ஜன் லோக்பால் | என்ன நடக்கிறது?

13
ஜன்லோக்பால்

ரபரப்பாக துவங்கிய அண்ணா ஹசாரே போராட்டம் தற்போது ஜூன் மாதம் இறுதி செய்யப்படும் ஜன் லோக்பால் சட்ட மசோதாவிற்க்கான வரைவுப்பணியில் அந்தக் குழுவில் உள்ளவர்கள் ஈடுபட்டு இருப்பதால் பரபரப்பு குறைந்து காணப்படுகிறது.

உண்ணாவிரதப் போராட்டம் முடிவுற்ற பிறகு அன்னஹசாரே குழு பல்வேறு பிரச்சனைகளை சர்ச்சைகளை சந்தித்தது.

இது குறித்து எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால், இது பற்றி பல தகவல்கள் இருந்ததால் உடனே எழுத நேரமில்லை அதுவுமில்லாமல் அவசரப்பட்டு எழுதக்கூடிய பதிவும் அல்ல. Image Credit

சாந்தி பூஷன்

அன்னா ஹசாரேவிற்கு வந்த முதல் பிரச்சனையே இவர் தான்.

இவருடைய குழுவில் சாந்தி பூஷணும் அவருடைய மகன் பிரஷாந்த் பூஷணும் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புக் கிளம்பியது அதாவது ஒரே குடும்பத்திலிருந்து இருவர் எப்படி இந்தக்குழுவில் இருக்கலாம் என்பதே அது.

இதற்கு அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பாபா ராம்தேவ் எதிர்ப்பு தெரிவித்ததால் அன்னா ஹசாரேவிற்கு தர்மசங்கடம் ஆகியது.

அதோடு கிரண் பேடியை இந்தக்குழுவில் சேர்க்காததற்கும் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அன்னா ஹசாரே இவர்கள் சட்டம் நுணுக்கம் நன்கு தெரிந்தவர்களாக இருப்பதால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன் என்று கூறி இருந்தார்.

கிரண்பேடியும் “எனக்கு சட்ட நுணுக்கங்கள் இவர்கள் அளவிற்கு தெரியாது அதுவுமில்லாமல் இந்தக் குழுவில் இடம் பெறவேண்டும் என்று நான் நினைத்தது இல்லை” என்று கூறி விட்டார்.

இதன் பிறகு பாபா ராம்தேவ் இது பற்றி மேலும் பிரச்சனை ஆக விரும்பவில்லை என்று கூறி அதோடு அப்பிரச்சனையை முடித்துக்கொண்டார்.

இருப்பினும் இது தொடர்பாக சில சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன.

நீதிபதிக்கு லஞ்சம்

சாந்தி பூஷன் சிலவருடங்கள் முன்பு “எனது மகன் பிரசாந்த் பூஷண் நினைத்தால் ரூ 4 கோடி வரை கொடுத்து நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிடுவார்” என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவுடன் பேசியதாக ஒரு CD அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டது இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இது போலியாக தயார் செய்யப்பட்டது என்று சாந்தி பூஷன் கூறினார்.

அதோடு தனியார் தடவியல் பரிசோதனையின் மூலம் அதைப் போலி என்று நிரூபித்து இருந்தார் ஆனால் அரசு தரப்பு தடவியல் நிபுணர்கள் இது போலியில்லை என்று கூறி இருந்தார்கள்.

இந்தச் சர்ச்சை இன்னும் முடியவில்லை.

குறைந்த மதிப்பில் நிலம்

அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் பல கோடி மதிப்புள்ள நிலத்தை மதிப்பை குறைத்து சாந்தி பூஷன் சில லட்சங்களில் வாங்கியதாக பிரச்சனை கிளம்பியது.

இதையும் மறுத்துக்கூறி இருந்தார் இன்னும் சர்ச்சை முடியவில்லை.

தகவல் மையத்துக்கான தேசிய உரிமை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நுதான் தாகூர் சாந்தி பூஷன் மற்றும் பிரசாந்த் பூஷனை நீக்கக்கோரி போராட்டம் நடத்தினார்.

