ரஞ்சித் ஏன் விமர்சிக்கப்படுகிறார்?

3
ரஞ்சித் ஏன் விமர்சிக்கப்படுகிறார்?

சிகர்கள் விரும்பும் ரஜினியின் மாஸையே ரஞ்சித் மாற்றி விட்டார். நடிப்பை கொடுக்கிறேன் என்று அவரை இரு படங்களில் வீணடித்து விட்டார் என்று ரசிகர்கள் சிலர் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்கள். Image Credit

மற்றவர்களின் சாதி, மத ரீதியான விமர்சனங்கள் தனி.

ரஞ்சித் ஏன் விமர்சிக்கப்படுகிறார்?

பாபாக்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் “கபாலி”. காரணம், ரஜினியுடன் இணைந்த இளம் இயக்குநர் “ரஞ்சித்” மற்றும் இசையமைப்பாளர் “சந்தோஷ் நாராயணன்”.

இதையெல்லாவற்றையும் விடத் தயாரிப்பாளர் தாணு ஏற்படுத்திய மாபெரும் எதிர்பார்ப்பு.

ரஞ்சித்தின் சித்தாந்தங்கள்

ரஞ்சித் தன்னுடைய எண்ணங்களை, கருத்துகளைத் தன் படங்களின் கதாப்பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்.

இது குறித்து அவர் கூறியதை பல்வேறு சம்யங்களில் நீங்களே கேட்டு இருப்பீர்கள், மேலும் விளக்கம் தேவையில்லை.

கபாலியிலேயே ரசிகர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் பெரியளவில் அதற்கு எதிர்ப்பில்லை. ரஞ்சித்தை சாதி ரீதியாக எதிர்ப்பவர்கள் மட்டும் எதிர்த்தார்கள், சிலர் முணுமுணுத்தார்கள்.

காலாவில் பலர் வெளிப்படையாகத் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். உண்மையில் முதல் நாள் நான் படம் பார்த்த போது எனக்கு ரஜினி மட்டுமே தெரிந்தார், வேறு எதுவுமே தெரியவில்லை.

ஆனால், படம் வெளிவந்த சில நாட்களில் ஆளாளுக்கு ஒவ்வொரு காட்சியிலும் அதையும் இதையும் கூறி அப்படத்தையே ரசிக்க முடியாதபடி செய்து விட்டார்கள்.

குறிப்பாக மத ரீதியாகச் சிலரும், சாதி ரீதியாகச் சிலரும், ரசிகர்களாக ஏமாற்றமடைந்த சிலரும் அவரை விமர்சித்தார்கள், விமர்சிக்கிறார்கள்.

காலா விமர்சனங்கள்

மற்றவர்களைப் பற்றிக் கூற புதிதாக ஒன்றுமில்லை ஆனால், ஒரு ரசிகனாகக் கூறும் போது….

முதல் காட்சியிலேயே Bowled ஆவது போலக் காட்சியும், “வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்” காட்சியில் அவர் அடிக்கவில்லை என்பதையும், காவல் நிலைய காட்சியில் மன்னிப்பு கேட்க வைக்க முயன்ற காட்சியும் ரசிகர்கள் சிலரை காயப்படுத்தியது.

எனக்குப் படம் பார்க்கும் போது இதெல்லாம் ஏமாற்றம் இருந்தாலும், ஒரு காட்சியாக, படமாகக் கடந்து விட்டேன் ஆனால், என்னைப் போல அனைவரும் இல்லையே.

ஆனால், திரும்பத் திரும்பக் கேட்கும் போது எனக்கே முதல் நாள் பிடித்த அளவு அதன் பிறகு ஆர்வம் குறைந்து விட்டது காரணம் சமூகத்தளங்களின் பாதிப்பு.

கபாலி, காலா இரண்டுமே ஒரே அலைவரிசையில் வந்த தொடர்ச்சியான படங்கள், அப்போது இருந்த அரசியல் சூழ்நிலை காரணங்களால் காலா அதிகம் விமர்சிக்கப்பட்டதில் வியப்பில்லை.

தவறிய இடைவெளி

“அண்ணாமலை”க்குப் பிறகு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் “பாட்ஷா” திட்டமிடப்பட்ட போது கூட, ஒரு “வீரா” செய்துட்டுப் “பாட்ஷா” போகலாம் என்றவர் ரஜினி.

எனவே, கபாலிக்குப் பிறகு  2.0 தான் வந்து இருக்க வேண்டும் ஆனால், 2.0 தொழில்நுட்ப தாமதங்கள் காலாவை முதலில் கொண்டு வந்து விட்டது.

