தமிழகம், தமிழ், இளைஞர்கள், போராட்டம் என்று தமிழ்நாடே கடந்த சில மாதங்களாகப் பரபரப்பாக இருக்கிறது. Image Credit – Photograph by Balaji Maheshwar
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டுப் போராட்டம் தூங்கிக்கொண்டு இருந்த ஒவ்வொரு தமிழரையும் இந்தியா வெளிநாடு என்று அனைவரையும் விழிப்படைய வைத்து இருக்கிறது.
சுயநலமாக இருந்த தமிழர்கள் ஒற்றுமையை மீட்டு இருக்கிறது.
இந்த மாற்றம் ஏற்பட என்ன காரணங்கள்?
ஜெ, கலைஞர் போன்றோர் ஆட்சியில் இல்லாததே ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெறக் காரணம். இவர்களில் ஒருவர் இருந்து இருந்தாலும் இப்போராட்டம் நடக்க அனுமதித்து இருக்க மாட்டார்கள்.
வழக்குப் போடுகிறேன், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறேன் என்று வழக்கம் போல ஏமாற்றி, அதையும் மீறி எவரும் போராட்டம் செய்து இருந்தால், எளிதாக ஒடுக்கி இருப்பார்கள்.
எனவே, ஜெ கலைஞர் (உடல் நிலை சரியில்லை / ஆட்சியில்) இல்லாததே இவ்வளவு பெரிய மாற்றங்களுக்கு மக்களின் எழுச்சிக்கு மிக முக்கியக் காரணங்கள்.
தற்போதைய தலைவர்களுக்கு ஆளுமைத் திறன் இல்லாததால், இவர்களால் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இனி வரும் காலம் எவரும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது.
மக்களை அடக்கி ஆள நினைக்கும் தலைவர்கள் காலம் கலைஞர் ஜெ உடன் முடிந்து விட்டது.
போராட்டங்களுக்கு ஆரம்பப்புள்ளி
ஜல்லிக்கட்டு இளைஞர்கள் போராட்டமே தற்போது நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆரம்பப்புள்ளி.
Read: மெரினாவை தெறிக்கவிட்ட ஜல்லிக்கட்டு ஆதரவு ஊர்வலம்!
முன்பு தமி(ழ்)ழக மக்கள் அனைவரும் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள், யார் வம்புக்கு போக மாட்டார்கள் அதோடு பக்கத்துல பிரச்சனை நடந்தாலும் நமக்கு வராத வரை சரி என்று ஒதுங்கியே இருப்பார்கள்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் சத்தமே இருக்காது!
இது தான் கடந்த வருட டிசம்பர் வரை இருந்த நிலை ஆனால், இந்த ஆண்டு முதல் இந்நிலை தலைகீழாக மாறி இருக்கிறது.
தமிழர்கள் என்று கூறவே பெருமையாக உள்ளது. சாதியால் அடித்துக்கொள்வதைப் பார்க்கும் போது மட்டும் இழிவாக இருக்கிறது.
விழிப்புணர்வு அடைந்த மக்கள்
பக்கத்து நகரத்துக்குப் பிரச்சனை என்றாலே நமக்கு என்ன என்று இருந்த சமூகம் தற்போது ஜல்லிக்கட்டை தொடர்ந்து நெடுவாசலுக்கு வெடியாய் வெடிக்கிறார்கள்.
போராட்டம் என்றால் காவல்துறை அலறியடித்து மெரினாவில் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
முன்பெல்லாம் போராட்டம் நடத்தவே எவரும் வரமாட்டார்கள் ஆனால், இன்றோ போராட்டம் நடத்த அனுமதி கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
நடிகர்களுக்காகச் சண்டைப்போட்டுக்கொண்டு இருந்த மீம் தளங்கள் தற்போது விவசாயிகளுக்கும், சமூகப் பிரச்சனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டன.
அப்படியும் அடித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள் அவர்களை விட்டுத் தள்ளுங்கள்.
“சுசி லீக்ஸ்” வந்த போது துவக்கத்தில் தடுமாறினாலும் உடனே சுதாரித்துக் கொண்டார்கள், பாராட்டப்பட வேண்டிய செயல்.
சீமைக் கருவேல மரம் தண்ணீரை அழிக்கிறது என்று தெரிய வந்து பல வருடங்களாகக் கண்டு கொள்ளாமல் இருந்த மக்கள் தற்போது அதி தீவிரமாகக் களத்தில் இறங்கி அழிக்கிறார்கள்.
ஏரி குளங்களைத் தன்னார்வலர்கள், பொது மக்கள் என்று அனைவரும் இணைந்து சுத்தம் செய்கிறார்கள், தூர் வாருகிறார்கள்.
Read: ஏரி குளம் தூர்வாருவது எளிதல்ல!
கோக் பெப்சியை ஒழித்தே விட்டார்கள். எதோ அந்த நேரத்துப் பரபரப்பு என்று நினைத்து உதாசீனப்படுத்தியவர்கள் தலையில் தமிழக மக்கள் அனைவரும் இடியாய் இறக்கினார்கள்.
குறிப்பாக இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் நம்பிக்கையளிக்கிறார்கள்.
