சிறுமுகை தென் திருப்பதி | கடுப்பாக்கிய ஊழியர்கள்

13
சிறுமுகை தென் திருப்பதி Perumal

சிறுமுகை தென் திருப்பதி கோவில் கண்ணபிரான் தனியார் மில் நிறுவனத்தால் நடத்தப்பட்டு அனைத்தும் இவர்களால் பராமரிக்கப்படுகிறது. Image Credit

தென் திருப்பதி

மில் வளாகத்தில் கோவில் உள்ளது. எனவே முன்புறம் நின்று பார்த்தால் இது, மில் போலத்தான் இருக்கும். கோவில் தெரியாது.

உள்ளே சென்று பார்த்தால் தான் கோவில் இருப்பது தெரியும், இல்லை என்றால் வெளியே தூரத்தில் இருந்து பார்த்தால், இதன் கோபுரம் தெரியும்.

வெளியே கோவில் குறித்து எந்த அறிவிப்பும் இருக்காது. ஏன் என்று தெரியவில்லை!

கோவில் சரியாக மதியம் 1 மணிக்கு மூடி விடுவார்கள், பின் 4 மணிக்குத் திறப்பார்கள். உள்ளே செல் போன், கேமரா எடுத்துச் செல்ல முடியாது. போகும் போதே அனைத்தையும் காவலர் வசம் கொடுத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.

சரியான வழி தெரியாததால் அனாவசியமாகச் சுற்றி 10 நிமிடம் வீண் ஆனதால் 1.02 க்கு சென்றோம். எங்களுக்கு முன்னால் இருவர் 1.01 சென்றார்கள்.

எங்கள் நால்வரையும் நேரம் கடந்து விட்டதாக உள்ளே அனுமதிக்கவில்லை.

எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை, இரண்டு நிமிடம் தானே என்று கேட்டுப்பார்த்தோம், “முடியாது” என்று தீர்மானமாகக் கூறி விட்டார்கள்.

அம்மாவுடன்

இதன் பிறகு ஒரு நாள் அம்மாவை, கோவில்களுக்கு வேறு ஒரு தனிப்பட்ட காரணங்களுக்காக அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது.

அம்மா தென் திருப்பதி போகலாம் என்றார்கள். அவர்களும் இது வரை சென்றதில்லை. சரி நானும், அன்று தான் தாமதமாகி விட்டது, இந்த முறை செல்லலாம் என்று நினைத்தேன்.

இந்த முறை நாங்கள் செல்லும் போது மாலை 3.50 மணி. அதே போல காரில் உள்ளே நுழைந்ததும் காவலாளி பரபரத்தார். அந்த நேரத்தில் செம மழை.

அம்மா இறங்குவதற்குள் “சீக்கிரம் எடுங்க” என்று அவசரப்படுத்தினார்.

உள்ளே வந்ததும் மொபைல் எடுங்க, கேமரா எடுங்க என்று கட்டளை பிறப்பித்தார்கள். ஏன் இப்படி ஆர்பாட்டம் செய்கிறார்கள் என்று எரிச்சலாக இருந்தது.

இவர்கள் செய்த அலப்பறையைப் பார்த்தால் எனக்கு எதோ முதல்வர் அறைக்குள் நுழைவதைப் போல இருந்தது.

மழை நன்றாகப் பெய்ததால், மேலும் நனையாமல் உள்ளே சென்று விட்டோம். ஹாலில் உள்ளே சென்ற பிறகு மொத்தமே அதிக பட்சம் 50 பேர் இருப்பார்கள்.

அப்படி நில்லு இப்படி நில்லு என்று ஒருவர் அதிகாரத்துடன் கூறிக் கொண்டு இருந்தார். எனக்குப் பொறுமை இழக்கத் தொடங்கியது.

மொபைல் இருக்கா?

அங்கேயும் ஒருவர் வந்து “யாரும் மொபைல் வைத்து இருக்கிறீர்களா? வைத்து இருந்தால் இங்கேயே கொடுத்து விடுங்கள்” என்றார். பின் உள்ளே செல்லத் துவங்கினோம். எனக்கு எதோ சிங்க குகைக்குள் செல்வதைப் போல இருந்தது.

