நமக்கு ஏன் பொறுமையில்லை?!

19
நமக்கு ஏன் பொறுமையில்லை

 

ழுத்தாளர் சாரு மக்களின் பொறுமையின்மை பற்றிப் பின்வருமாறு கூறி இருந்தார். நமக்கு ஏன் பொறுமையில்லை என்பதைக் இக்கட்டுரையில் பாப்போம்.

நமக்கு ஏன் பொறுமையில்லை?!

சமீபத்தில் நார்வேயில் வசிக்கும் நண்பர் ஒருவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே ஒரு மாடு சென்றது. Image Credit

அந்த மாடு சாலையைக் கடக்கும் வரை கூடப் பொறுமை இல்லாமல் எல்லா வாகனங்களும் கன்னாபின்னா என்று ஹாரனை அடித்த போது அந்த மாடு மிரண்டு போய்ச் சாலையின் போக்கில் ஓட ஆரம்பித்தது.

உடனே வாகன ஓட்டிகளும் இன்னும் அதிக அளவில் ஹாரனை அடிக்க, மாடு இப்போது இன்னும் கலவரமாகி ஓடியது. சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் சாலையிலேயே அங்குமிங்குமாக ஓடிய மாடு கடைசியில் சாலையைக் கடந்தது.

அவ்வளவு தூரமும் வாகன ஓட்டிகளும் விடாமல் ஹாரனை அடித்துக் கொண்டே இங்கும் அங்கும் கார்களைத் திருப்பிக் கொண்டிருந்தனர்.

பார்ப்பதற்கு ஏதோ ஒரு பைத்திய உலகம் போல் தோன்றியது.

இந்தச் சம்பவம் எனக்குப் பல கேள்விகளை எழுப்பியது. உலகில் பெரும்பாலான நாடுகளில் வாகனம் ஓட்டும் போது ஹாரன் அடிப்பதில்லை. அடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. ஆனால் நம் ஊரில் மட்டும் ஏன் சிவப்பு விளப்பு எரியும் போது கூடப் பின்னால் இருக்கும் நபர் ஹாரனை விடாமல் அடிக்கிறார்?

நமக்கு அருகில் இருக்கும் இலங்கையில் கூட நீங்கள் ஹாரன் சப்தத்தைக் கேட்க முடியாது.

இந்தியாவில் சாலைப் போக்குவரத்து ஒழுங்காக இல்லை என்பது தவிர இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பொறுமையின்மை. மாடு சாலையைக் கடக்கும் வரை ஹாரன் அடிக்காமல் இருக்க முடியவில்லை.

இந்தப் பொறுமையின்மைக்குக் காரணம், மன அழுத்தம். நம் நாட்டில் இன்று மன அழுத்தம் இல்லாதவர்களையே பார்க்க முடிவதில்லை.

மையக் கருத்து

நான்கு கிலோ மீட்டருக்கு மாடு ஓடியது, ஒலி எழுப்பியபடி சென்றார்கள் என்பதும் நம்புகிற மாதிரி இல்லை. சரி! பிரச்சனை அது இல்லை, இவர் கூறிய மையக் கருத்து.

நம் மக்களுக்குப் பொறுமையில்லை என்று சாரு கூறியிருப்பது உண்மை தான். இதைப் பல்வேறு தருணங்களில் கவனித்து உள்ளேன்.

நாம் அனைவருமே கவனித்து இருப்போம் ஆனால், அதோடு வாழப் பழகி விட்டோம்.

இதற்கு என்ன காரணம் என்று யோசித்தும் ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை. இவ்வாறு இருக்கலாம் என்று தோன்றுவதை மட்டும் இங்கே பகிர்கிறேன்.

மன அழுத்தம்

சாரு அவர்கள் கூறுவது போல நம் மக்களுக்கு அதிகளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் நம் நாட்டின் சூழ்நிலை மற்றும் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனை.