வெளிநாடு / வெளி மாநிலம்
வெளிநாடு சென்றால் தமிழ்நாடு பற்றியே கவலைப்படாதவர்கள் தற்போது இங்கே உள்ளவர்களுக்கு ஈடாக அவரவர் இடங்களில் போராடுகிறார்கள்.
மற்ற மாநில மக்கள் எல்லாம் “எப்படித் தமிழர்களுக்கு மட்டும் இத்தனை நாடுகளில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள்?! திரள்கிறார்கள்?!” என்று நிச்சயம் குழம்பி இருப்பார்கள்.
இந்தியா முழுக்க உலகம் முழுக்க.. இது வரை கேள்விப்பட்டு இராத நாடுகளில் இருந்தெல்லாம் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
இதையெல்லாம் காணும் போது மிகப்பெருமையாக இருக்கிறது. “இவ்வளவு நாளா எங்கய்யா போனீங்க?!” என்று தான் தோன்றுகிறது.
சமீபத்தில் கூட டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் இந்திய தூதரகம் முன்பு தமிழர்கள் கூடிப் போராட்டம் நடத்தினார்கள்.
இதெல்லாம் கடந்த வருடத்தில் நினைத்துப் பார்த்து இருக்க முடியுமா?
ஐடி துறை
ஐடி துறையில் உள்ளவர்கள் மக்கள் பிரச்சனைகளுக்காக, ஜல்லிக்கட்டுக்காகப் போராட மாட்டார்கள் என்று நினைத்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தார்கள்.
இந்தியாவிலேயே களத்தில் இறங்கி போராடிய ஐடி துறையினர் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே!
விவசாயத்தையும் விவசாயிகளையும் கண்டு கொள்ளாமல் இருந்த சமூகம் தற்போது அவர்களுக்காகக் கொந்தளிக்கிறது. மாணவர்கள் அனைத்து இடங்களிலும் திரள்கிறார்கள்.
மாற்றங்கள் துவங்கியது
சமீபமாகப் போராட்டங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால் ஜனவரியில் இருந்து தினம் தினம் போராட்டம் என்றளவில் தான் உள்ளது.
இதற்குக் காரணம், இது வரை தூங்கிக்கொண்டு இருந்த விசயங்களுக்கு எல்லாம் மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். எனவே, எண்ணிக்கை அதிகமாக உள்ளது அவ்வளவே!
இதே முன்பாக இருந்தால், நெடுவாசல், பெப்சி கோக் போன்றவற்றுக்கு எந்தப் பரபரப்பும் இல்லாமல் அமுங்கி இருக்கும் அல்லது அமுக்கப்பட்டு இருக்கும்.
இனி மக்களை முன்பு போல ஏமாற்ற முடியாது. மக்களும் எனக்கு என்ன? என்று இருக்கப்போவதில்லை.
இனி எந்தத் தலைவர் வந்தாலும் மக்களை நினைத்துப் பயப்பட்டுத் தான் ஆக வேண்டும். மக்கள் ஆட்சியாளர்களைப் பார்த்துப் பயப்பட்ட காலம் முடிந்து விட்டது.
இனி ஜெ கலைஞர் போன்ற ஆளுமைத்திறன் கொண்ட தலைவர்கள் வரப்போவதில்லை, அப்படியே வந்தாலும் இவர்கள் அளவுக்குக் கட்டுப்படுத்த முடியாது.
தமிழக மக்கள் மாறினாலும் நமக்கு ஒரு திறமையான தலைவர் இல்லை என்பது சோகமான ஒன்று. இதற்கும் நாமே காரணம் என்பதும் அதை விட வருத்தமான செய்தி.
மக்கள் எவ்வளவு தான் சிறப்பாக இருந்தாலும் வழிகாட்டியும் வழிநடத்துபவரும் சரியில்லை என்றால், முழுப் பயனையும் அடைய முடியாது.
எதிர்காலம் எப்படி இருக்கும்?
எதிர்காலம் எப்படி இருக்கும் என்று புரியவில்லை. தமிழர்களை அடக்கினால் உலகம் முழுக்க எதிர்ப்பு வரும் என்பதை அனைவரும் உணர்ந்து இருப்பார்கள்.
இது எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத பெருமை!
மக்கள் தற்போது தான் தங்கள் தவறுகளை உணர்ந்து இருப்பதால், இனி வரும் காலங்களில் இது போலப் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கும்.
“என்னடா! இப்படி எப்போது பார்த்தாலும் தமிழகம் ரணகளமாகவே இருக்கிறதே!” என்று சலித்துக்கொள்ளாதீர்கள். இது அவசியமான ஒன்று.
தற்போது நம் உரிமைக்காகப் போராடவில்லை என்றால், எதிர்காலத்தில் போராட மக்கள் இருப்பார்கள் ஆனால், இயற்கையும், விவசாயமும், ஏரி, குளங்களும், கனிம வளங்களும், ஆற்று மணலும், தண்ணீரும், தமிழ் மொழியும் இருக்காது!
தாமதம் தான் என்றாலும்.. Better Late Than Never.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
போராடுங்கள். ஆனால் அதேசமயம் தனிமைப்பட்டு விடக்கூடாது. நம்முடைய உரிமைகளை அனைத்து மொழியினருக்கும் ஆக்க பூர்வமாக தெரிவித்து ஒன்றிணையுங்கள்.