நாட்டின் நிலைமை என்னவாகும்? | உச்சநீதிமன்றம்

2
நாட்டின் நிலைமை

ட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாட்டை நீடிக்கும்படி பட்டாசு தொழிலை நம்பியுள்ளவர்கள் கோரிக்கை வைத்ததற்கு உச்சநீதிமன்றம் நாட்டின் நிலைமை என்னவாகும் என்று கேட்டுள்ளது. Image Credit

நாட்டின் நிலைமை என்னவாகும்?

சுற்றுசூழலை பாதிக்கும் அனுமதிக்கப்படாத இரசாயனத்தைப் பயன்படுத்துவதால் நேரக்கட்டுப்பாடு என்கிறார்கள்.

சிலர் செய்யும் தவறுக்கு அனைவரையும் தண்டிப்பது எப்படி நியாயமாகும் என்கிறார்கள் பட்டாசு உற்பத்தியாளர்கள்.

சிலர் அல்ல பெரிய நிறுவனங்களே இதைச் செய்கிறார்கள் என்கிறது உச்சநீதிமன்றம்.

பட்டாசு தொழிலை நம்பி 5 லட்சம் குடும்பங்கள் உள்ளனர் என்கிறார்கள் பட்டாசு உற்பத்தியாளர்கள்.

சுற்றுச் சூழலினால் பாதிக்கப்படும் நாட்டின் நிலைமை என்ன? என்கிறது உச்சநீதிமன்றம்.

தீபாவளி

தீபாவளி வந்தாலே உடனே நீதிமன்றங்களுக்கும் போராளிகளுக்கும் சுற்றுச் சூழல் மீது மிகுந்த அக்கறை வந்து விடும் மர்மம் மட்டும் புரியவில்லை.

மேற்கூறிய வழக்கில் குழப்பம் என்ன உள்ளது என்று தெரியவில்லை.

தடை செய்யப்பட்ட இரசாயனம் பயன்படுத்தும் நிறுவனத்தை மீண்டும் உற்பத்தி செய்ய முடியாதபடி தடை செய்யலாம், தொடர்ந்தால் வாழ்நாள் தடை என்று அறிவிக்கலாம்.

இது தானே நியாயம். இவர்கள் தவறுகளுக்கு மற்றவர்களைத் தண்டிப்பதேன்!

தீபாவளி அன்று சுற்றுச்சூழல் கேடு ஏற்படுகிறது என்பது உண்மை தான் ஆனால், அன்று மட்டும் தான் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறதா? என்பதே கேள்வி.

தினமும் காற்றின் தரம் மோசமாக உள்ளது. காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் தினமும் பல ஆயிரம் பேர் இறக்கிறார்கள்.

இதற்கு உச்சநீதிமன்றம் எப்போதாவது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதா? வருடத்தில் 364 நாட்கள் நடப்பதை கண்டுகொள்ளாமல் 1 நாளில் நடப்பதற்கு மட்டும் பொங்குவதேன்.

இன்னமும் அரசுப் பேருந்துகள் புகையைக் கக்கிக்கொண்டு தான் செல்கின்றன. பல வாகனங்கள் Emission Check செய்யாமல், செய்தும் ஏமாற்றித் தொடர்கிறார்கள்.

ஹாரன் என்ற பெயரில் ஒலி மாசுபாட்டை நாரசமாகச் செய்து கொண்டுள்ளார்கள்.

சாயக்கழிவை முறையாகச் சுத்திகரிக்காமல் நிலத்தினுள் செலுத்தி நிலத்தடி நீரையே நாசம் செய்கிறார்கள்.

அவர்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டுகொள்ளாததைக் கண்டிக்காதது ஏன்?

மக்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கும் மேற்கூறிய செயல்களைக் கண்டுகொள்ளாமல் பட்டாசுக்கு மட்டும் நியாயம் பேசினால் சரியா?

சுற்றுச்சூழல் என்றால் அனைத்துக்கும் பொருந்தும் தானே! ஒன்றுக்கு நியாயம் பேசினால் மற்றதுக்கும் சரியாக இருக்க வேண்டும் தானே.

