பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது அதில் இருந்து 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன்.
அதில் இருந்து முதல் கட்டுரை
உலகில் இலவசமாகக் கிடைப்பது அறிவுரை தான் 🙂 . அதற்கு மட்டும் பஞ்சமே இல்லை.
அதுவும் நம்முடைய நிலைமை சரியில்லை என்றால், தொலைந்தோம். வருகிறவர் போகிறவர் எல்லாம் அறிவுரை கூறி படுத்தி எடுப்பாங்க. Image Credit
எடுத்துக்காட்டுக்கு, வேலையில்லை என்றால், “அங்கே போய்ப் பாரு.. இந்தக் கம்பெனியை பார்த்தியா.. Hindu Classified பார்த்தியா, அங்க walk-in இருக்கு“ன்னு அதட்டுவாங்க.
நல்லதுக்குத் தான் சொல்றாங்க என்றாலும், அதில் ஒரு ஆணவம் இருக்கும்.
எனக்கு 1998 ல் வேலை கிடைக்காமல் இருந்த போது ஊருக்கு சென்றால், இதைப் பற்றியே கேட்பாங்க (எங்க வீட்டுல இல்லை) என்று ஆறு மாதங்கள் ஊருக்கே செல்லவில்லை 🙂 .
சரி.. அறிவுரை எப்படிக் கூறலாம் என்று பார்க்கலாம்
அறிவுரை கூறும் போது மற்றவர் மனம் புண்படாத மாதிரி கூற வேண்டும்.
அறிவுரை பெறுபவரும் நல்ல நிலையில் தான் இருந்து இருப்பார்.. எதோ அவருடைய நேரம், சூழ்நிலை ஒரு சிக்கலான நிலைமைக்கு வந்து இருக்கலாம்.
அதனால், “நாம பெரிய ஆளு.. என்ன கூறினாலும் பாதிக்கப்பட்டவர் பொறுமையாகக் கேட்க வேண்டும்” என்று திமிராகப் பேசக்கூடாது.
உங்களுக்கு உண்மையிலேயே அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதைப் பக்குவமாகக் கூறி அவர் உணரும்படி செய்ய வேண்டும்.
நேரம் & சூழ்நிலை
எதற்கும் நேரம், சூழ்நிலை மிக மிக முக்கியம்.
ஒரு விஷயத்தை ஒருவரிடம் பேச வேண்டும் என்றால், அதற்குத் தகுந்த சூழ்நிலை உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
தோதான சூழ்நிலை இருந்தால் மட்டுமே அது குறித்துப் பேச வேண்டும்.
ஒருத்தர் கொல காண்டில் இருக்கும் போது அவருக்கு அறிவுரை சொன்னால்… “போடாங்க..“ன்னு அசிங்கமா திட்டி விடுவார் 🙂 .
அதே போல ஒருவர் பிரச்சனைகளால் நொந்து இருக்கும் போது, நீங்களும் அங்கே போய் ஆறுதல் கூறுகிறேன் பேர்வழி என்று பாதிக்கப்பட்டவரிடம் ஒப்பாரி வைத்தால்..
“யப்பா சாமி.. என் பிரச்சனையை நானே பார்த்துக்கிறேன் ஆளை விடு” என்று கூறி விடுவார்.
சூழ்நிலை சரியில்லாத நேரத்தில் அறிவுரை கூறினால், அவர் ஆத்திரம் அடைந்து “நீயெல்லாம் எனக்குப் புத்தி சொல்ல வந்துட்ட..!” என்று உங்களைத் திட்டி விடலாம்.
பிறகு “என்னப்பா… நல்லது சொல்லலாம்னு போனா காட்டுக் கத்து கத்துறா(ன்)” என்று புலம்பணும் 🙂 .
எடுத்துக்காட்டுக்கு, உங்கள் வாழ்க்கை துணையிடம் அவரது தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால், சரியான சூழ்நிலை இருக்க வேண்டும்.
இல்லையென்றால் பிரச்னை இன்னும் அதிகமாகும் அல்லது எவ்வளவு விளக்கியும் இறுதியில் “எல்லாக் கோட்டையும் அழி(ங்க)” என்பது போல ஒரு கேள்வி கேட்டு கிறுகிறுக்க வைக்கலாம்.
ஒருவர் மன பலம் இழந்து, பிரச்சனைகளால் மனம் ஒடிந்து இருக்கும் போது அவரிடம் மன தைரியம் கூறி, அவர் நம்பிக்கை, உற்சாகம் அடையும் படி பேசலாம்.
சுருக்கமாக, எதையும் சரியான சூழ்நிலையில் பக்குவமாக, ஆறுதலாகக் கூறி அதனால் பாதிக்கப்பட்டவர் தெளிவு பெற்றால், இருவருமே வெற்றிப் பெற்றதாக அர்த்தம்.
தொடர்புடைய கட்டுரை
பொன்னான நிகழ்காலம் – மகிழ்ச்சியின் இரகசியம்
பின் குறிப்பு
“கிரி, சச்சிதானந்தா சுவாமி இப்படியா எழுதி இருக்காரு?“ன்னு பயந்துடாதீங்க 😀 .
அவர் பொறுப்பாகத் தான் எழுதி இருக்காரு, நான் தான் கொஞ்சம் “மானே தேனே பொன்மானே” போட்டு எழுதி இருக்கிறேன் 🙂 .
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, சிறு வயதிலிருந்து எல்லா முடிவுகளும் சுயமாக எடுத்ததன் விளைவு, தற்போது வரை யாரிடமும் ஆலோசனைகள் கேட்பது இல்லை.. குறிப்பாக மனைவியிடம்.. இதன் விளைவாகவே மனைவிக்கும், எனக்கும் சில நேரங்களில் பூகம்பம் வெடிக்கும்.. சில சமயங்களில் நண்பன் சக்தியிடம் ஆலோசனை கேட்பதுண்டு.. அதுவும் ஆலோசனை மட்டும் தான்.. முடிவு என்னுடையது தான்..
இதில் எதுவும் ஆணவம் / திமிரோ இல்லை.. இலாபமோ, நட்டமோ என்னோடவே போகிவிடும்.. யாரையும் குறை கூற வேண்டிய அவசியம் இல்லை.. “உன் வாழ்க்கை உன்கையில்” என்ற மந்திரம் தான்…ஆனால் தற்போது என்னுடைய முடிவுகளில் தடுமாற்றம் தெரிகிறது.. தீர யோசித்து தான் முடிவுகளை எடுக்கிறேன்.. இருப்பினும் தடுமாற்றம் ஏற்படுகிறது.. இது ஒரு வித சோர்வான மனநிலையை கொடுக்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
யாசின் நீங்கள் கூறுவது போல ஆலோசனை கேட்கலாம் ஆனால், முடிவு நாம் எடுக்க வேண்டும்.
நான் இப்பொழுது அந்த மன நிலையில்தான் உள்ளேன் . முள்ளும் மலரும் காளி போல வேலை செய்யுமிடத்தில் ஈகோ , மனப்பதட்டம் ஏற்பட்டு ஒரு நிலையில் இல்லாமல் இருக்கிறேன்.
சரி மனா பதட்டத்தை சரி செய்யலாம் என்று மனதின் மையம் – ஈரோடு கிளினிக் சென்டர்-கு சென்றால் அங்கே பணத்தையும் பறித்துக்கொண்டு என்னையும் அவமதித்து அனுப்புகிறார்கள். சுய தொழில் -ஏ தீர்வு ஏன்று சிந்தித்தால் ஏன்ன தொழில் செய்வது என்று குழப்பமாக உள்ளது.