Ugly [2014] – Mardaani [2014] – NH 10 [2015]

8
ugly

 

மூன்றுமே த்ரில்லர் / க்ரைம் வகைப் படங்களைச் சார்ந்தவை.

மூன்று படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் வழக்கமான ஆடல் பாடல் இந்திப் படங்களாக இல்லாமல் அதிகம் சமரசம் செய்யப்படாத இயல்பான படங்களாக இருந்தன,

Ugly

விவாகரத்துப் பெற்ற ஜோடி ஷாலினி ராகுல். வார இறுதியில் தன் குழந்தை காலி(ளி)யை (10) அழைத்துச் செல்ல வரும் ராகுல் திரைப்படக் கதாநாயகனாக ஆக முயற்சித்து வருபவன்.

தன் நண்பனைப் பார்க்கச் செல்லும் நேரத்தில் காரிலேயே காலி(ளி)யைக்காத்திருக்கக் கூறி விட்டு மேலே செல்கிறான்.

தாமதமாக மேலே வரும் நண்பன் காலி(ளி) எங்கே? என்று கேட்க, அதிர்ச்சியாகும் ராகுல் கீழே ஓடி வந்து பார்க்கும் போது காரில் காலி(ளி) இல்லை.

ராகுல் தன் குழந்தையைக் கண்டு பிடித்தானா? என்ன ஆகிறது? என்பதை மிரட்டோ மிரட்டு என்று மிரட்டிக் கூறி இருக்கிறார்கள்.

காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தால், அங்கே உள்ளவர்கள் இதை ஒரு பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளாமல், இவரைக் கலாயிக்கும் போது அதிகாரத்தில் உள்ளவர்கள் நம்மை அலைகழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை அங்கே காணலாம்.

இந்தக் காட்சி அப்படியொரு இயல்பாக எடுக்கப்பட்டு உள்ளது.

அலட்சியம்

பாதிக்கப்பட்டவர் உச்சகட்ட பதட்டத்தில் இருக்கும் போது பொறுப்பில் உள்ளவர்கள் அலட்சியமாக நடத்தும் போது ஏற்படும் கடுப்பு இருக்கிறதே..!! கொடுமை.

இந்நிலையில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கத் தோன்றும். தமிழில் “6 மெழுகுவர்த்திகள்” படத்திலும் இதே போலக் காட்சிகள் இருக்கும்.

பின்னர் எதிர்பாராத திருப்பம் மூலம் குழந்தையைத் தேட ஆயுத்தமாகும் காவல்துறை பயன்படுத்தும் வழிமுறைகளை எல்லாம் காணும் போது வியப்பாக இருக்கும்.

காவல்துறையைச் சார்ந்தவர்கள் மிகத் திறமையானவர்கள் ஆனால், அதிகாரமும் ஊழலும், அரசியலுமே இவர்களின் திறமையை அடக்கி வைத்து இருக்கிறது.

படம் துவக்கத்தில் இருந்து இறுதி வரை பரபரப்பான படம்.

இந்தப் படம் 2013 ஆண்டே வெளியாகி இருக்க வேண்டியது ஆனால், தணிக்கைக் குழு இதில் புகைக்கும் காட்சிகளில் “Smoking is Injurious to Health” என்று போடக் கூறியதை இயக்குநர் அனுராக் மறுத்தார்.

பின்னர் என்ன முயன்றும் முடியாததால் பின்னர் வேறு வழி இல்லாமல் இந்த எச்சரிக்கை வாசகத்துடன் படம் 2014 டிசம்பர் வெளியாகியது.

இந்த எச்சரிக்கை வாசகத்தைப் போடுவதில் இவருக்கு என்ன பிரச்சனை? இது படத்தை எந்த விதத்தில் பாதிக்கப்போகிறது? இதற்காக ஒரு வருடம் தாமதம்.

Mardaani

குற்றப்பிரிவு அதிகாரி ஷிவானி (ராணி முகர்ஜி). நேர்மையான அதிகாரியான இவர் தன் குழுவுடன் நகரில் நடக்கும் குற்றங்களைத் தடுக்கும் பணியில் இருப்பவர்.

சாலையில் அநாதையாக இருக்கும் ஒரு டீனேஜ் பெண்ணுக்கு (பியாரி) ஆதரவாக இருக்கிறார்.

பியாரி பெண்களைக் கடத்தும் கும்பலால் கடத்தப்படுகிறார்.

தன் மகளைப் போலப் பியாரியை ஷிவானி எண்ணுவதால், இதைத் தன் தனிப்பட்ட பிரச்சனையாக எடுத்துக்கொண்டு தேடுதலை துரிதமாக்குகிறார்.

