2019 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்

3
2019 பாராளுமன்றத் தேர்தல் General-Elections-2019

டந்து முடிந்த 2019 பாராளுமன்றத் தேர்தல் பலருக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் சிலருக்கு ஏதுமற்ற நிலையையும் கொடுத்து இருக்கிறது. எனக்கு எப்படி உள்ளது? நான் என்னென்ன நினைத்தேன்? என்ற பகிர்வே இது. Image Credit

2019 பாராளுமன்றத் தேர்தல்

பாஜக இவ்வளவு தொகுதியில் வெற்றி பெறும் என்று சத்தியமாய் நினைக்கவில்லை. வடமாநிலங்களில் இப்படிக் குத்தி தள்ளிட்டாங்க!!

GST பண மதிப்பிழப்பு என்று எதுவுமே பாதிக்கவில்லையா? வியப்பாக உள்ளது! உண்மையாகவே எப்படி யோசித்தும் புரியவில்லை.

மோடியே இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்த்து இருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

நான் பாஜக வெற்றி பெறும் ஆனால், பெரும்பான்மை கிடைக்கக் கூடாது என்று நினைத்தேன் ஆனால், நடந்ததோ வேறு.

காங் / ராகுல்

தோல்வி அடைந்தவரை ஆயிரம் காரணம் இப்போது கூறலாம் ஆனால், நான் தேர்தலுக்கு முன்பு இருந்தே நண்பர்களிடம் கூறி வந்தது..

இவர் பக்குவமான அரசியல்வாதியாக நடக்காமல் இருந்தது இழப்பாக இருக்கும் என்று கூறி வந்தேன் ஆனால், அப்போது கூட இவ்வளவு பெரிய தோல்வி கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

காங் கூட்டணியில் ஆளாளுக்குப் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டது பிரச்சனையாகி விட்டது. இவர்கள் மோடியை பற்றி மட்டுமே அதிகம் பேசி மாற்றத்தில் கோட்டை விட்டதாகக் கருதுகிறேன்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பிரதமர் வேட்பாளர் இல்லாதது பெரும் குறை.

மம்தா

இவர் பாதி இடங்களை இழந்ததற்குப் பங்களாதேஷ் முஸ்லிம்களை வாக்குக்காக இந்தியாவில் அனுமதித்தது காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

போன தேர்தலிலேயே இதை எதிர்பார்த்தேன் ஆனால், நடக்கவில்லை.

மம்தா மிகத் தவறான செயலைச் செய்து கொண்டுள்ளார். எல்லை தாண்டி வரும் வேறு நாட்டினரை தொடர்ச்சியாக வாக்கு வங்கிக்காக அனுமதித்து வருவது பல உள்நாட்டுக் குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதை அறியாதவரா?

மனிதாபிமானம் என்ற பெயரில் அனுமதிக்கும் அளவில் அங்குச் சூழ்நிலையும் இல்லாத போது இப்படித் தொடர்ச்சியாக ஏராளமானோரை அனுமதிப்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையைக் கொண்டு வரும்.

மம்தா செய்வது மிகப்பெரிய தவறு. எனவே, இவர் பாதியை இழந்தததில் மகிழ்ச்சியே. இனியாவது இது போல நடந்து கொள்ளாமல் இருப்பார் என்று நம்புவோமாக.

சந்திரபாபு நாயுடு / ஜெகன்

ஆந்திரா நண்பர்கள் ஜெகனை மிகப்பெரிய ரவுடியாகத் தான் வர்ணிக்கிறார்கள். அவர்கள் சொன்னது போலவே, வெற்றி பெற்ற முதல் நாள் அவரது கட்சிக்காரர்கள் செய்த அட்டூழியங்கள் WhatsApp ல் வந்து இருந்தது.

தமிழ்நாட்டிலும் இது போல முன்னர் நடந்துள்ளது என்றாலும், இவர்கள் அளவுக்கு மோசமில்லை.

