செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய நாசா அமைப்பு அனுப்பிய Opportunity Rover என்ற விண்கலம் தனது 15 வருட பயணத்தை முடித்துக்கொண்டுள்ளது.
2003 ம் ஆண்டு அனுப்பப்பட்ட Opportunity Rover, 2004 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறங்கி செவ்வாய் கிரகத்து இடங்களைப் படம் எடுத்து அனுப்பிக்கொண்டு இருந்தது.
செவ்வாய் கிரகச் சூழ்நிலையை, அங்கே என்னென்ன உள்ளது என்பதை அறிய வாய்ப்பாக இருந்தது.
புழுதிப் புயலில் சிக்கிய Rover
உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம், விண்கலம் இயங்க சூரிய ஒளி அவசியம் என்று.
2007 ம் ஆண்டு ஏற்பட்ட புழுதிப் புயலில் சிக்கி மண் படிமத்தால் Opportunity Rover விண்கலம் தொடர்பை இழந்தது, பின் மண் படிமம் விலகி செயல்பட ஆரம்பித்தது.
இதன் பிறகு 2018 வரை பெரிய பாதிப்பில்லாமல், இயங்கிக்கொண்டு இருந்தது.
ஆனால், 2018 ஜூன் மாதம் மீண்டும் ஏற்பட்ட புழுதிப் புயலில் சோலார் தகடுகளில் புழுதி படிமம் படிந்ததால், சூரிய ஒளியைப் பெற முடியவில்லை.
இதனால் பூமியில் இருந்து விஞ்ஞானிகளால் Opportunity Rover விண்கலத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நவம்பர் முதல் ஜனவரி வரை செவ்வாய் கிரகத்தில் காற்று அதிகம் இருக்கும் காலம் என்பதால், காற்றின் காரணமாகச் சோலார் தகடுகளில் உள்ள புழுதிப் படிமம் விலகும் என்று காத்து இருந்தார்கள் ஆனால், அது நடக்கவில்லை.
பல முயற்சிகளுக்குப் பிறகு நாசா கடந்த வாரம் Opportunity Rover இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக வருத்தத்துடன் அறிவித்தார்கள்.
243.76 மில்லியன் கிலோமீட்டர்
243.76 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்த Opportunity Rover 15 வருடங்களில் 43 கிலோ மீட்டர் பயணம் செய்து படங்களை அனுப்பி உள்ளது.
இவ்வளோ மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இதை இயக்கி படம் எடுக்க வைத்து… ஷப்பா .. எனக்குக் கண்ணைக் கட்டுகிறது. வாய்ப்பே இல்லை.
அதுவும் 15 வருடங்கள்.. நினைத்தாலே பிரம்மிப்பாக உள்ளது.
எனக்கு ஒரே ஒரு வியப்பு 15 வருடங்கள் கூடி 43 கிலோமீட்டர் தான் இயக்க வைக்க முடிந்தது என்பது!
ஆனால், இந்த 43 கிலோமீட்டர் பயணத்தில் Rover எடுத்துக்கொடுத்த படங்கள், தகவல்களின் மதிப்பு அளவிட முடியாதது.
இதன் படங்கள் வந்த போது இப்பயணத்தில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு எவ்வளவு ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கும் என்பதை நினைத்தாலே பரவசமாக உள்ளது.
சந்தேகம்
செவ்வாய் கிரகத்தில் புவியீர்ப்பு விசை கிடையாது ஆனால், நாசா வெளியீட்டுள்ள அனிமேஷன் உத்தேச காணொளியில் விண்கலமுள்ள பாதுகாப்பு பந்து கீழ் நோக்கி வந்து பூமியில் பந்து குதிப்பது போலக் குதிக்கிறது.
இது எப்படி? யாராவது தெரிந்தவர்கள் விளக்கவும்!
தரமான சாதனங்கள்
15 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு விண்கலத்தை அனுப்பிப் படம் எடுக்க வைத்து, இவ்வளவு காலம் அதைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்கள் என்றால், தற்போது இது போல ஒன்றை அனுப்பினால் அது எவ்வளவு முன்னேற்றத்துடன் கூடிய தொழில்நுட்பமாக இருக்கும்!
Rover வாகனத்தில் இருந்த சாதனங்கள் 15 வருட பருவ சூழ்நிலையைத் தாக்குப்பிடித்து வேலை செய்துள்ளது என்பதை நினைத்தால், தலை கிறுகிறுக்கிறது.
எவ்வளவு தரமான சாதனங்களாக அவை இருந்து இருக்க வேண்டும்! தற்போது கூட Rover பழுதடைந்து இறுதி மூச்சை விடவில்லை, புழுதிப் படலம் காரணமாகவே செயலிழந்துள்ளது.