தொடர்ச்சியான இரு படங்கள் ஒரே சித்தாந்தத்தில் வந்ததில் ரஞ்சித் மீது சிலருக்கு வெறுப்பைக் கொண்டு வந்து இருக்கலாம்.

இது ரசிகர்களிடம் வந்தது மட்டுமல்ல, அவரின் சாதி குறித்த கருத்தைப் பிடிக்காதவர்கள், மத ரீதியான கருத்தைப் பிடிக்காத ரசிகர் அல்லாதவர்களிடமிருந்தும் வந்தது.

ரஞ்சித் ஏன் விமர்சிக்கப்படுகிறார்? என்பதற்கு காரணங்கள் இவையே.

பேட்ட

பேட்ட முன்னோட்டம் பார்த்த பிறகு இது கொஞ்சம் தீவிரமாகி விட்டது. காரணம், பேட்ட வழக்கமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் காட்சிகள் இருந்தது தான்.

எப்படி பழைய ரஜினியை “பேட்ட” கொண்டு வந்துள்ளது என்று கூறப்படுகிறதோ, அதே போல கபாலி, காலா இரண்டுமே பழைய ரஜினியின் நடிப்பை கொண்டு வந்த திரைப்படங்களே!

இன்று பேட்ட கமர்சியலாக இருந்தும் ரஜினியை விமர்சித்தவர்களே சிலாகிக்கும் அளவுக்கு வந்ததற்குக் காரணம், கபாலி & காலா படங்களே!

இந்த இடைவெளி இல்லையென்றால், “பேட்ட” பத்தோடு பதினொன்றாகி “வழக்கமான படம்” என்று விமர்சிக்கப்பட்டு இருக்கும்.

மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குக் கபாலி, காலா இரண்டுமே மிகச்சிறந்த படங்களே! இவற்றில் கபாலி கூடுதலாக ரொம்பப் பிடிக்கும்.

ரஞ்சித் தன்னுடைய அரசியல் கருத்துகளைப் படங்களில் கண்டிப்பாகக் கொடுப்பேன் என்று கூறி விட்டார். எனவே, அவரிடம் ஏன் இப்படி என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

எனக்கு ரஜினியின் நடிப்பை வெளிக்கொண்டு வந்த பல படங்களைப் போலக் காண அதிக விருப்பம்.

ஆனால், அதில் தங்கள் தனிப்பட்ட கருத்துகளைத் திணிக்கும் படி வேண்டாம். ஒரு இயல்பான கதை, நடிப்பு மட்டும் போதும், முள்ளும் மலரும் போல.

கொசுறு 1

“பேட்ட” படம் அனைவரும் விரும்பும் ஒரு ரஜினி படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இது போல ஒரு துள்ளலான, அதிரடியான ரஜினியைக் காண பலரும் விருப்பமாக உள்ளார்கள் என்பதை “பேட்ட” முன்னோட்டத்துக்குக் கிடைக்கும் வரவேற்பு கூறுகிறது.

பார்ப்போம் எப்படியுள்ளது என்று! 🙂 .

கொசுறு 2

சொன்னா நம்ப மாட்டீங்க… இக்கட்டுரை எழுதி விட்டு “கபாலி” பார்த்தேன் 🙂 .

இப்படத்தை முதல் முறை பார்க்கும் போது ரசிக்காமல் விட்டேனே..! என்று எனக்கு இன்றும் வருத்தம் உண்டு.

தொடர்புடைய கட்டுரை

புறக்கணிக்கப்பட்ட “கபாலி” இசை

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. அருமை. எதிர்பார்க்கவே இல்லை. தலைவர் பத்தி நிறைய போஸ்ட் வருது.. ஹீஹீஹீ…ரொம்ப நல்ல விஷயம்.
    அப்படியே அந்த பேட்ட பாடல் விமர்சனம் 🙂 கொஞ்சம் லேட் ஆச்சு..பட விமர்சனத்தோட இதும் சேர்ந்து வரும்ன்னு நினைக்கிறன். 🙂

    இந்த போஸ்ட் படிச்சதும் உங்க கபாலி விமர்சனம் படிச்சேன் 🙂
    //ரஜினியை யார் தான் முழுமையாக பயன்படுத்துவார்கள் என்று எனக்கு ஏக்கமே வந்து விட்டது!//
    நிச்சியம் கார்த்திக் சுப்புராஜ் பயன்படுத்தியிருப்பார்ன்னு நம்புவோம். இருந்தாலும் மனசு ஓரத்துல ஒரு சின்ன டரியல் இருக்க தான் செய்யுது. 🙂

    //“அண்ணாமலை”க்குப் பிறகு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் “பாட்ஷா” திட்டமிடப்பட்ட போது கூட, ஒரு “வீரா” செய்துட்டுப் “பாட்ஷா” போகலாம் என்றவர் ரஜினி.//
    எஸ். இதே தான் நானும் நினச்சேன்.

