Super Deluxe [2019]

3
Super Delux Movie Poster

திருநங்கை விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில், மூன்று வயசு பசங்க, காவல் அதிகாரி பகவதி பெருமாள், ரம்யா கிருஷ்ணன் மிஷ்கின் ஆகியோரை வைத்துத் தனித்தனித்தனியாகப் பின்னப்பட்டு, அவர்கள் கதையில் எப்படித் தொடர்புடையவராகிறார்கள் என்பதே Super Deluxe கதை. Image Credit

Super Deluxe

இயக்குநர் தியாகராஜா குமாரராஜா “ஆரண்ய காண்டம்” படம் வெளியாகி அப்போது கவனிக்கப்படாமல் அதன் பிறகு பலரால் தற்போது வரை பாராட்டப்பட்டு வரும் படும்.

எட்டு வருடங்களாக இவரைப் பலரும் ஆகோ ஓஹோன்னு உசுப்பேத்தி அவரை வேறு ஒரு இடத்துக்கு உயர்த்தி வைத்தது அவரை வேறு ஒரு மனநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது என்பது இப்படத்தைப் பார்த்தால் புரிகிறது.

ஒரு நல்ல இயக்குநரை அதிகப்படியாகப் புகழ்ந்தால், அவர் என்ன மாதிரி ஆகலாம் என்பதற்குச் சூப்பர் டீலக்ஸ் படம் ஒரு எடுத்துக்காட்டு.

படத்தில் லாஜிக் இடறல்கள் ஏராளம், அதோடு தேவையற்ற திணிக்கப்பட்ட, தவிர்க்க வேண்டிய காட்சிகள்.

திருநங்கை

விஜய் சேதுபதி எப்படி இது போல ஒரு திருநங்கை கதாப்பாத்திரத்தைத் தேர்வு செய்தார்? என்பதே புரியவில்லை.

கதாப்பாத்திரத்தைக் கூறவில்லை, அந்தக் கதாப்பாத்திரம் திருநங்கைகளையே கேவலப்படுத்தும்படியுள்ளது அதைக் கூறுகிறேன்.

தற்போது தான் திருநங்கைகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சமூகத்தின் பார்வையில் மாற்றம் பெற்று ஒரு நல்ல நிலைக்கு வர முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களைத் திரும்ப 20 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்வது போல உள்ளது கொடுமை.

சத்தியமா ஜீரணிக்கவே முடியலை, அவ்வளவு கேவலப்படுத்தி இருக்கிறார்கள் 🙁 .

இதில் பல திணிக்கப்பட்ட காட்சிகள், அவர்களை இது மாதிரி தான் காட்ட வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லாத போது ஏன் இப்படி?

ராசுக்குட்டி

விஜய் சேதுபதி, காயத்ரி மகனாக வரும் ராசுக்குட்டி என்ற சிறுவன் அசத்தலான நடிப்பு. அதிலும் அவன் கதவை திறந்து வர கொடுக்கும் உடல்மொழிகள், கலக்கல்டா கண்ணா!

இறுதியிலும் மனசை தொட்டுட்டான். சில வயதுக்கு மீறிய வசனங்களை இவன் நடிப்புக்காக மன்னித்து விடலாம்.

படம் எந்தக் காலத்தில் நடக்கிறது என்றே புரியவில்லை!

படத்தில் வரும் காட்சிகளைச் சம்பவங்களைச் சுற்றுசூழலை வைத்துப் பார்த்தால், 80 இறுதி 90 துவக்கம் போல உள்ளது ஆனால், மொபைல் வருகிறது, CCTV பேச்சு வருகிறது, ஆபாச பட CD வருகிறது ஒன்றும் புரியவில்லை.

விருந்தினர்கள் இருக்கும் சமயத்திலேயே சமந்தா பஹத் பாசில் செய்வதெல்லாம், முட்டாள்தனமாக உள்ளது. யாரும் பார்க்க மாட்டார்களா? சந்தேகப்பட மாட்டார்களா?

பகவதி பெருமாள்

காவல் அதிகாரி பகவதி பெருமாள் ஒரு எரிச்சலான கதாப்பாத்திரம் ஆனால், நடிப்புச் செமையாக உள்ளது.

ஒரு நகைச்சுவை நடிகரை இப்படி ஒரு சைக்கோ வில்லத்தனமான நடிகராகக் காட்டி அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் இயக்குநர்.

சிரித்தே பயமுறுத்துகிறார். படம் பார்ப்பவர்களுக்கு இவரைப் போட்டு தள்ளுனும் போலக் கோபம் வந்தால், இவரது நடிப்பு வெற்றி.