சந்தோஷ் N ஹெக்டே

முன்னாள் நீதிபதியான இவரைப் பற்றி திக்விஜய் சிங் கடுமையான பல குற்றச்சாட்டுகளை வைத்ததால் செம கடுப்பாகி விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹெக்டே தான் ஜன் லோக்பால் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்.

“என்னிடம் மிச்சம் இருப்பது என் நேர்மை மட்டுமே! இதை யாரும் சந்தேகிக்க என்னால் அனுமதிக்க முடியாது.

நான் அரசியல்வாதியும் அல்ல இவர்களைப் போல என்னால் பேசிக்கொண்டு இருக்க முடியாது அதனால் நான் விலகுகிறேன்” என்று கூறி விட்டார்.

இதனால் திக் விஜய் சிங்கிற்கு திக்கென்று ஆனதால் இவரைப்பற்றி எனக்கு தெரியாது என்று ஒரே போடாகப்போட்டு விட்டார்.

இதனால் மேலும் கடுப்பான ஹெக்டே என்னைப்பற்றி எதுவுமே தெரியாமல் இவர் எப்படி என்னைப் பற்றி தவறாகக் கூறலாம் என்று கேட்டதுக்கு திக் விஜய்சிங்கிற்கு பதில் கூற முடியவில்லை.

பின்னர் அன்னா ஹசாரேவை சந்தித்த பிறகு மறுபடியும் குழுவில் தொடர்வதாக கூறி விட்டார். இதன் பிறகு எந்த பிரச்சனையும் வரவில்லை.

சோனியாவிற்கு கடிதம்

இதைப்போல பிரச்சனைகளால் கடுப்பான அன்னா ஹசாரே சோனியாவிற்கு ஜன் லோக்பால் சட்ட மசோதாவை முடக்க பலர் குடைச்சல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

குழுவில் உள்ளவர்களுக்கு வேண்டும் என்றே பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள் என்று கடிதம் எழுதினார்.

இதற்கு பதில் அளித்த சோனியா பின் வருமாறு கூறி இருந்தார்

“லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இதை, அரசியல் ரீதியாக மழுங்கச் செய்யும் வேலைகளில் எனக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை.

அதிகரித்து வரும் லஞ்ச, ஊழலை ஒழிக்க வேண்டியது அவசியத் தேவை. இவற்றை ஒழிக்க வேண்டும் என்கிற எனது நிலைப்பாட்டில் எந்தவிதமான சந்தேகமும் கொள்ள வேண்டாம்.

இம்மசோதாவை தடம்புரளச் செய்யும் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பொது வாழ்க்கையில் ஈடுபடும் நபர்கள், ஊழலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்கிற எனது நிலைப்பாடு குறித்து, தாங்கள் எந்தவிதமான சந்தேகமும் கொள்ள வேண்டாம்”

வாங்கிக்கட்டிக்கொண்ட கபில்சிபல்

ஜன் லோக்பால் சட்டம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது இந்தச்சட்டத்தால் பள்ளிமாணவர்களின் பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியாது என்று பேட்டியளித்தார் கபில்சிபல்.

இதனால் கடுப்பான அன்னா ஹசாரே இந்தச்சட்டத்தால் எதுவும் செய்ய முடியாது என்று கபில்சிபல் கருதினால் எதற்கு இந்தக் குழுவில் இருக்க வேண்டும்?

இதிலிருந்து விலகிக் கொள்ளலாமே! என்று கூறியதால் எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டார்.

ஹி ஹி ஹி நான் சும்மா லுலுலாயிக்கு கூறினேன் என்று சமாளித்து அதன் பிறகு எதுவும் பேசாமல் இருந்து விட்டார்.

மோடி

குஜராத்தில் ஊழல் இல்லாத அரசை முதலமைச்சர் நரேந்திர மோடி நடத்துகிறார் என்று அன்னா ஹசாரே அவரைப்பாராட்டி உதாரணமாகக் கூறினார்.

