பட்டியலின மக்கள் வளர்ச்சிக்கு உதவுவது யார்?

1
பட்டியலின மக்கள்

மூகத்தில் முன்னேற இடஒதுக்கீடை கொடுத்தது அரசு ஆனால், அரசியல் கட்சிகள் பட்டியலின மக்களை வளர விடாமல் அப்படியே வைத்திருக்கவே விரும்புகின்றனர்.

அரசியல்வாதிகள் வாக்குக்காகவோ நல்ல எண்ணத்திலோ திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள் ஆனால், செயல்படுத்துவதில் அரசியலை புகுத்துகிறார்கள். இதுவே பட்டியலின மக்களுக்கு பிரச்சனையாகிறது. Image Credit

பட்டியலின மக்கள்

பட்டியலின மக்களின் வளர்ச்சிக்கு இடஒதுக்கீடு மிகப்பெரிய அளவில் உதவியதை மறுக்க முடியாது. அவற்றில் விவாதங்கள் இருந்தாலும் அவர்களைச் சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது.

ஆனால், இதை வைத்துச் சமூகநீதி என்ற பெயரில் அரசியல் செய்கிறார்களே தவிர இன்னும் பட்டியிலின மக்களைத் திட்டங்கள் சென்றடைய உதவுவதில்லை.

இன்னும் பலர் மிக மோசமான நிலையிலேயே உள்ளனர்.

50 வருடங்களுக்கு மேலாக இடஒதுக்கீடு இருந்தும் இன்னும் பலர் பயனைப் பெறவில்லை என்றால், எங்கோ தவறுள்ளது என்றே அர்த்தம்.

திருமாவளவன்

பட்டியலின மக்களின் பாதுகாவலராகத் தன்னை முன்னிறுத்தும் திருமாவளவன், இன்னும் மோசமான நிலையிலிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை பற்றிக் கவலைப்படவே இல்லை.

அவரால் சிலர் வாய்ப்பு பெற்று இருக்கலாம் என்பதற்காக அதையே எடுத்துக்காட்டாகக் காலத்துக்கும் கூறிக்கொண்டு இருக்க முடியாது.

அவர்களை மேலே வரவிடாமல் அவருடைய அரசியலுக்கே இளைஞர்களைப் பயன்படுத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் நடந்த இரு சம்பவங்கள் மிகக் கோபப்படுத்தியது.

மேடையில் பேசும் போது ‘நம் ஒவ்வொருவர் மீதும் 10 வழக்குகள் இருக்க வேண்டும்‘ என்பதைப் பெருமையாக, வலியுறுத்தும் விதத்தில் திருமாவளவன் கூறினார்.

அமர்ந்து இருந்த அவர் ஆதரவு மக்கள் கூட்டம் கை தட்டி ஆதரிக்கிறது.

இதே போல இவர் கட்சி பேச்சாளர் ஒருவர் ‘நாமெல்லாம் ரவுடிகள்‘ என்று மேடையில் பெருமையாகக் கூறுகிறார்.

இதைக்கேட்டு அங்குள்ள இளைஞர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

பட்டியிலின மக்கள் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதை விட சிறைக்குச் சென்று வருவதைத்தான் திருமாவளவன் எதிர்பார்க்கிறாரா?

பட்டியலின தலைவர் இளைஞர்களை, மக்களைத் தவறாக வழி நடத்தலாமா? சிறைக்குச் செல்ல ஊக்குவிக்க வேண்டுமா? வளர்ச்சிக்கு உதவ வேண்டுமா?

ஆதிக்க சாதியினருக்கு எதிராக செயல்படுவது தான் கெத்து என்ற மன நிலையில் இருந்தால், தவறான வழியில் செல்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சி என்பது மற்றவர்கள் வியக்கும்படி வாழ்ந்து காட்டுவது.

உணர்ச்சித்தூண்டல்

திருமாவளவன் உட்பட அரசியல்வாதிகள் அனைவருமே இளைஞர்களின் உணர்ச்சிகளைத்தூண்டி அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் ஆனால், இதை இளைஞர்கள் உணர்வதில்லை.

இளம் வயதில் இது போன்ற செயல்களுக்கு ஆதரவு இருக்கும், இவ்வாறு நடந்து கொள்வதைக் கெத்தாக நினைப்பவர்கள் எளிதாக ஏமாந்து விடுகிறார்கள்.

வளர்ச்சிக்கான அறிவுரையை வழங்காமல், வழக்குகள் இருக்க வேண்டும், நாமெல்லாம் ரவுடிகள் என்று உணர்ச்சிகளைத் தூண்டுவது மிக மோசமான செயல்.

தற்போது எதுவுமே தெரியாது, சொன்னாலும் புரியாது.

45 வயதைக்கடக்கும் பொழுது தான் எவ்வளவு பெரிய தவறை செய்துள்ளோம், முட்டாளாக இருந்து வாழ்க்கையை வீணடித்துள்ளோம் என்பது புரியும்.

ஆனால், அது காலம் கடந்த செயலாக இருக்கும்.

அரசியல்வாதிகள்

தமிழக அரசியல் கட்சிகள் அனைவரும் பட்டியலின மக்களுக்காகப் பாடுபடுகிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களை அடிமை எண்ணத்துடனே அணுகுகிறார்கள்.

