தனித்தொகுதி பொதுத்தொகுதி என்றால் என்ன?

3
தனித்தொகுதி பொதுத்தொகுதி

தேர்தல் நேரங்களில் தனித்தொகுதி பொதுத்தொகுதி பற்றிய செய்திகள் வரும் ஆனால், அதற்கான முழு விவரங்கள் தெரியாமல் இருக்கலாம்.

அவை என்னவென்று காண்போம். Image Credit

தனித்தொகுதி

சட்டமன்ற, பாராளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் போது பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மட்டும் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்படும் தொகுதி தனித்தொகுதி எனப்படும்.

இத்தொகுதிகளில் இவர்கள் மட்டுமே போட்டியிட முடியும், மற்றவர்கள் போட்டியிட அனுமதியில்லை.

பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இம்முறை கொண்டு வரப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது அறிவிக்கப்பட்ட காலத்தில் இத்தொகுதிகள் மாற்றப்படும்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 46 இடங்கள் தனித்தொகுதிகளாகும். 44 இடங்கள் பட்டியலினத்தவருக்கு, 2 இடங்கள் பழங்குடியினத்தவருக்கு.

பாராளுமன்றத்தேர்தலில் 7 இடங்கள் தனித்தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுத்தொகுதி

மேற்கூறிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல், மற்ற சாதியினர், பட்டியலின, பழங்குடியினத்தவர் உட்பட அனைவரும் போட்டியிடும் இடங்களே பொதுத்தொகுதி என்று அழைக்கப்படுகிறது.

அனைவரும் போட்டியிடலாம் என்றாலும், பட்டியலின, பழங்குடியின மக்களைப் பொதுத்தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சிகள் அனுமதிக்க மாட்டார்கள்.

இத்தொகுதிகளும் குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும்.

திமுக ராசா, திருமாவளவன் போன்றோர் முக்கியத்தலைவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு பொதுத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா லோக்சபா ராஜ்யசபா மூலம் பாஜக நடுவண் அரசு நிறைவேற்றியது.

இதற்கு ஜனாதிபதி முர்மு அவர்களும் ஒப்புதல் அளித்தார்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டாலும், செயல்படுத்துவது எளிதல்ல. காரணம், அனைவரின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட வேண்டிய முறை.

நடுவண் அரசு மட்டுமே முடிவு செய்து விட முடியாது.

காரணம், முக்கிய ஆண் தலைவர் போட்டியிடும் தொகுதியைப் பெண்கள் தொகுதியாகவே அறிவித்தால், இதுவரை போட்டியிட்ட ஆண் தலைவர் அங்குப் போட்டியிட முடியாது.

என்ன சிக்கல்?

ஒருவரைப் பழிவாங்க வேண்டும் என்றே ஒரு முக்கியத்தொகுதியைப் பெண் வேட்பாளர் தொகுதியாக அறிவித்துவிட வாய்ப்புள்ளது.

எடுத்துக்காட்டுக்கு, எங்கள் கோபி தொகுதியில் அதிமுக செங்கோட்டையன் அவர்களே பல காலமாக நின்று வெற்றி பெற்று வருகிறார்.

1996 தேர்தலில் மட்டுமே தோல்வியடைந்தார்.

தற்போது வரை இவருக்குப் பெரிய ஆதரவு உள்ளது. அது சாதி ரீதியாகவும், மண்ணின் மைந்தன் என்ற அளவிலும் உள்ளது.

இத்தொகுதியைப் பெண் வேட்பாளர் தொகுதியாக அறிவித்து விட்டால், செங்கோட்டையன் அரசியல் வெற்றி கடினமாகி விடலாம்.

வேறு பக்கத்துத் தொகுதியில் நின்று வெற்றிபெறலாம் ஆனால், உறுதியில்லை. எனவே, இது போன்ற அரசியல் சிக்கல்கள், எதிர்ப்புகள் கட்சிகளிடையே உள்ளன.

எனவே தான், இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டாலும், செயல்படுத்த அதிக காலம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

இவையே தனித்தொகுதி பொதுத்தொகுதி பெண்கள் தொகுதிகளில் உள்ள சிக்கல்.

காத்திருக்க வேண்டிய அவசியமில்லை!