உடனே எல்லோரும் முஸ்லிம்களைக் கொல்வதற்கு துணை புரிந்த ஒரு நபரை எப்படி அன்னா ஹசாரே ஆதரிக்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

“நான் அவருடைய ஊழல் இல்லாத நடவடிக்கைகளை மட்டுமே பாராட்டினேன்.

மற்ற விசயங்களைப் பற்றி நான் எதுவும் கருத்துக்கூறவில்லை” என்று அன்னா ஹசாரே கூறியதை இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

மோடி மீது வன்முறை குற்றச்சாட்டுகள் இருந்தாலும் குஜராத்தில் ஊழல் இல்லை (அல்லது குறைந்தபட்சம் மற்ற மாநிலங்களைப்போல இல்லை) என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இதைப்பாராட்டுவதால் மோடி செய்த மற்ற அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் ஆகாது என்பது என் தனிப்பட்டக்கருத்து.

இதை ஒரு சாதாரண Blogger கூறினாலே கடும் எதிர்ப்புக் கிளம்பும் அப்படி இருக்கையில் அன்னா ஹசாரேவிற்கு எதிர்ப்பு வந்ததில் எந்த வியப்புமில்லை.

தலித் உறுப்பினர்

ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் மாயாவதி ஜன் லோக்பால் குழுவில் ஒரு தலித்தும் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விட ஆரம்பித்து விட்டனர்.

அன்னா ஹசாரே சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்களை மட்டுமே தன் குழுவில் சேர்த்து உள்ளார்.

இதனால் கிரண் பேடிக்குக் கூட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதைப்போல பிரச்சனை வந்ததால் “இவ்வாறு ஒவ்வொரு ஜாதியினரும் கேட்டுக்கொண்டு இருந்தால் எப்படி நடைமுறைப்படுத்துவது அதனால் அரசுக்குழுவில் வேண்டும் என்றால் சேர்த்துக்கொள்ளலாம் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்று கூறி விட்டார்கள்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததால் மட்டுமே அவர்களும் ஒரு மரியாதைக்குரிய நிலைக்கு வந்து இருக்கிறார்கள் இதை யாராலும் மறுக்க முடியாது ஆனால் அது அனைத்து விசயங்களுக்கும் பொருந்தாது என்பதை உணர வேண்டும்.

சலுகை என்பது எங்கு கொடுக்கப்படவேண்டுமோ அங்கு மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும்.

சட்ட நுணுக்கம் தெரிந்தவர்கள் யாராக இருப்பினும் சேர்த்துக் கொள்வதில் பிரச்சனை இல்லை.

இவ்வாறு கூறுபவர்கள் சட்டம் நுணுக்கம் நன்கு தெரிந்த தலித் ஒருவரைக்கூறி இவரைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டு இருந்தால் நியாயம்!

ஆனால், நிபுணரோ இல்லையோ ஆனால், குறிப்பாக ஒரு தலித் இருக்க வேண்டும் என்பது பக்கா அரசியல் தவிர வேறு எதுவுமில்லை.

இவர்களைப் போல அனைத்திலும் அரசியலைப் புகுத்தும் அரசியல் கழிசடைகள் இருக்கும் வரை நாடு முன்னேற வாய்ப்பே இல்லை.

அரசியல்

அன்னா ஹசாரே உண்ணாவிரதப்போராட்டம் முடிந்த பிறகு அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.

ஒரு சட்டத்தை தடுக்க எத்தனை பேர் இடைஞ்சல் அதுவும் பல்வேறு இடங்களில் கொடுக்கிறார்கள் (சாந்தி பூஷன் விஷயம் தவிர்த்து) என்பதைப் பார்த்தால் கிறுகிறுக்கிறது.

இவ்வளவு மக்கள் ஆதரவு உள்ள இவர்களுக்கே இந்த நிலை என்றால் ஒரு சாதாரண பொது ஜனத்தின் நிலையை நினைத்தால்… ம்ஹீம் ..நினைத்தே பார்க்க முடியவில்லை.