ஷிவானி குடைச்சல் அதிகமானதால் கடத்தல் கும்பல் இவரின் முயற்சிகளை நிறுத்தக் கூறி இவருக்கு மிரட்டல் விடுக்கிறது.

இதில் வயது குறைந்த வில்லனாக வரும் கரன் மிரட்டியிருக்கிறார் .

ஷிவானிக்கு VIP படத்தில் தனுஷ் சொல்வது போலக் கரனைப் பார்த்தால் அமுல் பேபி போலத் தோன்றுகிறது. 

கரனை ஒரு பொருட்டாகவே ஷிவானி மதிக்காததால் ஆத்திரத்தின் உச்சிக்குச் செல்லும் கரன் செய்யும் செயல்கள் நடுங்க வைக்கும் ரகம்.

இந்தியாவில் / உலகில் குழந்தைகள் சிறுமிகள் அதிகளவில் கடத்தப்படுகிறார்கள். பெரும்பாலும் பாலியல் காரணங்களுக்காகவே கடத்தப்படுகிறார்கள்.

இதில் கடத்தப்பட்ட பெண்கள் நிலை பற்றிக் காண்பிக்கப்படும் காட்சிகளை இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்ப்பது நல்லது. திக்கென்று தான் உள்ளது.

ஒரு கட்டத்தில் ஷிவானி சிங்கத்தின் குகையிலேயே சென்று மாட்டிக்கொள்ளச் செம பரபரப்பாகிறது.

கடத்தல் கும்பல் நபரை மிரட்டிய, கடும் குடைச்சல் கொடுத்த பெண் அதிகாரி வில்லன் பிடியில் மாட்டிக்கொண்டால்…! என்ன நடக்கும்.

படம் இறுதியில் தாறுமாறாகச் செல்கிறது. இந்தப் படம் சக நடிகர் / நடிகைகளிடையே ராணி முகர்ஜிக்கு பாராட்டுதலைப் பெற்றுத் தந்தது.

NH 10

மீரா & அர்ஜுன் இன்றைய நவீன கால ஜோடி. அர்ஜுன், மீராவின் வரப்போகும் பிறந்த நாளைக் Road Trip உடன் கொண்டாட முடிவு செய்து காரில் கிளம்புகிறார்கள்.

(NH 10) வழியில் ஒரு தாபாவில் சாப்பிட நிறுத்துகிறார்கள்.

இவர்களிடம் ஒரு ஜோடி ஓடி வந்து தங்களைக் காப்பாற்றும்படி கேட்கிறது, இதை மீரா புறக்கணிக்கிறாள்.

இந்த நேரத்தில் காரில் வரும் ஒரு கும்பல் அந்தப் பெண்ணை அடித்து இழுத்துச் செல்கிறது.

இதைப் பார்க்கும் அர்ஜுன் தட்டிகேட்க செல்ல மீரா எதுக்கு வம்பு நாம போலாம் என்று தடுக்கிறாள்.

இருப்பினும் யாருமே எதுவுமே கேட்காத நிலையில் அர்ஜுன் தட்டிக் கேட்க, தலைவன் போல இருக்கும் ஒருவன் “இவள் என்னுடைய தங்கை இதில் தலையிடாதே என்று கூறி தள்ளி விடுகிறான்.

அர்ஜுன் திரும்பக் கேட்க அவனால் கன்னத்தில் அடிக்கப்பட்டு அவமானப்படுகிறான்.

இவர்கள் அந்தப் பெண்ணையும் பையனையும் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு செல்ல, ஆத்திரமாகும் அர்ஜுன் காரில் மீரா தடுத்தும் பின் தொடர்கிறான்.

கார் ஒதுக்குப்புறமான இடத்தில் நிற்பதைப் பார்த்து காரை நிறுத்தும் அர்ஜுன் அவர்களைப் பின்தொடர்கிறான்.

இதனால் பயந்த மீரா அர்ஜுனை தடுக்க, எச்சரிக்கையை மீறிச் செல்லும் அர்ஜுன் அங்குக் காணும் காட்சி மிரள வைக்கிறது.

இவர்கள் கவுரக் கொலை முயற்சியில் ஈடுபடுவதைப் பார்க்கும் அர்ஜுன் அதிர்ச்சியாகிறான். இதன் பிறகு என்ன நடக்கிறது? அந்த ஜோடிக்கு என்ன ஆனது? மீரா அர்ஜுன் என்ன ஆனார்கள்?

என்பதை இதயத் துடிப்பை எகிற வைத்துக் கூறி இருக்கிறார்கள்.

மீராவாக நடித்து இருப்பவர் கோலி காதலி அனுஷ்கா ஷர்மா.