பட்டாசு

இனி இதுபோலச் செய்தெல்லாம் குறைக்க வேண்டியதில்லை. மக்களே பட்டாசு வெடிப்பதில் தற்போது ஆர்வம் குறைந்து விட்டார்கள்.

முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பிருந்தே பட்டாசு சத்தம் கேட்கும் ஆனால், தற்போது தீபாவளிக்கு முதல் நாள் தான் சத்தம் கேட்கிறது.

மக்களே பட்டாசுக்கு செலவழிப்பதை குறைத்து மற்றவற்றுக்குச் செலவழிக்கத் தயாராகி விட்டார்கள்.

சிறுவர்களும் பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் குறைந்து விட்டார்கள். முந்தைய தலைமுறை மக்கள் போலப் பட்டாசில் ஆர்வமில்லை.

முன்பு போலப் பட்டாசு விற்பனையில்லை என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். எனவே, நேரத்தைக் குறைப்பது இன்னும் பாதிப்பையே ஏற்படுத்தும்.

எனவே, நீதிமன்றங்களும் போராளிகளும் தங்கள் கவனத்தை மற்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் திருப்பலாம்.

நாடு முழுவதும் தினமும் ஏராளமான சுற்றுச் சூழல் விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கெல்லாம் நாட்டின் நிலைமை என்னவாகும் என்று கவலைப்பட்டுக் கடும் நடவடிக்கை எடுத்தால் நாடு நன்றாக இருக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள்

ஹா(ர்)ரன் சைக்கோக்கள்

பட்டாசுக்கு மட்டும் கட்டுப்பாடு நியாயமா?!

தீபாவளி | ஒரு அனுபவ வெடி!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. தீபாவளி என்றாலே என்னுடைய பள்ளி நாட்கள் தான் நினைவுக்கு வந்து போகும்.. எந்த கட்டுப்படும் இல்லாமல் சுதந்திரமாக நாங்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தோம்.. சொல்ல போனால் சொந்தமாக நாங்களே பழைய பொருட்களை வைத்து வெடிகள், ராக்கெட்டுகள் தயாரித்தோம்.. அரசாங்கத்தின் சட்டங்கள் கண்டு நாங்கள் அஞ்சாமல் இருந்தோம்..

    தெரு முழுக்க உள்ள பட்டாசு குப்பைகளை பொறுக்கி எடுத்து வந்து எங்கள் வீட்டின் முன்னே போட்டு, தெருவிலே நாங்கள் தான் அதிகம் பட்டாசு வெடித்தோம் என பெருமை பேசி திரிந்தோம்.. 1000, 5000 வால சர வெடிகள் வெடிக்கும் போது புகையின் உள் புகுந்து பாதி சாரத்தை வெட்டி எந்த பயமும் இல்லாமல் சும்மா கம்பீரமா பாஷா பட ரஜினி சார் போல நடந்தோம்.. அதெல்லாம் ஒரு நாட்கள்.. இன்று பக்கத்து தெருவில் வெடி வெடிக்கும் போதே என் மகன் வீட்டை விட்டு வெளியில் செல்ல அஞ்சுகிறான்.

    நாடு முழுவதும் தினமும் ஏராளமான சுற்றுச் சூழல் விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன. கண்டிப்பாக கிரி.. இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது..

  2. தலைமுறை மாற்றத்தில் பட்டாசு வெடிப்பவதற்கான ஆர்வமும் குறைந்து வருகிறது. அப்போது நமக்கு இவையே பொழுதுப் போக்கு, தற்போது ஏராளமாக உள்ளது.

    எனவே, சிறுவர்கள் இவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை.

    நாள் முழுக்க சரமாக வைக்காமல் பிரித்து ஒவ்வொரு வெடியாக வெடித்துக்கொண்டு இருப்பேன். தற்போது எனக்கே ஆர்வமில்லை.

    உங்களைப் போல நானும் வெடியைக் குவித்து பற்ற வைத்து.. பெரிய பிரச்சனையாகி விட்டது 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here