நாயுடு மிகப்பெரியளவில் ஊழலைச் செய்து இருப்பதாக, குறிப்பாகப் புதிய நகரம் அமைப்பதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாக ஆந்திரா நண்பர்கள் கூறுகிறார்கள்

நாயுடுக்கு செம்ம அடி தான். பேய்கிட்ட இருந்து பிசாசுகிட்ட கொடுத்த மாதிரி கூறுகிறார்கள்.

இனி வரும் காலம் தான் பதில் கூற வேண்டும்.

கவுண்டமணி செந்தில் கிட்ட “டேய்! உனக்கு நான் பரவாயில்லடா” என்று அடி வாங்கிய பிறகு கூறுவாரே, அது மாதிரி தற்போதைய சூழ்நிலையில் ஆந்திரா நிலைக்குத் தமிழகம் பரவாயில்லை.

பினராயி விஜயன்

இவர் ஏன் தோற்றார் என்று புரியவில்லை. சபரிமலை பிரச்னையென்றால், அவரே சொன்ன மாதிரி பாஜக வெற்றி பெற்று இருக்க வேண்டும். அதுவும் இல்லை இதுவும் இல்லை.

பிறகு என்ன?

ஒருவேளை இரண்டும் வேண்டாம், காங் போதும்னு சேட்டன்கள் முடிவு பண்ணிட்டாங்களா?

திமுக / ஸ்டாலின்

ஸ்டாலினுக்குச் சுக்கிர திசை செம்மையாக இருக்கிறது போல. கலக்கி இருக்கிறார்.

உண்மையில் நான் 33 – 35 இடங்கள் எதிர்பார்த்தேன், 38 இடங்கள் கிடைத்துள்ளது. துவக்கத்தில் இருந்தே திமுக வெற்றி பெறும் என்றே அனைவரும் கூறி வந்ததால், எனக்கு இந்த வெற்றி பெரிய வியப்பை கொடுக்கவில்லை.

ஸ்டாலினுக்கு நேரம் நன்றாக உள்ளதோ இல்லையோ, அவருடைய பிரச்சாரம் நன்கு இருந்தது. அனைத்து இடங்களிலும் சென்று பிரச்சாரம் செய்ததுக்குப் பலன் கிடைத்தது என்று கூறலாம்.

உதயநிதி பேசியது பல எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும், அப்பாக்காகக் கடுமையாக உழைத்தார்.

இடைத்தேர்தல்

சட்டமன்றத்தில் எப்படியும் கூடுதல் தொகுதிகள் பெற்று முதல்வர் ஆகி விடுவோம் என்று ஸ்டாலின் நினைத்தார் ஆனால், நடக்கவில்லை.

எனக்கும் வியப்பு தான்.. ஏனென்றால், பாராளுமன்றத்தில் திமுக க்கு போட்டு விட்டுச் சட்டமன்ற தேர்தலில் அதிமுக க்கு போட்டு விட்டார்கள்.

இது எப்படி என்றே புரியவில்லை.

எப்போதுமே ஒரே மாதிரி தான் வாக்கு விழும். பாராளுமன்றத்துக்குச் சரியாக ஒரே மாதிரி இருந்தது ஆனால், இதில் மாறி விட்டது.

அதிமுக வினர் பாராளுமன்ற தேர்தலை விட இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

அப்போது கூட.. இப்படிப் பிரித்துப் போடுற அளவுக்காக மக்கள் உள்ளார்கள்!? என்ற வியப்பும் உள்ளது.

திமுக ஒருவேளை தோற்று இருந்தால், வாக்குப் பதிவு இயந்திரக் கோளாறு, ஏமாற்றல் என்று ஆரம்பித்து இருப்பார்கள்.

தற்போது எதுவுமே சொல்ல முடியாத நெருக்கடி நிலை 🙂 .

கார்த்தி

கார்த்தி மிகப்பெரிய ஊழல்வாதி அவரெல்லாம் வெற்றி பெறுவது என்னத்தைச் சொல்வது?! கொடுமை. வழக்கு தற்போதும் நடந்துகொண்டுள்ளது அதுவும் தீவிரமாக.

