தர்ம அடி வாங்கிய ஹாஸ்டல் அனுபவம் (பாகம் 1)

15
தர்ம அடி வாங்கிய ஹாஸ்டல்

னக்குச் சின்ன வயதில் இருந்தே ஸ்கூல் ஹாஸ்டல் பசங்கள பார்த்து நானும் ஹாஸ்டல்ல இருக்கணும்னு ஆசை வந்தது. Image Credit

கரட்டு மடம்

அப்பா கூடச் சண்டை போட்டுப் போயே ஆகனும்னு அடம் பிடித்து என் உறவினர் ஒருவரின் ஆலோசனைப்படி உடுமலை பேட்டை பக்கத்துல இருக்கிற “கரட்டு மடம்” என்கிற ஊர்ல “காந்தி கலா நிலையம்” என்கிற பள்ளியில் என்னை ஹாஸ்டல்ல சேர்த்தாங்க.

நானும் குஷியா நீண்ட நாள் ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சியாக சேர்ந்தேன் பின்பு கிடைக்கப் போகும் ஆப்பு பற்றித் தெரியாமல்.

அங்கே சுடு தண்ணி எல்லாம் கிடைக்காது னு சொன்னாங்க, அதனால வீட்டுலையே தினமும் பச்சை தண்ணீரில் குளித்து என்னைத் தயார் செய்து கொண்டேன்.

என்னை அம்மாவும் அப்பாவும் ஹாஸ்டல் ல விட்டுட்டு நல்லா படிக்கணும், யாரு கூடவும் சண்டை போடக் கூடாது, சமத்தா இருக்கணும், குட் பாய் னு பேரு எடுக்கணும்னு ஏகப்பட்ட அறிவுரை சொன்னாங்க, அது எதுவும் மண்டையிலே எனக்கு ஏறல.

ஏன்னா ஹாஸ்டல் ல இருக்கப் போற த்ரில் ஐ நினைத்துக் கற்பனை பண்ணிட்டு இருந்தேன்.

அம்மா

அவ்வளோ நேரம் மகிழ்ச்சியாக இருந்த நான், அம்மாவும் அப்பாவும் கிளம்பறேன்னு சொன்னதும் ஒரு மாதிரி ஆகி விட்டது.

இவ்வளோ நாளா அம்மாவைப் பிரிந்து இருந்ததே இல்லை, திடீர்னு இப்படி ஆனதும் ஒரு நிமிடம் அழுகையே வந்து விட்டது.

அது வரை இருந்த மகிழ்ச்சி முழுவதும் போய் ஒரு மாதிரி ஆகி விட்டது, அம்மாவும் சோகமாகி விட்டார்கள்.

போகும் போது செலவுக்கு 10 ருபாய் (அப்ப இது 100 ரூபாய்க்குச் சமம்) வைத்துக்கன்னு கையில் அப்பாவுக்குத் தெரியாமல் திணித்து விட்டுச் சென்றார்கள்.

ஹாஸ்டல் கேட்டைத் தாண்டி நான் போகக் கூடாது! என்பதால் அங்கேயே டா டா காட்டி விட்டுஅறைக்கு வந்தேன்.

நான் அப்ப என்ன படித்தேன்னு சொல்லவே இல்லையே?

இது நடக்கும் போது 7 வது படிக்கிறேன். நான் வேறு கொஞ்சம் கூச்ச சுபாவம் அதனால் அங்கே இருக்கும் பசங்களோட எளிதில் ஒத்து போக முடியவில்லை.

திருதிருன்னு முழிச்சிட்டு இருந்தேன்.

நான் 6 வது ல சேராம 7 வது ல சேர்ந்ததுல எனக்கு என்னோட செட் பசங்க வேற இல்ல, அப்புறம் எப்படியோ என் வகுப்புப் பசங்களைப் பிடித்து ஒரு வழியாகச் செட் ஆகி விட்டேன்.

எனக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் அதிகம் எனவே எனக்கு நண்பர்கள் வட்டம் அதிகம்.

முதல் நாள்

சரி அதுக்கு முன்னால என்னோட முதல் நாள் எப்படிப் போச்சுன்னு சொல்றேன். நான் ஹாஸ்டல்னுதும் சினிமால வர மாதிரி ரூம் இருக்கும், பெட் இருக்கும்னு இருந்தா!! இங்க பார்த்தா! பாயக் கொடுத்துட்டாங்க.

என்னடா இது! ஆரம்பமே அமர்க்களமா இருக்குன்னு நொந்துட்டு சரின்னு பசங்களோட படுத்துட்டேன். வேற வழி!