வேகமாக வாங்க, அப்படிப் போங்க இப்படிப் போங்க” என வழியெங்கும் ஏகப்பட்ட அறிவுரைகள். அம்மாவிடம் “மொபைல் வைத்து இருக்கிறீர்களா,  இருந்தால் கொடுத்து விடுங்கள் இல்லை என்றால் இப்படியே அனுப்பி விடுவோம்” என்றார்.

எத்தனை முறை இதைக் கேட்பார்கள் என்று, செம கடுப்பாகிட்டேன்.

கோவிலுக்கு வந்து சண்டை போடக் கூடாது என்ற நாகரீகம் காரணமாக எதுவும் பேசாமல் அமைதியாகச் சென்றேன்.

இராணுவக் கட்டுப்பாடுகள்

மேலே ஏறிச் சென்றதும் இங்கே கீழே விழுந்து வணங்கக் கூடாது, இங்கே வணங்க வேண்டும் என்று எதோ இராணுவக் கட்டுப்பாடுகள் மாதிரி கூறப்பட்டு இருந்தது.

முந்தின நாள் கோகுல அஷ்டமி என்பதால் குழந்தைகள் பலர் கண்ணன் வேடமிட்டு வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள் போல, இன்றும் வந்து இருந்தார்கள்.

எங்கள் வரிசையில் 10 குழந்தைகள் நின்று கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் தவறி இங்கே வந்ததால், வேறு பக்கம் செல்ல முயற்சிக்கும் போது, காவலாளி “எங்கேயும் நகரக் கூடாது” என்று கூறி விட்டார்.

கூட்டமே இல்லை எதற்கு இந்த ஆர்பாட்டம் என்பது புரியாமல் நின்று கொண்டு இருந்தேன். காவலாளி வேறு பக்கம் திரும்பியதும் அனைத்து குழந்தைகளும் ஒரே ஓட்டமாக ஓடி விட்டனர்.

கடவுளை வணங்கும் எண்ணம் சுத்தமாகப் போய் விட்டது.

கடவுளை வணங்கும் இடம் மனதுக்கு அமைதியாக இருக்க வேண்டும், அரசியல் / அரசு அலுவலகம் போல ஆர்ப்பாட்டத்தோடு அல்ல.

கூட்டமே இல்லாத போதே இப்படி ஆட்டம் போடுகிறார்கள், ஒருவேளை கூட்டம் அதிகம் இருந்தால் என்னென்ன செய்வார்கள் என்று யோசித்தேன்.

வந்ததற்கு, கடனே என்று கும்பிட்டு விட்டு, வெளியே வந்தால் போதும் என்று, என் அம்மாவிற்காக நின்று கொண்டு இருந்தேன்.

இதன் பிறகு பிரசாதம் வாங்க வரிசை, பிரசாதம் வாங்கவே பிடிக்கவில்லை. இந்த இடத்தை விட்டுக் கிளம்பினால் போதும் என்று ஆகி விட்டது.

ஆலோசனைப் புத்தகம்

வெளியே வந்த பிறகு அப்பாடா! என்று இருந்தது. மழை இன்னும் பெய்து கொண்டு இருந்தது. வெளியே ஒரு இடத்தில், ஆலோசனைப் புத்தகம் என்று இருந்தது,

பக்தர்களைப் பக்தர்களாக நடத்துங்கள், கைதிகளைப் போல அல்ல” என்று எழுதலாம் என்று நினைத்தேன், மழை பெய்து கொண்டு இருந்ததால் நிற்க முடியாமல் கிளம்பி விட்டோம். இனி மறந்து கூட இந்தக் கோவில் பக்கம் வரவே மாட்டேன்.

ஊர்ல இவங்க தான் கோவில் வைத்து இருக்காங்களா! வேறு எங்கும் கோவிலே இல்லையா!!

கோவிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் கடவுளை வணங்க வருவார்களா, இல்லை இவர்கள் கட்டுப்பாடுகளை ரசிக்க வருவார்களா!