இதில் சாந்தி பூஷன் (நான் எந்தத்தவறும் செய்யவில்லை) கூறியதிற்கு நீங்கள் உத்திரவாதம் தருகிறீர்களா? என்று பத்திரிக்கையாளர்கள் அன்னா ஹசாரேவிடம் கேட்டதற்கு “சாந்தி பூஷனின் நம்பகத்தன்மைக்கு நான் எப்படி உத்தரவாதம் அளிக்க முடியும்.

என் மீதான நம்பகத் தன்மைக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.

பொறுமையாக யோசித்தால் இதை சரி என்றும் நினைக்க முடியவில்லை தவறு என்றும் கூற முடியவில்லை.

சாந்தி பூஷன் மீது உள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்குண்டான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று கூறி இருக்கிறார்.

எது எப்படியோ சாந்தி பூஷன் பிரச்சனை அன்னா ஹசாரேவிற்கு தலைவலியை கொடுத்தது உண்மை.

இவ்வளவு பிரச்சனைகளை சாந்திபூஷன் சந்தித்து இருந்ததால் நியாயமாக “என் மீதான குற்றங்களைப் பொய் என்று நிரூபித்துப் பின் இந்தக்குழுவில் இணைகிறேன்” என்று கூறி விலகி இருக்க வேண்டும்.

ஆனால், இவர் இன்னும் அடம்பிடித்து உட்கார்ந்து இருப்பது ஜன் லோக்பாலுக்கு தேவையற்ற தலைவலியையே கொடுக்கும்.

இவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர் இதை உணராமல் அல்லது தெரிந்தும் தொடர்வது ஏற்புடையதாக இல்லை.

அன்னா ஹசாரே

அன்னா ஹசாரே இத்தனை வருட வாழ்க்கையில் தெரிந்து கொள்ளாததை கடந்த ஒரு மாதத்தில் நன்கு தெரிந்து கொண்டு இருப்பார்.

அரசியல் என்றால் இவ்வளவு இருக்கிறதா! என்று புரிந்து கொண்டு இருப்பார்.

நாம் கூறும் வார்த்தைகள் எவ்வளவு வலிமையானது அது தவறாகப்போனால் அது எப்படி நம்மை தாக்கும் என்பதை சரியாக உணர்ந்து இருப்பார்.

நாம் நினைக்கும் அளவிற்கு அரசியல்வாதிகளை எதிர்ப்பது அவ்வளவு எளிது இல்லை என்பதை உணர்ந்து இருப்பார்.

சில நேரங்களில் சிறு குழந்தை போல நடந்து கொள்கிறார் தான் கேட்பதற்கு உடனே பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

அதே போல் மனதில் பட்டதை பட் பட் என்று கூறி விடுகிறார் இதனால் வரும் பின் விளைவுகளை யோசிப்பதில்லை.

இதற்கு அரசியல் அனுபவம் இல்லாததே காரணம்.

அவர் போராட்டம் காந்திய வழியில் நடத்தியதால் வெற்றி பெற்று இருக்கலாம் ஆனால், அவரைச் சுற்றி உள்ளவர்களும் சட்டத்தை நிறைவேற்ற அதிகாரம் உள்ளவர்களும் காந்திய வழியில் நடப்பவர்கள் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்னா ஹசாரேவிற்கு மக்கள் ஆதரவு கொடுத்துள்ளார்கள் என்பது உண்மை தான் அதற்காக எதையும் செய்யலாம் என்று நடந்து கொள்ள முடியாது.

ஆரம்பத்தில் ரொம்பப் பிடிவாதமாக இருந்தவர் தற்போது இறங்கி வந்துள்ளது அவருக்கு தற்போது கிடைத்த அனுபவமே ஆகும்.

மக்கள் ஆதரவு இருப்பதால் எதையும் உடனே நிறைவேற்றி விட முடியாது இதை அன்னா ஹசாரேவை ஆதரிப்பவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இத்தனை காலம் இதற்காக காத்துக்கொண்டு இருந்தார் என்பதும் உண்மை அதை செயல்படுத்த அதற்குண்டான காலம் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும் என்பதும் உண்மை.

ஒரு சட்ட மசோதாவை மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதற்காக just like that ஒரே நாளில் செய்து விட முடியாது.

