மின்னணு பரிவர்த்தனையால் சரியும் வங்கிப்பணிகள்!

3
மின்னணு பரிவர்த்தனையால் சரியும் வங்கிப்பணிகள் Online Banking

தொழில்நுட்பத் துறை, ஆட்டோமொபைல் துறைகளின் “ஆட்டோமேஷன்” பாதிப்பைப் தொடர்ந்து, மின்னணு பரிவர்த்தனையால் சரியும் வங்கிப்பணிகள் எப்படி என்று பாப்போம். Image Credit

பின்வருவன என் அனுபவங்களில், படித்தவைகளில் இருந்து கூறுவது…

மின்னணு பரிவர்த்தனையால் அரசும் மக்களும் பயன்பெறுவார்கள் ஆனால், வங்கிப் பணியாளர்களை எதிர்காலத்தில் கடுமையாகப் பாதிக்கும்.

மின்னணு பரிவர்த்தனையில் அதிகத் தீவிரம் காட்டி வருவது HDFC வங்கியாகும். இதைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் தீவிரமாகக் களம் இறங்கியுள்ளன.

காரணம், புதியதாக ஒன்றுமில்லை செலவைக் குறைக்கும் நடவடிக்கை மட்டுமே!

மின்னணு பரிவர்த்தனை

சமீபத்தில் வங்கி ஊழியரிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் கூறியதாவது,

50,000 க்கு மேல் பணம் செலுத்த வேண்டும் என்றால், PAN / GSTN கணக்கு விவரங்களைத் தர வேண்டும் என்ற உத்தரவுக்குப் பிறகு நடப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் வருகை பெருமளவு குறைந்து விட்டது.

முன்பெல்லாம் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கொண்டு வந்து கட்டுவார்கள், தற்போது எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது” என்றார்.

அவர்கள் எப்படிப் பணத்தைக் கையாளுகிறார்கள்?” என்று கேட்ட போது “தனக்கு அந்த அளவுக்குத் தெரியாது” என்று கூறி விட்டார்.

மின்னனு பரிவர்த்தனை அதிகரித்த (பணமதிப்பிழப்பு / GST) பிறகு, வங்கிகளில் நடப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் கூட்டம் பெருமளவு குறைந்து விட்டது.

இது எங்களுடைய முதன்மை வங்கி என்பதால், கூட்டம் இருக்கிறது இருப்பினும் முன்பு போல இல்லை.

இதே எங்களுடைய மற்ற கிளைகளில் கூட்டம் மிகக் குறைந்து விட்டது” என்றார்

இதனால் உங்களுடைய பணிக்கு ஆபத்து வருமே?!” என்று கேட்ட போது “இதை அனைவருமே உணர்ந்து இருக்கிறோம், அதே போல் வரும் மாதங்களில் மாற்றங்கள் இருக்கும் என்று நம்புகிறோம்,  பார்ப்போம்!” என்றார் விரக்தியாக.

எந்த மின்னணு சேவைகள் வங்கிப்பணிகளைப் பாதிக்கிறது?

Mobile Wallet

வங்கிப்பணிகளுக்குப் பெரிய இம்சையாக வந்துள்ளது, தவிர்க்கவே முடியாத திறன்பேசிகளின் அசுரத்தனமான வளர்ச்சி,  பயன்பாடு.

தற்போது Mobile Wallet க்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பை உணர்ந்து அனைத்து நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்தி வருகின்றன.

தனியார் நிறுவனங்கள் அல்லாது வங்கிகளும் தற்போது Mobile Wallet சேவையில் தீவிரமாகக் களம் இறங்கியுள்ளன.

மக்கள் இந்த வசதி மூலம் உடனடியாகத் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதால், சலுகைகளைப் பெறுவதால் வங்கி வழியாகச் செல்வதை விட இதையே விரும்புகிறார்கள்.

Paytm, Mobikwik, PhonePe

Paytm, Mobikwik, PhonePe போன்ற முன்னணி நிறுவனங்கள் சலுகைகள், தள்ளுபடிகள் மூலம் பெருமளவு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. அதோடு இதன் மூலம் பொருட்களை வாங்கினால் சலுகைகளை அளிக்கிறது.

