டாணாக்காரன் (2022) | மிரட்டும் காவலர் பயிற்சி

3
டாணாக்காரன்

ன் காவல்துறை பயிற்சி அனுபவங்களையே டாணாக்காரன் திரைப்படமாக எடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் தமிழ். Image Credit

டாணாக்காரன்

1998 / 99 காலங்களில் நடக்கும் கதையாக டாணாக்காரன் உருவாக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் இணையும் முன்பு பயிற்சி கொடுத்து அவர்களிலிருந்து சிறந்தவர்கள் காவலர்களாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

வெள்ளையர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வந்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் இன்னமும் பெரிய மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.

பயிற்சி நடக்கும் இடத்தின் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம், அங்குள்ள அரசியல், அதிகாரிகளின் கண்டிப்பு அதனால் ஏற்படும் விளைவுகளைக் கூறும் படமே டாணாக்காரன்.

இயக்குநர் தமிழ்

திரையுலகின் மீதுள்ள காதலால் காவல் துறைப் பணியைத் துறந்து பல போராட்டங்களுக்கிடையே வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் தமிழ்.

25 தயாரிப்பாளர்களுக்குக் கதை கூறியும் எவரும் ஏற்றுக்கொள்ளாமல், இறுதியாகத் தயாரிப்பாளர் SR பிரபு மூலமாகத் தயாரிக்கப்பட்டு OTT யில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வந்த தமிழ்ப் படங்களில் பெருவாரியான மக்களிடையே பாராட்டைப் பெற்ற படம் என்று கூறலாம்.

கிட்டத்தட்ட 95% படமும் ஒரே பயிற்சி இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது ஆனால், ஒரே இடத்தையே பார்த்துக்கொண்டுள்ளோம் என்ற உணர்வே இல்லாத அளவுக்குச் சிறப்பான திரைக்கதை.

விக்ரம் பிரபு

நாயகனாக விக்ரம் பிரபுக்குப் பல வருடங்களுக்குப் பிறகு நல்ல கதையம்சம் உள்ள படம் கிடைத்ததோடு வெற்றியும் பெற்றுள்ளது.

தன்னை எந்த இடத்திலும் தனித்துக்காட்டிக்கொள்ளாமல் அங்குள்ளவர்களில் ஒருவராகவே வருகிறார். நாயகன் என்பதற்கான வழக்கமான பில்டப்புகள் இல்லை.

அவர் உடல்வாகுக்கு இக்கதை அம்சமாகப் பொருந்தியுள்ளது.

இவரோடு நடித்த ஒவ்வொருவரும் தங்கள் கதாப்பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார்கள்.

இவர்கள் குழு தலைவராக (Team Leader) வருபவரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் வந்தவரை மனதில் நிறுத்தி வைத்தார்களா? அக்கதாப்பாத்திரமும் அதே எண்ணத்தை வெளிப்படுத்துவார்.

நடிகர்கள்

வெண்ணிலா கபடிக்குழு போல எப்படி இவர்களால் சாத்தியமாகும் என்ற லாஜிக்கல் கேள்வி இதிலும் வந்து செல்கிறது.

பயிற்சி அதிகாரியாக வரும் லால் படம் முழுக்கப் பயிற்சியில் உள்ளவர்களை மட்டுமல்ல படம் பார்ப்பவர்களையும் மிரட்டித்தள்ளியுளார் 🙂 .

உண்மையான பயிற்சி அதிகாரி போலவே கண்டிப்பு, ‘நீ எப்படித் தேர்வாகிவிடுறேன்னு நான் பார்த்துடறேன்டா!‘ என்று வரிந்து கட்டி சலங்கையாடுவது அசத்தல்.

லாலுக்கு விக்ரம் பிரபு உளவியல் ரீதியாக சவால் கொடுக்கும் காட்சிகளும் சுவாரசியம் குறிப்பாக இறுதிக்காட்சி தலைசுற்றலில் விடுவது அட்டகாசம் 🙂 .

நேர்மையான அதிகாரியாக வரும் போஸ் வெங்கட் வழக்கமான அதிகாரியாகத் தோன்றினாலும் இறுதியில் படத்தின் ஆணிவேராக இருக்கிறார்.

அவர் விக்ரம் பிரபுக்குக் கூறும் கருத்துகள் அவருக்கு மட்டுமானதல்ல, அனைவருக்குமானது. உணர்ச்சிவசப்படுவதால், இழப்பு மட்டுமே.

எந்தக்கதாப்பாத்திரம் என்றாலும் அதுவாகவே மாறி விடும் MS பாஸ்கர் இதிலும் பக்காவாக நடித்துள்ளார். விக்ரம் பிரபுக்கு அறிவுரை கூறுவதும் பயிற்சி போட்டியில் வழிநடத்தும் போதும் பட்டையைக்கிளப்பியுள்ளார்.