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு முறையை வேண்டும் என்றே நடுவண் அரசு தாமதம் செய்கிறது! என்று எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டு வருகின்றன.

இவை உள்நோக்கம் கொண்ட அரசியல் விமர்சனம் என்பது, விஷயம் தெரிந்தவர்களுக்குப் புரியும்.

காரணம், எந்தவொரு கட்சியும் சட்டம் நிறைவேற்றப்படுவதற்காகக் காத்து இருக்க வேண்டியதில்லை. தற்போதே தங்கள் கட்சியில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு முறையைச் செயல்படுத்தலாம்.

இது கட்சி முடிவு மட்டுமே! சட்டம் வந்தால் கட்டாயம் ஆனால், அதே ஒரு கட்சி முன்னரே செயல்படுத்த எந்தத் தடையுமில்லை.

எனவே, கட்சிகள் விருப்பப்பட்டால், பட்டியலின, பழங்குடியின மக்களையும், பெண்களையும் அதிகளவில் பொதுத்தொகுதியில் நிறுத்தலாம்.

இத்தள கட்டுரைகள், செய்திகள், தொழில்நுட்பத் தகவல்கள் ஆகியவற்றை எளிதாகப் பெற –> giriblog WhatsApp Channel

3 COMMENTS

 1. “காரணம், எந்தவொரு கட்சியும் சட்டம் நிறைவேற்றப்படுவதற்காகக் காத்து இருக்க வேண்டியதில்லை. தற்போதே தங்கள் கட்சியில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு முறையைச் செயல்படுத்தலாம்.”

  அருமையான விளக்கம். ஆனால் யாரும் இதை செய்ய மாட்டார்கள். வெறும் அரசியல் சவடால் மட்டுமே பேசுவார்கள்..

 2. தனித்தொகுதி / பொதுத்தொகுதி பற்றி எனக்கு தெரிந்து இருந்தாலும், புள்ளிவிரம் தெரியாது. மிகவும் சிறப்பாக எளிதாக புரியும் வண்ணம் விளக்கமாக எழுதி இருக்கீங்க.. உண்மையில் பயனுள்ள தகவல்.. அதுவும் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடுக்கான அரசியலையும் புரிந்து கொள்ளமுடிகிறது.. இத்தனை முறை MLA / அமைச்சராக வெற்றி பெற்றுள்ள திரு. செங்கோட்டையன் அவர்களால் கோபி முழுமையாக வளர்ச்சி அடைத்துள்ளதா?? ஒரு சாமானியனாக உங்களின் கருத்து என்ன??? பகிர்வுக்கு நன்றி கிரி.

 3. @PADMANABAN VENGUDUSAMY

  நன்றி

  @யாசின்

  “இத்தனை முறை MLA / அமைச்சராக வெற்றி பெற்றுள்ள திரு. செங்கோட்டையன் அவர்களால் கோபி முழுமையாக வளர்ச்சி அடைத்துள்ளதா?? ஒரு சாமானியனாக உங்களின் கருத்து என்ன?”

  திருப்தியில்லை யாசின்.

  கடந்த 10 வருடங்களாக கோபிக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவர் அமைச்சராக இருந்த போது செய்ய ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் செய்யவில்லை.

  மேம்பாலத்தைக் கொண்டு வந்து இருக்கலாம், செய்யவில்லை. தற்போது போக்குவரத்து நெரிசல் கடுமையாகி விட்டது.

  நெடுஞ்சாலை என்பதால், கனரக வாகனங்கள் அதிகரித்து விட்டது. இரு சக்கர வாகனங்களும் கோவிடுக்கு பிறகு அதிகரித்து விட்டது.

  நகரின் வளர்ச்சிக்கும் எதுவும் செய்யவில்லை, கடும் ஏமாற்றம்.

  சாலைகள் ஜல்சக்தி திட்டத்துக்காக தோண்டி அதைப் பேட்ச் வேலை செய்யவில்லை. வாகனம் ஓட்டுவது கடுப்பா இருக்கு.

  நகராட்சியில் கேட்டால், பட்ஜெட் இல்லைனு சொல்றாங்க.

  கடந்த முறை திமுக வரக் கூடாது என்பதற்காகவே இவருக்கு வாக்களித்தேன். இந்தமுறை பாஜக க்கு தான் என் வாக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here