அடிப்படை தேவைகளுக்கே தினமும் போராட்டமாக உள்ளது. இதோடு எங்கும் லஞ்சம் / ஊழல் என்று சராசரி நபரின் தின வாழ்க்கை திகில் படம் போலவே செல்கிறது.

மக்கள் தொகை

மக்கள் தொகை அதிகம் என்பதால் எதற்குமே ஒரு போட்டி இருந்து கொண்டு இருக்கிறது.

எங்கே சென்றாலும் நீண்ட வரிசை அதில் முந்தும் சிலர், நமக்கான இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற எண்ணம் போன்றவை ஒருவரை இயல்பாகவே அவசரப்பட வைக்கிறது.

எந்த இடம் சென்றாலும் நமக்கு முன்னால் ஒரு பெரிய கும்பல் காத்திருக்கும்.

அதோடு மேலை நாடுகளைப் போலக் கட்டமைப்பு இல்லாததால் ஒழுங்கு இல்லாமல் போவதே பல பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகிறது.

அப்படியே இருந்தாலும் அதற்கும் கூட்டம் / அடிதடி என்பதால் இயல்பாகவே ஒரு போட்டித் தன்மை வந்து பதட்டத்தைக் கூட்டுகிறது.

எடுத்துக்காட்டுக்கு ரயிலில் முன்பதிவு செய்ய இணையத்தில் முறையான வசதிகள் இருந்தாலும் கூட்டம் காரணமாக முதலில் முயற்சிப்பவருக்கே இடம் கிடைக்கிறது.

எனவே, இந்த இடத்தில் சரியான கட்டமைப்பு இருந்தும் கூட்டம் காரணமாக அவசரம் ஏற்படுகிறது. எப்படியாவது பயணச் சீட்டைப் பெற்று விட வேண்டும் என்ற ஆர்வம் விதியை மீற வைக்கிறது.

இவ்வாறு இந்தியாவில் ஒவ்வொரு விசயத்திற்கும் பெரும் கூட்டம் காத்து இருப்பதால் இயல்பாகவே மக்கள் பொறுமையற்றவர்களாகி விட்டனர்.

வளர்ந்த நாடுகளில் குறைவான மக்கள் எண்ணிக்கை / அவர்களின் கட்டமைப்புக் காரணமாக அனைத்தும் அனைவருக்கும் கிடைப்பதால் அவர்களுக்கு அவசரப்பட அவசியமற்றுப் போய் விடுகிறது.

பொறுமையின்மை

தற்போது இருக்கும் சிங்கப்பூரை எடுத்துக்கொண்டால், இங்கே அனைத்தும் அனைவருக்கும் உறுதியாகக் கிடைக்கும். நீங்கள் எப்படி வந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு பேருந்தைத் தவறவிட்டால் அடுத்தப் பேருந்து விரைவில் வருகிறது. ஏற்கனவே வந்த பேருந்தில் கொஞ்சம் நெருக்கினால் நிற்க முடியும்.

ஆனால், அடுத்தப் பேருந்து வருகிறது எனும் போது நெருக்கிச் செல்லத் தேவையில்லை என்ற நிலையாகிறது.

நம் நாட்டில் இந்தப் பேருந்தை விட்டால் அடுத்தப் பேருந்து வராது அல்லது அடுத்தப் பேருந்தும் இதே போலக் கூட்டமாக இருக்கும்.

எனவே, ஒரு நிலையற்ற தன்மை இருப்பதால் கிடைத்த பேருந்தில் சென்று விட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

இதுவே ஒரு அடிதடியை / பொறுமையின்மையை அந்த இடத்தில் ஏற்படுத்துகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை அழுத பிள்ளை பால் குடிக்கும் என்ற பழமொழி தான்.

எனவே, முந்துபவர்களுக்கே இடம் என்பதால் இந்த அடிதடி தொடர்ந்து கொண்டே இருக்கும். இதைத் தடுக்கவே முடியாது.

