திக, திமுக, காங், கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் விஸ்வகர்மா திட்டம் (விஸ்வகர்மா யோஜனா) குலக்கல்வியை வளர்ப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அது சரியா என்று பார்க்கும் முன் திட்டத்தைப் பற்றிப் பார்ப்போம்.
விஸ்வகர்மா திட்டம்
விஸ்வகர்மா ஜெயந்தி நாளான செப்டெம்பர் 17, 2023 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஸ்வகர்மா திட்டத்தைத் துவங்கி வைத்தார்.
கைவினை கலைஞர்கள் மற்றும் வழக்கொழிந்து வரும் பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கவும் விஸ்வகர்மா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமைப்பு சாரா தொழில் செய்பவர்களான இவர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா வரப்பிரசாதமானது.
₹13,000 கோடி நிதி இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் இத்திட்டத்தில் பயன் பெறலாம்?
- தச்சு வேலை செய்பவர்
- முடி திருத்துபவர்
- கொத்தனார்
- பூ மாலை தொடுப்பவர்
- சலவைத் தொழிலாளி
- தையல்காரர்
- ஆயுதம் செய்பவர்
- பூட்டு தயாரிப்பவர்
- மீன் வலை செய்பவர்
- சிற்பம் செய்பவர்
- கூடை, பாய், துடைப்பம், கயிறு உற்பத்தியாளர்கள்
- பொற் கொல்லர்
- சுத்தியல் கருவி செய்பவர்
- பானை செய்பவர்.
- செருப்பு தைப்பவர்
- கல் உடைப்பவர்
- பொம்மை தயாரிப்பவர்
- படகு தயாரிப்பவர்
என்ன சிறப்புகள்?
₹3,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. முதலில் 1 லட்சம் 18 மாதங்களுக்கு வழங்கப்படும்.
பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வழங்கப்படுகிறது.
கடன் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது, இதற்கு அடமானம் தேவையில்லை.
கடனைச் சரியாகத் திரும்பச் செலுத்துவதன் மூலம் இரண்டாம் கட்ட கடன் இரண்டு இலட்சம் வழங்கப்படும். இதற்கு முந்தைய பரிவர்த்தனை மின்னணு பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்.
மிகக்குறைந்த 5% வட்டியுடன் (நான்கு வருடங்களுக்கு) கடன் மற்றும் ₹15,000 ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது.
செலுத்தாமல் ஏமாற்றினால், கடன் திரும்ப வழங்கப்படாது.
தேவைப்படும் ஆவணங்கள்
- பாஸ்போர்ட் அளவு நிழற்படம்
- ஆதார் அட்டை எண், பான் அட்டை எண்
- நியாயவிலைக்கடை அட்டை
- மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
- வசிப்பிட சான்றிதழ்
- சாதிச் சான்றிதழ்
- வங்கிக் கணக்கு (வங்கிக் கணக்கு இல்லையென்றால், ஜன்தன் வங்கிக் கணக்கு அல்லது வேறு கணக்கு துவங்க வேண்டும்)
விஸ்வகர்மா திட்டத்தில் இணைய மேற்கூறியவற்றில் இல்லாத ஆவணங்களுக்கு வங்கியில் மேல் விளக்கங்கள் பெறலாம்.
இணையம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அனைவரிடமும் கொண்டு செல்லவும் ஊக்குவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு –> https://pmvishwakarma.gov.in/Home/FAQ
அரசுப் பணியில் உள்ளவர் அல்லது அவரது குடும்பத்தில் உள்ளவர் விண்ணப்பிக்க முடியாது.
செயல்படுத்துவது யார்?
திட்டத்தை, நிதியை மத்திய செயல்படுத்தினாலும், மாநில அரசின் உதவியோடு இத்திட்டம் பயனாளர்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
பயனாளர்கள் நேரடியாக வங்கியை அணுகி, விவரங்களைக் கொடுத்தும் கடனைப் பெறலாம்.
30 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தால் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கூறிய விஸ்வகர்மா திட்டம் கட்டாயமல்ல. விருப்பப்படுகிறவர்கள் உதவி பெறலாம், தேவையில்லையென்றால் தவிர்க்கலாம்.
திக, திமுக, காங், கம்யூனிஸ்ட், விசிக எதிர்ப்பதேன்?
குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்த போது, இது மக்களை அடிமைப்படுத்தி, வளர விடாமல் அதே தொழிலையே செய்ய வைக்கக் கொண்டு வரும் திட்டம் என்று திராவிடக் கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்டது.
இதனால், கடும் எதிர்ப்பு காரணமாக குலக்கல்வி திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது ‘நடுவண் அரசு திரும்ப அதே குலக்கல்வியை திணிக்கிறது, அம்மக்களை வேறு தொழிலுக்குச் செல்ல விடாமல், அதையே செய்ய வைக்க முயல்கிறது‘ என்று எதிர்க் கட்சிகள் எதிர்க்கின்றன.
