கடல் அருகே இருப்பதாலும் வறட்சியாலும் தண்ணீருக்காகத் தவிக்கும் கிராமம் காட்டூர். தமிழக ஆந்திர எல்லையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவும் தளத்தின் அருகில் இருப்பது. Image Credit
தினசரி வருவாய்க்கே அல்லல்படும் புலேந்திரன் சுமதி குழந்தையான தன்ஷிகா விளையாடிக்கொண்டு இருக்கும் போது, தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட போர்வெல் குழியில் விழுந்து விட சிறுமியை மீட்க மாவட்ட ஆட்சியர் நயன்தாரா முயற்சிக்கிறார்.
இறுதியில் என்ன ஆகிறது? தன்ஷிகாவை மீட்டார்களா? இல்லையா? என்பது தான் கதை.
அறம்
ஆட்டம், அதிரடி, நாயகனின் தெறிக்கும் வசனங்கள் என்றே சமீபமாகப் பார்த்துப் பழக்கப்பட்டு இருந்தவர்களுக்கு அறம் நிச்சயம் மாறுதலாக இருந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
MLA வாக வரும் வேலப்ப ராமமூர்த்தித் தன்னுடைய கதாப்பாத்திரத்தை அசத்தலாகச் செய்து இருக்கிறார்.
ஒரு MLA வோட மிடுக்கு, தெனாவெட்டு, திமிர், அதிகாரிகள் மீதான மரியாதைக்குறைவான வார்த்தைகள் என்று கலக்கி இருக்கிறார்.
மருத்துவராக வருபவரிடம் நயன்தாரா கேள்வி கேட்கும் போது அவர் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழிப்பதும், பிரச்சனையானால் என்ன செய்வது என்று பரிதவிப்பதும் என்று நெருக்கடியான சூழ்நிலை.
ஊடகங்கள் TRP க்காக நயன்தாராவை கேள்வி கேட்கும் போது,
நான் கூட நயன்தாரா அமைதியாக இருப்பதைப் பார்த்து “குழந்தையைக் காப்பாற்றுவதா இல்லை.. உங்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டு இருப்பதா?” என்று கேட்பார் என்று நினைத்தால், அசத்தலான பதிலைக் கொடுத்து அனைவரையும் அமைதிப்படுத்துவது சிறப்பு.
ராக்கெட்
இயக்குநருக்கு ராக்கெட்டுக்காகச் செலவு செய்வது ரொம்பக் கடுப்படித்து இருக்கும் போல, படமுழுக்க இடையிடையே போட்டுத் தாக்கி இருக்கிறார்.
இது போல விழும் குழந்தைகளைக் காப்பாற்றுவது எவ்வளவு முக்கியமோ அதே போல ராக்கெட்டும் முக்கியம்.
ராக்கெட் அனுப்பியதால் தான் நாம் இன்று தொழில்நுட்ப வசதிகளை அனுபவித்து வருகிறோம். எனவே, இரண்டுமே முக்கியம்.
அரசு இது போன்ற பிரச்சனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட வேண்டும்.
சிறுமியின் அண்ணனாக வருபவனிடம் நயன்தாரா பேசும் வசனங்கள் ரொம்ப நன்றாக இருந்தது குறிப்பாக “கொஞ்ச நேரம் இருட்டே உனக்கு பயமாக இருக்கிறது என்றால், இருட்டிலேயே இருக்கும் உன் தங்கைக்கு எப்படி இருக்கும்!” என்று கேட்டுத் தொடர்வது அசத்தல்.
நயன்தாரா
ஒரு பாடலில் 10 உடைகளை மாற்றிய நயன்தாராக்கு இப்படத்தில் மொத்தமே இரண்டே உடை மாற்றம் தான். அதற்குக் காட்சிகள் ஒரே நாளில் நடைபெறுவதாக உள்ளதும் ஒரு காரணம்.