இந்தச் சூழ்நிலை  மக்களின் சிறு வயதில் இருந்தே பழகி விடுவதால் எங்கே சென்றாலும் அதே எண்ணங்களைப் பழக்கத்தைத் தான் கொண்டு வருகிறது.

சிங்கப்பூரில் இந்தியர்களிடையே இந்த அவசரத்தைக் காணலாம் குறிப்பாக லிட்டில் இந்தியாவில்.

இந்தியர்களிடையே மட்டுமல்ல, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டு மக்களிடையேயும் இதே நிலை தான்.

எஸ்கலேட்டரில் அனைவரும் பொறுமையாக நகர, நம் மக்களிடையே மட்டும் அவசரம் தெரியும். எப்படி அவசரப்பட்டாலும் அனைவரும் சென்றால் தான் நாமும் செல்ல முடியும் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும் மனதிற்குத் தெரிவதில்லை.

பேருந்தே காலியாகத் தான் இருக்கும் 100% இடம் கிடைக்கும் என்று தெரிந்தாலும் ஏறுவதற்குத் தள்ளுமுள்ளாக இருக்கும்.

ஏன்?

சிறு வயதில் இருந்தே அப்படிப் பழகியதால் இங்கே வந்தும் அதே போல எண்ணம் தான் தோன்றுகிறது. சிறு விசயத்திற்குக் கூடச் சண்டை போட்டுக்கொள்வார்கள்.

கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் கூட ஒன்றும் இல்லாமல் போகக்கூடிய பிரச்சனைகளுக்குக் கடும் வாக்குவாதம் செய்வார்கள்.

படித்தவர் / படிக்காதவர் / ஆண்கள் / பெண்கள்  என்று எந்த வித்யாசமும் இல்லை.

சிங்கப்பூரில் பார்க்க நாகரீகமாக இருக்கும் இந்தியர்கள் சிலர் அநாகரீகமாகப் பொது இடத்தில் சண்டை போடுவதை பார்த்து இருக்கிறேன்.

இவை அனைத்துமே பொறுமை இல்லாமல் இருப்பதே காரணம். அதோடு நான் பெரியவன் என்ற ஈகோ.

மற்ற மக்களிடையேயும் இதுபோலச் செயல்களைக் காண முடியும் என்றாலும் ஒப்பீட்டளவில் குறைவு.

பொறுமையின்மைக்கு எளிமையான உதாரணம் என்னவென்றால் சாரு கூறியது போலப் பச்சை விளக்கு வருவதற்குள் பொறுமையிழந்து, முன்னே செல்ல முடியாது என்று நன்கு தெரிந்தும் தொடர்ச்சியாக ஒலி எழுப்பி எரிச்சலடைய வைப்பார்கள்.

இதை நீங்கள் தினம் தினம் அலுவலகம் / வீடு செல்லும் போது எதிர்கொண்டு இருக்கலாம், நீங்களே கூட இதைச் செய்துகொண்டு இருக்கலாம்

சரியாகுமா?

இவை சரியாகுமா என்றால் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இதெல்லாம் தலைமுறை தலைமுறையாக ஜீனிலேயே ஊறிப்போனவை.

அதோடு இந்தியாவில் கட்டமைப்பு எல்லாம் சரியாகி மக்கள் மேம்பட்ட நிலைக்கு வந்த பிறகு தான் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்.

நம்மில் பெரும்பாலனவர்கள் “பாபா” படத்தில் வரும் “இப்போ ராமசாமி” மாதிரி தான். எதாக இருந்தாலும் உடனடியாக நடந்து விட வேண்டும் 🙂 .

இவை எப்போது மாறுவது? இன்னும் சில தலைமுறைகள் சென்றால் ஓரளவு மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறது. அப்போது மக்கள் தொகை எவ்வளவு இருக்கிறதோ!!

தொடர்புடைய கட்டுரைகள்

மன அழுத்தம் எப்படி இருக்கும்?