18 வயதுக்கு மேற்பட்டவர் இத்திட்டத்தில் கடன் பெறலாம் என்பதால், படிப்பைத் துறந்து இதே தொழிலிலேயே தொடர நிர்ப்பந்திக்கிறது என்பதே விமர்சனம்.
இது ஏன் முட்டாள்தனமான விமர்சனம்?
முந்தைய காலத்தில் குலக்கல்வியை வளர்க்க இவ்வாறு செய்கிறார்கள் என்று விமர்சனம் வைத்தால், அப்போது இருந்த சூழ்நிலைக்கு அது ஒருவேளை ஏற்புடையதாக இருக்கலாம்.
ஆனால், தற்போது காலங்கள் மாறி விட்டது.
இழிவான, புறக்கணிக்கப்பட வேண்டிய, தவிர்க்க வேண்டிய தொழில் என்பது இங்கே எதுவுமே இல்லை. நேர்மையாகத் தொழில் செய்கிறோமா, செய்யும் தொழில் இலாபம் கிடைக்கிறதா என்பதே தற்போது முக்கியம்.
படிப்புக்கும் தொழிலுக்கும் தொடர்பு கட்டாயமில்லை.
எந்தத் தொழிலும் அது லாபகரமாக, நேர்மையாக இருந்தால், செயல்படத் தடையில்லை.
- MBA படித்த ஒரு மாணவன், சைக்கிளில் டீ விற்று இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆகியுள்ளார்.
- IIT முடித்த பெண்கள் இருவர் மாடு விற்பனை தொழிலில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்து வருகிறார்கள்.
- இன்று பிளம்பர், மின்சார பழுது பார்ப்பவர்களுக்கான தேவைகள் அதிகரித்து, இலாபம் பெறுகிறார்கள்.
- கைவினை கலைஞர்களின் பொருட்களைப் பெற்று அமேசான், ப்ளிப்கார்ட் போன்று நிறுவனங்களில் விற்றுப் பல இலட்சம் சம்பாதிக்கிறார்கள்.
- இவ்வளவு ஏன்! கிராமத்தில் கேட்பாரற்று கிடக்கும் வரட்டியை இணையத்தில் விற்ற விவரங்கள் வெளியாகிப் பலரை வியப்புக்குள்ளாக்கியது.
- செருப்பு தயாரித்து விற்பது மிகப்பெரிய வருமானம் ஈட்டும் தொழிலாக மாறிக் காலங்கள் ஆகிறது.
எவரும், எத்தொழிலையும், நேர்மையாகத் தொடர இங்கே யாரும் தடை விதிக்க முடியாது. அதோடு உதவுபவர்களையும் தடுக்க முடியாது.
அவர்களுக்கு அவர்கள் செய்யும் தொழில் இலாபம் தருகிறது, அதற்கு நடுவண் அரசுத் திட்டம் உதவுகிறது என்றால், இவர்களுக்கு என்ன பிரச்சனை?
மாறி வரும் காலம்
இவ்வாறு கூறி, சம்பாதித்துக்கொண்டு இருந்தவர்களின் தொழிலைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுத்துக்கொண்டன.
- மேற்கூறிய பிளம்பர் வேலையை App ல் கொடுத்து இலாபம் பெறுகிறார்கள்.
- முடி திருத்தும் கடையை அழகு நிலையமாக மாற்றி Chain shops என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டன.
- வரட்டியைப் பல நூறு ரூபாய்க்கு விற்று நிறுவனங்கள் இலாபம் பார்க்கின்றன.
- கைவினை பொருட்களுக்குச் சொற்ப பணத்தைக் கொடுத்து இணையத்தில் அதே பொருளை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்று இலாபம் சம்பாதிக்கிறார்கள்.
இதே போல மேற்கூறிய 18 தொழில் செய்பவர்களின் திறமையைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தி, இவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
கால மாற்றத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சியைத் தவிர்க்க முடியாது ஆனால், முயன்றால் முன்னேற, வளர முடியும் என்றால், கிடைக்கும் வாய்ப்பை விஸ்வகர்மா மக்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது?!
துரோகம்
ஏராளமான வாய்ப்புகளை விஸ்வகர்மா திட்டம் கொடுக்கும் போது, அதைக் குறை கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது, இம்மக்களுக்குச் செய்யும் அநீதி.
இம்மக்களை வளர விடாமல், அதே நிலையில் வைத்து, தான் மட்டும் இதன் மூலம் அரசியல் செய்து சம்பாதிக்க நினைப்பது மோசமான எண்ணம்.
