தீபாவளி பயணக் குறிப்புகள் [அக்டோபர் 2017]

3
Pachaimalai Murugan Temple Gobi

டந்த வருடத்தில் இருந்து பொங்கலை முதன்மை பண்டிகையாக மாற்றித் தீபாவளியை இறக்கி விட்டேன் 🙂 .

காரணம், பொங்கலுக்கு விடுமுறை அதிகம் எடுக்கலாம், கொண்டாடலாம் அதோடு தமிழர் பண்டிகை என்பதால்.

தீபாவளி ஒரே நாளில் முடிந்து விடுகிறது ஆனால், பொங்கலோடு எங்கள் ஊர் கோபி “பாரியூர் அம்மன்” தேர் திருவிழாவும் வருவதால், ஒரு வாரக் கொண்டாட்டம்.

நான் தீபாவளிக்கு துணி எடுப்பதை இந்த வருடத்தோடு நிறுத்தி விட்டேன், எடுப்பது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே! மனைவியும் பொங்கலுக்கே எடுத்துக்கொள்கிறேன் என்று கூறி விட்டார்.

பசங்க மட்டும் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்கள். குழந்தைகள் யாராக இருந்தாலும், தீபாவளி போல எந்தப் பண்டிகையும் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இராது.

இரு நாட்கள் விடுமுறை எடுத்து மூன்று நாட்கள் விடுமுறையில் சென்று இருந்தேன்.

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை திறப்பால், எங்கும் பசுமையாக இருக்கிறது. கோபியில் அவ்வளவாக மழை இல்லை என்றார் அம்மா. வெகு சில நாட்களே கனமழை பெய்ததாகக் கூறினார்.

அம்மா அப்பா

அப்பா நன்கு தளர்ந்து விட்டார்கள், மறதி அதிகமாகிவிட்டது. ஒரு குழந்தையாக மாறி வருகிறார்கள். அம்மா முன்பை விட உற்சாகமாகவும் உடல்நலத்துடனும் இருந்தார்கள்.

அம்மாக்கு எப்போதுமே உடல்நலம் மீதான அக்கறை அதிகம். எனவே, இந்த வயதிலும் (73) சோர்ந்து போய் அமர்ந்து விடாமல், ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார்கள்.

நாம் உட்கார்ந்தால், நம் உடல் நம்மைப் படுக்க வைத்து விடும் என்பது அவரது நம்பிக்கை. உண்மையும் கூட.

எனவே, சர்க்கரை அதிகரித்து விட்டது என்று வாசலில் தினமும் நடந்தே குறைத்து விட்டார் 🙂 . என்ன வேலை இருந்தாலும் காலையில் நடைப்பயிற்சியை விட்டு விட மாட்டேன் என்று கூறினார்.

அம்மாக்கு உடம்புக்கு முடியாமல் படுப்பது பிடிக்காத ஒன்று. எனவே, அதைத் தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம் என்று அதில் அதிகக் கவனம் செலுத்துவார்கள்.

அதற்கு வேலை செய்து கொண்டே இருப்பது உடற்பயிற்சி செய்வது தான் ஒரே வழி எனவே,  நடைப் பயிற்சியை விடாமல் தொடர்கிறார்கள்.

சீரகத்தண்ணீர்

என் அக்கா பரிந்துரையில் தினமும் சீரகத்தை இரவில் ஊற வைத்து, காலையில் கொதிக்க வைத்து தண்ணீரை தினமும் குடித்தால், உடல் நலம் சிறப்பாக இருக்கும் என்பதால், இதை அம்மா அப்பா இருவரும் பின்பற்றி வருகிறார்கள்.

கடந்த முறை சென்ற போது அக்கா கூறினார். நான் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அப்பா இதைத் தொடர்ச்சியாகக் குடித்துப் பல உடல் பிரச்சனைகள் சரியானதாக இந்தமுறை ஆதாரப்பூர்வமாகக் கூறியதால், நானும் குடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். 

வரும்முன் காப்போம் திட்டம். நீங்களும் முயற்சித்துப்பாருங்கள்.

சஷ்டி விரதம்

வருடாவருடம் சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன் ஆனால், மறந்து விடுவேன்.

