ஒரு நாள் நண்பனின் வீட்டுக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்குக் காத்து இருந்தேன்.
காத்து இருந்ததால் மொபைலை வழக்கம் போல நோண்டிக்கொண்டு இருந்தேன்.
“ஹல்லோ“
தலை நிமிர்ந்து பார்த்தேன்.
மூன்று சக்கர சைக்கிளில் பிச்சைக்காரர் போல இருந்த ஒருவர், அவரது வண்டியைத் தள்ளிக்கொண்டே என்னருகே வந்து “ஒரு ஃபோன் பண்ணனும் ஃபோன் கொடுங்க” என்றார்.
பார்க்க வேற ஒரு மாதிரி கோபக்காரர் போல இருந்தார்.
என்னடா இது! இத்தனை பேரு இருக்காங்க.. நேரா என்கிட்டையே வந்து கேட்குறாரே.. என்று பக்குனு இருந்தது.
இருப்பினும், எப்படிக் கொடுக்க மாட்டேன்னு சொல்வது என்ற சங்கடத்தில் அரைகுறை மனதோடு கொடுத்து விட்டேன்.
அவர் தன்னோட பையில் இருந்த காகிதத்தை எடுத்து எதோ எண்ணை அடிக்க ஆரம்பித்தார். நானும் கொஞ்சம் இயல்பாக இருப்பது போல அமர்ந்து இருந்தேன்.
“ஹல்லோ“
கொஞ்சம் சத்தமா கூறியதும், சரி.. எப்பவுமே இப்படிப் பேசுவார் போல என்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.
திரும்ப இன்னும் சத்தமாக “ஹல்ல்லோ” என்று அலற.. எனக்குக் குபீர்னு ஆகி விட்டது.
பேருந்து நிறுத்தத்தில் காத்து இருந்தவர்கள் டக்குனு திரும்பி அவரைப் பார்த்து விட்டு, அப்படியே என் பக்கம் திரும்ப, நான் பேய் முழி முழித்துட்டு இருந்தேன்.
ஆஹா! இன்னைக்கு எதோ சம்பவம் இருக்கும் போலன்னு திக்குனு ஆகி விட்டது. அருகில் இருந்தவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்தது போல இருந்தது.
பிறகு இந்தியிலேயே யாரையோ சகட்டுமேனிக்கு திட்ட ஆரம்பித்து விட்டார்.. இடையிடையே “பாகிஸ்தான்” என்றெல்லாம் வர “என்னது பாகிஸ்தானா…?!” என்று குப்புனு வியர்த்து விட்டது.
ஐயையோ! எதோ கிறுக்கன் கிட்ட கொடுத்துட்டேன் போல இருக்கேனு… பீதியாகிட்டேன்.
இந்நேரம் பார்த்து வடிவேல் “பின்லேடன்” நகைச்சுவையெல்லாம் நினைவுக்கு வந்து எனக்கு வயிற்றைக் கலக்கியது.
அவர் கோபமாகக் கையை ஆட்டி பேசியதைப் பார்த்து, கோபத்தில் மொபைலை கீழே போட்டு உடைத்து விடுவாரோ என்று திகிலாகி விட்டது.
நானே மொபைல் வாங்கி ஐந்து மாதங்கள் தான் ஆகி இருந்தது.
எனக்கு இதயத்துடிப்பு எல்லாம் எகிறி.. “முருகா! எப்படியாவது மொபைலை பத்திரமா வாங்கிக் கொடுத்துடுடா!” என்று வேண்ட ஆரம்பித்து விட்டேன்.
மூன்று நிமிடங்கள் போலக் கண்டபடி இந்தியிலேயே திட்டி விட்டு என்னிடம் மொபைலை கொடுத்தார். எனக்கு மூன்று மணி நேரங்கள் கடந்தது போல இருந்தது.
யப்பா.. தெய்வமே! நல்லா இருப்பான்னு… வாங்கிட்டு திரும்ப… 12G வந்து கொண்டு இருந்தது.
திரும்பக் கேட்டுவிடுவாரோ என்று தலை தெறிக்க ஓடிப் போய் பேருந்தில் ஏறிட்டேன்.
திரும்பிக்கூடப் பார்க்கலையே.. ஓட்டம்னா ஓட்டம்.. அப்படியொரு ஓட்டம்.
தொடர்புடைய கட்டுரை
ஹா ஹா ஹா ஹா 🙂 🙂 🙂 🙂
மரண மாஸ்!!!! ஹா ஹா ஹா.. வாழ்வின் சுவையே எதிர்பாரத மன மகிழ்ச்சிகளும், நகைச்சுவையும் தான்.. 12 G இன்னும் கொஞ்சம் தாமதமாக வந்து இருக்கலாம்… (திரும்பிக்கூடப் பார்க்கலையே.. ஓட்டம்னா ஓட்டம்.. அப்படி ஒரு ஓட்டம்).. எனக்கும் இது போல சம்பவங்கள் வேறுமாறி நடந்துள்ளது…நேரில் கூறினால் சிரிப்பாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
விஜய் & யாசின் 😀