ஹாரன் சைக்கோக்கள்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

19 COMMENTS

  1. கண்டிப்பா இந்த போஸ்ட நான் ஷேர் செய்றேன் ப்ரோ … 🙂

  2. சரியான அலசல்தான்…..

    சூழ்நிலைகளின் உந்துதல் உடனிருக்கும் மக்களின் தாக்கம் – நமது செயல்களில் வெளிப்படும்.
    பெரும்பாலும் நாம் இதை எப்போதும் சற்று தாமதமாகத்தான் உணர்கிறோம்.

  3. நான் லண்டன் பேருந்தில் அவசரமாக ஏறியபோது டிரைவர் அவரது அதிருப்தியை முகத்தில் காண்பித்தார். அதன் காரணம் அப்போது நான் அறியவில்லை. எனக்குப் பின்பு ஏறிய என் அலுவலக சகா ‘நான் வரிசையில் வராததுதான் காரணம் என்றார்.

    அங்கேயே ஒரு ரோட்டில் இருந்த பெரிய பழக் கடையில் பழம் வாங்கச் சென்றபோது, வேறு பக்கம் திரும்பியிருந்த கடைக்காரர், எங்களில் இருவரைப் பார்த்து, யார் முதலில் வந்தது என்று கேட்டுப் பின்பு serve செய்தார். பாரிஸிலேயும் இந்த ஒழுங்கைப் பார்த்திருக்கிறேன்.

    உங்கள் கட்டுரை சரியாக அலசியிருக்கிறது.

    அடுத்து நமக்குக் கிடைக்காதோ என்ற பதட்டமும், இன்னொருவன் நம்மை முந்திவிடுவானோ என்ற பதட்டமும்தான் நம் ஒழுங்கீனத்துக்குக் காரணம்.

  4. நல்ல அலசல் தல..
    வெளி நாடு வந்து தான் எனக்கு இந்த பழக்கம் விட்டது..
    அதுவும் பஸ் ல ஊருக்கு போகும் போது பஸ் டிரைவர் rules folow பண்ணி slow வ போனா ஆத்திரமா வரும்..இப்ப நினச்சு ரொம்ப வருத்த படுறேன்

    “சரியாகுமா?” – இந்த content மட்டும் கொஞ்சும் அவசரமா நீங்க முடிச்ச மாதிரி தெரியுது..இதுக்கு தீர்வே இல்லன்னு நீங்க சொல்லி first content இது தான்னு நினைக்குறேன்..அதனால கூட எனக்கு அப்படி தோணி இருக்கலாம்

    – அருண் கோவிந்தன்

    • அவரு எங்கள கழுவி ஊத்தனது பத்தலையா உங்களுக்கு இன்னும் கழுவி ஊத்தனுமா அருண் அண்ணா

      நிச்சயம் இதுவும் கடந்து போகும்

  5. உங்கள் எழுத்தின் முக்கியமான வளர்ச்சி இந்தக் கட்டுரை. வாழ்த்துகள்.

  6. இன்று (21.05.15) மதியம் புறம்போக்கு படத்திற்கு போனேன் அண்ணா. என்னிடம் வரிசை எண் , இருக்கை எண் குறிப்பிடப்பட்ட கணினி அனுமதிச் சீட்டு இருந்தது. இருந்தும் மணி அடித்ததும் நான் உட்பட அங்கிருந்த 92 பேரும் முட்டி மோதிக்கொண்டு தான் அவசர அவசரமாக உள்ளே சென்றோம்…

    ஒரு வேளை வெளிய அதிகம் வெயில் இருந்ததால உள்ள போய் ஏ சி ல உட்காரலாம் னு நாங்க எல்லோரும் நினைச்சிருப்போம் போல

  7. கிரி அவர்களே, இந்தியாவிலே Horn அடித்து உயிரை வாங்குவது “மன அழுத்தம்” அல்ல “நெஞ்சழுத்தம்” 🙂

