கோபி மற்றும் கோபியை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த வருடம் அதிக மழை. சில இடங்களில் இன்னும் இரு வருடங்களுக்குத் தண்ணீர் பிரச்னை இருக்காது.
எங்கள் பகுதிக்கு நீர் வழங்கி வரும் பவானி சாகர் அணையில் நீர்மட்டம் முழுக்கொள்ளளவில் உள்ளது.
இன்னும் ஒரு வருடத்துக்கு எங்கள் பகுதி விவசாயத்துக்கு பிரச்சனையில்லை, பசுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கோவை
பல்வேறு காரணங்களுக்காகக் கோவை பல முறை சென்றேன்.
பெங்களூரு சென்ற போது, அங்கே உள்ள சிறு கடைகளில் கூட UPI Payment வசதி இருந்தது. இது போலச் சென்னையில் இல்லையே என்று நினைத்தேன்.
தற்போது பெங்களூரு போலச் சென்னை மாறி விட்டது.
பெரும்பாலான கடைகளில் UPI வசதியுள்ளது ஆனால், கோவை இன்னும் பழைய சென்னை நிலையில் உள்ளது. மிகப்பெரிய கடைகளில் கூட UPI வசதியில்லை ஆனாலும், சில கடைகளில் காண முடிந்தது.
விரைவில் UPI வசதி அனைத்து இடங்களிலும் தவிர்க்க முடியாததாக மாறி விடும்.
கோவையில் பசுமை அதிகரித்துள்ளது. செம்மொழி மாநாட்டுக்காக நூற்றுக்கணக்கான மரங்கள் சாலை விரிவாக்கப்பணிக்காக அழிக்கப்பட்டுக் கோவை மொட்டையாக்கப்பட்டது.
தற்போது அரசு மற்றும் தன்னார்வலர்கள் முயற்சியால் பீளமேடு உட்படப் பல இடங்களில் பசுமை திரும்பி வருகிறது. மகிழ்ச்சி.
இன்னும் பல இடங்களில் மரக்கன்று வைக்க இடமுள்ளது.
எனக்கென்னமோ கோவை சாலைகள், சுற்றுப்புறங்கள் மாற்றம் அடைந்தது போலவே தெரியவில்லை. அப்போது எப்படிப்பார்த்தேனோ அதே போலத் தான் தற்போதும் கோவை உள்ளது.
திருச்சி சாலையில் மிக நீளமான பாலம் கட்டப்பட்டு வருகிறது.
நவீன மாற்றங்கள் அதிகம் நடைபெறவில்லை ஆனால், நான் எதிர்பார்க்கிறேன்.
என்ன தான் இருந்தாலும், இல்லையென்றாலும் கோவை வந்தாலே தனி மகிழ்ச்சி தான் 🙂 . எனக்கு மிகப்பிடித்த நகரம்.
அதிகாலையில் அடுக்ககத்தில் நுழைகிறோம். பாதுகாவலர், ‘முன்னாடியே சொல்ட்டாங்.. நீங் வாங்‘ என்று கோவைத்தமிழில் வரவேற்கிறார் 🙂 .
எங்கள் அலுவலகக் கிளை கோவையில் இல்லையே என்ற வருத்தம் எனக்குண்டு.
FasTag
கடந்த வாரம் சென்னையில் இருந்து காரில் கோவை சென்ற போது பலர் FasTag முறைக்கு மாறவில்லை என்பது தெரிந்தது.
அரசே இலவசமாகக் கொடுத்தாலும் அதைப் பெற்றுச் செயல்படுத்த ஏன் இவ்வளவு யோசிக்கிறார்கள் எனப் புரியவில்லை.
என்னுடைய கேள்வி என்னவென்றால், எப்படி இருந்தாலும் பணம் கட்டணும் அதைத் தானியங்கியாகச் செலுத்துவதில் என்ன பிரச்னை?! எதற்கு வரிசை?!
லாரி, டெம்போ போன்றவை தாமதம் செய்தால் கூடச் சில நடைமுறை சிக்கல்களை உணர முடிகிறது, தனிப்பட்ட கார் வைத்துள்ளவர்களுக்கு என்ன பிரச்னை?
இவர்களால் சுங்கச்சாவடிகளில் நேரம் மற்றும் எரிபொருள் விரையம் ஆகிறது.
உளுந்தூர்பேட்டை – சேலம் நெடுஞ்சாலை ஒழுங்கே இல்லாமல் இருப்பதால், வாகனம் ஓட்டுவது மிக அபாயமாக உள்ளது.
GST சாலை போல எப்போது மாற்றப்போகிறார்களோ!