Flipkart நிறுவனத்தின் PhonePe சேவை, அமேசான் நிறுவனத்தின் Amazon Pay போன்றவை பண்டிகை கால விற்பனையில் இவ்வகைப் பணம் செலுத்தும் முறைக்கு 20% தள்ளுபடி அளித்ததால் பெருமளவு வர்த்தகம் இந்த வழியே நடந்தது.

2017 அக்டோபர் பண்டிகை மாதத்தில் அதிகபட்ச UPI பரிவர்த்தனையை எட்டியது.

கடனட்டை / பற்று அட்டை (Credit Card / Debit Card)

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கடனட்டை பற்று அட்டையில் பரிவர்த்தனை அசுரத்தனமாக வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இவ்வகை அட்டைகளைப் பயன்படுத்திச் செலவுச் செய்பவர்கள் அதிகரித்துள்ளார்கள்.

இப்பரிவர்த்தனைகள் அனைத்துமே கள்ள கணக்கில் காட்ட முடியாத வரி செலுத்த வேண்டிய கணக்கில் வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரைக்குச் சம்பந்தமில்லா தகவல்

இவ்வாறு அதிகரித்த கடனட்டை பயன்பாட்டால், வாரக்கடனும் அதிகரித்து இருப்பதாகச் செய்திகள் கூறியுள்ளன.

காரணம், இதைப் பயன்படுத்தத் தெரியாமல், கண்டபடி செலவு செய்து விட்டுத் திருப்பிக் கட்ட முடியாமல் பலர் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.

UPI

மின்னணு பரிவர்த்தனையில் புரட்டிப்போட்டது என்றால், UPI க்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு.

கடந்த வருடம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட UPI மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பல நிறுவனங்களை இப்பக்கம் திருப்பி இருக்கிறது.

BHIM செயலி தான் துவக்கம், இன்று வரை இதன் எளிமை காரணமாக அரசு செயலிகளில் பெரும் பாராட்டைப் பெற்ற செயலியாக உள்ளது.

இதன் பிறகு வெளிவந்த Flipkart நிறுவனத்தின் PhonePe அதிகளவு பயனாளர்களைக் கவர்ந்து, பெரும் லாபம் சம்பாதித்தது.

இதைக் கண்ட கூகுள் தன்னுடைய Google Pay செயலியை அறிமுகப்படுத்திக் குறைந்த காலத்தில் பெரிய வரவேற்பை பெற்றது.

Google Pay செயலியை விட PhonePe செயலி சிறப்பாக வேலை செய்கிறது.

கூகுள் ரசிகன் என்ற ஒரே காரணத்துக்காக Tez செயலியை பயன்படுத்தி வருகிறேன், அதோடு இது தரும் Rewards சலுகைகளுக்காகவும். தற்போது பிரச்சனைகள் குறைந்துள்ளது.

WhatsApp ல் வருகிறது UPI

இவை அனைத்தையும் புரட்டிப் போட விரைவில் WhatsApp செயலியில் UPI வரப்போகிறது. பிற்சேர்க்கை WhatsApp Pay வந்து விட்டது.

மொபைல் எண்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டு இருப்பதால், வங்கிக் கணக்கை மட்டும் இணைத்தால் போதும்.

WhatsApp களத்தில் இறங்கிய பிறகு என்ன நடக்கும் என்று என்னால் ஊகிக்கவே முடியலை.

Mobile Wallet, UPI மின்னணு பரிவர்த்தனைகள் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள காரணங்களில் “ஜியோ” நிறுவனமும் ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை.

மின்னணு வங்கிக் கணக்கு துவங்குதல்

தற்போது ஆதார் வந்த பிறகு வங்கிக்கணக்கை துவங்குவது மிக எளிதாகி விட்டது.