கனிமொழியை விட 100 மடங்கு சிறந்தவர் தமிழிசை ஆனால், அவர் இருந்த கட்சியால் தோற்றார். நான் அங்கு இருந்தால், தமிழிசைக்கே வாக்களித்து இருப்பேன்.

எந்தக் குற்றப்பின்னணியும் இல்லாதவர். இவருடைய அணுகுமுறை (Attitude) தான் இவருக்கு எதிரி. நல்லவராக இருந்தால் மட்டும் போதாது என்பதற்குத் தமிழிசை சிறந்த எடுத்துக்காட்டு.

இவங்க எல்லோரையும் ஒரு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் ஆனால், இந்தத் தயாநிதி மாறன் சரியா தேர்தல் சமயத்திலே மட்டும் ஒட்டிக்கிட்டு அப்படியே பதவி வாங்கி விடுவார்.

மற்றவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் என்றாலும் கட்சிக்காக வேலை செய்துள்ளார்கள் ஆனால், எதுவுமே செய்யாமல் நோகாமல் பதவி வாங்குபவர் தயாநிதி மாறன்.

தேர்தல் சமயங்களில் மட்டுமே இவர் காணப்படுவார். கலைஞர் இருந்தால், அவர் அருகில் தவறாமல் இருப்பார். கில்லாடியான ஆளு 🙂 .

அதிமுக

ஆட்சியைக் காப்பாற்றி விட்டார்கள். இது தான் அவர்களுக்கு முக்கியம். இதில் இவர்களுக்கு வெற்றியே.

பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்தால், அதிமுகக் கூடுதல் தொகுதிகளைப் பெற்று இருக்கலாம் ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கக் காரணமே பாஜக தானே! 🙂 .

எடப்பாடிக்கு கொங்குப் பகுதியில் நல்ல பெயர் இருந்தது ஆனால், அப்படியிருந்தும் எப்படி அதிமுக தோற்றது என்பது புரியவில்லை.

கொங்குப் பகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்று நினைத்தேன்.

மேலும் கூற இவர்களிடம் ஒன்றுமில்லை.

தேமுதிக / பாமக

என்ன சொல்வது? இவர்கள் என்ன ஆவார்கள் என்றும் புரியவில்லை.

மநீம / கமல் 

5% வாக்குப் பெறுவார்கள் என்று நினைத்தேன் ஆனால், 3.94% பெற்றுள்ளார்கள். மூன்று தொகுதிகளில் போட்டியிடவில்லை.

நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வாக்கு வந்துள்ளது என்று கமல் கூறினார். 4% வாக்கு வங்கியைக் கூடவா கமல் எதிர்பார்க்கவில்லை. வியப்பாக உள்ளது!

இடைத்தேர்தலுக்கு முன் கமல் பேசிய “இந்துத் தீவிரவாதி” பேச்சு பலரை காயப்படுத்தியுள்ளது.

கமலுக்கு வாக்களித்த என் குடும்பத்தினர், நண்பர்கள் பலர் இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கோபமடைந்துள்ளனர்.

அடுத்தத் தேர்தலில் திரும்பக் கமலுக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே.

தலைவர் வந்து விடுவார் என்பதால், எப்படியும் அவருக்குத் தான் என் குடும்பத்தினர் அடுத்தச் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பார்கள். இந்த முறை கமல் மட்டும் என்பதால் வாக்களித்தார்கள்.

நகரப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்கு மநீம க்கு விழுந்து இருப்பது, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை உணர முடிகிறது.

கிராமங்களில் வாக்கு % அதிகமில்லை.

கோவை சென்னையில் அதிக வாக்கு விழுந்துள்ளது. இதை வைத்தே 5% வரும் என்று கூறினேன்.

ஊடகங்கள் கமல் 4% பெற்றதுக்கே வானளாவ புகழ்கிறார்கள். ஒரு பேச்சுக்கு, ரஜினி நின்று 10 MP தொகுதிகள் பெற்று இருந்தாலும், “படு தோல்வி அடைந்தார் ரஜினி” என்றே கூறி இருப்பார்கள் 🙂 . ஏனென்றால், ஊடகங்களின் டிசைன் அப்படி.