அதோடு வழியில் இடையில் இரு சக்கர வாகனங்கள், மக்கள் வருவது ஒரு பயத்திலேயே பயணத்தைக் கொண்டு செல்கிறது.
கோபி
கோபியில் கேபிள் பதிப்பதற்காக ஈரோடு – கோபி – சத்தி சாலையில் குழி தோண்டியுள்ளார்கள்.
ஏற்கனவே, போக்குவரத்து நெரிசல் கடுமையானதாக மாறி விட்டது. இந்நிலையில் இதோடு சேர்ந்து புழுதி மற்றும் கடும் நெரிசலாக உள்ளது.
எப்போது கோபி சென்றாலும், எப்போது நாம் கோபியிலேயே இருப்போம் என்ற ஏக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
எனக்குக் கோபியில் இருக்கவே விருப்பம் ஆனால், பணி காரணமாக வேறு வழி இல்லாமல் சென்னையிலேயே தொடர வேண்டியதாக உள்ளது.
சென்னை எனக்குப் பிடித்த ஊர் என்றாலும், கோபி எப்போதுமே இருக்க விரும்பும் ஊர். பணி ஓய்வு பெற்றால் மட்டுமே ஊருக்கு வர முடியும் போல உள்ளது.
அது எப்ப நடந்து எப்ப வந்து.. அடப்போங்கப்பா..!
வரும் பொங்கல் சிறப்பான கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் இப்பொங்கலுக்கு இருப்போம்.
கடந்த முறையே அனைவரிடமும் விடுமுறை எடுக்கக் கூறி விட்டதால், இந்த முறை செமையா இருக்கும்.
இந்தப் பொங்கலுக்கு ஒரு பெரிய படையே எங்கள் வீட்டில் இருக்கும் 🙂 .
தொடர்புடைய கட்டுரை
பொங்கல் பயணக் குறிப்புகள் (2020)
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி
சிங்கார சென்னை கூட பல மரங்கள் வெட்டப்பட்டு ஏரிகள் குளங்கள் நிரப்பப்பட்டு இன்று நரகமாக்கி விட்டது.. வளர்ச்சி வேண்டும் அதே சமயம் வளங்கள் இழந்து என்ன வளர்ச்சி நாம் காண போகிறோம் … சென்னையிலே பல இடங்களுக்கு சில காலம் கழித்து செல்லும்போது அங்கிருக்கும் மாற்றங்கள் வியப்படைய வைத்தாலும் பல சமயம் மனம் நோகிறது . உதாரணத்துக்கு போரூர் பூந்தமல்லி தடம் மிகவும் செழிப்பாக பச்சை பசேல் என்று அழகாக இருக்கும். இன்று வடபழனி முருகன் கோவில் இருக்கும் இடம்… அதாவது 100 அடி சாலை வரும் முன்பு மிகவும் ரம்மியமாக இருக்கும்… இப்பொழுது கோவூர் கோவில் (அதாங்க மாப்பிள்ளை படத்தில் என்னோட ராசி நல்ல ராசி பாட்டு வருமே) இருக்கும் இடம் முருகா ! !
Fasttag பற்றி கூறி உள்ளீர்கள் UPI பற்றியும் கூறி உள்ளேர்கள் … அதை எல்லாம் உபயோக படுத்த சற்று பயமாக உள்ளது ஒன்லைன் டாட்டா யாராச்சும் திருடி விடுவார்களோ என்று .. நானே மிக சொற்பமாக தான் ஒன்லைன் பரிவர்த்தனை செய்கிறேன்.. அந்த பயம் கூட காரணமாக இருக்க கூடும் ..
தங்கள் பொங்கல் நாட்கள் மிகவும் மகிழிச்சிகரமாக இருக்க வாழ்த்துக்கள்
வளர்ச்சிக்காக மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்க முடியாதது ஆனால், வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். இதைத்தான் நீதிமன்றமும் அறிவுறுத்துகிறது.
இவர்கள் அப்போது மண்டையை ஆட்டி விட்டு அப்படியே விட்டு விடுகிறார்கள்.
FasTag UPI இரண்டுமே இனி நீங்கள் நினைத்தாலும் தவிர்க்க முடியாத சேவைகளாகி விடும். எனவே, பழகிக்கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பது போலக் கடினம் இல்லை.
உங்களைப்போல என்னிடம் கூறிய நண்பர்கள் தற்போது மிகத்தீவிரமாக UPI பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, துவங்கினால் பின்னர் அது உங்களுக்குப் பழகி விடும். எளிமையாகி விடும்.
துவங்கும் வரையே அந்தத் தயக்கம்.
பொங்கல் வாழ்த்துக்கு நன்றி 🙂