உதாரணத்துக்கு யாராவது அங்கே இருந்து, அந்தப் புழுதிப் படிமத்தை துடைத்து விட்டால் திரும்ப வேலை செய்யத் துவங்கி விடும். அவ்வளோ தான்!
எனக்கு எப்போதுமே விண்வெளி சம்பந்தப்பட்டவை வியப்பை அளித்துக்கொண்டே இருக்கும். அதென்னமோ இது சம்பந்தப்பட்ட செய்திகள் தகவல்கள் என்றால், விருப்பமாகப் படிப்பேன்.
Opportunity Rover யைத் தயாரித்து, 15 வருடங்களாக அதைக் கட்டுப்பாட்டில் வைத்து, செவ்வாய் கிரகம் பற்றிய பல்வேறு அறிவியல் தகவல்களை நமக்கு அறியத்தந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும் 🙂 .
கொசுறு
நான் எழுதிய கட்டுரைகளில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளில் “மங்கள்யானும் விண்வெளி ஆச்சர்யங்களும்” கட்டுரை முக்கியமானது.
பலரின் எண்ணங்களைக் கேள்விகளை வியப்புகளை நான் கட்டுரையில் பிரதிபலித்ததாகப் பலர் கருத்திட்டு இருந்தனர். எனக்குச் சிறு மகிழ்ச்சி! 🙂 .
இதில் நண்பர் கௌரிஷங்கர் “விண்கலம் எப்படி விண்வெளியில் செல்கிறது” என்பதை எளிமையாகக் கருத்துப் பகுதியில் விளக்கியிருந்தார்.
எனக்கு வந்த சிறப்பான எளிமையான கருத்துகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
இதுவரை படிக்கவில்லை என்றால், உங்களுக்கு விண்வெளியில் ஆர்வம் இருந்தால், இக்கட்டுரை படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
Read : மங்கள்யானும் விண்வெளி ஆச்சர்யங்களும் [2013]
Read: சூரியனை விட நட்சத்திரம் இவ்வ்வ்வளோ பெருசா!!! [2009]
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
விண்வெளி சார்ந்த யூ டியுப் படங்களை மகள்களிடம் காட்டி அடிக்கடி விவாதிப்பதுண்டு. எனக்கும் எப்போதும் மிகப் பெரிய ஆச்சரியம் தான். காரணம் அமெரிக்கா உலகில் மிகப் பெரிய கடனாளி நாடு. ஆனால் அரசியல் வேறு. நிர்வாகம் வேறு. இதற்கிடையே அடுத்த கட்ட வளர்ச்சி என்பது எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் நகரும் விதம் வேறு. ஆனால் நம் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் 12 வரைக்கும் விண்வெளி குறித்த பாடங்கள் இல்லவே இல்லை. நாசாவிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று பெரிய தொகையை கறக்கும் பள்ளிகள் இங்கே அதிகமுண்டு.
செவ்வாய் கோளுக்கும் ஈர்ப்பு உண்டு.
Mars Gravity: 3.711 m/s²
Earth Gravity: 9.807 m/s²
https://www.google.com/search?q=mars+gravity
சிறு வயதிலிருந்து இயற்பியல் மீது அதீத காதல் கொண்டவன் நான்.. இன்றும் அந்த காதல் தொடர்கிறது.. இயற்பியல் சம்பந்தமான செய்திகள், தகவல்கள், காணொளிகள் மிகவும் பிடிக்கும்.. உங்கள் மூலம் அறிமுகமான அறிவியல்புரம் தளத்தை நேரம் கிடைக்கும் போது அவ்வவ்போது பார்வையிடுவேன்.. (ஆசிரியர் இறந்து விட்டார்) மிகவும் அருமையான தளம்.. நிறைய தகவல்கள், எளியமையான உரைநடை, படிப்பதற்கு சுவராசியமான பல புதுமையான விஷியங்கள்.. மிகவும் நன்றாக இருக்கிறது..