நேர்மையான அதிகாரியாக வரும் நயன்தாரா சிறப்பான நடிப்பு. குறிப்பாகச் சிறுமி இறந்து விட்டதாகக் அறியும் போது அவர் முகத்தில் காட்டும் அதிர்ச்சி அசத்தல்.
ஒரு இயல்பான பயம் கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார், திரும்பப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் கவனித்துப் பாருங்கள்.
இறுதியில் அனைவரையும் கண்கலங்க வைத்து விட்டார்கள், நானும் 🙂 .
படத்துக்கு ஜிப்ரான் இசை மிகப்பெரிய பலம். சிறப்பான பின்னணி இசை அதோடு இணைந்து வரும் பாடல்களும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. நம்மை ஒரு பரபரப்புடனே வைத்து இருக்க உதவுகிறது.
அவசியம் படத்தைப் பார்க்க முயற்சியுங்கள் இதுவரை பார்க்கவில்லை என்றால்.
மாவட்ட ஆட்சியர்
படத்தின் இறுதியில் நயன்தாரா மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அரசியலுக்கு வருவது போல உள்ளது.
உண்மையில் மாவட்ட ஆட்சியராக இருப்பது மிகப்பெரிய பலம். அதன் அதிகாரத்தை, எங்கள் கோபியில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர்களிடம் கண்டு இருக்கிறேன்.
அரசியல்வாதி என்றால், ஐந்து வருடம் தான் ஆனால், மாவட்ட ஆட்சியர் என்றால், 58 வயது வரை மக்களுக்குச் சேவை செய்யலாம்.
அரசியல்வாதிகளால் செய்ய முடிந்தது மாற்றல் மட்டுமே, வேறு ஒன்றும் செய்ய முடியாது.
எனவே, நயன்தாரா “என்ன நடவடிக்கை வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் ஆனால், நான் இது போலவே தான் இருப்பேன்” என்று கூறி இருக்கலாம் என்று தோன்றியது.
கொசுறு
இந்த மாதத்தில் ஏற்கனவே “அவள்” படம் பார்த்து விட்டதால் இப்படம் பார்க்கும் எண்ணமே இல்லை.
படம் தண்ணீர் பிரச்னையைக் கூறுகிறது என்று படித்ததால், பசங்க பார்க்கணும் என்று இவர்களை அழைத்துச் சென்றேன்.
வரி கிட்டத்தட்ட 40% வருகிறது எப்படி என்று தெரியவில்லை, 28+8=36 தான் வரணும். நான்கு பேருக்கு இரண்டு பாப்கார்னுடன் ₹ 1080 வந்து விட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அறம் படம் பார்த்தேன். படம் பிடித்து இருந்தது. இதுபோல படங்களை பார்க்கும் போது சகாயம் அய்யா அவர்களின் நினைவு உடனே வந்து போகும். இவரை போன்ற திறமையும் நேர்மையும் கொண்ட அதிகாரிகளை எந்த அரசும் சரியாக பயன்படுத்தவில்லையே!!! என்ற ஆதங்கம் என்றும் உண்டு..
இவரை போல் இன்னும் பல அதிகாரிகள் அடையாளம் காணப்படாமல் இருக்கலாம்… அவர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு நம்முடைய அரசு இயந்திரத்தில் பணியமர்த்தப்பட்டால் எவ்வாறு இருக்கும் என என்னும் போதே… மன மகிழ்வாக இருக்கிறது…
சகாயம் அய்யா அவர்களை பற்றி மேலும் பல குறிப்புகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவரை பற்றி படிக்கும் போது தனி மனித ஒழுக்கமும், நேர்மையும் இன்னும் அதிகரிக்கிறது…
யாசின் நீங்க படம் பார்த்தாச்சு என்று ரொம்ப நாட்களுக்கு பிறகு சொல்லி கேட்கிறேன் 🙂 . எப்போதும் இனி பார்க்கிறேன் என்று கூறுவீர்கள், இந்த முறை தான் பார்த்து விட்டேன் என்று கூறி இருக்கிறீர்கள் 🙂 .