எழுத்தாளர் சுஜாதா என்று அழைக்கப்படும் எஸ். ரங்கராஜன் அவர்களின் மனைவி சுஜாதா, 2013 ல் கொடுத்த பேட்டி பெரிய சர்ச்சையானது.
சுஜாதாவின் தீவிர ரசிகர்கள் பலர் கோபமடைந்தார்கள்.
இது என்னமோ சுஜாதாக்கு மட்டும் நடந்ததாகவும் மற்றவர்களுக்கு அப்படியான சூழ்நிலையில்லை என்பதாகவும் பலர் நினைக்கிறார்கள், அது தவறு.
பிரபலங்களின் வாழ்க்கை துணையைக் கேட்டால் தான் உண்மை தெரியும்.
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மனைவி தவறாக எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், ஒரு சராசரி வாழ்க்கைத் துணையாக அவரின் ஏமாற்றங்களைக் குறிப்பிட்டு இருந்தார்.
இதில் என்ன தவறை மற்றவர்கள் கண்டார்களோ!?
பொதுவாகவே எழுத்தாளர்கள் தனி உலகில் வாழ்பவர்கள். எனவே, சுஜாதா அப்படி இருந்தது எனக்கு வியப்பேதுமில்லை.
கணவன் மனைவி இருவருமே ஒரே ரசனையில் இருந்தால், அவர்கள் ஆசிர்வதிப்பட்டவர்கள்.

இக்கட்டுரை எழுதக்காரணமே எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மனைவி சமீபத்தில் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி தான்.
அடிமையா? நேர்மையா?
அதில் சுஜாதா அவர்கள் ஒரு பணக்கார நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தபோது, வீட்டுக்கு வந்த அவர் பணி புரியும் நிறுவனத்தின் நிறுவனர் விசாரித்து விட்டு அப்பகுதியில் இருந்த வசதியான வீட்டை அவருக்கு வாங்கித் தருவதாகக் கூறி இருக்கிறார்.
அதற்குச் சுஜாதா பதில் ஏதும் கூறாமல் அவரை வழியனுப்பி வைத்து விட்டார்.
சுஜாதா அவர்களின் மனைவி, “அந்த வீட்டை நாம் வாங்கிக்கொள்ளலாம்” என்று இயல்பான எண்ணத்தில் கூறிய போது,
“நாம் உழைக்கிறதுக்குக் காசு கொடுக்கிறார் அது நேர்மை, நாம உழைக்காத ஒன்றை வாங்கிக்கொண்டால் அவருக்கு நாம் அடிமையாகி விடுவோம். அடிமையாக இருக்க விருப்பமா? நேர்மையாக இருக்க விருப்பமா?“
என்று கேட்ட போது “வீடு வேண்டாம், நேர்மையே போதும்” என்று கூறியதாக விவரித்தார்.
மகிழ்ச்சியாக இருந்தது.
இதை ஒரு வழக்கமான பேட்டியாகக் கடந்து சென்று விடலாம் ஆனால், இச்சம்பவம் உணர்த்தும் செய்தி அருமை.
என்னுடைய அலுவலகப் பணியில் லஞ்சமாகப் பணம் பெறும் வாய்ப்பு இருந்தும் நான் முயற்சித்தது இல்லை, முயற்சித்தது இல்லையென்பதை விட யோசித்தது கூடக் கிடையாது.
நான் வாங்காததால், சம்பந்தப்பட்டவருக்கு இலாபம் கூடுதலாகக் கிடைத்து அதன் மகிழ்ச்சியை 12 வருடங்கள் கடந்தும் இன்னும் கூறிக்கொண்டு உள்ளார்.
பணத்துக்காகப் பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டேன் என்றாலும் நாம் நேர்மையாக இருக்கிறோம் என்ற எண்ணம் இருக்கிறது பாருங்கள்… அதோட கெத்து உண்மையிலேயே பெரியது.
யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை, யாரை நினைத்தும் பயப்பட வேண்டியதில்லை, யாரை பார்த்தும் வழியவேண்டிய அவசியமில்லை, தைரியமாகக் கேள்வி கேட்கலாம் போன்ற சுதந்திரங்கள் எப்போதுமே விரும்புவேன்.
என்னுடைய பணியை நான் சரியாகச் செய்கிறேன், பணியில் நான் நேர்மையாக இருக்கிறேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன் என்ற எண்ணம் எப்போதுமே நமக்குப் பலம் தான்.
சுஜாதா அவர்கள் கூறியதைக் கேட்டதும், நாம் எக்காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் இதைக் கை விட்டுவிடக்கூடாது என்ற உறுதியை கொண்டு வந்தது.
சுவாரசியமான வாழ்க்கையல்ல
பேட்டி எடுத்த நபர் மிக மரியாதையாக நடந்து கொண்டார். எப்படியாவது வாழ்க்கையின் ஒரு சுவாரசியமான செய்தியை வாங்கி விட வேண்டும் என்று முயற்சித்தார்.
ஆனால், பெரியளவில் அப்படி எதுவுமில்லை என்று கூறி விட்டார் 🙂 .
சில ரசிகர்களின் அனுபவங்களை, பிறந்தநாள் பரிசு அனுபவத்தை விவரித்தார், சுவாரசியமாக இருந்தது.
சுஜாதா அவர்கள் மனைவி கூறிய சில என்னுடைய வாழ்க்கையோடு ஒத்துப்போனது, நான் ஏற்கனவே அறிந்த தவறை நினைவுபடுத்துவதாகவும் இருந்தது.
இதைப்படிக்கும் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது,
ஒருவர் தவறை சுட்டிக்காட்டினால் அவர் மீது கோபப்படாதீர்கள், உங்கள் தவறை நியாயப்படுத்தாதீர்கள், அவர் கூறியது உண்மையான விமர்சனமாக இருந்தால், மாற்றிக்கொள்வதில் தவறில்லை.
ஒருவேளை அந்தச் சமயத்தில் கோபத்தில் பேசியிருந்தாலும், பின்னர் யோசித்து மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்கள் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்தினால், தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
“சுஜாதா” அவருடைய ஆதங்கத்தை மட்டுமா வெளிப்படுத்தினார்…!
எழுத்தாளர் “சுஜாதா” தரும் எழுத்து ஆலோசனைகள்
கொசுறு
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் என்னுடைய எழுத்தின் குரு. அவர் கூறிய அறிவுரைகள் பலவற்றைப் பின்பற்றி வருகிறேன்.
அவருடைய புத்தகங்களை நான் அதிகம் படித்தது இல்லை ஆனால், எழுத்து பற்றி அவர் பேசியதை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது எனக்குப் பயனுள்ளதாக இருந்தது.
நான் சுஜாதா அவர்களை விரும்பத் தொடங்கிய காலத்தில் அவர் காலமாகி விட்டார் என்பது எனக்கு ஏமாற்றம். காலம் கடந்த புரிதல் என்று கூறலாம் அல்லது எனக்குப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றும் கூறலாம்.
//ஒருவர் தவறை சுட்டிக்காட்டினால் அவர் மீது கோபப்படாதீர்கள், உங்கள் தவறை நியாயப்படுத்தாதீர்கள், அவர் கூறியது உண்மையான விமர்சனமாக இருந்தால், மாற்றிக்கொள்வதில் தவறில்லை//
மாற்றிக்கொள்வது மிக உயரிய பண்பு. இதன் மூலம் மீண்டும் அத்தவறு நிகழ்வதைத் தவிர்க்கலாம். நன்றி.
உண்மை சார்.