வயசு பசங்க செய்வதெல்லாம் பாய்ஸ் படத்திலேயே பார்த்து விட்டதால், பெரிய அதிர்ச்சியில்லை அதிலும் ஏலியன் அது இது என்று தலை சுற்றி விட்டார்கள்.

படத்தில் உடனே பிடித்தது என்றால், ஒளிப்பதிவு தான். செமையா இருக்கு. ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை அசத்தலான ஒளிப்பதிவு. வண்ணமயமாக ஒரு மாதிரி அட்டகாசமாக இருந்தது.

இதில் பாதி வினோத் பாதி நீரவ்ஷா என்று நினைக்கிறேன்.

பின்னணி இசை யுவன் ரசிக்க வைத்து இருக்கிறார். மனதில் நிற்கும்படியான இசையாக எனக்குத் தோன்றவில்லை ஆனால், அந்தச் சமயத்தில் ரசிக்கக்கூடிய இசையாக இருந்தது.

இப்படம் அனைவருக்கும் ஏற்ற படமில்லை எனவே, யோசித்துச் செல்லவும்.

எனக்குப் படம் பிடிக்கவில்லை.

Directed by Thiagarajan Kumararaja
Produced by Tyler Durden and Kino Fist, East West Dream Works, Alchemy Vision Workz
Screenplay by Mysskin, Nalan Kumarasamy, Neelan K. Sekar, Thiagarajan Kumararaja
Story by Thiagarajan Kumararaja
Starring Vijay Sethupathi, Fahadh Faasil, Samantha Akkineni, Ramya Krishnan
Music by Yuvan Shankar Raja
Cinematography P. S. Vinod , Nirav Shah
Edited by Sathyaraj Natarajan
Distributed by YNOTX
Release date 29 March 2019
Running time 176 minutes

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி, உங்க விமர்சனமும் நான் படித்த செய்திகளில் இருந்த விமர்சனமும் நேர் எதிராக இருக்கிறது.. உங்களை கண்டிப்பாக நம்புகிறேன்.. விஜய் சேதுபதி சமூக பொறுப்பும், அக்கறையும் கொண்ட நடிகர்.. ஆனால் எப்படி இதுபோல படங்களில் நடிக்க சம்மதித்தார் என்பது புரியவில்லை.. முன்பு படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.. தற்போது இல்லை..

    போன வாரம் களத்தூர் கிராமம் என்ற படம் பார்த்தேன்.. படம் 2017 இல் வந்து இருக்கிறது.. வெளியான போது எனக்கு தெரியவில்லை.. படம் சூப்பராக இருக்கிறது.. படத்தின் காட்சி அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது.. உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.. ஓய்வு நேரத்தில் பார்க்கவும்..

    இதில் நடிகர் கிஷோர் நடித்துள்ளார்.. பொதுவாக கிஷோரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒரு நடிகன் என்பதை தாண்டி விவசாயத்தின் மீது அவர் வைத்திருக்கும் காதல் அளவில்லாதது.. அவரோட குரலும் ரொம்ப பிடிக்கும்.. நமக்கு ஒருத்தர ரொம்ப பிடிக்கும் போது, அவங்களோட ஒவ்வொரு அசைவும் நமக்கு பிடித்ததாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
    பின்வரும் காணொளியை பார்க்கவும்..
    https://www.youtube.com/watch?v=x9ig03DsyjI

  2. அண்ணா எப்படி இருக்கீங்க..ரொம்ப நாள் ஆச்சு உங்க கிட்ட பேசி…சில பல குடும்ப சிக்கல்களில் இருந்ததால் உங்கள் பதிவுக்கு என்னால் கமெண்ட்ஸ் போடமுடியவில்லை..ஆனால் முடிந்த அளவுக்கு உங்கள் பதிவை படித்து கொண்டுதான் வருகிறேன் அண்ணா..

    நான் கடந்த சனிக்கிழமை தான் சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்தேன்…எனக்கு பிடித்து இருக்கிறது….காரணம் நான் படம் பார்த்த சூழ்நிலை..மொக்க படத்தையும் தியேட்டரில் இருந்த சூழ்நிலையால் (நன்றி:
    திரைப்படத்தைப் பார்ப்பது எப்படி? https://www.giriblog.com/how-to-watch-a-movie ) நல்லா என்ஜாய் பண்ணி படம் பார்த்தேன்..

  3. @யாசின் அந்தப்படம் நானும் பார்த்தேன் என்று நினைக்கிறேன். களவு பற்றிய படம் என்று நினைக்கிறேன்.

    @கார்த்தி.. வாய்யா எப்படி இருக்கே.. 🙂 ஆமாம் ரொம்ப மாசமாச்சு.

    படம் பிடித்ததா உனக்கு.. நல்லது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை அதனால் குறை கூற எதுவுமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here