(ஒரே ஒரு வியப்பு 15 வருடங்கள் கூடி 43 கிலோமீட்டர் தான் இயக்க வைக்க முடிந்தது என்பது! ஆனால், இந்த 43 கிலோமீட்டர் பயணத்தில் Rover எடுத்துக்கொடுத்த படங்கள், தகவல்களின் மதிப்பு அளவிட முடியாதது…) கண்டிப்பாக எனக்கும் இது ஆச்சரியம் தான்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
விண்வெளியில் மிதக்கும் அணைத்து பொருட்களுக்கும் ஈர்ப்பு விசை உண்டு அண்ணா.அவற்றின் அளவு மட்டும் வேறுபடும் தவிர ஈர்ப்பு விசை இல்லாத இடம் என்று எந்த பகுதியும் கிடையாது .(BLACKHOLE தவிர)
பேரண்டத்தில் உள்ள அனைத்துமே ஈர்ப்புவிசையினால் ஒன்றை மற்றோன்று சுற்றிக்கொண்டே உள்ளது.பூமியின் ஈர்ப்புவிசையினால் நிலவு பூமியை சுற்றுகிறது.சூரியனின் ஈர்ப்புவிசையால் மற்ற எட்டு கோள்களும் சூரியனை சுற்றிவருகிறது.சூரியன் பால்வெளி அண்டத்தை மையமாக கொண்டு சுழல்கிறது.இந்த ஈர்ப்புவிசைதான் அனைத்திற்கும் ஆதாரம்.(நமக்கு மேல எதோ ஒரு சக்தி 🙂 )
உதாரணத்திற்கு நிலவின் ஈர்ப்புவிசையானது பூமியைவிட 1௦ மடங்கு வலு குறைவானது.(உங்களின் எடை பூமியில் 1௦௦ கிலோ என்றால் நிலவில் உங்களின் எடை 1௦ கிலோ போன்று உணர்வீர்கள் )
செவ்வாய்க்கும் இரண்டு துணைக்கோள்கள் (போபோஸ்,டெயிமோஸ்) உண்டு
அண்ணா தங்களுடைய தளத்தின் முகவரியில் NOT SECURE என்று வருகிறது.அதை சரி செய்யவும் .நன்றி :3
வாசிங்டன் டிசீ இற்கு கடந்த ஆண்டுறுதியில் போயிருந்தேன். அங்கே கிட்டத்தட்ட 10 இற்கு அதிகமான நிரந்தர அறிவியல் மற்றும் உலக வரலாறு சார்ந்த பொருட்காட்சிகள் உள்ளது. அனைத்துமே இலவச அனுமதி. அப்பலோ , சந்திரனிம் முதன் முதலில் எடுக்கப்பட்ட பாறை என எல்லாமே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததது. முதல் விமானம் , முதல் விண்வெளி கலம் எல்லாமே இருந்தது. அவற்றையேல்லாம் பார்க்கும் போது அமேரிக்காவின் மேல் பொறாமைதான் வந்தது. முதன் முதல் வடிவமைக்கப்பட்ட ரோவர் இயந்திரம் கூட அவர்களிடம் இன்னமும் உள்ளது. நான் போயிருந்தபோது தினமும் பல்வேறு பாள்ளிகளில் இருந்து 12-16 வயது மாணவர்கள் நாடுமுழுவதுமிருந்து வந்து பார்த்துக்கொண்டார்கள். அமேரிக்காவிற்கு சுற்றுலா செல்லும் மாணவர்கள் உண்மையில் செல்லவேண்டியது வாசிங்டன் டீசிக்குத்தான்.
@ஜோதிஜி விண்வெளி துறையில் நாம் மேம்படவில்லை என்றால், வளர்ச்சியில் அதலபாதாளத்தில் இருந்து இருப்போம் 🙂 .
@ராஜசிம்மன் நன்றி
@யாசின் அறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை இறந்தது, பலருக்கும் பெரும் இழப்பு. இக்கட்டுரைக்கு பிறகு பலர் இவர் குறித்து நினைவு தெரிவித்து வருத்தப்பட்டார்கள்.
@கனகராஜ் தகவல்களுக்கு நன்றி 🙂
“அண்ணா தங்களுடைய தளத்தின் முகவரியில் NOT SECURE என்று வருகிறது. அதை சரி செய்யவும்”
கூகுள் க்ரோம் உலவியில் பார்க்கும் போது இவ்வாறு அறிவிப்பை வெளியிடும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதற்கு https இருக்க வேண்டும் ஆனால், இது பண பரிவர்த்தனை, தகவல்களை பெறும் தளங்களுக்கு தான் பொருந்தும். என்னை போன்றவர்களின் தளங்களுக்கு பொருந்தாது.
மின்னஞ்சல் மட்டுமே கொடுக்கிறீர்கள், மற்றபடி வேறு எதுவுமில்லை. எனவே, கவலை வேண்டாம்.
@ப்ரியா நீ சொன்னது போல மாணவர்களுக்கு சரியான இடம் தான் போல.
சரி அதெல்லாம் இருக்கட்டும்.. நீ ஏன் தற்போது ஏகப்பட்ட எழுத்துப்பிழைகளுடன் எழுதுகிறாய்.
என்னுடைய தளம் தமிழ் படிக்க உதவியாக இருந்தது என்று கூறி விட்டு, இப்படி பிழையுடன் எழுதினால் எப்படி? தொடர்ச்சியாக கவனித்ததில் கூறுகிறேன்.