நாதக / சீமான் 

உண்மையிலேயே சிறப்பான வளர்ச்சி.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம், நகரம் கிராமம் என்று அனைத்துப் பகுதிகளிலும் பெரியளவில் ஏற்ற இறக்கமன்றி சீரான வாக்குச் சதவீதம்.

இவருடைய விவசாயி சின்னம் சீமானுக்குக் குறிப்பிடத்தக்க வாக்கைப் பெற்று தந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

சீமானின் வளர்ச்சி மறுக்க முடியாத விஷயம் என்றாலும், எனக்கு உடன்பாடில்லை. பிரிவினைவாதம் பேசும் இவர் போன்றவர்கள் வளர்வது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல.

அடுத்தச் சட்டமன்ற தேர்தல் இவர் வாக்கு வங்கி நிலையை உறுதிப்படுத்தலாம், காத்திருப்போம்.

அமமுக / தினகரன்

இவரை என்னமோ நினைத்தேன் இப்படி ஆகிடுச்சு. எல்லோருடனும் சேர்ந்து நானும் ஏமாந்து விட்டேன் 🙂 .

இவரை நம்பி வந்த அதிமுக வினர் நிலை தான் பரிதாபம் MLA பதவியும் போய், அவர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியமும் கெட்டது.

மூன்றாம் சக்தியாக இருப்பார் என்று நினைத்து 5.20% மட்டுமே வாக்குப் பெற்றுள்ளார்.

சசிகலா வெளியே வந்த பிறகு நிலைமை மாறுமோ!

சசிகலா வந்த பிறகு மீண்டு(ம்) வந்தால், ஐயோ!! மோடி க்கு ஒரு அல்ப பாராட்டு. கடைசி வரையில் சசிகலா முதல்வர் ஆவதை மயிரிழையில் தடுத்து விட்டார் 🙂 .

சசிகலா எல்லாம் தமிழக முதல்வரா!! இந்தக் கொடுமையைத் திரும்ப நடக்க விட்டுடாதீங்க மக்களே! நினைத்தாலே பகீர்னு உள்ளது.

2019 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வழக்கம் போல வியப்புகளை அளித்துள்ளது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. மம்தா சுயநலத்துக்காக நாட்டிற்கு தவறான செயலை செய்து கொண்டிருப்பது பற்றி நீங்க சொன்னது சரியானது.
    //பாராளுமன்றத்தில் திமுக க்கு போட்டு விட்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக க்கு போட்டு விட்டார்கள்.

    இது எப்படி என்றே புரியவில்லை.//
    🙂
    டிடிவி தினகரனை வெற்றி பெற வைத்த தமிழக மக்கள் அல்லவா!

    //சீமான்
    உண்மையிலேயே சிறப்பான வளர்ச்சி.//
    கட்சி தொடங்கிய 14 மாதங்களில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்குகளை விட 0.12 சதவீதம் அதிகமான வாக்குககளை பத்து வருட சீமான் கட்சி பெற்று கொண்டது சிறப்பான வளர்ச்சி!
    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி இப்படியாக இருப்பது நாட்டு நலன்கள், மக்கள் நலன்களுக்கு நன்மை தரும்.