ஏன்னா நான் ஹாஸ்டலுக்குச் சாயங்காலம் தான் வந்தேன். அதுனால எல்லா வேலைகளையும் முடித்து வர இரவாகி விட்டது.

இரவு முழுவதும் அம்மா நினைவாகவே இருந்தது. அப்படியே அழுதுட்டே தூங்கிட்டேன். நல்லா தூங்கிட்டு இருந்தேன் தட தட ன்னு தட்டுனாங்க.

அலறி அடிச்சுட்டு எழுந்தேன்.. என்னனு பசங்க கிட்ட கேட்டா வருகை பதிவு எடுக்கப் போகணும் னு சொல்றாங்க.

டேய் மணி இன்னும் 5 கூட ஆகல இப்ப போய் என்னடா எடுக்கறாங்கன்னு கேட்டேன்.

அது வேற ஒண்ணும் இல்ல நைட் பசங்க, வார்டன் அடி தாங்காம ஓடிப் போய்டுவாங்க அதுனால விடியற்காலையிலேயே செக் பண்ணுவாங்கன்னு சொன்னாங்க.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.. எனக்கு வயிற்றை கலக்க ஆரம்பித்து விட்டது. ஓடிப்  போற அளவுக்கு அடின்னா..! அப்ப எந்த மாதிரி அடி இருக்கும்னு நினைத்தவுடன் எனக்குப் பேதி ஆகாத குறை தான்.

அப்பத் தான் நினைத்தேன்..ஐயையோ ஆர்வக்கோளாருல அவசரப்பட்டுடோம் போல இருக்கேன்னு!

டேய்! என்னடா யோசித்துட்டு இருக்கே டைம் ஆச்சு லேட் ஆனா வார்டன் அடிப்பாருடான்னு இன்னும் வயித்துல புளியை கரைத்தானுக.

103

ஒரு 350 பேரு இருப்பாங்க உட்காந்துட்டு, நினைத்துப் பாருங்க எப்படி இருக்கும்னு.

சரி நம்மள மாதிரி ஏமாந்தவங்க போலன்னு நினைத்துட்டு என்னோட நண்பன் பக்கத்துல [அதுக்குள்ள ஒருத்தன் செட் ஆகிட்டான் 🙂 ] உட்காந்துட்டேன்.

அங்கே என்னோட எண் 103 (அங்கே பெயர் கிடையாது அதுக்குப் பதிலா எல்லோருக்கும் எண் தான்), கைதி எண் மாதிரி கொடுத்தாங்க.

எனக்கு மெதுவா புரிய ஆரம்பித்து விட்டது.. டேய்! கிரி நீ வசமா மாட்டிடேடான்னு.

வார்டனைப் பார்த்ததும் எனக்கு உடம்பு எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது.. செம சைஸ் ல இருந்தாரு கையில வேற பெரிய பிரம்பு.

பசங்க வேற.. டேய்! அது எண்ணைல ஊற வச்சதுடான்னு சொன்னதும் எனக்கு மயக்கம் வராத குறை தான்.

அவர் கண்ணை உருட்டி உருட்டிப் பார்த்தும் அந்தக் குளிரிலும் எனக்கு வியர்த்து விட்டது (அந்தப் பகுதி சாதாரணமாகவே பயங்கரமாகக் குளிரும் அருகில் மலை பிரதேசமாக இருப்பதால்).

ம்ம்ம் எல்லோரும் வரிசையா நம்பர் சொல்லுங்கன்னு சொன்னாரு

உடனே பசங்க 1,2,3,4,5…… னு வரிசையா சொல்லிட்டு வந்தாங்க என்னோட நம்பர் 103 கிட்டே வந்ததும் எனக்கு இதயத் துடிப்பு அதிகமாகி கொண்டே வந்தது…

இதன் தொடர்ச்சியை நான் அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

தர்ம அடி வாங்கிய என்னுடைய ஹாஸ்டல் அனுபவம் (பாகம் 2)

தர்ம அடி வாங்கிய என்னுடைய ஹாஸ்டல் அனுபவம் (பாகம் 3)

தர்ம அடி வாங்கிய என்னுடைய ஹாஸ்டல் அனுபவம் (இறுதி பாகம்)

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

15 COMMENTS

  1. //கொஞ்சம் பத்தி பத்தியா பிரிச்சு போடுங்க .. படிக்க கஷ்டமா இருக்கு :)//

    பொன்வண்டு உங்க கருத்துக்கு நன்றி! நான் இடம் விட்டு தான் எழுதினேன், ஆனாலும் அந்த மாதிரி வர மாட்டேங்குது..கொஞ்சம் ஐடியா கொடுங்க ப்ளீஸ்…..