கமர்சியலுக்காக அஞ்சலியைக் காவலராகச் சேர்த்துள்ளார்கள். தேவையில்லை என்று கூற முடியாது அதே சமயம் கதையை மீறிச் செல்லவில்லையென்பதால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

உயரதிகாரியாக வருபவர் முதலில் ஒரு மாதிரியாகவும் பின்னர் வேறு மாதிரியாகவும் மாறுவது உறுத்தலாக உள்ளது. என்னதான் சிஸ்டம் என்று கூறினாலும் செயற்கையாகவே இருந்தது.

காவல்துறையில் சில வழக்கங்கள் எதற்கு நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது ஆனால், நடக்கும். அது பற்றிய ஒரு காட்சி சுவாரசியம்.

கதை

தமிழுக்கு இது வித்யாசமான கதை. இது போலப் பல திரைப்படங்கள் வந்துள்ளன ஆனால், அவை அனைத்தும் கதையில் ஒரு பகுதியாக இருக்கும் ஆனால், இது முழுக்கதையும் இது தான்.

காவலர் கனவில் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், அரசின் தாமதம், பிடிக்கவில்லையென்றாலும் இப்பணி இல்லையென்றால் என்ன செய்வது என்ற நெருக்கடியில் இருப்பவர்கள் என்று பலரின் கதையுள்ளது.

இயக்குநர் கம்யூனிச கருத்துகளில் ஈடுபாடுள்ளவர் என்பது காட்சிகளிலும் வசனங்களிலும் தெரிகிறது ஆனால், அதைத் திணிக்காமல் கொடுத்துள்ளதே அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

எந்த ஒரு இயக்குநருக்கும் ஒரு சித்தாந்தத்தின் மீது ஈடுபாடு இருக்கும். எனவே, அதைக்காட்சிப்படுத்துவதில் தவறில்லை ஆனால், மற்றவர் முகம் சுளிக்கும் அளவுக்கு மிகையாகக் காட்டக் கூடாது.

அதில் தான் இயக்குநர் வெற்றிப் பெற்றுள்ளார்.

லால் மற்றும் மற்ற உயரதிகாரிகளை ஆதிக்கச் சாதியினராகவும், பயிற்சி பெறும் விக்ரம் பிரபுவை ஒடுக்கப்பட்ட நபராகவும் காட்டி சாதி பிரச்சனையை வைத்து எடுக்கப்பட முழுச் சாத்தியக்கூறுகள் உள்ளது.

அதாவது அப்படியும் எடுக்க 100% வாய்ப்புள்ளது ஆனால், இயக்குநர் அந்த வழியைத் தேர்ந்தெடுக்காமல் பொதுவான கதாப்பாத்திரங்களாக அனைவருக்கும் பொதுவான கதையாக வைத்துள்ளார்.

இதனாலையே அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

ஒளிப்பதிவு பின்னணி இசை

ஒரே இடத்தைக் காட்டிக்கொண்டுள்ளார்கள் ஆனால், சலிப்பே ஏற்படவில்லை. அங்குள்ள இடத்தையே வெவ்வேறு மனநிலையில் காட்சியாகப் பார்க்கும் போது ஒரே மாதிரி தோன்றுவதில்லை.

இதற்கு இயக்குநரின் பங்கும் ஒளிப்பதிவாளருடன் சேர்ந்து இருக்கும் என்றே கருதுகிறேன்.

March-Past செய்யும் போது எடுக்கப்பட்ட காட்சிகள் Goosebumps தருகிறது. இதனுடன் பின்னணி இசையும் இணைந்து தாறுமாறாக உள்ளது.

இறுதிக்காட்சியை இரு முறை பார்த்தேன், அவ்வளவு சிறப்பாக இருந்தது. இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மூவரும் ஒருங்கிணைந்து தூள் கிளப்பிய இடம்.

கலை இயக்குனரின் பங்கும் ஒளிப்பதிவுக்கு மிக உதவியுள்ளது. எதுவுமே செட்டிங்ஸ் என்றே தெரியவில்லை. எங்கே எடுத்து இருப்பார்கள்?!

யார் பார்க்கலாம்?

அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

தமிழில் இது போன்ற படங்களை, கதையம்சம் உள்ள குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங்களை வரவேற்கிறேன்.

மனநிறைவைக் கொடுத்த படம். விக்ரம் பிரபு படங்களில் எனக்குப் பிடித்தவை கும்கி, அரிமா நம்பி தற்போது டாணாக்காரன் 🙂 .