  2. உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாட்டில் மக்கள் எவ்வாறு தங்கள் வாக்கினை செலுத்துகிறார்கள் என்பதை கணிக்க முடியவில்லை. உங்களைப்போல்தான் மோடி வெல்லுவார் என்று நினைத்தேன். ஆனால் தனிப்பெரும்பான்மையை எதிர்பார்க்கவில்லை. அதுவும் தேர்தலின் கடைசி நேரத்தில் மோடியின் பிம்பம் வெகுவாக அடி வாங்கியும் மக்கள் பா.ஜா.கா விற்கே வாக்களித்திருக்கிறார்கள். அமித் ஷா போன்ற ஒருவர்தான் இப்போது காங்கிரசிற்கு தலைவராக வேண்டும் . இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் பாஜாகாவே எல்லா இடங்களையும் வென்று மொனோபொலி ஆகிவிடும். இணையத்தில் படித்தவரையில் பாஜாகா ஆளும் மாநிலங்களை ஆட்சியாளர்கள் கூட குறைய இருந்தாலும் லஞ்சம் குறைந்துள்ளதால்தான் மக்கள் வாக்களைத்ததாக சொல்லுகிறார்கள். ஆந்திர அரசியலும் மேற்கு வங்க அரசியலும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கிறது. வெல்லும் கட்சி தோற்கும் கட்சிகளின் கட்சி அலுவலகங்களை அடித்துப்பறிக்குமாம்.
    கம்யூனிஸ்ட்கள் கேரளத்தில் தோற்றதற்கு காரணமும் கடந்த தடவை திமுக தமிழ் நாட்டில் முற்றாக இல்லாமல் போனதற்கு காரணமும் ஒன்றுதான். ராகுல் கேரளத்தில் போட்டியிட்டதும் ஜெயலலிதா பிரதமராக தமிழ் நாட்டில் முன் மொழியப்பட்டதும்தான்.
    ஸ்டாலின் தமிழ் நாட்டில் ஒன்றூம் கிழித்துவிடவில்லை. இயல்பாகவே ஆளும் கட்சி மீது உள்ள கடுப்பில் மக்கள் திமுகவிற்கு வாக்களித்துள்ளார்கள். உண்மையிலேயே ஸ்டாலின் மீது மக்கள் கருணாநிதியளவு நம்பிக்கை வைத்திருந்தால், ம.நீ.மை மற்றும் நா.தா இவ்வளவு வாக்கு வாங்கியிருக்காது. கருணாநிதி இப்போதய சூழ் நிலையில் உயிரோடிருந்திருந்தால் இந்த தேர்தலில் நா.த வழ‌க்கம்போல 1 % தான் வாங்கியிருக்கும். அதைவிட இந்த இடைத்தேர்தலிலும் முழுதாக வென்றிருப்பார்கள்.
    எடப்பாடி செல்வாக்கான இடங்களிலும் திமுக வென்றதற்கு காரணம் பாஜாகா தான். தங்களின் தொகுதியில் எடப்பாடி சார்பாக வென்றாலும் பாஜாகாவிற்குத்தான் அவர்கள் சேவகம் செய்வார்கள் என்றதால்தான் மக்கள் வாக்களிக்கவில்லை.
    இதுவே அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக எங்கு தோற்றாலும் எடப்பாடியின் தொகுதிகளில் வெல்லும் . அதற்கிடையில் திமுக எப்படியும் தன் பெயரை கெடுத்துவிடும்.
    முரசொலிமாறன் கட்சிக்காக முன்னர் பாடுபட்டதற்கு இன்று வரைக்கும் திமுக தன் நன்றியை காட்ட கொடுப்பதுதான் தயா நிதிக்கான பதவி. அவர் மக்களுக்காகவோ இல்லை கட்சிக்காகவோ கடந்த 5 வருடத்தில் ஏதாவது செய்ததாக நான் கேள்விப்பட்டதில்லை.
    நான் பள்ளியில் படிக்கும்போது எனக்கு இரு நண்பிகள் இருந்தார்கள். இருவருக்குமே வகுப்புத்தலைவியாக வேண்டும் என்று விருப்பமிருந்தது. ஒரு வருடத்தில் பழைய வகுப்பு தலைவி பள்ளியை விட்டு விலகிச்செல்ல புதிய வகுப்புத்தலைவருக்கு தேர்தல் வந்தது. இரண்டு நண்பிகளும் வகுப்பிலே தமது ஆதரவு குழுக்களை உருவாக்கி வைத்திருந்தார்கள். இரண்டு ஆதரவு குழுக்களும் உசுப்பேற்றிவிட நண்பி 1 போட்டிக்கு சென்றார். நண்பி 2 , உணமையிலேயே இந்த தலைவி / குழுக்களில் பெரிதும் விருப்பமில்லாதவர்.பிற்காலத்தில் மருத்துவம் படிப்பதற்கு இந்த புள்ளிகள் உதவும் என்ற காரணத்திற்காக தலைவியாக போகலாமா என்று ஆலோசனையில் இருப்பவர். கடைசியில் நண்பி 1 உம் இன்னமும் சில வகுப்பு நண்பிகளும் மட்டும்தான் போட்டியில் பங்குபற்றினார்கள். நண்பி 1, 10 வாக்குகளை மட்டும்தான் பெற்றிருந்தார். நண்பி 2 இற்கு அது முதலிலேயே தெரிந்திருந்தது. ஏதோ ஒரு கலந்துரையாடலில் இது பற்றி பேச்சு வந்த‌து. அப்போது நண்பி 1 இடம் நண்பி 2
    நான் உங்களுக்கு கடைசி ஒரு 15 வாக்காவது கிடைத்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஏமாற்றிவிட்டார்கள். இருந்துபாருங்கள் வரும் வருடம் நான் 40/50 வாக்கு எடுத்துக்காட்டுகிறேன் என்று சவால் விட்டார். நாங்கள் அனைவரும் சிரித்துவிட்டு விலகிபோய்விட்டோம். ஏனென்றால் அதுதான் எங்களுக்கு பள்ளியில் கடைசி ஆண்டு. அந்த நண்பியை எங்கே இப்போது கண்டாலும் எப்போ வகுப்பு தலைவி ஆகப்போகிறீர்கள் என்று நக்கல் செய்வோம்.