கட்டுப்பாடுகள் இருக்க வேண்டியது அவசியம் தான், மறுக்கவில்லை ஆனால், அவை முகம் சுழிக்க வைக்கும்படி இருக்கக் கூடாது.

எங்க ஊர் கரங்கரடு முருகன் கோவில் சென்றால் நூறு கோவில்கள் சென்று வந்த மன அமைதி, நிம்மதி கிடைக்கும்.

தொடர்புடைய கட்டுரை

அழகன் முருகன்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

 1. அடுத்த பதிவிற்கு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றேன்.

 2. மனதிற்குள் இருப்பதை வெளியே போய் தேடும் போது இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தே ஆக வேண்டும். பக்கத்தில் நரசிம்மர் கோவில் இருக்கிறதே,

 3. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ஜகமணி திருநீர் கொடுக்க மாட்டார்களா! ஆனால் நான் பெருமாள் கோவிலில் குங்குமம் வாங்கி இருக்கிறேன் மற்றும் தலையில் வைப்பார்களே (அதன் பெயர் மறந்து விட்டேன்) அதுவும் இல்லை.

  @ஜோதிஜி அமைதி மனதினுள் இருக்கும் என்பது உண்மை தான். நான் நிம்மதி தேடிப்போகவில்லை, அது என் அம்மாவிற்காக. என் அம்மாவிற்கு கோவில் சென்றால் நிம்மதி அடைவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அனைவரும் மனதிலே நிம்மதி உள்ளது என்று இருப்பவர்கள் அல்ல. நான் கருங்கரடு கோவில் விரும்பிச் செல்வேன் அதற்கு காரணம் அங்கு உள்ள அமைதி. சத்தம் இல்லாத, மரங்கள் நிறைந்த அந்த இடம் எனக்கு எதோ ஒரு திருப்தி தருகிறது. அது என்னிடம் இல்லை.

 4. கோவை, அன்னூரில் பணி புரிந்த போது என் நண்பன் சக்தியுடன் இந்த கோவிலுக்கு சென்றேன்.. அது ஒரு விடுமுறை நாள் என நினைக்கிறன்.. நாங்களும் வழிக்கு தடுமாறி தான் சென்றோம்.. .

 5. வித்யாசமான, எல்லாரையும் சிந்திக்க வைத்த பதிவு.
  almost உங்க எல்லா பதிவும் எனக்கு முக்கியமானது தான் கிரி இருந்தாலும் செமையா எந்திரன் level ல expect பண்ணுறேன் அடுத்த பதிவ 🙂

  -அருண்

 6. @யாசின் நீங்க கோவிலுக்கு சென்றது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் பக்கம் வரும் வாய்ப்புக்கிடைத்தால் கருங்கரடு முருகன் கோவில் ஒரு முறை சென்று வாருங்கள்.

  @அருண் 🙂

 7. இது கூட பொறுத்துக்கலாம்…….. நம்ம தமிழ்நாட்டுல சில கோவில்கள்ல நுளைவுசீட்டுன்னு பேருல பிச்சை எடுக்குறாங்க அது தான் ரொம்ப கேவலமா இருக்கு….

 8. நான் கோவையில் பணி புரிந்த போது மருதமலை கோவில், காரமடை கோவில், பண்ணாரியம்மன் கோவில் மற்றும் சில கோவில்களுக்கு நான் என் நண்பன் சக்தியுடன் சென்றுள்ளேன். பக்தி, நம்பிக்கை, கடவுள் என்ற விசியம் தவிர்த்து ஆத்ம திருப்தி என்ற ஒன்று விரும்பி என் நண்பனுடன் சென்றுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் என் நண்பன் சக்தியுடன் நான் கருங்கரடு முருகன் கோவிலுக்கு செல்ல முயற்சிக்கிறேன். சக்திக்கு இது போல உள்ள பழமையான கோவில்கள் ரொம்ப பிடிக்கும்..

 9. நானும் ரெண்டு தடவ போயிருக்கேன், ஆனா எனக்கு இந்த அனுபவம் இல்லை.

 10. இந்த கோவில் நூறு சதவீதம் தனியாருக்கு சொந்தமான கோவில். அதனால அப்படி தான் இருக்கும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here