Disney+ Hotstar ல் காணலாம்.

Directed by Tamizh
Written by Tamizh
Produced by SR Prakash Babu, SR Prabhu, P Gopinath, Thanga Prabaharan R
Starring Vikram Prabhu, Anjali S Nair, Lal
Cinematography Madhesh Manickam
Edited by Philomin Raj
Music by Ghibran
Distributed by Disney+ Hotstar
Release date 8 April 2022
Country India
Language Tamil

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

விலங்கு | தமிழ் வெப் சீரிஸ் | கொலை செய்தது யார்?

Nayattu (2021 மலையாளம்) | பரபர த்ரில்லர்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. அருமையான விமர்சனம் கிரி.

    >>March-Past செய்யும் போது எடுக்கப்பட்ட காட்சிகள் Goosebumps தருகிறது. இதனுடன் பின்னணி இசையும் இணைந்து தாறுமாறாக உள்ளது.

    உண்மை.

    >>இறுதிக்காட்சியை இரு முறை பார்த்தேன், அவ்வளவு சிறப்பாக இருந்தது.

    நீங்கள் தான் உண்மையான ரசிகன்…

    MS பாஸ்கர், போஸ் வெங்கட் சரியான தேர்வு.

    உங்களால் அரிமா நம்பி திரும்ப பார்க்கப் போகிறேன் 🙂

    உங்கள் திரை விமர்சனத்துக்கு மிகப் பெரிய ரசிகன் நான். நீர்ப் பறவை ஒளிப்பதிவு குறித்து நீங்கள் சிலாகித்துக் கூறியது இன்னும் என் நினைவில் உள்ளது.

  2. கிரி, டாணாக்காரன் ட்ரைலர் ரொம்ப நாளைக்கு முன்பு பார்த்தேன்.. அடுத்த நொடியே நினைத்தேன் நிச்சயம் படம் நன்றாக இருக்கும் என்று.. இதே same feeling கைதி ட்ரைலர் முதற்முறை பார்க்கும் போது ஏற்பட்டது.. MS பாஸ்கரின் தீவிர விசிறி நான்.. தரமான நடிகர்.. இந்த பாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறி விடுவார்.. இவர் போலீசாக நடித்த 8 தோட்டாக்கள் படம் கண்ணுக்குள்ளே நிற்கிறது..

    விக்ரம் பிரபுவை கும்கி படத்தில் அந்த அளவிற்கு ரசித்தேன்.. அதற்கு பிறகு பெரிதாக இவரது படங்கள் என்னை கவரவில்லை.. ஜீவாவும் இது போல தான்.. மிகவும் பிடித்த நடிகர்.. ஆனால் தற்போது இவரது படங்களில் தொய்வு உள்ளது.. துறையில் இத்தனை ஆண்டுகள் அனுபவங்கள் இருந்தும் எங்கு சறுக்குகிறார்கள் என்று புரியவில்லை.. சரியான கதைக்களத்தை தேர்ந்தெடுப்பதில் தவறுகின்றனர் என நினைக்கிறேன்..

    கதைக்களம் தேர்வு என்பது பெரிய நடிகர்களுக்கே மிகவும் சவாலாக இருக்கிறது..டாணாக்காரன் படம் வெற்றி பெற்றதில் உண்மையில் மகிழ்ச்சியே!!! இதை மையப்படுத்தி இன்னும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை விக்ரம் பிரபு தேர்த்தெடுத்து நடிப்பார் என நம்புகிறேன்.. புதிய இயக்குனர்களுக்கும் இந்த வெற்றி ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என நம்புகிறேன்..

    படத்தை பார்க்கவில்லை.. பார்த்து விட்டு பின்பு கருத்தை பகிர்கிறேன்.. இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள்… இந்த பதிவின் மூலம் ஒரு நேர்த்தியான / தரமான படத்தை கொடுத்துள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @ஸ்ரீனிவாசன்

    நன்றி 🙂 .

    அரிமாநம்பி சுவாரசியமான & வேகமான திரைக்கதை.

    நீங்கள் கூறிய பிறகு நீர்ப்பறவை திரும்பப் பார்த்தேன்.. இன்னமும் வியப்பாகவே உள்ளது. இதில் ஒரே குறை கடல் வண்ணம் மாறிக்கொண்டே இருக்கும். அது மட்டுமே.

    @யாசின்

    ஜீவா சிறந்த நடிகர் அவருக்கு ஏற்றக் கதைகள் அமையவில்லை. சிவா மனசுல சக்தி, கோ ஆகிய படங்கள் எனக்கு ரொம்பப் பிடித்தவை.

    என்றென்றும் புன்னகை படமும் பிடிக்கும்.

    டாணாக்காரன் பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here