அவர்களுக்கான சமூக மரியாதையைக் கொடுப்பதில்லை. அது திருமாவளவனாக இருந்தாலும் சில நேரங்களில் பிளாஸ்டிக் நாற்காலியில் வெளிப்பட்டு விடுகிறது.

இதற்குச் சமீபத்தில் மேடைகளிலேயே பட்டியலின மக்களை அரசியல்வாதிகள் அவமானப்படுத்தியதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.

இவையல்லாமல் பொது இடங்களில், கோவில்களிலும் அவமானப்படுத்துவது சமூகநீதி பேசும் கட்சிகளின் நபர்களே!

தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த நபர்களை இன்னமுமா கண்டுபிடிக்கிறார்கள்?! இவர்களுக்குத் தெரியும் ஆனால், அமைதியாக இருக்கிறார்கள்.

சமூகநீதி என்பது இவர்களின் கௌரவத்துக்குப் பங்கம் வராதவரையே.

பட்டியலின நீதிபதியையே ‘நாங்கள் போட்ட பிச்சையில் வந்தவர்கள்‘ என்று கூற அவர்களது ஆழ்மன வக்கிரம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

சமூகநீதி பேசுபவர்களின் வாயிலிருந்து ‘நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?‘ என்று எப்படி வருகிறது என்பதை யோசித்தால் இவர்களின் அரசியல் புரியும்.

பட்டியிலின மக்களுக்காக கடந்த ஆட்சியில் குரல் கொடுத்த பல போராளிகள் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை.

போராளிகளின் நோக்கம் பட்டியலின மக்களின் சமூகநீதிக்காக போராடுவது என்றால், ஏன் தற்போது எதுவுமே நடக்காதது போன்ற அமைதி, புறக்கணிப்பு!

வளர்ச்சியைப் பெறுவது எப்படி?

பட்டியிலின மக்களுக்கு இடஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் பயன்கள் சென்று சேர்வதில்லை. அவர்களுக்கு அறிவுரை கூற சரியான நபர்கள் இல்லை.

பயன்பெற்றவர்களே மேலும் மேலும் பயன்பெறுகிறார்கள் ஆனால், இன்னொரு பக்கம் பலர் மிக மோசமான நிலையிலேயே இருக்கிறார்கள்.

மத்திய, மாநில அரசுகள் பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தும் இது தான் நம் தலைவிதி என்று இருப்பது தன்னையே ஏமாற்றிக்கொள்வது போலத்தான்.

ஆலோசனை

பட்டியலின மக்கள் சரியான வழியை, ஆலோசனையைப் பின்பற்றினால், மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. ஏனென்றால், வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது.

ஆதிக்கச் சாதியில் வந்து இருந்தாலும், அரசு உதவி பெறும் பள்ளியிலேயே படித்தேன். சென்னை வந்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுத் தான் ஒரு நல்ல நிலைக்கு வந்தேன்.

யாராக இருந்தாலும் பிரச்சனைகள், தடைகள் உள்ளது. ஒப்பீடு செய்ய முடியாது என்றாலும், அதற்காக காரணங்களைக் கூறுவது நம்மை முன்னேற்றாது.

இங்கே Hard work என்பதைவிட Smart work தான் தேவை.

நல்ல பணியில் இணையும் வரையே யாராக இருந்தாலும் பிரச்சனை. இணைந்து விட்டால், அதன் பிறகு வாழ்க்கை திறமை சார்ந்து மாறி விடும்.

எனவே, இதுவரை வருவது மட்டுமே பட்டியலின மக்களுக்குக் கடினம். வந்து விட்டால், அதன் பிறகு பொருளாதார வளர்ச்சியைத் தடுக்க முடியாது.

விழிப்புணர்வு

இந்த நிலைக்கு வர ஏராளமான உதவிகளை அரசுகள் செய்கின்றன. இதற்குத் தேவை சரியான ஆலோசனை, வழிகாட்டுதல், நண்பர்கள் மட்டுமே!

சுருக்கமாக மத்திய, மாநில அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் ஆனால், அரசியல்வாதிகளை நம்பக் கூடாது.

அரசியல்வாதிகளின் பின்னால் சென்றால், அவர்களின் அடிமையாக வாழ்க்கையைத் தொலைத்து விட வேண்டியது தான்.

விழிப்புணர்வு இல்லாததே பட்டியலின மக்களின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. மக்கள் விழிப்புணர்வு பெற்றால் அரசியல் செய்ய முடியாது என்பது அரசியல்வாதிகளின் எண்ணமாக உள்ளது.

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால், படிப்பும், சரியான திட்டமிடுதலும், சரியான வாய்ப்புகளைத் தேர்வு செய்வதும் முக்கியம்.

இதற்குப் பட்டியிலினத்தவர்கள் நாட வேண்டியது அரசின் திட்டங்களை & சரியான வழிகாட்ட உதவும் நபரையே! அரசியல்வாதிகளை அல்ல.

தொடர்புடைய கற்றுரைகள்

கதையல்ல நிஜம் | ஒரு நாளில் ஒரு லட்சம்

திருமாவளவன் அவர்களே!

தீண்டாமை எப்போது ஒழியும்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here