இவர்களைப் போல ஊழல் செய்து, பொய் வாக்குறுதி கொடுத்து, லஞ்சம் பெற்று அரசியல் நடத்துவது தான் இழிவானது, நேர்மையாக தொழில் செய்வதல்ல.
இவ்வளவு அக்கறையாகப் பேசும் கட்சிகள் இதுவரை விஸ்வகர்மா மக்களின் முன்னேற்றத்துக்கு, வளர்ச்சிக்குச் செய்தது என்ன?! அவர்களின் வாழ்வை எந்த வகையில் முன்னேற்றியுள்ளார்கள்?!
இவர்களும் எதுவும் செய்ய மாட்டார்கள் ஆனால், செய்பவர்களையும் குறை கூறி தடுப்பார்கள்.
விஸ்வகர்மா திட்டம் மிகச் சிறப்பானது. புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்தும் அரசியல் செய்வது, தன்னை நம்பிய மக்களுக்குச் செய்யும் துரோகம் மட்டுமே!
விஸ்வகர்மா திட்டத்தை மக்கள் பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறேன்.
இத்தள கட்டுரைகள், செய்திகள், தொழில்நுட்பத் தகவல்கள் ஆகியவற்றை எளிதாகப் பெற –> giriblog WhatsApp Channel
தொடர்புடைய கட்டுரை
எந்த புதிய திட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்படும் போதும், அதை முறையாக ஆவணம் செய்து அதன் நிறை, குறைகளை தெளிவு படுத்தி, சாமானிய மக்களுக்கு பயன்படும் வகையில் அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அந்தந்த மாநில அரசுக்கு உண்டு என்பது என் கருத்து..
திட்டத்தை முழுமையாக ஆராயாமல் ஏதோ கடமைக்கு எதிர்க்கவேண்டும் என்ற கட்டாயத்தில் எதிர்ப்பது சரியில்லை.. முதல்வன் படத்தில் ரகுவரன்/ அர்ஜுன் இருவருக்கும் இடையில் நடக்கும் நேர்காணலில் உலகவங்கி கடனை தள்ளுபடி செய்ததை அர்ஜுன் வினவும் போது, அதற்கு 1008 CONDITION உலகவங்கி போட்டதாக ரகுவரன் சொல்லுவார்.. அது போல நம் அரசியல் வாதிகள் காரணத்தை வெளிப்படையாகவே மக்களுக்கு எடுத்து கூறலாம் அல்லவா…
தற்போதைய சூழலில் அனைவர்க்கும் வேலைவாய்ப்பு என்பது எட்டா கனியாக உள்ளது.. இது போன்ற சுழலில் இந்த வாய்ப்புகள் ஒரு வரப்பிரசாதமாகவே எண்ணுகிறேன்.. குலத்தொழிலை பல ஆண்டுகளுக்கு முன்பு எதிர்த்தார்கள் என்றால் அந்த சூழ்நிலை முற்றிலும் வேறு.. இன்னும் அதையே காரணம் காட்டி எதிர்ப்பது சரியானது அல்ல..
@யாசின்
“எந்த புதிய திட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்படும் போதும், அதை முறையாக ஆவணம் செய்து அதன் நிறை, குறைகளை தெளிவு படுத்தி, சாமானிய மக்களுக்கு பயன்படும் வகையில் அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அந்தந்த மாநில அரசுக்கு உண்டு என்பது என் கருத்து.”
சரியா சொன்னீங்க! ஆனால், மாநில அரசு தன் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்வது தான் நடக்கிறது.
மாநில ஆளுங்கட்சியை விடுங்க, தமிழக பாஜகவே இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்வதில்லை. இது ஆகப்பெரிய கொடுமை.
தற்போது அண்ணாமலை வந்த பிறகு இதில் மாற்றங்கள் வந்துள்ளன, பலருக்கும் இத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கிடைத்துள்ளது.
“திட்டத்தை முழுமையாக ஆராயாமல் ஏதோ கடமைக்கு எதிர்க்கவேண்டும் என்ற கட்டாயத்தில் எதிர்ப்பது சரியில்லை.”
இது தான் அரசியல். பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போதும் இதையவே செய்தது.
ஒரே வித்யாசம் நல்ல திட்டமாக இருந்தால், ஆளுங்கட்சியான பிறகு அதைப் பாஜக மேலும் மேம்படுத்துவார்கள். திமுக ஆளுங்கட்சியான பிறகும் ஈகோவுக்காக தொடர்ந்து எதிர்ப்பார்கள்.
“குலத்தொழிலை பல ஆண்டுகளுக்கு முன்பு எதிர்த்தார்கள் என்றால் அந்த சூழ்நிலை முற்றிலும் வேறு.. இன்னும் அதையே காரணம் காட்டி எதிர்ப்பது சரியானது அல்ல.”
இதுவே என் கருத்து.