இந்தமுறை மனைவி விரதம் இருக்கிறேன் என்று கூறியதால், நினைவு வந்து நானும் இருக்கிறேன் என்று தற்போது சஷ்டி விரதத்தில் இருக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்பு எனக்கு வேண்டுதல்கள் இருந்தது ஆனால், தற்போது எதுவுமில்லை ஆனாலும்,  அப்போது நினைத்ததைத் தற்போது செயல்படுத்துகிறேன் 🙂 .

சஷ்டி விரதம் இருப்பதால், கோபி பச்சை மலை முருகன் கோவில் சென்றேன். சிட்டுக்குருவிகளின் சத்தத்ததுடன் கோவிலே அழகாக இருந்தது. தலைவர் பாலமுருகன் அசத்தலான அலங்காரத்தில் இருந்தார்.

புதிதாகப் படிகளில் நடைபாதை மண்டபம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

Readசஷ்டி விரதம் [2013]

உறவினர் குழந்தையைப் பார்க்க கோபியில் இதுவரை நான் செல்லாத இடத்துக்குச் சென்றேன். அவ்வளவு சுத்தமாக இருக்கிறது.

என்ன தான் சொல்லுங்க.. எங்க கோபி சுத்தம் எங்கயும் வராது 🙂 . சாலைகள் எல்லாம் அகலமாகச் சுத்தமாக இருக்கும்.

எப்படா ஊருக்கே வந்து நிரந்தரமாக இருப்போம் என்று இருக்கிறது.

குளிர்

இந்த வருடம் சென்னையில் குளிரே இல்லை. மழை பெய்தால், அந்த இரவு குளிர் இருக்கும் ஆனால், இதுவரை புழுக்கம் தான் சென்னையில் உள்ளது. என்ன ஆச்சுன்னே தெரியலை!

பல மாதங்களுக்குப் பிறகு குளிரை ஊரில் அனுபவித்தேன். இரவில் இருந்து காலை வரை செம்ம குளிர். காலையில் குளிராக இருந்தால், புத்துணர்ச்சியாக இருக்கிறது.

எங்க வீட்டுப் பகுதியில் இரு பொண்ணுக தெரு முழுக்க மரக்கன்று வைத்து (கூண்டுடன்) வளர்க்கிறார்கள்.

இன்னும் இரண்டு வருடங்களில் எங்கள் தெரு சோலைவனம் ஆகி விடும். நினைத்தாலே குளுகுளுன்னு இருக்கு 🙂 .

தாடி

ஆயுத பூஜை விடுமுறை நாட்களின் தொடர்ச்சியாகத் தாடியை எடுக்கவில்லை. திடீர் என்று “தாடி வைத்தால் என்ன?” என்று தோன்றியது 🙂 .

என் வாழ்க்கையில் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு மேல் தாடி வைத்தது இல்லை. அடர்த்தியாகவும் தாடி வராது என்பதால், எதற்கு இந்த விபரீத முயற்சி என்று விட்டு விட்டேன்.

இந்த முறை முயற்சித்தேன், மனைவி.. “ஏங்க நீங்க.. ஷேவ் பண்ணுங்க. நல்லாவே இல்ல.. வெள்ளை முடி வேற” என்றார் 🙂 .

எனக்கு என்னமோ ரொம்ப மோசமில்லை என்று தான் தோன்றியது. சரி விட்டுப்பார்ப்போம் என்று விட்டேன்.

ஊருக்குப் போனால் அம்மா.. “ஏன் தம்பி இப்படி இருக்க.. முதல்ல ஷேவ் செய்.. கண்றாவியா இருக்கு” என்றும் அக்கா “கருமம் தம்பி.. சகிக்கல” என்று கூறுவார்கள் என்றும் நினைத்தால், உலக அதிசயமாக இருவருமே நல்லா இருக்கு என்று கூறி விட்டார்கள்.

அதனால் இன்னும் கொஞ்ச நாள் தொடரலாம் என்று முடிவு செய்து விட்டேன் 🙂 .

உடல் தகனப்பூங்கா

தீபாவளி அன்றே எங்கள் நெருங்கிய உறவினர் காலமாகி விட்டார். இரண்டு நாட்கள் இதிலேயே சென்று விட்டது.

உடல் தகன இடத்தில் கிடைத்த அனுபவத்தைத் தனிக் கட்டுரையாக எழுதுகிறேன். ஒரு இடம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தது.