IDFC வங்கியில் 2 நிமிடங்களில் என் வங்கிக்கணக்கை துவங்கினேன். இதற்கு நான் வங்கி செல்லவில்லை, வங்கியில் இருந்து சாதனத்துடன் வங்கிப் பணியாளர்கள் எங்கள் நிறுவனத்துக்கு வந்து இருந்தார்கள்.

DBS வங்கி, IDFC வங்கி போன்றவற்றில் இணையத்திலேயே வங்கிக் கணக்கைத் துவங்கலாம், வங்கிக்கே செல்ல வேண்டியதில்லை.

இது போல வங்கி செல்லாமலே அனைத்தையும் செய்யும் மின்னணு பரிவர்த்தனைகள் புதியதாக உருவாகி வருகின்றன.

HDFC வங்கி அறிவித்த NEFT RTGS கட்டண ரத்து

சமீபத்தில் HDFC வங்கி சேமிப்பு, சம்பள கணக்குகளுக்கு NEFT RTGS சேவைகளுக்குக் கட்டணத்தை ரத்து செய்துள்ளது. IMPS கட்டண சேவை தொடர்கிறது. UPI கட்டணமில்லை.

மின்னணு பரிவர்த்தனையில் கூடுதல் கட்டணம் செலுத்த விருப்பம் இல்லாமல் பலர் வங்கி சென்று பணத்தைக் கட்டி வந்தனர்.

இனி பரிவர்த்தனைக்குக் கட்டணமில்லை என்பதால், எல்லோரும் இணையத்திலேயே பணப்பரிமாற்றம் செய்து விடுவர்.

இதனால், HDFC வங்கிகளில் பணப்பரிவர்த்தனை கூட்டம் குறையும்.

நடப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் மட்டுமே இனி வருவர். அவர்களுக்கும் கட்டண ரத்து அறிவித்தால், மீதி கூட்டமும் எதிர்காலத்தில் குறைந்து விடும்.

இதை மற்ற வங்கிகளும் விரைவில் பின்பற்றக்கூடும்.

காசோலைக்குக் கூடுதல் கட்டணம்

மின்னணு பரிவர்த்தனையை அதிகப்படுத்தக் காசோலைக்குக் கூடுதல் கட்டணமும், இலவசமாகக் கொடுக்கப்படும் காசோலையின் எண்ணிக்கையையும் HDFC குறைத்துள்ளது.

இதனால்,  NEFT RTGS வழியாகப் பணம் அனுப்புவது தான் செலவில்லாதது.

காசோலை சார்ந்த பணிகளைக் குறைக்க HDFC இதன் மூலம் முயற்சிக்கிறது. எனவே, இது தொடர்பான பணியாளர்களின் தேவை குறையும்.

HDFC செய்துள்ளது பொதுமக்களாகிய நமக்கு, அரசாங்கத்துக்கு நல்லது ஆனால், பணியாளர்களுக்குத் தலைவலி.

வங்கிகளிலேயே ஆட்குறைப்பு அதிகளவில் செய்தது HDFC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

ATM

மின்னணு பரிவர்த்தனை அதிகரிப்பால் ATM பயன்பாடு குறைந்து இந்தியாவில் 600+ ATM மையங்கள் மூடப்பட்டுள்ளன எனச் செய்திகளில் கூறப்பட்டது.

அந்த அளவுக்கு ATM தேவை குறைந்ததாக எனக்குத் தெரியவில்லை. மின்னணு பரிவர்த்தனையைக் காரணமாக வைத்து மூடி விட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.

இனி வரும் காலங்களில் ATM எண்ணிக்கை குறைக்கப்படும்.

ஒப்பிட்டுப் பாருங்கள்

சுருக்கமாகக் கடந்த வருடம் ஒரு மாதத்துக்கு எத்தனை முறை வங்கி சென்றீர்கள் தற்போது எத்தனை முறை வங்கிக்குச் சென்று இருக்கிறீர்கள் என்று யோசித்தால், எண்ணிக்கை பெருமளவு குறைந்து இருப்பதை உணரலாம்.

இனி வரும் காலங்களில் நீங்கள் வங்கிக்கே செல்லமாட்டீர்கள். வருடத்தில் ஒரு / இரு முறை சென்றாலே அதிகம்.