  3. @வேகநரி

    கமல் அளவுக்கு சீமான் பிரபலம் அல்ல ஆனால், தற்போது தான் அவர் பலருக்கு தெரிந்தவராகி வருகிறார்.

    கமலை அரசியலில் அடுத்த மாற்றமாக ஒப்பிட்டார்கள் ஆனால், அவர் சீமான் அளவுக்கு தான் வாக்கு பதிவு வாங்கியுள்ளார். அப்படியென்றால், சீமான் வளர்ச்சி பெரியது தானே.

    எனக்கு உடன்பாடில்லை ஆனால், எதார்த்தம் அது தானே!

    @ப்ரியா

    “அடுத்த தேர்தலில் பாஜாகாவே எல்லா இடங்களையும் வென்று மொனோபொலி ஆகிவிடும். ”

    நானும் இதை நினைத்தேன். அதோடு எதிர்கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை.

    “இணையத்தில் படித்தவரையில் பாஜாகா ஆளும் மாநிலங்களை ஆட்சியாளர்கள் கூட குறைய இருந்தாலும் லஞ்சம் குறைந்துள்ளதால்தான் மக்கள் வாக்களைத்ததாக சொல்லுகிறார்கள்.”

    இதுபற்றி எனக்கு தெரியவில்லை.. மாநிலங்களில் எப்படி என்று தெரியவில்லை ஆனால், தேசிய அளவில் பாஜக, காங் போல பெரிய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவில்லை.

    கார்ப்பரேட் ஆதரவு குற்றச்சாட்டு இருந்தது ஆனால், காங் ம் இதே குற்றச்சாட்டில் இருந்தது.

    “எடப்பாடி செல்வாக்கான இடங்களிலும் திமுக வென்றதற்கு காரணம் பாஜாகா தான். தங்களின் தொகுதியில் எடப்பாடி சார்பாக வென்றாலும் பாஜாகாவிற்குத்தான் அவர்கள் சேவகம் செய்வார்கள் என்றதால்தான் மக்கள் வாக்களிக்கவில்லை.”

    இது எனக்கு புரியவில்லை. பாஜக வை வெறுக்கிறார்கள் என்பது உண்மை என்றாலும், கொங்கு பகுதிகளில் அதிமுக வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவே கருதினேன். குறிப்பாக சேலத்துக்கு நிறைய செய்துள்ளார்.

    “அந்த நண்பியை எங்கே இப்போது கண்டாலும் எப்போ வகுப்பு தலைவி ஆகப்போகிறீர்கள் என்று நக்கல் செய்வோம்.”

    🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here