  2. // aruna said…
    நல்லா கல கலன்னு போகுதுங்க !இதில போய் தொடரும் போட்டுட்டீங்களே!!
    அன்புடன் அருணா//

    உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க அருணா! உங்க மாதிரி ஒரு சிலர் சொல்லும் போது தான் இன்னும் நல்லா எழுதணும்னு தோணுது. ஒரே இடுகையில் முழுவதும் கூறினால் ரொம்ப பெரிதாக இருக்கும் என்பதால் தான் பாகமாக பிரித்து விட்டேன். இன்னும் இதுல நிறைய சிரிக்க கூடிய விஷயங்கள் நிறைய இருக்கு பார்த்துட்டு (படித்துட்டு)சொல்லுங்க :))).

  3. நல்லா கல கலன்னு போகுதுங்க !இதில போய் தொடரும் போட்டுட்டீங்களே!!
    அன்புடன் அருணா

  4. சிவா! உங்க உதவிக்கு நன்றி..ஆனால் நீங்க சொன்ன மாதிரி தான் முயற்சி பண்ணினேன் ஆனாலும் சரியா வரல? சத்யமா ஏன்னு தெரியல..அப்புறம் புல்லட் எல்லாம் வச்சு டெலிட் பண்ணி அப்புறம் பாண்ட் மாத்தி எதையோ நொண்டி எப்படியோ ஒழுங்கா வந்துடுச்சு.. கம்போஸ் மோட் ல ஒரு மாதிரி வருது ப்ரீவீயு மோட் ல ஒரு மாதிரி வருது..உங்களோட ப்ரீவீயு ஐடியா நல்ல உதவுச்சு கடைசி முறையா நொந்து போய் பண்ணும் போது சரியா வந்துச்சு! ஆனால் தொடர்ந்து இது உதவி செய்தால் ரொம்ப சந்தோசம். உங்களோட உதவிக்கு ரொம்ப நன்றி.

  5. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

    ப்ளாகர்ல புது போஸ்ட் க்ரியேட் பண்றீங்கல்ல ‘கம்போஸ் மோட்’ல பாரா நடுவில ‘எண்டர்’ தட்டுங்க இடைவெளி வரும்.

    பப்ளிஷ் பண்றதுக்கு முன்னாடி ப்ரிவியூ பாருங்க

  6. //வாசுகி said…
    முன்பே வாசித்துவிட்டேன். நகைச்சுவையாக இருக்கு//

    அப்படியா!! நன்றி

    //ரொம்ப busyயோ?//

    அதெல்லாம் எதுவுமில்லைங்க..நான் பதிவு எழுத வந்த போது எழுதியது, பலர் படித்து இருக்க வாய்ப்பில்லை, நல்லா காமெடியா இருக்கும் அதனாலே திரும்ப பதிவிட்டேன்.

  7. // விஜய் ஆனந்த் said…
    :-)))…//

    புன்னகை மன்னன் விஜய் ஆனந்த் வருகைக்கு நன்றி 🙂

    =======================================================================

    //வடுவூர் குமார் said…
    ஹூம்! எனக்கும் ஹாஸ்டல் போகனும் என்ற ஆசை இருந்த்து ஆனால் நிதிநிலமை சரியில்லாததால் போக முடியவில்லை.போயிருந்தால் கஞ்சா/சிகரெட்க்கு நிச்சயம் தாவியிருப்பேன்.//

    அப்படி எல்லாம் இல்லைங்க குமார். நீங்கள் கூறுவது போல வாய்ப்புகள் அதிகம் தான். ஆனால் நாம் கட்டுப்பாடாக இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.

  8. ஹூம்! எனக்கும் ஹாஸ்டல் போகனும் என்ற ஆசை இருந்த்து ஆனால் நிதிநிலமை சரியில்லாததால் போக முடியவில்லை.போயிருந்தால் கஞ்சா/சிகரெட்க்கு நிச்சயம் தாவியிருப்பேன்.
    உங்களுக்கு 7 வது என்பதால் அந்த பிரச்சனை அவ்வளவாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.

  9. ரொம்ப இயல்பான நடையில் எழுதி இருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்

  10. //தமிழ்நெஞ்சம் said…
    ரொம்ப இயல்பான நடையில் எழுதி இருக்கிறீர்கள்//

    நன்றி தமிழ்நெஞ்சம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here