    வெளி நாடுகளில் சிறு சிறு தவறுகளை பிறர் முன் செய்தால், அது பெரிய அவமானமாக கருதப்படும். ஆனால் இங்கு அது தான் பெருமையான விஷயமாக இருக்கும். உதாரணமாக Bus-ல் ticket எடுக்காமல் பயணம் செய்து அதை பிறரிடம் பெருமையாக கூறுவது, Signal-ல் நிற்காமல் செல்வதை பெருமையாக நினைப்பது. இம்மாதிரியான தவறுகள் செய்பவர் அதை அவமானமாக உணரும் காலம் வரும் பொழுது தான் இது மறையும்.

  8. ஒரு பொறுமையை பொறுமையா புரட்டி போட்ட அருமையான விளக்கம்!!!

    நான் தற்போது ஜப்பான்-ல் இருக்குறேன், முதுமை வந்தா இங்கே தான் வாழனும், எவ்வளவு மரியாதை, எவ்வளவு பொறுமை… எங்கே போனாலும் அவர்களுக்கு ஒரு தனி மரியாதை…

    இவ்வளவு பொறுமையா நான் இன்னும் எங்கும் பார்க்கல….

  9. Nice article yaar. பொறுமை இல்லாதது மட்டுமல்ல. சகிப்பு தன்மை இல்லாததும் ஒரு முக்கிய காரணம். ஜாதி, மதம், மொழி எதிலுமே இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை. தன்னுடைய ஜாதி தான் உயர்ந்தது. தான் வணங்கும் தெய்வமும் மதமும் தான் உயர்ந்தவை.

    தன்னுடைய மொழி தான் உலகத்திலேயே சிறந்தது. கேவலம் பொழுதுபோக்கு சாதனமான சினிமாவை கூட விட்டு வைக்க வில்லை. தான் ரசிக்கும் நடிகன் தான் எல்லோரை விட டாப்…..பொறாமை, சுயநலம் வேறொரு காரணம். மன அழுத்தத்திற்கு காரணம் பொறாமை தான்.

    பிறருடைய வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாததும் பொறுமை இல்லாததற்கு ஒரு காரணம். என்ன செய்தால் பிறரை முந்தலாம் என்ற படபடப்பு டென்ஷன் . மனித நேயம் காணாமல் போய் விடுகிறது. எத்தனை தலைமுறை சென்றாலும் மாற்றம் வராது. நீங்கள் சொல்வது போல ஜீன்களில் உள்ள குணம் எப்படி போகும். !

  10. கிரி
    உங்கள் எழுது வர வர பரவலான மக்களின் மனதில் ஓடும் எண்ணங்களின் தொகுப்பாகவே இருப்பது சிறப்பு

  11. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

  12. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @முத்து தாமதமாக.. இது தான் முக்கியம் 🙂 . எல்லாமே அனுபவம் தான்.

    @நெல்லைத்தமிழன் நமக்குக் கிடைக்காமல் சென்று விடுமோ என்ற பதட்டம் தான்.. காரணம்.

    @அருண் அவசரப்பட்டு முடிக்கவில்லை. எனக்கு இது மட்டுமே தோன்றுகிறது. வேறு எதுவும் வாய்ப்பு இருப்பது போல நான் நினைக்கவில்லை. நீங்கள் நினைத்தால் கூறுங்கள்.

    @ஜோதிஜி & ஸ்ரீகாந்த் நன்றி

    @கார்த்தி இதெல்லாம் சமாளிப்பு. 5 நிமிடம் தாமதமாகச் சென்றால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. இருப்பினும் நமக்கு உடனே போக வேண்டும் என்ற அவசரம்.

    @சுரேஷ் நண்பர்கள் கூறக் கேட்டு இருக்கிறேன்.

    @Aloy தவறை பெருமையாக நினைப்பது. சரியான உதாரணம்.