இதற்கு என்று உள்ள கூட்டத்தொடரில் தான் செய்ய முடியும்.

சிலர் அன்னா ஹசாரே போராட்டத்தை கிண்டல் செய்கிறார்களே?

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயம் என்றாலும் அதற்கு நிச்சயம் எதிர்ப்பு, மாற்றுக்கருத்து இருக்கும் இருக்க வேண்டும் இவை இல்லாமல் எந்த ஒரு விசயமும் இருக்க வாய்ப்பே கிடையாது.

சமீபத்தில் 20 பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த நபரைத் தூக்கில் போடவேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கூறினால் “அவ்வாறு செய்யக் கூடாது நீங்கள் செய்வது ஈவு இரக்கமற்ற செயல்” என்று அதற்கு நியாயம் கற்பிக்கக் கூடச் சிலர் இருக்கிறார்கள்.

எனவே, இது ஒன்றும் பெரிய விசயமில்லை.

அதுவுமில்லாமல் நாம் ஒரு விஷயத்தை சரி என்று நினைப்பது போல மற்றவர்கள் தவறு என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது.

எனவே நம் கருத்துக்களைக் கூறலாமே தவிர அவர்கள் ஏன் அப்படிக் கூறுகிறார்கள் என்று எதிர்க் கேள்வி கேட்க முடியாது.

அதுபோலத்தான் அன்னா ஹசாரே போராட்டமும் சிலருக்கு அவர் செய்வது பிடிக்கவில்லை.. இருக்கட்டுமே அனைவருக்கும் ஒரு விசயம் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லையே!

பெரும்பான்மையான மக்கள் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்கள்.

எனவே, எதிர்ப்பு தெரிவித்து தவறாக பேசுபவர்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஜன் லோக்பால் நிலை என்ன?

தற்போது பொதுமக்கள் தரப்பில் அன்னா ஹசாரே உறுப்பினர்களும் அரசு தரப்பில் கபில் சிபல் போன்றவர்களும் இந்தச் சட்டத்தை வரையறை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இரண்டாவது கூட்டம் நன்றாகப் போனதாக அன்னா ஹசாரே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஜூன் 30 ம் தேதி இறுதி செய்யப்பட்டு அதன் பிறகு நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் வைக்கப்பட்டு அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே இதைச் செயல்படுத்த முடியும்.

சட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் செய்வதாகக் கூறி ராம் தேவ் ஜூன் 4 முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தனது ஆதரவாளர்களுடன் நடத்தப்போவதாக கூறி இருக்கிறார்.

உண்ணாவிரதம் என்பதை மிக முக்கியமான நேரத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தற்போது அன்னா ஹசாரே செய்ததைப்போல… இல்லை என்றால் மக்களிடையே அதற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய் விடும்.

“ஆமாயா! இவர்களுக்கு வேறு வேலையே இல்லை சும்மா உண்ணாவிரதம் உண்ணாவிரதம் என்று கூறிக்கொண்டு இருப்பார்கள்” என்று உண்ணாவிரதம் என்ற ஒரு அருமையான போராட்டமே கேலிக்குரியதாகி விடும்.

எனவே ஜன்லோக்பால் குழுவில் உள்ளவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

அதோடு மக்களும் நடைமுறை பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எதற்கும் கண்மூடித்தனமான ஆதரவை வழங்கக் கூடாது.

தவறு என்று தெரிந்தால் சுட்டிக்காட்டவும் சிறப்பாக செய்து இருந்தால் பாராட்டவும் தயங்கக்கூடாது அது அன்னா ஹசாரேவாக இருந்தாலும்.

நான் அனைவருக்கும் கூற விரும்புவது அன்னா ஹசாரே போராட்டம் செய்த போது ஆதரவு அளித்தோம் விவாதித்தோம் அதோடு நம் வேலை முடிந்தது என்று ஒதுங்கி விடாதீர்கள்.

இதில் என்ன நடக்கிறது? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பதைப் பற்றியும் தெரிந்து இருந்தால் மட்டுமே நாம் இதற்கு உண்மையான ஆதரவு கொடுத்ததைப் போல ஆகும் இல்லை என்றால் கூட்டத்தோடு “கோவிந்தா” போட்டது போலத்தான்.

குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை அன்னா ஹசாரே மீதும் சில குற்றச்சாட்டுகள் இருக்கலாம்.

100% ஒருவர் நல்லவராக இருந்தால் மட்டுமே ஆதரவு என்றால் நீங்கள் எந்தக்காலத்திலும் யாருக்கும் ஆதரவு கொடுக்க முடியாது.

தற்போதைய நிலைமையில் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அன்னா ஹசாரே தான்.

எனவே, நம்மில் சில விசயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தி பார்க்கக்கூடிய நேரம் இதுவல்ல.

அதேபோல தவறுகள் நடந்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்பதும் அர்த்தமல்ல.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனையின் எல்லை எது என்று தெரியும் அதை உணர்ந்து நடந்து கொண்டாலே போதுமானது.

சட்டம் நிறைவேறுமா?

முன்னரே கூறியபடி இந்தச்சட்டம் அமுலாக்கப்பட்டால் பாதிக்கப்படப்போவது அரசியல்வாதிகள் தான் எனவே அவ்வளவு சீக்கிரம் இதை செயல்படுத்த விடமாட்டார்கள்.

இதையும் மீறி ஜன் லோக்பால் சட்டத்ததை நிறைவேற்ற வைப்பது ஜன் லோக்பால் அன்னா ஹசாரே குழுவின் கையிலும் மக்கள் ஆதரவிலும் மட்டுமே உள்ளது ofcourse media.

இவைப் பற்றி நான் படித்துக்கொண்டு இருந்தாலும் நேரமின்மை காரணமாக விரிவாக எழுத முடியவில்லை.

காரணம் இதைப் போல விசயங்களைத் திரைவிமர்சனம் போல எளிதாக எழுதி விட முடியாது.

நான் அன்னா ஹசாரே பற்றி எழுதிய போது பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்கள்.

எனவே, அதற்காகவாவது இது குறித்து விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.

பதிவு கொஞ்சம் பெரியது தான் வேறு வழி இல்லை 🙂 .

சிலர் நான் கூறிய விசயங்களை ஏற்கனவே செய்தித்தாள்களில் தொலைக்காட்சிகளில் படித்துப் பார்த்து தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.

சிலருக்கு இது பற்றிய தகவல்கள் தெரியாமலே சென்று இருக்கலாம்.

எனவே, அவர்களும் இதைப்படித்தால் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக ரொம்பப் போட்டுக் குழப்பாமல் எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

  1. கிரி
    நான் இவர்களை ஓரளவிற்கு கூர்ந்து கவனித்து வருகிறேன் .அண்ணா ஹசாரே ஒரு மிக சிறந்த காந்தியவாதி ,மிக சிறந்த களப்பணியாளர் .இவருடைய ராலேகான் சித்தி கிராமம் மிக சிறந்த உதாரணம் .
    மேலும் இன்று ஊழலுக்கு எதிரான மிக சிறந்த ஆயுதமாக பயன்படும் தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வர இவருடைய பங்கு மகத்தானது ,இது பலருக்கு தெரியாது -இவர் மீடியாவால் திடிரென்று முளைத்து வந்தவர் அல்ல .
    காந்திய வழிமுறையே -சிறு சிறு லட்சியங்களை அடைந்து பிறகு அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தை எடுத்து செல்வது ,ஏதோ ஒரு வரையறையில் ஜன லோக்பால் நிறைவேறியாக வேண்டும் ,பிறகு அதை செம்மை செய்ய அடுத்தகட்ட நடவடிக்கை தேவைப்படும் .
    அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே குரலில் இதற்கு ஒத்துழைப்பு நல்க மறுப்பது ஏன் என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும் .இன்னும் பல புதிய அவதூறுகளை வாரி இறைப்பார்கள் அதையெல்லாம் தாண்டி வரும் நம்பிக்கையும் பக்குவமும் நமக்கு வேண்டும் .
    அவருடன் இருக்கும் சிலர் நம்பகமற்று இருக்கலாம் -அவர்களுக்கு இந்த பதவியில் ஆதாயம் ஏதும் இல்லை ,அதனால் நமது ஒரே நம்பிக்கையான இந்த சட்டத்திற்கும் ,ஹசாரேக்கும் நாம் ஆதரவு அளித்தே ஆகா வேண்டும்.