    //முதல் காட்சியிலேயே Bold ஆவது போலக் காட்சியும், “வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்” காட்சியில் அவர் அடிக்கவில்லை என்பதையும், காவல் நிலைய காட்சியில் மன்னிப்பு கேட்க வைக்க முயன்ற காட்சியும் ரசிகர்கள் சிலரை காயப்படுத்தியது.//
    இன்னமும் எல்லா தலைவர் படமும் பல முறை பாத்துட்டு இருக்கேன். ஆனால் காலா
    இரண்டு முறைக்கு மேல பார்க்கவில்லை. நிச்சியமா நீங்க சொன்ன இந்த சீன்ல நல்ல செஞ்சு இருக்கனும்ன்னு எண்ணம் இருக்கு…நடிப்பு செம…ஆனால் தலைவரிசம் மிஸ்ஸிங்.

  2. உங்கள் தளம் என்பதால் இதை எழுதத் தோன்றியது.

    நான் பொழுது போக்கிற்காக படம் பார்ப்பதில்லை. ஏதாவது ஒன்றாவது என்னை ஈர்க்க வேண்டும். கற்றுக் கொள்வது போல இருக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம். எனக்கு கபாலி மற்றும் காலா இரண்டுமே ரொம்பபப பிடித்து இருந்தது. காரணம் இது இயக்குநரின் படம். மற்றவர்கள் அதைப் பற்றி என்ன சொன்னாலும் அதை கண்டு கொள்ளவே இல்லை. ரஞ்சித் உடன் நெருங்கிய தம்பி பிஆர் ஓ வாக வேலை செய்கின்றேன். அதனால் உள் வட்டம் முழுக்கவே எனக்குத் தெரியும். சென்னையில் மடும் ஐம்பது சதவிகித ரஜினிக்கென்று இருக்கும் ரசிகர்கள் வரவே இல்லை என்று சொன்னான். காரணம் மனிதர்கள் உள் மனதில் உள்ள சாதி ரீதியான ஆதிக்கம். மற்றொன்று இன்று வரையிலும் பல முறை அண்ணாமலை படம் யூ டியூப் ல் பல முறை பார்ப்பதுண்டு. அதி தீவிர ரஜினி ரசிகையான மனைவி பேட்ட படத்தைப் பார்க்க வேண்டும் என்றுசொல்லியுள்ளார். எனக்கு ஈர்ப்பு இல்லை. ஆனாலும் அவருக்காக செல்ல எண்ணமுண்டு.

  3. @ஸ்வாமிராஜன் நான் அன்றே சொன்னேனே.. தேவைப்பட்டால் மட்டுமே எழுதுவேன் என்று. கடந்த வருட இறுதிக்கட்டுரை கூட நான் எழுத நினைத்ததில்லை, நண்பர் எழுத கேட்டுக்கொண்டதால் எழுதியது.

    நான் சொன்ன முழுமை நடிப்பில். கார்த்திக் சுப்பராஜ் ஸ்டைல் விஷயத்தில் பழைய ரஜினியை கொண்டு வந்து விடுவார் என்று நம்பிக்கையுள்ளது. நான் கேட்டது முள்ளும் மலரும் ரஜினியை 🙂 .

    மற்றது நீங்க சொன்னது அதே தான் 🙂

    @ஜோதிஜி திரைப்படம் என்பதே பொழுது போக்கு தானே! அதில் சில கருத்துகள் கூறினால் மக்கள் ஏற்பார்கள், அதுவே படமே என்றால் புறக்கணித்து விடுவார்கள்.

    இருக்கும் பிரச்சனைகளில் இருந்து இளைப்பாற தான் வருகிறார்கள். இங்கேயும் கருத்து, அறிவுரை என்றால் ஓடி விடுவார்கள்.

    நீக்க வித்யாசமா தான் இருக்கீங்க.. ரைட்டு 🙂

    “சென்னையில் மடும் ஐம்பது சதவிகித ரஜினிக்கென்று இருக்கும் ரசிகர்கள் வரவே இல்லை என்று சொன்னான்”

    சாதி, மத ரீதியாக அதி தீவிர பற்றுள்ள ரஜினி ரசிகர்கள் ஓரிரு சதவீதம் பேர் பார்க்காமல் இருந்து இருக்கலாம், 50% என்பதெல்லாம் பொய்.

    ரஜினி படம் என்றால் ஒரு முறைக்கு மேல் பெரும்பாலோனோர் காண்பார்கள். அது வேண்டும் என்றால், தவிர்த்து இருப்பார்கள். Repeat Audience இப்படத்துக்கு அதிகமில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here