அனுஷ்கா ஷர்மா உதவி தேடிப் போவதும், இவரை அந்தக் கும்பல் துரத்துவதும் இவர் தப்பிக்கச் செய்யும் முயற்சிகளும் அட! போட வைக்கிறது.

நடிப்பில் அனுஷ்கா ஷர்மாக்கே அதிக வாய்ப்பு. இறுதியில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். கோலி பாராட்டியதில் வியப்பில்லை. படம் பட்டாசாக இருக்கிறது.

வித்யாசமான திரைப்படங்கள் 

மூன்று படங்களுக்கும் உள்ள ஒற்றுமை டூயட் கிடையாது. முழுக்க முழுக்க இயல்பான கதைகள்.

இந்த “வடா தோசா” காரனுக இது போலப் படம் எடுப்பதைப் பார்க்கும் போது கடுப்பாக இருக்கிறது.

தற்போது அமிதாப் நடித்த “Piku” படம் தூள் கிளப்பி வருகிறது. தமிழிலும் நல்ல படங்கள் வருகிறது என்றாலும் நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது.

8 COMMENTS

 1. கிரி, Mardaani படம் பார்த்தேன். மிகவும் அருமையான படம். உங்களது விமர்சனத்துக்கு நன்றி.

 2. உங்க ப்ளாக் பத்தி ஹிந்து ல வந்து இருக்கு கிரி …. 🙂

  வாழ்த்துக்கள்

 3. நம் தமிழ்நாட்டில் சினிமா அரசியல் களமாக பார்க்கப்படுகிறது அதனால் தான் இங்கு வரும் படங்கள் அதிகப்படியான ஹீரோயிசத்துடன் உள்ளது. மக்கள் ஏற்கவில்லை என்றாலும் தினிக்கிறார்கள். மாறும் வாய்ப்பு குறைவே. மேலும் இப்பொழுது ஒரு புது கலாச்சாரம் வந்துள்ளது “டாஸ்மாக்” இதனால் படம் நன்றாக இருந்தாலும் பார்க்க வெருப்பாகிறது. இங்கு அரசே டாஸ்மாக்கை நடத்த இவர்கள் இலவசமாக விளம்பரம் செய்கிறார்கள். அதனால் அரசு இவர்களுக்கு வரி சலுகை வேறு அன்பளிப்பாக அளிக்கிறது. “கொடுமை”….

  உங்களை பற்றிய ஹிந்து வின் கட்டுரை அற்புதம். ஒவ்வொரு பிளாக்கர் பற்றியும் ஹிந்துவின் கட்டுரை எழுதும் முயற்சி வரவேற்கத்தக்கது……

 4. கிரி, Bench talkies படம் வந்து இருக்கு. 6 குறும்படங்கள் ஒன்றிணைத்த படம் இது. இதில் 4 குறும்படங்கள் நெஞ்சை நெகிழ வைக்கும். தவறாமல் பார்க்கவும்.

 5. @சுந்தர் இதைப் படித்து பார்த்தீங்களா.. இல்ல முன்னாடியே பார்த்துட்டீங்களா 🙂

  @செந்தில் அருண் நன்றி 🙂

  @பிரகாஷ் டாஸ்மாக் பாடலை யார் விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை.. இவர்களே கற்பனை செய்து கொண்டு படம் பார்ப்பவர்களைப் பாடாய் படுத்துகிறார்கள். இதைப் பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது.

  @லீலா பிரசாத் இதைப் பார்க்க சுட்டி (Link) இருந்தால் கொடுக்கவும்

 6. கிரி,
  movie reviews கு நன்றி தல.. கொஞ்சும் தெலுங்கு சைடு போயி பாக்கலாமே movies கு … மசாலா தெறிக்கும்

  “இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்ப்பது நல்லது” – கதைய பார்த்தா 3 படமும் என்னை மாதிரி ஆட்களுக்கு செட் ஆகாது போல

  “வித்யாசமான திரைப்படங்கள் ” – இந்த column ரொம்பவே ரசிச்சு படிச்சேன் 🙂

  – அருண் கோவிந்தன்

 7. அருண் தெலுங்குப் படங்கள் பற்றி எழுதணும். நானே ரொம்ப நாளா நினைத்து வைத்து இருக்கிறேன்.

  சரியான நேரம் அமையவில்லை. கொஞ்ச மாதங்கள் முன்னாடி நிறைய தெலுங்குப் படங்கள் பார்த்து எழுதலாம் என்று இருந்தேன்.. இன்னும் சில படங்கள் பார்த்து மொத்தமாக எழுதலாம் என்று இருந்தேன் ஆனால், தாமதமானதால் அந்த Flow போய் விட்டது.

  எழுதணும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here