  2. அந்த சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவே இல்லை அதற்குள் அதை முடக்க, ஆயிரம் சதி நடக்கிறது. இன்னும் நடைமுறைக்கு வந்தால் அதை நமுத்துப்போக வைக்க இன்னும் என்னென்ன வேலைகள் நடக்குமோ?

  3. வொந்டெர்புல் ப்ளாக் அண்ட் ப்றேசெண்டடின் கிரி. இ ஜஸ்ட் நொவ் எமைலேத் யு.

  4. அருமையான தொகுப்பு கிரி.

    இந்திய அரசியலை பொறுத்தவரை அனைவரும் கவனிக்க தொடங்கியாகிவிடாது, இனி இளைய படித்த தலைமுறைகள் களத்தில் இறங்கி வேலை செய்யவும் துவங்கி விட்டால், சதிகாரர்கள் கூண்டோடு ஒழிந்து விடுவார்கள்.

    அடுத்த தலைமுறையாவது நல்ல அரசியலை கண்டு, செய்து, நாட்டை நடத்தி வல்லரசு கனவை நினைவாக்க வேண்டும் :-).

    நன்றி.

  5. ஏற்கனவே தமிழ்உதயம் என் பதிவில் கொடுத்துள்ள விமர்சனம் தான் நினைவுக்கு வருகின்றது.

    காங்கிரஸ் இவரைப் போல எத்தனை பேர்களை பார்த்திருப்பார்கள்? மென்னியை பிடித்து கொல்லாமல் மெதுவாக கொல்வது காங்கிரஸ்க்கு கை வந்த கலை.

  6. உண்ணாவிரததிற்கு அப்புறம் இவ்ளோ நடந்துருக்கா ?

    அன்னாவிற்கு உண்ணாவிருதம் இருக்கும் பொது கூட இவ்ளோ மயக்கம்
    வந்துருக்காது….

    நல்ல விஷயம் நடக்க கொஞ்சம் நேரம் ஆகத்தான் செய்யும்…

    காத்திருப்பதை தவிர ஒண்ணும் பண்ண முடியாது…

  7. @ANaND அன்னாவிற்கு உண்ணாவிருதம் இருக்கும் பொது கூட இவ்ளோ மயக்கம்
    வந்துருக்காது….
    🙂 ரசித்தேன்.

    மிக்க நன்றி கிரி. அண்ணாவின் உண்ணாவிரத்தத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. மிகவும் தெளிவாக கோர்வையாக எழுதி இருக்குறீர்கள். இந்த பதிவில் உள்ள உங்கள் கருத்துடன் 100% ஒத்துப் போகிறேன்.

  8. //சட்ட நுணுக்கம் தெரிந்தவர்கள் யாராக இருப்பினும் சேர்த்துக் கொள்வதில் பிரச்சனை இல்லை. இவ்வாறு கூறுபவர்கள் சட்டம் நுணுக்கம் நன்கு தெரிந்த தலித் ஒருவரைக்கூறி இவரை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டு இருந்தால் நியாயம்! ஆனால் நிபுணரோ இல்லையோ ஆனால் குறிப்பாக ஒரு தலித் இருக்க வேண்டும் என்பது பக்கா அரசியல் தவிர வேறு எதுவுமில்லை. இவர்களைப்போல அனைத்திலும் அரசியலைப் புகுத்தும் அரசியல் கழிசடைகள் இருக்கும் வரை நாடு முன்னேற வாய்ப்பே இல்லை.//
    இந்தியாவிற்கே அரசியல் சாசனம் உருவாக்கிய அம்பேத்கர் பிறந்த இனத்தில் யாருக்குமே சட்ட நுணுக்கம் தெரியாது என்பது போல் இருக்கிறது உங்கள் கருத்து.
    அடுத்து ராம்விலாஸ் பஸ்வானோ அல்லது மாயாவதியோ அவர்களில் ஒருவரை உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால் உங்கள் கூற்று சரியென கொள்ளலாம்.அவர்கள் தலித் இனத்தை சார்ந்த ஒருவரும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்கள்.தேர்ந்தெடுப்பவர்கள் தலித்துகளில் அரசியல் நுணுக்கம் தெரிந்த அறிவாளி ஒருவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமே. அவர்கள் [ராம்விலாஸ்,மாயாவதி] ஒரு பெயரை முன் மொழிந்தால் அவர் மீது மற்ற இனத்தவர் சேற்றை வாரி பூச வசதியாய் இருக்கும் என்பதால் இந்த குற்றச்சாட்டா?

