிலையை கொண்டு இருப்பார்கள் என எனக்கு தெரியவில்லை.. காரணம் அவர்களின் எல்லா கூற்றுகளுக்கும் நாம் “காவடி தூக்க வேண்டும்” என்ற எண்ணம் மேலோங்கி கிடைக்கிறது.. அதனால் தான் நான் என் இணைய வட்டத்தை மிகவும் குறுக்கி விட்டேன்.. உண்மையா சொல்ல போனால் யாரையும் பின்தொடர தற்போது விருப்பமே இல்லை..

    குறிப்பிட்ட ஆண்டுகள் ஒருவரை தொடரும் போது அவர்களின் போலித்தனம் ஏதாவது உருவில் வெளிப்பட்டு விடுகிறது ..அந்த நொடியே நாம் அவர்கள் மீது வைத்து இருந்த அத்தனை மரியாதையும், பிம்பமும் ஒரு நொடியில் உடைந்து விடுகிறது… வெகு சிலர் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்..

    உண்மைய சொல்ல போனால் இத்தனை ஆண்டுகள் என் பயணம் உங்களுடன் தொடர காரணம்.. உங்களின் சமரசமில்லா வெளிப்படை தன்மை தான் என எண்ணுகிறேன்..மற்றும் அடுத்தவர்களின் கூற்றுக்கு மதிப்பளித்து பதிலளிப்பது.. சிலர் வீணான தர்க்கங்களில் ஈடுபட்டாலும் அவரது கருத்துக்கும் நாகரீக முறையில் பதிலளிப்பது.. பல நேரங்களில் இது என்னை ஆச்சரியப்படுத்தி கொண்டே இருக்கும்.. நன்றி கிரி..

  5. அண்ணே காத்திருங்கள் நாலாவது அலைக்கு ஜூன் 22 ம் திகதி பரவப்போவதாக தகவல்

    அதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

  6. @யாசின்

    “நான் இருக்கும் இடம் கல கல வென இருக்கும் ..தற்போது வயதாக, வயதாக பேச்சும், நகைச்சுவையும் கூடி கொண்டே செல்கிறது..கிரி..”

    வயதானால் நகைச்சுவை உணர்வு குறைந்து கொண்டு வரும் என்பார்கள், உங்களுக்கு அதிகரிப்பது மகிழ்ச்சி.

    இது எப்போதும் தொடர வாழ்த்துகள் 🙂 .

    “அவர்களின் எல்லா கூற்றுகளுக்கும் நாம் “காவடி தூக்க வேண்டும்” என்ற எண்ணம் மேலோங்கி கிடைக்கிறது..”

    எனக்கு எப்போதுமே தவறுகளை சரி செய்து கொள்வது ரொம்பப்பிடிக்கும்.

    இங்கேயும் பலர் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்கள். சிலர் கூறும் முறை சரியில்லை என்றாலும் கூறியது சரியாக இருக்கும்.

    அப்போது அவர்களிடம் நான் கூறியது சரி என்று சமாளித்து இருந்தாலும் பின்னர் பொறுமையாக யோசித்துப்பார்க்கும் போது அவர்கள் கூறியதில் உண்மை உள்ளதை அறிந்து ஏராளமான தவறுகளை சரி செய்து கொண்டுள்ளேன்.

    குறிப்பா ஒருவர் நீங்க உங்க சுயபுராணங்களை கூறிட்டு இருக்கீங்க என்றார். இது Personal Blog இங்கே என்னை பற்றி மட்டுமே எழுத முடியும் இதில் என்ன தவறு என்று கேட்டு இருந்தேன்.

    ஆனால், நான் கூறியது உண்மை என்றாலும் அதிலும் சில திருத்தங்கள் செய்யலாம் என்பது யோசித்த பிறகே புரிந்தது. இதை மாற்றிய பிறகு இன்னும் மேம்படுத்தப்பட்ட எழுத்தாக கருதுகிறேன்.

    தற்போது யோசித்தால், மாற்றிக்கொண்டது எவ்வளவு நல்லது என்று உணர முடிகிறது.

    எனவே, விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். இவையே என்னை சரி செய்து கொள்ள உதவும்.

    @ராவணன்

    எந்த அலை வந்தாலும் 2 வது அலைபோல வர வாய்ப்பில்லை. அதையே கடந்து வந்தாச்சு.. இனி சமாளிப்பது பெரிய விஷயம் இல்லை.

    அனைத்துக்கும் இந்தியா தயார் நிலையில் உள்ளது.

  7. உங்களுடைய பல பதிவுகளில் நான் உடன்படுகிறேன். ஆனால் இந்த பதிவின் கருத்தில் சற்றே மாறுபடுகிறேன் கிரி. ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சிக்கு மாற்றாக பிஜேபி வந்தபோது சந்தோஷப்பட்டேன். ஆனால் நாட்கள் போக போக இவர்களின் வரி விதிப்பு முறை , விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மனம் நொந்து போய் இருக்கிறேன். சமீபகாலமாக இந்துக்களுக்கு எதிரான கருத்துகள் மிக அதிகமாக பரவிவருகிறது. ஆனால் பிஜேபி இருந்தால் இந்துக்களுக்கு நல்லது. இந்த ஒரே காரணத்திற்காக மட்டும் என் ஆதரவு பிஜேபிக்கு உண்டு.

  8. @பயபுள்ள

    “நாட்கள் போக போக இவர்களின் வரி விதிப்பு முறை , விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மனம் நொந்து போய் இருக்கிறேன்.”

    உண்மை தான். இது குறித்து ஏற்கனவே எழுதி உள்ளேன். ( https://www.giriblog.com/central-bjp-govt-price-controversy/ )

    இவர்கள் அவ்வாறு பெறும் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்குத் தான் பயன்படுத்துகிறார்கள், ஊழல் செய்வதில்லை.

    இருப்பினும் மேற்கூறிய கட்டண உயர்வைச் சமாளிப்பது கடினமே! இதை மத்திய அரசு உணர்ந்து வேறு வழிகளில் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

    “பிஜேபி இருந்தால் இந்துக்களுக்கு நல்லது. இந்த ஒரே காரணத்திற்காக மட்டும் என் ஆதரவு பிஜேபிக்கு உண்டு.”

    நான் இதுக்கு மட்டுமல்ல அவர்களின் காலத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்களுக்காகவும்.

    சில மாற்றங்கள் காலங்களைக் கடந்தே அதன் பயனை அனைவரும் உணர முடியும். அப்போது அனைவரும் பாராட்டுவார்கள்.

    சிறு எடுத்துக்காட்டாக டிஜிட்டல் இந்தியாவை கூறலாம். அறிமுகப்படுத்தப்பட்ட போது பலரும் கிண்டலடித்தார்கள், கடுமையாக விமர்சித்தார்கள்.

    ஆனால், இன்று நிலைமையே வேறு. விமர்சித்தவர்கள் அதன் பயனை அனுபவித்துக்கொண்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here