    @Guest சகிப்புத் தன்மை நம் மக்களுக்கு அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளில் மட்டுமே இருக்கிறது.

  13. சரியாக சொன்னீர்கள்
    ”நம் ஊரில் மட்டும் ஏன் சிவப்பு விளப்பு எரியும் போது கூடப் பின்னால் இருக்கும் நபர் ஹாரனை விடாமல் அடிக்கிறார்?”

    அந்த நேரத்தில் நமக்கு என்ன செய்வது என்றே தெரிவதில்லை.
    பல பிரச்சினைகளுக்கு மக்கள் தொகைதான் காரணம் என்று நினைக்கின்றேன்.

    • மக்கள் தொகை காரணமாக இருக்க முடியாது..
      இந்தியாவை தவிர நான் சென்ற நாடுகள் எங்கேயும் இந்த பிரச்சினையை சந்தித்தது கிடையாது. பொறுமை இன்மை தான் காரணம்

  14. நம் பொருமையின்மைக்கு நம் அரசாங்கமும் ஒரு காரணம் ஏன் என்றால் இங்கு வரும் பல வெளிநாட்டவர்கள் கூட விதிகளை மீறுகிறார்கள் காரணம் அரசு…. இதே அவர்களின் நாட்டில் மதிக்கிறார்கள் அங்கு அரசின் கடுமையான தண்டனைக்கு பயந்து….. ஆகையால் மாற வேண்டியது அரசின் சட்டங்கள் தான் ஆனால் மாறாது நாமும் மாற மாட்டோம்…….

  15. இது ரொம்ப சாதாரண விசயம்னு நெனச்சேன் . இதுல இவ்ளோ பெரிய விஷயம் இருக்குனு இதை படித்த அப்புறம் தான் புரிது

  16. @சம்பத் கூட்டம் எப்போதுமே பொறுமையின்மையை ஏற்படுத்தி விடும்.

    @ராஜ்குமார் நீங்கள் மக்கள் தொகை அதிகமுள்ள பாகிஸ்தான் & பங்களாதேஷ் சென்று இருக்கிறீர்களா?

    நீங்கள் சென்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடு முன்னேறிய நாடாக, கட்டமைப்பு சிறப்பாக உள்ள இடமாக இருந்து இருக்க வேண்டும்.

    நீங்கள் சீனா சென்று இருந்ததாக முன்பு கூறி இருந்தீர்கள். அவர்கள் நம்மை விட கட்டமைப்பில் சிறந்தவர்களாக உள்ளனர் குறிப்பாக நகரங்களில். கிராமங்களில் நம் ஊர் போல மோசமாக இருக்கலாம்.

    @பிரகாஷ் இரண்டுமே தற்போதைக்கு நடக்காது.

    @உதய் 🙂

  17. நல்ல இடுகை கிரி. மேலும் நீங்கள் (சீனா) கிராமங்களில் மோசமாக இருக்ககூடும் என்று அனுமானிப்பது அவ்வாறு இருக்காது என்று தோன்றுகிறது. பல சூதானங்கள் தெரியாததாலும் தெரிந்தாலும் அடுத்தவர்மேல் செலுத்தாமலும் உள்ளதாலேயே கிராமங்கள் கிராமமாக உள்ளது. மேலும் கிராமங்களில் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களாகவே இருப்பர் எனவே ஒரு ஒழுங்குக்கு மதிப்பிருப்பதகவே உள்ளது.

    தன்னைப்போல் பிறரை எண்ணுதல் / நடந்து கொள்தல் நன்று. கோல்டன் ரூல்!
    பிறர் தம்மை எவ்வாறு நடத்த விரும்புகிறாரோ அவ்வாறு நடத்துதல் சிறப்பு. பிளாட்டினம் ரூல்!

    Please review : https://srmouldtech.wordpress.com
    We cater to precision medical equipment mfg. Appreciate support in terms of Funding, Enquiries & Orders.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!