பொங்கலுக்கு கலக்குறோம்

பொங்கலுக்கு எங்கள் வீட்டு முன் இருக்கும் மரத்தில் சீரியல் விளக்கு எல்லாம் போட்டு அசத்தலாம் என்று இருக்கிறேன் 🙂 .

அம்மா “ஏன் தம்பி.. எல்லோரும் என்னமோன்னு நினைத்துக்கப்போறாங்க” என்று பயப்பட்டார்.

எவனோ எதையோ நினைக்கட்டும்.. இவனுகளுக்கா நான் வைக்கிறேன்.. நம்ம விருப்பத்துக்கு வைக்கிறேன். எவன் என்ன சொல்றது?” என்றேன்.

சரி உன்னோட விருப்பம்” என்று கூறி விட்டார்கள். இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் “இவன் இனி சொன்னாலும் காதுல வாங்க மாட்டான்” என்று நினைத்து இருப்பார்கள்.

வருட விடுமுறையை இந்தச் சமயத்தில் தான் எடுக்கிறேன். எனவே, ஒரு வாரம் பட்டையைக் கிளப்பிட வேண்டியது தான். அதனால பொங்கல்ல கலக்குறோம் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. விடுமுறையை விட மகிழ்ச்சியான ஒரு விஷியம் இருக்குமா என்று தெரியவில்லை… பள்ளி நாட்களில் விடுமுறையில் ஆரம்பித்த இந்த மகிழ்ச்சி இன்னும் தொடர்கிறது.. கோவையில் பணி புரியும் போது சனிக்கிழமை இரவு 8 மணிக்கு கிளம்பி ஞாயிறு காலை 6 மணிக்கு சொந்த ஊருக்கு திரும்புவேன்.. மீண்டும் ஞாயிறு இரவே கோவை பயணம்.

    பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டுக்கு 10 நிமிடம்… ஆனால் வரும் வழியில் எத்தனை விசாரிப்புகள், நண்பர்கள், உறவினர்கள், நண்பர்களின் குடும்பத்தினர்கள், எதிரியாக பாவித்தவர்கள் (இவர்களுக்கு முன் நா விடுற லுக், சாதிச்சிடமுள்ள!!!! (மேல போட்டு இருக்குறது நண்பன் ஜெயகுமார்ட்ட கடன் வாங்கின டீ-ஷர்ட், பாக்கெட்ல இருக்குற 5 / 10 நண்பன் சக்திகிட்ட வாங்கிய பணம் , இதுல சொந்தமா இருப்பது நான் விட்ட லுக்கும், கெத்தா நடக்கறதும் தான்)..

    அந்த நாட்கள் மிக அழகானவை… இன்று தேவைக்கு போக எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு குறை தொடர்ந்து கொண்டே வருகிறது.. பவானிசாகர் அணை இந்த அணையை என்றும் மறக்க முடியாது. நண்பன் சக்தியுடன் நட்பின் நெருக்கம் அதிகமாகவும், இறுக்கமாகவும் ஆனது இந்த அணைக்கு சென்ற பயணத்தில் தான். ரொம்ப அழகான இடம். மிகவும் பிடித்த இடம்.. வாழ்க்கை சுழலில் சுற்றிய இருவரும் மீண்டும் சேர்ந்து பயணிப்போமா??? என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே வருகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. தங்களின் பழைய பதிவான சஷ்டி விரதம் பதிவில் விரதத்தின் பலன் தான் சொல்லி இருக்கிறீர்கள். அதில் விரதம் பற்றி முழுமையான தகவல் இல்லையே. விரதம் எப்போது இருக்க வேண்டும்…என்ன செய்யணும் செய்யக் கூடாது .. என்ன செய்ய வேண்டும்.. எந்த மாதம்..எத்தனை நாட்கள் என எதுவும் இல்லை.

    இந்த வருடம் நீங்கள் விரதம் இருந்தீர்கள் அல்லவா .. இப்பவாவது சொல்லலாமே அதன் வழிமுறைகளை…எனக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருக்கிறது ..எனக்கு உபயோகமாக இருக்கும்…அப்படியே சங்கடஹர சதுர்த்தி விரதத்தை பற்றியும் அம்மாவிடம் அக்காவிடம் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணா ..

  3. @யாசின் நீங்கள் ஊருக்கு வரும்போது நீங்கள் நினைப்பது நடக்கும் 🙂 .

    @கார்த்தி இந்த வாரம் எழுதுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here