மின்னணு பரிவர்த்தனை என்பது தவிர்க்க முடியாதது. வங்கிச் சேவைகளின் எதிர்காலம் என்பது மின்னணு பரிவத்தனை மட்டுமே!

வெகு சில தேவைகளுக்கு மட்டுமே வங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதுவே வங்கிப் பணியாளர்களுக்கான தேவையைக் குறைக்கும்!

தொடர்புடைய கட்டுரைகள்

Google Pay செயலி பயன்படுத்துவது எப்படி?

“Automation / Cloud” ஏற்படுத்தும் “ஐடி” அதிர்ச்சிகள்!

BHIM செயலி பயன்படுத்துவது எப்படி?

சரக்கு மற்றும் சேவை வரி (GST)

“மின்னணு” பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. Dear Mr. Giri,

    In our Company, I have initiated to send salary / wages to employees through NEFT as well as outstanding payment to suppliers also since 2015 itself. Similarly for Telephone / mobile bills, Electricity bills, etc through NEFT / RTGS. As a HR person, it is easy to transfer the salary / wages through NEFT instead of giving cash.

    I fully agree with your points.

  2. கிரி… உங்கள் பார்வையும் இடுகையும் சரியானதுதான். வங்கி சம்பந்தமான வேலைனு பார்த்தால், கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மற்றும் கோர் பேங்கிங் மட்டும்தான் ஆட்கள் தேவையா இருக்கும். காவல் பணிக்குக்கூட தனியார்களை உபயோகப்படுத்திக்கொள்கின்றன. அதேபோல் மற்ற பணிகளுக்கும் தனியார் உள்ளே நுழைந்துவிடுவார்கள் (கால் சென்டர், போன்ற பலவும்). வங்கிகளுக்கு, யார் அதிக டெபாசிட் வாங்கித்தருகிறார்கள், எந்த எந்த விதங்களில் வருமானம் அதிகரிக்கவைக்கிறார்கள் என்று, முக்கியப் பணியாளர்களே, வங்கிக்கு சேல்ஸ் மேனேஜராகிவிடுவார்கள். இதனால் வங்கிகளுக்கு பணியாளர்கள் தேவை வெகுவாகக் குறையும். அரசுக்கும் மின்னணு பரிமாற்றத்தால் வெளிப்படைத் தன்மை இருக்கும்.

    நான் நினைப்பது, வேலைக்கான தகுதிகளை இளைய சமுதாயம் வளர்த்துக்கொள்ளவேண்டும். வெறும்ன, காம்பெடிஷன் எக்சாம் எழுதினோமா, வேலையை வாங்கினோமா, சேரில் உட்கார்ந்து காலத்தைக் கழித்தோமா என்ற காலம் முடிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. இப்போல்லாம், டைபிஸ்ட், ஷார்ட் ஹாண்ட் போன்ற பணியிடங்களே இல்லை.

  3. @கணேஷ் தற்போது தனியார் நிறுவனங்கள் அனைத்தும் இணையம் வழியாகத் தான் சம்பளத்தை கொடுக்கின்றன. அரசாங்க பணிகளுக்கும் பெரும்பாலும் இதைத் தான் பின்பற்றுகிறார்கள்.

    எதிர்காலத்தில் பணத்தை எடுக்க வேண்டிய தேவையே இருக்காது. நான் மாதத்துக்கு ஒரே ஒரு முறை மட்டுமே ATM பயன்படுத்துகிறேன்.

    @நெல்லை தமிழன்

    “வங்கி சம்பந்தமான வேலைனு பார்த்தால், கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மற்றும் கோர் பேங்கிங் மட்டும்தான் ஆட்கள் தேவையா இருக்கும். ”

    உண்மை.

    ஐந்து வருடங்கள் கழித்தால் ATM மிக மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். அதன் பயன்பாடு வெகுவாக குறைந்து இருக்கும்.

    மின்னணு பரிமாற்றத்தால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்

    நீங்கள் கூறியது போல திறமையை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால், இனி சமாளிப்பது சிரமமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here