  9. @சேக்காளி உங்கள் ஆதங்கம் புரிகிறது. நீங்களே கொஞ்சம் பொறுமையா யோசித்துப்பாருங்க.. இதைப்போல ஒவ்வொரு ஜாதியினரும் கேட்க ஆரம்பித்தால் எப்படி நடைமுறையில் சாத்தியம்?

    உங்கள் மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்கள் ராம்விலாஸ் பஸ்வானும் மாயாவதியும் தலித் மீதுள்ள அக்கறையில் தான் இதை கூறி இருக்கிறார்கள் என்று? தலித்துகளுக்காக குரல் கொடுத்தோம் என்று கூறி அதை வைத்து கொஞ்சம் ஒட்டு வங்கியை கவர் செய்யலாம் அதற்காக மட்டுமே இவர்கள் செய்துள்ளார்களே தவிர தலித் மீது கொண்ட உண்மையான அக்கறையில் இல்லை.

    அதே போல இந்த ஒரு விசயத்தில் தலித் பங்கு கொள்ளாததால் எந்த ஒரு இழுக்கும் தலித்துக்கு வந்துவிடப்போவதில்லை. இதில் இவர்கள் பங்கு கொண்டால் தான் தலித் வாழ்வு முன்னேறும் இல்லை என்றால் அழிந்து விடும் என்ற எந்த நெருக்கடியுமில்லை.

    இவர்கள் இருவருக்கும் உண்மையிலே தலித் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அவர்கள் வாழ்வு முன்னேற ஏராளமான முயற்சிகளைச் செய்யலாம். ஜன்லோக்பால் ஒன்றும் இறுதி வாய்ப்புக்கிடையாது இனி வாய்ப்பே கிடைக்காது என்று கூறுவதற்கு.

    தலித்களுக்கு நல்லது செய்ய எத்தனையோ வழிகள் உள்ளன, அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல ஆயிரக்கணக்கான வழிகள் உள்ளன அதை செயல்படுத்த முயற்சிகள் எடுத்தாலே போதுமானது.

    இது எப்படி இருக்கு என்றால் இருக்கிற கோவிலை பராமரிக்காமல் நான் புதிதாக கோவில் கட்டுகிறேன் என்று வெட்டி ஜம்பத்துக்கு செய்வது போல் இருக்கு இவர்கள் செய்வது.

    இவர்கள் எப்படிப்பட்ட அரசியல்வாதிகள் என்று அனைவரும் அறிவார்கள்.. இதே ஒரு நல்ல அரசியல்வாதி மக்களுக்காக பாடுபடுபவர் இதைக்கூறி இருந்தால் இவ்வளவு சந்தேகங்கள் நமக்கு வந்து இருக்காது.

    மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கிறேன் ஜாதி கொண்டல்ல. எனவே எனக்கு யார் வந்தாலும் சந்தோசமே அது சரியான நபராக இருக்கும் வரை அது தலித் என்றல்ல யாராக இருந்தாலும் சரி.

    நான் கூற வருவதை புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  10. நீங்க ஸ்பெஷல் தான் கிரி
    ஊரே election ரிசல்ட் பத்தி பேசுறாங்க நீங்க ரொம்ப அழகா ஒரு பதிவு போட்டு இருக்கீங்க
    ரொம்ப நல்ல தகவல்கள் நன்றி

    – அருண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here